குஜராத், இமாசல் தேர்தல்கள்! – வெற்றி யாருக்கு?

-ச.அருணாசலம்

உண்மையில் பாஜக மீது கடும் அதிருப்தி தான்! விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஊழல், அதிகார மமதை..எல்லாம் பாஜகவை அழுத்துகிறது! ஆனால், காங்கிரஸ் வெற்றியை வென்றெடுக்க போதுமான உழைப்பை தருகிறதா? ஆம் ஆத்மியின் நுழைவு யாரை பலவீனப்படுத்தும்..?

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12 ல் ஒரே கட்டமாக தேர்தல்கள் நடந்துள்ளது. இதனுடன் இணைந்து குஜராத் மாநிலத்திற்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அனைவரும் அறிந்த ரகசியமான “மேலிட விருப்பத்திற்கேற்ப” குஜராத் தேர்தல்கள் இரண்டு கட்டமாக- டிசம்பர்- 1, டிசம்பர்- 5, ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.

தேர்தல் ஆணையம் எவ்வளவு வளைந்து கொடுத்தாலும், பாஜக விற்கு பலம் பெருகப் போவதில்லை என எதிர்கட்சிகள் ஏளனம் செய்கின்றன.

முதலில் 68 தொகுதிகளை உடைய இமாச்சல பிரதேச சட்ட மன்ற தேர்தலை காண்போம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை  கண்டிப்பாக தேர்தல் மட்டுமல்ல, ஆட்சி மாற்றமும் நடைபெறும் என்ற வரலாறை 1985 முதல் இமாச்சல பிரதேசம் கடைப்பிடித்து வருகிறது. இந்த போக்கு இம்முறையும் நடக்கும் என்று எதிர்கட்சியான காங்கிரஸ் ஆணித்தரமாக கூறுகிறது. ஆளும் பாஜக வோ இம்முறை ஆன்டி இன்கம்பென்சி என்ற அதிருப்தி நிலையை நாங்கள் முறியடிப்போம் என்று களமிறங்கி உள்ளனர்.

பஞ்சாபிற்கு அடுத்தபடியாக களமிறங்கி இமாச்சலில் ஆட்சியை பிடிப்போம் என்று பறைசாற்றிய ஆம் ஆத்மி கட்சி சத்தமில்லாமல் களத்தில் இருந்து விலகி மீண்டும் இரு முனை போட்டியை உறுதி செய்துள்ளது. பஞ்சாபில் கால்வைப்பதற்கு முன்பிருந்தே இமாச்சலை வளைய வந்த ஆம் ஆத்மி கட்சி- வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிட்டாலும்- இன்று களத்தில் இல்லை என்பதே உண்மை. இதற்கு அக்கட்சி , தங்கள் கவனம் குஜராத் மாநிலத்தில் மையம் கொண்டுள்ளது என காரணம் கூறுகின்றனர்.

கடந்த ஐந்து வருட பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தலைவிரித்தாடும் விலையேற்றம், தூங்கி கொண்டிருக்கும் நிர்வாகம், ஊழல் குற்றசாட்டுகள் , கோஷ்டி பூசல் ஆகியவற்றை பார்த்து அலுத்து போன இமாச்சல பிரதேச மக்கள் ஒரு மாற்றத்திற்காக ஏங்குவது வெளிப்படையாக தெரிகிறது.

ஆனால், இந்த அதிருப்தியை அறுவடை செய்ய காங்கிரஸ் கட்சியால் முடியுமா? என்பது அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.

ஏனெனில், ஒருபுறம் பிரதமர் மோடியும், அமீத் ஷாவும் நேரடியாக களமிறங்கி உள்ளனர் . இவர்களது நேரடி மேற்பார்வையிலேயே அனைத்து அசைவுகளும் நடைபெறுகின்றன. பா ஜ கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வின் சொந்த மாநிலமான இமாச்சலத்தில் ஆட,சியை தக்க வைக்க எதை செய்யவும் தயாராயுள்ளனர். டபுள் என்ஜின் (மாநிலத்திலும் ஒன்றியத்திலும் பாஜ க ஆட்சி) ஆட்சியின் அவசியத்தை உரக்க பேசும் இவர்கள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதும் , காஷ்மீரில் அரசியல் பிரிவு 370 ரத்து செய்ததும் நாங்களே என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். யூனிபார்ம் சிவில் கோடை கொண்டு வருவோம் என்று தங்கள் பிரச்சாரத்தை கட்டமைத்து வருகின்றனர்

ஆனால், காங்கிரஸ் கட்சியோ அடிப்படை பிரச்சினைகளான விலையேற்றம், வேலையின்மை, ஆப்பிள் மற்றும் மலர் தாவர விவசாயிகளுக்கு தகுந்த விலையின்மை ஊழல் மிகுந்த நிர்வாகம் போன்ற பிரச்சினைகள் பற்றி பேசியே வாக்காளர்களை திரட்டுகிறது. பிரியங்கா வத்ராவை தவிர, வேறு எந்த பிரபல காங்கிரஸ் தலைவரும் இமாச்சல மாநிலத்திற்கு பிரச்சாரத்திற்கு வரவில்லை.

ஆனால், மக்களை தொடும் பிரச்சினைகளான ‘அக்னி பாத்’, அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் , நசிந்து கொண்டிருக்கும் ஆப்பிள் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுப்பது, மோசமான சாலைகளை சீரமைப்பது போன்ற விடயங்களை கையில் எடுத்து  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இப்பிரச்சினைகள் தீர்க்கப்படும் என காங்கிரசார் கூறுகின்றனர் .

“ஆ ரகி ஹை காங்கிரஸ்” காங்கிரஸ் வருகிறது  என்ற முழக்கம் எழுந்துள்ளது . இது மக்களின் முழக்கமாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிய வரும்.

இமாச்சல பிரதேச தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்வியை விட, குஜராத்தில் ஆட்சியை தக்க வைத்து கொள்வது மிக மிக அவசியமானது பாரதீய ஜனதா கட்சிக்கு.

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கிடைக்கும் வெற்றி என்பது ஒரு மிகப் பெரிய பூஸ்டராக மோடி-ஷா தலைமைக்கு அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஆனால் கள நிலவரம் எவ்வாறு உள்ளது?

1998 முதல் ஆட்சி கட்டிலில் இருக்கும் பாஜ க2022ல் மீண்டும் ஆட்சியில் அமருமா?

கருத்து கணிப்புகளும் தேசீய ஊடகங்களும் பாஜ க அமோக வெற்றி பெறும் என்கின்றன. சமீபத்தில் ஆங்கில நாளிதழான தி இந்து பத்திரிக்கையில் வெளியான புகழ்பெற்ற லோக்நிதி சி. எஸ்.டி எஸ் கருத்து கணிப்பு கூட ஏறத்தாழ 60 சதவிகித வாக்காளர்கள் பாஜ க ஆட்சியை நிராகரிக்கவில்லை என்று கூறுகிறது!

மோடியோ தேர்தலை சந்திக்க அனைத்து முஸ்தீபுகளையும் செய்து வருகிறார் . 25க்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். வெற்றியை பறிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மோடியும், ஷாவும் கவனமாக கட்டமைத்துள்ளனர் . இதைக் குலைக்க எந்த சக்தியும் அமைப்பும் வராதபடி – அது தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியோ அல்லது புதிதாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியாக இருந்தாலும் சரி – கண்காணிப்பதில் குறியாக உள்ளனர்.

ஆனால், குஜராத் மாடலுக்கு வேட்டு வைத்த மோர்பி தொங்கு பால விபத்து -142 உயிர்களை பலி கொண்ட விபத்து – ஒரு நெருடலை , தலைக் குனிவை கொடுத்தாலும், ஊடகங்கள் அதை அப்படியே அமுக்கி – ஒன்றுமே நடக்காதது போல் – கடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது.

விபத்திற்கான காரணத்தையும், அதற்கு காரணமாக இருந்தவர்களையும் ,அதற்கு தணை போனவர்களையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த எந்த முயற்சியும் இல்லை . ‘ஒரேவா ‘மீது குற்ற வழக்கு பாயவில்லை, முதல்வரோ வேறு பொறுப்பான அமைச்சர்களோ பொறுப்பும் ஏற்கவில்லை, பதவி துறக்கவுமில்லை! இது போன்ற நிகழ்வு வேறு மாநிலத்தில் நடந்திருந்தால், அது முற்றிலும் வேறு பரிமாணங்களில் அனைத்து மட்டங்களிலும் அலசப்பட்டிருக்குமல்லவா?

அந்த துயர நிகழ்வு குஜராத் வாக்காளரிடையே எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லையாம், விபத்திற்கு அரசு எப்படி பொறுப்பாகும்? இத்தனை பேர் அந்த பாலத்தில் சென்றது போனவர்களின் குற்றந்தானே என்ற வாதங்களும் பத்திரிக்கைகளால் ‘மக்கள் கூறுவதாக ‘  முன் வைக்கப்படுகிறது.

இன்னொருபுறம்,

147 நகராட்சி ஊழியர்கள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் , அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் அரசு மீது பயங்கர அதிருப்தியில் உள்ளனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் குஜராத்தின் நிலைமை மிக மிக மோசமாக இருந்தது, குஜராத் உயர்நீதி மன்றமே அரசு மீது கண்டனங்களை வெளியிட்டது.

மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என எதிர்கட்சிகள் கூறுகின்றன.

வேலையில்லா திண்டாட்டமும், போதை மருந்து பழக்கமும் குஜராத் இளைஞர்களை வாட்டி வதைக்கின்றன. போதை மருந்து கடத்தலும் அதானி துறைமுக ஆதிக்கமும் கைகோர்த்து செல்வதை மக்கள் கவனிக்காமல் இல்லை.

கடந்த 28 ஆண்டுகளாக மோசமான ஆட்சி தந்த பாஜகவின் பிடியலிருந்து விடுபட குஜராத் மக்கள் துடிக்கின்றனர், அவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சி ஒன்று தான் ஒரே மாற்று என அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் களம் இறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவு அமோகமாக உள்ளது என பத்திரிக்கைகள் சித்தரிக்கின்றன.

ஆம் ஆத்மி கட்சி யாருக்கெதிராக களமிறங்குகிறது? யாருடைய வாக்குகளை பிரிக்க போகிறது என்பதை கவனிக்க வேண்டும். இவர்கள் (ஆம் ஆத்மி கட்சியினர்)காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிடுவார்கள் என்று பல ஊடகங்களும் , தேர்தல் ஆருடர்களும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், ஆம் ஆத்மி இந்து ஓட்டுகளை மையப்படுத்தி செயல்படுவதை பார்த்தால், பாஜகவின் ஓட்டு வங்கியையே அது அதிகம் பாதிக்கும் எனத் தோன்றுகிறது. ஆம் ஆத்மிக்கு குஜராத்தில் கட்சி கட்டமைப்பு பல இடங்களில் சுத்தமாகக் கிடையாது.

இங்கு இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்பதுதான் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் உள்ள போட்டியா? அல்லது பாரதீய ஜனதாவை தோற்கடிக்க போட்டியா என்ற கேள்வியை ஊடகங்கள் எழுப்பி உள்ளன!

மறுபுறம் பாஜக வோ, காங்கிரசிலிருந்து (சீட் கிடைக்காதவர்கள்) விலகி வந்த பெருந்தலைகளுக்கு 37 இடங்களில் போட்டியிட இடங்கொடுத்துள்ளது.

காங்கிரஸ் ‘அமைதியாக, ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி, பெரிய பேரணிகள் இன்றி ‘ மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது. ஆயினும், நரேந்திரமோடி காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார் . நாம் மெத்தனமாக இருக்க கூடாது என்று கட்சியினருக்கு அறிவுறுத்துகிறார். இது வரை இரண்டு முறை முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர், 60 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இந்த முறை ‘சீட்’ கொடுக்கப்படவில்லை. மக்களிடம் கடும் அதிருப்தி பாஜ க அரசு மீது இல்லையென்றால் இப்படியெல்லாம் மோடி செயல்படுவாரா?அதற்காக அவர் மெனக்கெடுவதும், அவரது உடல் மொழியில் பதட்டம் தெரிவதும் மறுப்பதற்கில்லை.

கடந்த வாரம் வல்சாத் நகரில் தேர்தல் பேரணியில் பேசிய மோடி “நான் இந்த குஜராத்தை உருவாக்கி உள்ளேன்” என்ற புதிய கோஷத்தை கூறி கூட்டத்தினர் அனைவரையும் அதை வழிமொழிய சொன்னார்.

அதுவே இன்று குஜராத் தேர்தலில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பாட்டாக மலர்ந்துள்ளது.

இதில் உள்ள “நான்” என்பது யாரைக் குறிக்கிறது என்பது பற்றி யாருக்கும் ஐயமில்லை!

ஆனால் இந்த ‘மோடி மேஜிக்கை ‘ தவிர குஜராத் மக்களிடம் கொடுப்பதற்கு பாஜகவிடம் வேறெதுவும் இல்லை!

ஆனால், இந்த மேஜிக் இன்று எடுபடுமா? மோடி பெயரைக் கேட்டாலே ஒரு அயற்சி குஜராத் மக்களுக்கு ஏற்படவில்லையா?

2002 ல் கலவரம் மூலம் கிளப்பிய இந்து -முஸ்லீம் பகையை நீட்டிக்க முடியுமா? , முஸ்லீம் மக்களுக்கு பாடம் புகட்டி அவர்களுக்குரிய இடத்தை காட்டிய ‘இந்து ஹிருதய சாம்ராட்’ (இந்துக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மாமன்னர்) மோடி இன்று எதை சாதிக்க போகிறேன் என ஓட்டு கேட்பார்?

இன்றைய குஜராத் வாக்காளர்களில் 40 சதவிகித்திற்கும் மேலானோர் 2002க்குப்பின் பிறந்தவர்கள் என்பதை புள்ளிவிவரம் கூறுகிறது. இவர்களுக்கு முஸ்லீம்களை கருவறுப்பதோ, மத பெருமை பேசுவதிலோ நாட்டமில்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் தரமான வேலை, கை நிறைய சம்பாத்தியம் அமைதியான வாழ்க்கை அதில் கிடைக்கும் மகிழ்ச்சி ஆகியவை தான்.

நாட்டின் பொருளாதார அவலத்தை அறிந்த அவர்கள் ‘இந்தியா உலக அரங்கில் விஸ்வ குருக்கள் தலைமையில் வெற்றி நடை போடுகிறது என்ற வெற்று கோஷங்களை இனியும் நம்பி ஏமாறத் தயாரில்லை. ஊடகங்கள் சித்தரிப்பது போல் கள நிலவரங்கள் இல்லை என்பது முற்றிலும் உண்மை.

நிர்வாகச்சீர்கேடும்,ஊழலும் ஊதாரி தனமும், மத வெறியும், வளர்ச்சியற்ற ,வெளிப்படை தன்மையுமற்ற வீண் பெருமையும் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக , பாஜக ஆட்சியில் அனுபவித்து அயர்ந்து போன குஜராத் மக்கள் இன்று விரக்தியின் விளிம்பில் இருக்கின்றனர் . இந்த மனநிலைதான் மோடி கும்பலை கலவரப்படுத்துகிறது. பதட்டமடைகிறார்கள்.

1998 முதல் 49% வாக்குகளை பெற்று வந்துள்ள பா ஜ க முறையே 117(1998), 127(2002), 117(2007), 115(2012), 99(2017)ஆகிய தொகுதிகளை வென்று வந்துள்ளது.

காங்கிரஸ் கட்சியோ இதே தேர்தல்களில் 41% வாக்குகளை பெற்று முறையே 53(1998), 51(2002),61(2007), 61(2012),77(2017) தொகுதிகளை வென்று வந்துள்ளது. எனவே காங்கிரசை கபளீகரம் செய்துவிடலாம் என்பதெல்லாம் மனப்பால் குடிப்பது தான் .

பஞ்சாபிற்கு அடுத்து குஜராத்தில் ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றும் எனபது பலராலும் முன் வைக்கப்பட்டாலும் , அடிப்படையில் பாஜகவை தேர்தலில் முறியடிக்க உதவுமா அல்லது ஓவைசி கட்சியைப் போல் ஓட்டை பிரிக்க எதிர்ப்பை மழுங்கடிக்க உதவுமா என்பது கவனிக்கப்பட வேண்டும்.

இன்றும் குஜராத்தில் பாஜகட்சி நகர்ப்புறங்களில் தான் வலுவாக உள்ளதே அன்றி கிராம்ப்புறங்களில் வலுவாக இல்லை என்பது உண்மை .

ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், 300 யூனிட் மின்சாரம் இலவசம், அரசு ஊழியர்களுக்கு முதியோர் உதவித் தொகை (பென்ஷன்) ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் வரை  மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்கு 4 லட்சம் வரை இழப்பு காப்பீடு, கோவிட் தொற்றால் இறந்தவர் குடும்பங்களுக்கு இழப்பீடு போன்ற வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

தேர்தல்கள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதற்கு தேர்தல் களம் சம நிலையாக இருக்க வேண்டும் . ஆனால், இந்த சமநிலை பண பலத்தால், படை பலத்தால், அதிகார பலத்தால், கட்டமைப்பு வசதிகளால் ஒரே பக்கமாக சாய்ந்துள்ளதை அனைவரும் அறிந்தே உள்ளனர்.

இந்நிலையில் பிரபலமான முகங்கள் யாருமின்றி, பேரணிகளும், பந்தாவும் இன்றி, பணபலமும் இன்றி தேர்தலை சந்திக்கும் பிரதான எதிர்கட்சியை அதிருப்தி அடைந்துள்ள குஜராத் மக்கள் பற்றிக் கொள்வார்களா என்பது தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்தும். மாற்றம் என்பது முயற்சியின் பாற்பட்டே ஒழிய மந்திரத்தால் ஆகாது என்பதும் குஜராத் மக்களுக்கு புரியும் .

சாதனைகள் படைப்பதே வாழ்வின் குறிக்கோளாக கொண்டுள்ள மோடி தனது சொந்த மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் மாதவ்சிங் சோலன்கி 1985 தேர்தலில் 149 தொகுதிகள் வென்று வரலாற்று சாதனை படைத்ததை முறியடிப்பாரா?

இப்பொழுதில்லையென்றால் பின் எப்பொழுது?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time