கேரள அரசுக்கு குடைச்சல்களை கொடுப்பதில் மும்முரமாக உள்ளார் ஆளுநர் ஆரிப் முகமது கான். அமைச்சரை நீக்கச் சொல்வது, துணைவேந்தர்களை ஒட்டுமொத்தமாக தூக்கி அடிக்கப் பார்ப்பது என தன் அதிகார வரம்பை மீறி ஆட்டம் போடுவதால் அவருக்கு கடிவாளம் போட்டுள்ளது கேரள அரசு! பாஜக ஆளுநர்களின் பாசிச விளையாட்டுகள்!
பொறுத்துப் பார்த்த கேரள இடது முன்னணி அரசு தற்போது பொங்கி எழுந்துள்ளது. கலாமண்டலம் என்றழைக்க கூடிய நிகர் பல்கலைகழகத்தின் “வேந்தர்” பதவியிலிருந்து ஆளுனர் ஆரிப் முகமது கானை கேரள அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கை நவம்பர் 8ல் கேரள அமைச்சரவை கூடி ,பல்கலைகழகங்களின் “வேந்தர்” என்ற பொறுப்பில் இருந்து ஆளுனரை விடுவிப்பது என்ற கொள்கை முடிவு எடுத்த தீர்மானத்தின் தொடர்ச்சியே ஆகும் .
இம்முடிவை புன்ச்சி கமிஷன் ( M.M.Punchi Commission on Centre State relations on Education ) கொடுத்த பரிந்துரைகள் அடிப்படையிலும் , கேரள பல்கலைகழகங்கள் சட்ட சீர்திருத்த கமிஷன் அளித்த பரிந்துரைகள் அடிப்படையிலும் , ஆளுநரின் பணிச்சுமையை குறைக்கவும், நல்லாட்சி நடக்கவும் ஆளுனரை மாநில பல்கலைக் கழகங்களின் “வேந்தர் ” பொறுப்பிலிருந்து விடுவிப்பது என்று தீர்மானித்து எடுத்துள்ளனர்.
“அரசு விரும்பினால் நான் “பல்கலை கழகங்களின் வேந்தர் (Chancellor)” பொறுப்பிலிருந்து விலகத் தயார்” என்று சில காலம் முன்பாக கூறிய ஆளுனர் ஆரிப் முகமது கான் இப்போது என்ன செய்யப்போகிறார் என்று பார்ப்போம்.
என்னுடைய விருப்பம் மற்றும் மகிழ்ச்சிக்கு மாறாக மந்திரிகள் நடந்தால் அவர்களை பதவி நீக்க பரிந்துரைப்பேன் என்று அடாவடி பேசும் கேரள கவர்னர் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். நாளும்,பொழுதும் ஒரு அரசியல்வாதி போல பேசி வரும் கவர்னரை கேரள மக்கள் வெறுப்போடு பார்க்கின்றனர்.
கேரளா தொழில்நுட்ப பல்கலை (KTU) துணை வேந்தர் ராஜஶ்ரீஎம்.எஸ். பணிநியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை ஒட்டி ஆளுனர் “தான்தோன்றிதனமாக” 11 பல்கலைகழக துணை வேந்தர்களையும் பதவி விலக அறிவுறுத்தி தாக்கீது அனுப்பினார் .
எந்தவித சட்ட ஒழுங்குறையையும் கடைபிடிக்காமல் தான் வகிக்கும் அரசியல் சாசன பதவிக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் கேரள ஆளுனர் செயல்படுவது கேரள ஆளுங் கூட்டணி அரசை மட்டுமன்றி நடுநிலையாளர்களையும் , மாணவர்களையும் கல்வியாளர்களையும் ஏன் எதிர்கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. கேரள உயர் நீதிமன்றம் ஆளுனர் செயல்பாட்டை அங்கீகரிக்க மறுத்து, கடிவாளமிட்டுள்ளது.
குடியுரிமை சட்ட சீர்திருத்தத்த சட்டத்தை (CAA) ஏற்றுக்கொள்ளாத இடது முன்னணி அரசு அதற்கெதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியது, அச்சட்டத்தை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளது. இது மாநில அரசின் கொள்கை முடிவு. ஆனால், ”இந்த பாரபட்சமான சட்டத்தை எதிர்க்கும் கொள்கையை ஆளுனர் அறிக்கையிலிருந்து எடுக்க வேண்டும்” என்று கூறி உரையை படிக்காமல் புறக்கணித்தவர் இந்த ஆரீப் கான்.
கண்ணூர் பல்கலைகழகத்தில் நடந்த அகில இந்திய வரலாற்றியல் காங்கிரஸ் Indian History Congress மாநாட்டில் ஆளுனர் தன் உரையில் மறைந்த முதுபெரும் விடுதலை போராட்ட தலைவரும், புகழ்பெற்ற கல்வியாளருமான மவுலானா அபுல் கலாம் ஆசாதை தவறாக மேற்கோள் காட்டி பேசினார். அதை மேடையிலேயே பிரபல வரலாற்று ஆசிரியர் இர்பான் ஹபீப் மறுத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார் .
இதை பொறுக்காத ஆரிப் கான் , ‘ ஹபீப் போன்றவர்கள் கூறுவதை கேட்டுத்தான் கேரள அரசு குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை எதிர்க்கிறது, இது தேச விரோத செயல் என்றும் பேசினார் . இர்பான் ஹபீப்பை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தற்காக கன்னூர் பல்கலைகழக துணைவேந்தரான டாக்டர்.ரவீந்திரனை கிரிமினல் என்று வசை பாடினார்.
கேரளாவின் உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது என்று நீட்டி முழக்கும் கவர்னர் பல்கலைகழக செனட் மற்றும் சின்டிபேட் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக நியமனம் செய்தும், பதவி நீக்கியும் வருகிறார்.
முறையாக நியமனம் செய்யப்பட்ட துணை வேந்தர்களை மிரட்டுவதும், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுப்பதும் கேரளாவில் கவர்னரின் அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன.
இத்தகைய முறைகேடான தலையீடுகள் ஆர்.எஸ்.எஸ் ன் ஆசியுடனே ஆளுனர் அரங்கேற்றுகிறார் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆளுனர் ஆரிப் முகமது கானை புனிதராக சித்தரிக்கும் கும்பல் ஆளும் கேரள இடது முன்னணி அரசை பழி கூற தங்க கடத்தலுக்கு உடந்தையாயிருந்த குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை பயன்படுத்துகின்றனர். ஸ்வப்னா சுரேஷிற்கு புகலிடம் கொடுத்து ஆதரிப்பதோடன்றி, ஆரிப் முகமது கானும் அவரை ஆளுநர் மாளிகைக்கு வரவழைத்து உபசாரம் செய்கிறார்
முதல்வர் பினராயி விஜயனை தரக்குறைவாக பேசுவதும் , விஜயன் வெளிநாடு செல்லப்போவதை தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் பிதற்றி வரும் ஆளுனர் , கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிநாட்டுக்கு செல்வதே சட்டத்திற்கு புறம்பானது , ரகசியமானது என்று வதந்திகளை பரப்ப ஆளுனர் முயல்வது கண்டு ஆளும் இடது முன்னணி அரசும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன.
ஆளுனர் தனது பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கைராளி மற்றும் மீடியா ஒன் ஊடக நிருபர்களை மரியாதைக் குறைவாக கூட்டத்தை விட்டு வெளியேற்றினார்! மேலும் கவர்னரின் நிகழ்வுகளில் அவருக்கு பிடிகாத ஊடகத்தினர் கலந்து கொள்ள அனுமதி மறுப்பது என்பது ஜன நாயகத்திற்கே இழுக்கானதாகும்! இதற்காக கேரள உழைக்கும் பத்திரிக்கையாளர் சங்கமும் ஆளுனரை, அவரின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து தீர்மானங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்துகின்றனர்.
கேரள அமைச்சர் கே.என். பாலகோபால் ஒரு நிகழ்வில் கவனருக்கு மாற்றான கருத்தை சொன்னதால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார் கவர்னர்! இதற்கு முதல்வர் உடன்படவில்லை. அமைச்சரின் பேச்சு கண்ணியக் குறைவாகவோ, தேச ஒற்றுமைக்கு பங்கம் விளைவிப்கதாகவோ இல்லை என பினராயி விஜயன் தெரிவித்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார் கவர்னர்.
இத்தகைய அடாடிகளையும் மோதல்போக்கையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுனர் ஆரிப் முகமது கான் யாருடைய நன்மதிப்பிற்காக இதையெல்லாம் செய்கிறார்? ஆளுனர்கள் அனைவரும் மனிதப் புனிதர்களா? சுயம்புகளா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் அதன்தலைவர்களும் எதிரிகளா அல்லது அரசியல் பகடைக் காய்களா?
ஆரிப் முகமது கான் 11 மசோதாக்களை கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவது போல தமிழக ஆளுனர் ஆர்.என். ரவியும் 21 மசோதாக்களை கையெழுத்திடாமல் காலந்தாழ்த்தி வருகிறார் . அரசியல் சாசனம் பற்றியெல்லாம் இவர்களுக்கு எந்தக் கவலையாவது உண்டா?
தமிழக ஆளுனராக உள்ள ஆர். என். ரவியை திரும்ப பெறக்கூறி தமிழக கட்சிகளும் ஏறத்தாழ 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கையும் எதை உணர்த்துகின்றன?
கேரளாவில் இடதுசாரிகளை சமாளிக்க ‘கம்யூனிச எதிர்ப்பாளர்’ ஆரிப் முகமது கான்.
தமிழகத்தில் திராவிட கட்சியை எதிர்க்க சனாதன ஆதரவாளர் ‘சங்கி’ ரவி!
இவர்களின் அஜன்டாவும், இவர்களது எஜமானரின் அஜன்டாவும் ஒரே நோக்கமுடையன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாக்பூர் தலைமையின் கட்டளைப்படி தான் ஆரிப் முகமதுகான் இந்த ஆட்டம் ஆடுகிறார்!
தெலுங்கானாவின் ஆளுனராக இருந்தாலும் பாண்டிச்சேரி துணை ஆளுனர் மாளிகையே தஞ்சம் என உறைந்துள்ள தமிழிசை சவுந்திர ராஜனின் நடவடிக்கைகளும் பாரபட்சமாக மாநிலத்தில் ஆளும் கட்சிகளுக்கு அதன் செயல்பாட்டிற்கு இடையூறாக வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதாக உள்ளது என தெலுங்கானா பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தான் தெலுங்கானா அரசு தமிழிசையை கிஞ்சித்தும் மதிப்பதில்லை.அவரும் தெலுங்கானாவில் இருக்க முடியாமல் தான் பாண்டிச்சேரி சென்றுவிடுகிறார்.
மேற்கு வங்க ஆளுனராக ஆடாத ஆட்டம் ஆடி,, இன்று துணை குடியரசு தலைவராக உள்ள ஜெகதீப் தங்கர் ம்மதா பானர்ஜி அரசிற்கு கொடுத்த அரசியல் குடைச்சலையும், முட்டுக்கட்டைகளையும் நாமறிவோம்.
இவர்கள் ஆளுனர்களாக நியமிக்கப்படுவது அரசியல் சாசன முறையில் உள்ளது தான் , மறுப்பதற்கில்லை . ஆனால் அவர்களுக்கு “கொடுக்கப்படும் பணி” கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவையா என்பதை அவர்களது செயல்பாடுகளிலிருந்து அறிய முடியும்.
சர்ச்சைக்குரிய நேரத்தில் மகாராஷ்டிர ஆளுனர் கோஷியாரி இரவோடிரவாக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவாருக்கு பதவிப் பிரமாணம் செய்ததும்,கர்நாடாக ஆளுனர் வாஜுபாய் ருதுபாய் வாலா எடியூரப்பாவிற்கு அவசர அவசரமாக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததும் கோவா, மணிப்பூர் அருணாச்சல் பிரதேஷ் , உத்தராகண்ட் மாநில ஆளுனர்கள் அரசியல் சாசன கடமையை “மறந்து” அதிகார அரசியலுக்காக கடமையாற்றியதும் அன்று ஐம்மு காஷ்மீரில் சத்யபால் மாலிக் என்ற ஆளுனரும் இன்று துணைநிலை ஆளுனராக உள்ள மனோஜ் சினகாவும் கடமையாற்றுவதும் அரசியல் சாசன பணிகளல்ல, மாறாக “குறுகிய அரசியல் பணிகள்” அதிகார அவலட்சணங்கள்.
இவை நம் கண்முன்னே பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன.
Also read
ஆட்டுக்கு தாடியாக கேலி செய்யப்பட்ட கவர்னர் பதவியும், ஆளுமையும் இந்தியா போன்று பரந்து விரிந்த பல்வேறு மொழிகளை கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஒன்றியத்திற்கு தேவை என்று பலர் வாதிட்டதால், அந்த பதவி அரசியல் சாசனத்தில் சமரச தீர்வாக வைக்கப்பட்டது.
அதிகார பரவலும், ஜனநாயகமும் சுய உரிமையும் தேவைப்படும் இந் நாட்களில் இந்த பதவி அவசியம் தானா? இதன் அதிகாரம், பண்பு பற்றி மாற்றி யோசிக்கும் நேரம் வந்துவிட்டது. இனியும் காலந்தாழத்துவது இந்திய ஜனநாயகத்திற்கு விடப்படும் சவால் ஆகும்.
கட்டுரையாளர்;ச.அருணாசலம்
Instead of helping people and monitor ruling govt proceedings, they simply meddle in govt functioning. In a Democratic country, people elected representatives have more power.
சனநாயகம் தழைக்க கவர்னரின் நடவடிக்கைகளை சட்டப்படி கட்டுப்படுத்த உச்சநீதி் மன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்யவேண்டும்.
ஆளுநரில்லா அரசியலமைப்பை உருவாக்குவோம்!
ஒருங்கிணைந்த இந்தியா! சமத்துவ இந்தியா!!
மக்கள் இந்தியா!!!
ஐயுயர்நிலை மக்கள் மன்றங்கள் அரசியலமைப்பு:
முதன்மை மக்கள் மன்றம்
(பகுதிகளின் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டது)
வட்ட மக்கள் மன்றம்
(முதன்மை மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாவட்ட மக்கள் மன்றம்
(வட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
மாநில மக்கள் மன்றம்
(மாவட்ட மக்கள் மன்றங்கள் ஒன்றியம்)
இந்திய உச்ச மக்கள் மன்றம்.
(மாநில மக்கள் மன்றங்கள் ஒன்றியம்.)
“ஆகச் சிறந்ததொரு பகுதிப்பிரதிநிதி
அகிலஇந்திய பெருந் தலைவராகும் அரசியலமைப்பு”