நீர் நிலைகளை விழுங்கி உருவான சென்னை மிதக்கிறது! 

-ம.வி.ராஜதுரை

இயற்கையான நீர் நிலைகளை அழித்து உருவாக்கப்பட்ட சென்னை மாநகரம் பெருமழை பெய்யும் போது மிதக்கிறது!  434 ஏரி, குளங்களை விழுங்கி இந்த பெரு நகரம் உருவானது. இந்த அத்தனை பகுதிகளும் மழை, வெள்ளம் வரும் போது அல்லோகலப்படுகின்றன! மயிலை நாகேஸ்வரராவ் பூங்கா ஏன் மிதக்கிறது?

நூறாண்டுகளுக்கு முந்திய கணக்கின்படி சென்னையில் 474 நீர் நிலைகள் இருந்துள்ளன என்றால், நம்ப முடிகிறதா? இன்று அவற்றில் பத்து சதமான நீர் நிலைகள் கூட உயிர்ப்புடன் இல்லை என்பது வளர்ச்சியா? வீழ்ச்சியா?

சென்னையின் மையப் பகுதியில் உள்ள மயிலாப்பூர் கடல் மட்டத்தை விட சுமார் 10 அடி உயரத்தில் உள்ளது. எனவே எந்த மழைக்காலத்திலும் இங்கு தண்ணீர் தேங்குவதில்லை. ஆனால், மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற நாகேஸ்வரராவ் பூங்கா இப்போது பெய்த சுமாரான மழைக்கே மூழ்கிக் கிடக்கிறது. இதற்கான காரணத்தை  ஆராய முற்பட்டபோது மூலம் புலப்பட்டது.

நாகேஸ்வரராவ் பூங்காவின் உட்பகுதி

சென்னையில் உள்ள மயிலாப்பூர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று பின்னணி கொண்டதாகும்.

மயிலாப்பூர் பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தில் உள்ள மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை,  உள்ளிட்ட  சென்னையின் பல்வேறு இடங்களில் வசிப்பவர்களுக்கான பசுமை மையமாக மயிலாப்பூர், லஸ்கார்னர் அருகில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா திகழ்கிறது.

நான்கு ஏக்கர் பரப்பு கொண்ட இந்த பூங்காவில் புங்கன், வேம்பு, ஆல், அரசு, பாதாம் ,மூங்கில் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் செழித்து நிற்கின்றன. மருத்துவ குணம் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. மனதுக்கு இதம் தரும் இந்த பசுமை சூழலில் நடைப்பயிற்சிக்கு தனிப்பாதை, குழந்தைகளுக்கு விளையாட இடம், உடற்பயிற்சி அரங்கு, பேட்மிட்டன் மைதானம், செஸ் கூடம், இசை, பேச்சுக்கலை வளர்க்க தனிப்பகுதிகள்.. இப்படி மக்களின் உடல்-மன வளர்ச்சிக்கான இயற்கை மையமாக திகழ்கிறது.

இவ்வளவு சிறப்புகொண்ட  இந்த பூங்கா இப்போது பெய்து வரும் சுமாரான மழைக்கே மூழ்கிக் கிடக்கிறது. மயிலாப்பூரின் மற்ற பகுதிகள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகாமல் இருக்கும் போது இங்கு மட்டும் ஏன் வெள்ள நீர் வந்து புகுகிறது என்பதற்கு வரலாறு விடை சொல்கிறது.

பூங்காவில் இருக்கும் விளையாட்டு மைதானம் தண்ணீரில் மிதக்கிறது

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பூங்கா  ஒரு குளமாக இருந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் (ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு) போர்த்துக்கீசியர்  மயிலாப்பூருக்கு வந்தனர்.

இந்த குளத்தை மையமாகக் கொண்டு மிகப்பெரிய காடு இங்கு இருந்திருக்கிறது. குளத்தின் மேற்கு புறம் காட்டின் ஒரு பகுதியை அழித்துவிட்டு 1516 ம் ஆண்டில் அவர்கள் கட்டிய கோயில் தான் “பிரகாச மாதாஆலயம்”(LUZ CHURCH). இன்றைக்கும் கூட சுற்றுவட்டார மக்களால் இந்த ஆலயம்” காட்டுக் கோயில் “என்றுதான் அழைக்கப்படுகிறது. அருகிலுள்ள முக்கிய சந்திப்புக்கு “லஸ்கார்னர்” என்ற பெயர் வந்ததும் இந்த லஸ் சர்ச் -ஐ வைத்து தான்.

காட்டுக் கோயில் என்றழைக்கப்பட்ட மயிலை லஸ் சர்ச்!

“ஆறாத குட்டை”(BIG POND) என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டு வந்த நீர்நிலை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தூர்க்கப்பட்டது.பின்னர்  பூங்காவாக மாற்றப்பட்டது. 1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் குமாரசாமி ராஜா இந்த பூங்காவை திறந்து வைத்தார். நாகேஸ்வரராவ் பந்துலு பூங்கா என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டது.

இன்று (12.11.2022) காலை   ஒரு குளம் போல  இப்பூங்கா காட்சி அளித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. குழந்தைகள் விளையாடும் இடம், செஸ் மையம், உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட பெரும்பகுதி அரை அடி முதல் ஒரு அடி ஆழத்தண்ணீரில் இருந்தன‌. நீர்நிலையாக இருந்தபகுதி   என்பதால் இயற்கை தன் வேலையை கச்சிதமாக செய்துவிட்டது.

மழை வெள்ளம் மற்றும் காற்றின் காரணமாக ஒரு சிறிய பாதாமரமும் மூங்கில் மரமும் வில் போல் வளைந்து சாய்ந்த நிலையில் இங்கு கிடந்தன. இவற்றை அதே இடத்தில் மீண்டும் நட்டு வைத்திருக்க முடியும். அரை மணி நேரம் கழித்து அங்கு சென்றபோது இந்த இரண்டு மரங்களும் நான்கு ஐந்து துண்டுகளாக வெட்டப்பட்டு ஓரமாக போடப்பட்டிருந்தன.

இதுபோன்ற மரங்கள் விழும்போது  அந்த மரங்களை மீண்டும் அங்கேயே நட ஏற்பாடு செய்ய முடியாதா? என ஆதங்கமாக இருந்தது.

தண்ணீரில் மிதக்கும் வேளச்சேரி

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் இன்றைக்கு மழை வெள்ளம் தேங்கும் இடங்கள் எல்லாம் ஒரு காலத்தில் நீர்நிலைகளாக இருந்தவை ஆகும். சென்னையின் பெரிய ஏரிகளில் ஒன்றாக திகழ்ந்த வேளச்சேரி ஏரியை இப்போது பார்த்தால் நம் வயிறு பற்றி எரியும். அந்த அளவுக்கு அதை சுற்றிவளைத்து ஆக்கிரமித்து விட்டார்கள். அதன் விளைவால்தான  அருகில் உள்ள ராம்நகர் உள்ளிட்ட பகுதிகள் சிறுமழைக்கே வெள்ளக்காடாக மாறுகின்றன. இந்த மழைக்கு கூட வேளச்சேரி ராம் நகர் தப்பவில்லை.

அள்ளிக்குளமாக இருந்த இடம் இன்று நேரு ஸ்டேடியமாக உள்ளது.

நுங்கம்பாக்கம் ஏரி இருந்த இடத்தில் வள்ளுவர் கோட்டம் எழுந்து நிற்கிறது.

தேனாம்பேட்டை ஏரியை தற்போது தேஇனாலும் கிடைக்காது!

வியாசர்பாடி ஏர் விழுங்கப்பட்டுவிட்டது.

பள்ளிக்கரணை ஏரி பரிதாபமாக உள்ளது.

கொளத்தூர் ஏரியை கொன்று போட்டத்தில் இன்று குற்றுயிரும், குலை உயிருமாய் கிடக்கிறது!

போரூர் ஏரியின் ஒரு பகுதியில் தான் இன்று ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியும், மருத்துவமனையும் எழுந்து நிற்கிறது.

ஆக்கிரமிக்கப்படும் போரூர் ஏரியை மீட்க போராடும் சிறு பிள்ளைகள்!

தற்போது செய்யப்பட்டுள்ள சென்னை நகர விரிவாக்கம், சென்னையின் புற நகர் பகுதிகளில் மிச்சம் மீதியாக உயிர்த்துக் கிடந்த நீர் நிலைகளையும் நிர்மூலமாக்கிவிட்டது.

இப்போது ஆளும் தமிழக அரசு எப்போதும் இல்லாத வகையில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகளை  விரிவாக செய்தது. குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக இப்பணி முடிக்கப்படாவிட்டாலும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. அதே சமயம் இதுபோன்ற முயற்சிகள் நிகழ்ந்துவிட்ட பிரச்சனைக்கான ஒரு தீர்வுதான்.

வருமுன் காப்பது என்பது நீர் நிலைகளில் ஏற்படும் ஆக்கிரமிப்புகளை முளையிலேயே கிள்ளி எறிவதாகும். ஆக்கிரமிப்புகளை சுய ஆதாயங்களுக்காக அனுமதித்து விட்டு, பிறகு அகற்றுவது என்பது இயலாத காரியமாக ஆகிவிடும்.

“இளைதுஆக முள்மரம் கொல்க; களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து”(குறள் 879)

பொருள்:   முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும். காழ்ப்பு ஏறி முதிர்ந்தவிடத்து அது வெட்டுபவரின் கைகளையே பதம் பார்த்துவிடும். தீங்கு  தரும் நிகழ்வை  தவிர்க்க முன் கூட்டியே திட்டமிடல் வேண்டும்.

ஆட்சியாளர்கள் எப்போதும் மனதில் கொண்டு செயல்பட வேண்டிய வள்ளுவரின் வாய்மொழி இது.!

குளம் ,குட்டை ,ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளை பாதுகாப்பது இந்த மாநிலத்திற்கு மட்டுமல்ல நம்மை வாழ்வைக்கும்  பூவுலகிற்கே நல்லது!

கட்டுரையாளர் -ம.வி.ராஜதுரை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time