”உண்மைக்கு ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்” – நளினி நெகிழ்ச்சி!

-சாவித்திரி கண்ணன்

31 வருட நெடிய போராட்டத்திற்கு பிறகு இன்று விடுதலை ஆகி உள்ளேன்! இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாகத் தான் இது சாத்தியமானது! எங்கள் 6 பேர் விடுதலைக்கு எத்தனையெத்தனையோ நல்ல உள்ளங்கள் பாடுபட்டன என உணர்ச்சிகரமானார் நளினி.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மே 21, 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இதையடுத்து 26 பேர் கைதாயினர்! இதில் முக்கிய குற்றவாளிகளான தனு, சிவராஜன் உள்ளிட்ட 12 பேர் தற்கொலை செய்து கொண்டனர்! இதில் கைதான 26 பேருக்குமே தூக்கு தண்டனை என சிறப்பு நீதிமன்றம் 1998-ல் தீர்ப்பளித்தது! அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் ஏழு பேரைத் தவிர்த்து மற்றவர்கள் சுபா சுந்தரம், பத்மா, சுசீந்திரன், பாக்கியநாதன் உள்ளிட்ட 19 பேர் 1999 ல் விடுதலையாகினர்.

மற்ற ஏழு பேரில் நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

நளினியை பொறுத்த அளவில் அவருடைய மரண  தண்டனையை ஆயுள் தண்டனையாக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். 2000 மாவது ஆண்டில் அன்றைய திமுக அரசு ”நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக்க வேண்டும்” என்று கவர்னருக்கு பரிந்துரைத்தது.

”ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடாமலே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர்களோடு தொடர்பில் இருந்ததற்காக கைது செய்யப்பட்டவர்களை ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைப்பது மனிதாபிமானமற்றது” என்ற குரல்கள் கடந்த பத்தாண்டுகளாகவே மேலேழுந்து வலுப் பெற்றன! காஞ்சிபுரத்தில் செங்கொடி என்ற இளம்பெண் இந்த எழுவரை விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழகத்தில் ”இவர்களை விடுதலை செய்ய வேண்டும்”என பல அமைப்புகள் களம் கண்டனர்.

2014 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூவர் அமர்வு ”ராஜீவ் காந்தி கொலையில் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசு முடிவெடுக்கலாம்” என்றது. இதை தொடர்ந்து அன்றைய முதல்வர், ‘இந்த எழுவரையும் விடுதலை செய்வதாக’ அறிவித்தார். அதை எதிர்த்து அன்றைய மத்திய அரசு நீதிமன்றம் சென்றதால் அது தடைபட்டுவிட்டது.

2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் அமைச்சரவை ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அனைவரையும் விடுவிக்க கோரிக்கை வைத்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் ஸ்டாலினும் ‘அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆன போதிலும், கடும் சட்டப் போராட்டங்கள் நடத்தி தான் சென்ற ஆண்டு பேரறிவாளன் விடுதலையானார். அவர் விடுதலையை முன்வைத்து தங்களுக்கும் விடுதலை கோரி மற்ற ஆறுபேரும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தினா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் சுமார் 31 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டது.

இது குறித்து வேலூரையடுத்த பிரம்மபுரத்தில் பரோலில் வெளியில் வந்து தங்கி இருந்த நளினியைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை கூறினேன். நளினி குடும்பத்துடன் நெடுங்காலம் பழக்கமுள்ள வகையிலும், அவரை சிறையில் சில முறை சென்று சந்தித்தவன் என்ற வகையிலும் அவரிடம் பேசிய போது நளினி கூறியதாவது;

31 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என் தம்பியின் நண்பர்களாக எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற இலங்கை போராளிகளுடன் பழக்கம் ஏற்பட்டது! இதில் முருகன் என்பவருடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவர்கள் அழைத்ததன் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ்காந்தியை பார்க்க அவர்களுடன் சென்றேன். நான் மக்களோடு மக்களாக பார்வையாளர்களிடையே தான் உட்கார்ந்து இருந்தேன்.

தீடீரென்று படுசத்தமுடன் வெடிகுண்டு வெடித்தது! என்ன நடந்தது என்பதை உணர்வதற்கு முன்பு என்னை அழைத்துச் சென்றவர்கள் என்னை வேகமாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றனர்! அதன் பிறகு தான் கூட வந்த தனுவைக் குறித்து நான் விசாரிக்கும் போது மெல்ல, மெல்ல உண்மை தெரிந்தது. இதனால் நானும் அவர்களுடன் சேர்ந்து ஓடலானேன். இறுதியாக ஜீன் 14 , 1991 ல் சைதாப்பேட்டையில் வைத்து நானும் முருகனும் கைதானோம்.

இதைத் தொடர்ந்து சிறையில் இருக்கும் போது நான் சோனியாவிற்கும்,பிரியங்காவிற்கும் தொடர்ந்து ஒவ்வொரு புத்தாண்டு, கிறிஸ்துமஸ், பிறந்த நாள் ஒவ்வொன்றுக்கும் வாழ்த்து அனுப்பி வைப்பேன். ஒரு நாள் என்னை சந்திக்க பிரியங்கா நேரில் சிறைச்சாலை வந்தார்.

அப்போது நான் அவரிடம் மனம் திறந்து பேசினேன். நான் நல்ல குடுமபத்து பெண். நன்கு படித்தவள், நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவள். வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருந்த நான் எப்படி ஒரு பெரும் தலைவரை கொல்ல நினைப்பேன்? சந்தர்ப்ப சூழ் நிலை என்னை குற்றவாளியாக அடையாளம் காட்டிவிட்டது. ஆனால், என் நெஞ்சில் கிஞ்சித்தும் யார் மீதும் வன்மம் இருந்தது இல்லை. நான் குற்றமற்றவள் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில் எனக்கு கண்டிப்பாக விடுதலை கிடைக்கும் என உறுதியாக நம்புவதாகக் கூறினேன்.

அந்த நம்பிக்கையில் தான் சக்திக்கு மீறி சட்டப் போராட்டம் நடத்தினேன். இறுதியில் உண்மை வென்றது! இதில் தமிழ் மக்களின் ஒருமித்த ஆதரவு இருந்தது! நாங்கள் விடுதலை ஆக வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், மனித நேயமுள்ளவர்களும்  உளப் பூர்வமாக விரும்பினார்கள்! இந்த விடுதலைக்கு பலர் பாடுப்பட்டனர். இன்றைய முதல்வர் ஸ்டாலினுக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். அவரது கருணையினால் தான் ஓராண்டுகள் பெயிலில் வெளியில் இருந்து கொண்டுள்ளேன். என் கணவர் முருகன் அற்புதமான ஓவியர். அவரது ஓவியங்களை பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளே வியந்தனர். அவர் தற்போது ஆன்மீகத்தில் தீவிர ஈடுபாடு உள்ளவராக உள்ளார். நாளை அவரை சிறையில் இருந்து அழைத்து வர உள்ளோம்.

 

என் மகள் இலண்டனில் மருத்துவராக பணி புரிகிறாள்! அவள் கணவரும் மருத்துவர். ஏழு மாதத்திற்கு முன்பு எனக்கு பேரன் பிறந்தான். அவனுக்கு அர்ஜின் வெற்றி எனப் பெயரிட்டு உள்ளோம். இனி எஞ்சியுள்ள எங்கள் வாழ்க்கையை அமைதியாக. அன்புமயமாக வாழப் போகிறேன்.என்றார். நளினியின் தயார் பத்மா தன் மகள் விடுதலைக்காக வெளியில் இருந்து கொண்டு வேள்வி நடத்தி வந்தவர்! அவர் கண்ணீர் ததும்ப பேச முடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தார். ”இந்த 31 வருடங்களாக மனதில் ரணத்தை சுமந்து வாழ்ந்தோம். இப்போது தான் நிம்மதி கிடைத்துள்ளது’’ என்றார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time