மைக்ரோ பைனான்ஸ்களின் அடாவடியால் தற்கொலைக்காளாகும் ஏழைகள்!

  சிவ.மணிமாறன்

மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தரும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிகள் தருவதன் மூலம் தமிழகமெங்கும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளன. காவல் நிலையங்களிலும், மாவட்ட ஆட்சியரிடமும் பெண்களின் புகார் மனுக்கள் குவிகின்றன…! பல இடங்களில் போராட்டங்களும் நிகழ்ந்துள்ளன.

கொரோனா கொடுங்காலம் வாழ்வாதாரத்தைப்  பறித்துவிட்டதால்  ஏழை எளிய மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். கடன் என்ற சிலந்திவலை அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டு இருக்கிறது இதனால் கலங்கிப்போன சிலர் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

கந்து வட்டி போன்ற சட்டத்துக்குப் புறம்பானவற்றில் மாட்டிக் கொண்டவர்கள் ஒருபுறம் என்றால், சட்டப்படியான நுண்நிதி நிறுவனங்கள் (Micro finance), தனியார் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் கடன் பெற்று செலுத்த முடியாமல்  சிக்கிக் கொண்டவர்கள் மறுபுறம்.

“பைனான்ஸ்காரங்க ஓயாம வீட்டுக்கு வந்து நெருக்கடி தர்றாங்க” என் மனைவி கலங்க, கணவன் விக்கித்து நிற்க, அடுத்தநாள் பிள்ளைகளுடன் குடும்பமே மாண்டு விட்ட சம்பவம் நாமக்கல் மற்றும் கோவையில் என அடுத்தடுத்து நடந்துள்ளது.

இவர்களை நுண்நிதி திட்டங்கள், தனியார் நிதி நிறுவனங்கள் பாதுகாக்கத் தவறியது ஏன்?

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் 1970 களில் நுண்நிதித் திட்டங்களை (Micro Finance) நடைமுறைப்படுத்தினார்.  பிணையம் எதுவுமின்றி சிறுதொகையை கடனாக வழங்குவது குறைந்த வருவாய் பிரிவினருக்கு மிகவும் உதவியாக இருந்தது. சாலையோரக் கடைகள், கைவினைப்பொருட்கள், சிறுவிவசாயிகள் போன்றவர்களுக்கும் கடன்கள் வழங்கப்பட்டன.

ஏழை மக்களிடமிருந்து வறுமையை விரட்டவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், நுண்நிதி திட்டம் பயன்படும் என முகமது யூனுஸ் விளக்கம் அளித்தார்.

முகமது யூனுஸ் அறிமுகப்படுத்திய இந்த மாதிரி, 2006ஆம் ஆண்டில் உலகின் கவனத்தை ஈர்த்தது. விளிம்புநிலை மக்களை வறுமையில் இருந்து மீட்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது ஒன்றுதான் வழி என பேசப்பட்டது. மார்க்சியத்துக்கு மாற்று என்றும்கூட பலர் விளக்கம் தந்தனர்.

இப்படியெல்லாம் அறிமுகமான சுயஉதவிக் குழுக்களும் நுண்நிதி திட்டங்களும் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பரவியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு கோடியே 80 லட்சம் பேர் இந்த நுண்நிதித் திட்ட வலைப்பின்னலில் இருக்கின்றனர்.

ஐடிஎப்சி(கிராம விடியல்), எக்விடாஸ், கிராமசக்தி, அயன் டிரஸ்ட் பவுண்டேஷன், ஆசீர்வாதம், ஃப்யூச்சர் பைனான்ஸ், மதுரா, சுமங்கலி, சமஸ்தா இப்படி ஏராளமான நுண்நிதி நிறுவனங்கள் (Micro Finance Institution) நாடு முழுவதும் உருவாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் 2019 ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாயை நுண்நிதி நிறுவனங்கள் கடனாக வழங்கி உள்ளன. வங்கிகளில் கடன் பெறுவது எளிதாக இல்லை என்பதால், இலகுவாக்கப்பட்ட நுண்நிதி திட்டம் ஏழை எளிய மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை எளிய நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விவசாய கூலி வேலை பார்க்கும் பெண்களும் கடன் பெற்றுள்ளனர்.

“நுண்நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன்களில் மாதம்தோறும் 10 விழுக்காடு  கடன் முழுவதும் திரும்ப செலுத்தப்பட்டு விடுகிறது. மாதந்தோறும் 22 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. பெரும்பாலும் 10 பேர் வரை உள்ள தன்னுதவிக் குழுக்களே வசூலித்து திரும்ப செலுத்தி விடுகின்றன” என்கிறார் இந்தியாவின் நுண்நிதி நிறுவனங்கள்  கூட்டமைப்பின் தலைவர் மனோஜ் நம்பியார்.

கடன் கொடுத்து வட்டிக்கான இன்சூரன்ஸ் என்ற பெயரில் கட்டணம்,அபராதம் என கூடுதல் நெருக்கடிகளை கடன் பெறும் பெண்கள் அனுபவிக்கின்றனர்.

கொரோனா தொற்று பொது முடக்க காலத்தின் போதும், கஜா புயல் தாக்கி விவசாயிகள் கலங்கி நின்றபோதும் இந்த நுண்நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் பணிகளை கைவிடவில்லை.

கிராமங்களில், நுண்நிதி நிறுவனங்களின் முகவர்கள் தவணை வசூலிப்பதில் கெடுபிடி காட்டுவதும், கண்டநேரங்களில் கடன் பெற்ற பெண்களின் வீடுகளுக்குச் சென்று வரம்பு மீறி நடந்து கொள்வதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ’ஆறு மாதங்களுக்கு கடன் தவணை வசூலிக்கக் கூடாது’ என ரிசர்வ் வங்கி அறிவுறுத்திய பிறகும், சட்ட விரோதமாக பெண்களை மிரட்டுவது, அவமானப்படுத்துவது போன்ற செயல்களிலும் முகவர்கள் ஈடுபட்டனர்.  சுயஉதவிக் குழுக்களின் பொறுப்பில் கடன் பெற்றிருப்பதால், அதன் நெருக்கடிக்கும் உள்ளாகின்றனர். உடனடியாக இதற்கு தமிழக அரசு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பறிபோயிருக்கும் சூழலில், நுண்நிதி நிறுவனங்கள் தரும் நெருக்கடியும் சேர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்கள், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்கின்றனர். பல்வேறு காரணங்களால் கடன் வாங்காமல் தங்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். நுண்நிதி நிறுவனங்களில் திருப்பி செலுத்துவதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் எளிய மக்கள் கடன் பெற்று விடுகின்றனர். இதனால்தான் நுண்நிதி நிறுவனங்களும் பெருகிவருகின்றன.

“நுண் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்கள் ஒரு மாதம் முதல் ஆறு மாதத்திற்குள் திருப்பி செலுத்தப்பட்டு விடுகின்றன. மொத்தக் கடனில்  1.5 விழுக்காடு கடன்தான் இடர்பாட்டுக்கு உரியதாக, வசூலிக்க முடியாததாக உள்ளது” என நுண்நிதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் மனோஜ் நம்பியார் தெரிவித்துள்ளார்.

கந்து வட்டிக்காரர்களிடம் சிக்கி அல்லல் பட்ட விளிம்பு நிலை மக்கள், நுண்நிதி நிறுவனங்களாலும் சுயஉதவி குழுக்களாலும் நம்பிக்கை பெற்றுள்ளனர். ஆனால் வறுமையில் இருந்தும் கடன் வலையில் இருந்தும் அவர்கள் மீளவில்லை. எனவே, கொரோனா முடக்க காலத்தில், கடன் தவணை செலுத்தவில்லை என அத்துமீறும் நுண்நிதி நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கால் வாழ்வாதாரம் பறிபோயுள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.

விளிம்புநிலை மக்களின் உடல்நலம், வறுமை, சமூக சூழல் ஆகியவற்றில் சிறிய அளவிலான மாற்றத்தையே நுண்நிதி நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன.

பெண்களை சுய உதவிக்குழுக்களில் ஒன்றுபடுத்துவதாலேயே முற்போக்கான மாற்றம் ஏற்பட்டுவிடாது.  சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த கருவியாக இந்த குழுக்கள் உருவாக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதி, பாலினம், வர்க்கம் அடிப்படையில் இருக்கும் படிநிலைகளை பாதுகாப்பதாக அவை மாறிவிடும் என்பதை பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இவை தான் நடந்து கொண்டும் இருக்கின்றன.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time