இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்- ஞான ராஜசேகரன்
இந்த நூலில் ஞான ராஜசேகரன் அவர் கேரளாவில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது சந்திக்க நேர்ந்த சிக்கலான பிரச்சினைகளையும், அதற்கு தான் காண்ட தீர்வுகளையும் சுவைபடக் கூறியுள்ளார். அதே போல அவர் இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களின் உருவாக்க அனுபவங்களையும் வெகு சுவாரஷ்யமாக எழுதியுள்ளார்.
ஞான ராஜசேகரன் மாவட்ட ஆட்சியராக பணியாற்றும்போதே , கேரள அரசின் சிறப்பு அனுமதியைப் பெற்று முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கியது சாதனையே. திரைப்படத் தணிக்கை துறை அதிகாரியாகவும் சென்னையில் பணியாற்றினார். தனது அனுபவங்களை ‘இந்திய ஆட்சி பணியும் சினிமாவும் மற்றும் நானும்’ நூலில் எழுதியுள்ளார்.
இந்த நூலில் குடிமைப் பணி அதிகாரியாக, தணிக்கைத்துறை அதிகாரியாக, திரைப்பட இயக்குநராக, கல்லூரி மாணவராக தனது வாழ்கையைப் பற்றி ஞான.ராஜசேகரன் பேசுகிறார். பெரிய சொல்லாடல்கள் இல்லை. ஒரே மூச்சில் படிக்கக் கூடிய நூல்தான். சிறு, சிறு சம்பவங்களாக உள்ளன.
சினிமா தெரிந்த, அதிகாரி தணிக்கைத் துறைக்கு வந்தால் என்ன ஆகும் ! இதில் நிர்வாக அனுபவங்களும் வருகின்றன; ஒரு கலைஞனாக அவரது பார்வையும் வருகின்றன. தேசப்பிதாவின் மரணத்தை எப்படி காட்டுவது ! ‘அட்டன்பரோ தன் ‘காந்தி’ படத்தில் இதே காட்சியை எவ்வளவோ மேன்மையாகக் காட்டியிருக்கிறார். இவரோ (ஹே ராம்), ஏதோ ஒரு மிருகத்தை சுடுவதுபோல கேவலமாகக் காட்டியிருக்கிறார்’ என்று கூறுகிறார். ‘சென்சார் அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை’ என்று மணிரத்னம் ‘இருவர்’ படத்தின்போது விகடனில் கொடுத்த பேட்டிக்கு, அறிக்கை மூலம் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். பட தணிக்கை சமயத்தில் ரஜினிகாந்த் சொல்லும் வணக்கம் , ஒரு படம் தணிக்கை செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று கவலைப்படும் உறுப்பினர், ‘பிட்’ படத்துக்கு செக் வைத்த கதை என்பது போன்ற பல்வேறு சம்பவங்களை இதில் கூறுகிறார்.
ஞான. ராஜசேகரன் மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன் (கணிதமேதை) , ஐந்து உணர்வுகள் என்ற படங்களை இயக்கியவர். இந்தப் படங்களை எடுப்பதால் பொருளாதார ரீதியான வெற்றிக்கு உத்திரவாதம் இல்லை. அதே நேரம் இவை மாபெரும் ஆளுமைகள் பற்றி பேசுபவை. விவரங்கள், துல்லியமாக இருக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்தவை. இந்த அனுபவங்களை, வலிகளை நன்றாக இந்த நூலில் வெளிப்படுத்தி உள்ளார். யமுனாவுக்கும், பத்து வயது வித்தியாசமுள்ள பாபுவுக்கும் ஏற்படும் காதல் கதை ‘மோகமுள்’. இதை இயக்குவதற்கு முன்பு, அதை எழுதிய தி.ஜானகிராமனிடம் சில சந்தேகங்களைக் கேட்ட போது “ஒரு படைப்பாளியாக நாவலை எழுதி முடித்தவுடன் அவனும் வாசகனைப் போலவே ஆகி விடுகிறான். படைப்பாளியாக என்னால் விளக்கங்கள் தர இயலாது” என்று கூறியிருக்கிறார். பலர் எடுக்க முயற்சி செய்த கதை மோகமுள்.
‘பாரதி’ படத்தில் நடிக்க கமலஹாசன் சொன்ன விலை, அந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட சாயாஜி ஷிண்டே மேற்கொண்ட தவம், அவரைக் கண்டறிய இவர் செய்த முயற்சி, படத்தை தோல்வியடையச் செய்ய முயற்சி செய்த பார்ப்பனர்கள் போன்றவை பேசப்படுகின்றன. பாரதி, மோகமுள் திரைப்படங்களை நாம் யூ டியூபில் பார்க்கலாம்.
பெரியார் படமெடுக்கும்போது, முதலமைச்சராக இருந்த கலைஞர் காட்டிய ஈடுபாடு, திரைக்கதையை பார்த்த சிந்தனையாளர் வே.ஆனைமுத்து அதனை கி.வீரமணியிடம் காட்டச் சொன்ன காரணம், பெரியார் படத்திற்கு இசையமைக்க மறுத்த இளையராஜா, நல்லி குப்புசாமி செட்டியார் செய்த உதவி என பல்வேறு சம்பவங்கள் வருகின்றன.
ஒரு யூ டியூப் நேர்காணலில், தன்னுடைய அனுபவங்களை நூலாக வெளிக்கொண்டு வர உள்ளதாக ஞான.ராஜசேகரன் தெரிவித்து இருந்தார். எனவே, இந்த நூல் வெளி வந்தவுடன் படித்தேன்.
ஒரு பாலத்தை திறக்க முடியாமல் பல்லாண்டுகளாக இருந்த பிரச்சினையை முதலமைச்சர் கருணாகரன் தொகுதியில் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். இதனை ‘கலாக்காரனும், கலெக்டருமான ராஜசேகரனாலேயே’ தீர்க்க முடியும். நீண்ட காலமாக போராடி வரும் நிலம் கொடுத்த திருச்சூர் ஆதிவாசிகளின் பிரச்சினைக்கு, தன் பெயரில் காசோலை வாங்கி நிலத்தை வாங்கிக் கொடுத்த அனுபவம் என பலவும் வருகின்றன. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிகளுக்கு இடையே நடைபெறும் நாற்காலி மாற்றத்தினால் நடக்கும் நிர்வாக மாற்றங்கள்; கேரளா என்பதால் நிலவரம் தெரியாமல் ஒரு ரூபாய் என்பதற்கு பொருள் தெரியாமல், 90 ஆயிரத்திற்கு பதிலாக 90 இலட்சத்தை இழக்கத் தெரிந்த வியாபாரி என்பது போன்ற சம்பவங்களும் வருகின்றன.
திரைப்படக் கல்லூரி அனுமதிக்கு கே.பாலச்சந்தர் நடத்திய நேர்காணல், தன்னை சினிமா மெட்டீரியலாகவே அனைவரும் பார்த்த விதம், அப்பா இவருக்கு கொடுத்த சுதந்திரம், வேலூரில் இருந்து முதல் நாள் இரவு புறப்பட்டு சென்னை வந்து பார்த்த சத்யஜித் ரேயின் ‘சீம பத்தா’ தன்னை பாதித்த விதம் என விதவிதமான சம்பவங்களைச் சொல்லுகிறார். ஏறக்குறைய இந்த நூல் முழுவதுமே துணுக்குத் தோரணங்களாக உள்ளன. கேரளா எனபதால்தான், தன்னால் பதவியில் இருக்கும்போதே நான்கு படங்களை எடுக்க முடிந்தது என்கிறார். ‘நெருங்கிய நண்பரிடம் பேசுவது போன்றுதான் நான் இவற்றை பதிவு செய்திருக்கிறேன்’ என்று ஞான.ராஜசேகரன் சொல்வது உண்மைதான்.
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை- 78, 216 பக்கங்கள், ரூ. 250, செ.87545 07070.
நான் சென்ற சில நாடுகள்! – டாக்டர் ந.ராமசுப்ரமணியன்
அரசியல் விமர்சகர்,கல்வியாளர், ஆன்மீக ஈடுபாட்டாளர் என அறியப்பட்ட நூலாசிரியரின் பயண அனுபவ நூலே இது! நூலாக்கமே மிக பிரம்மாண்டமாக உள்ளது! A4 சைசில், 560 பக்கங்களில் மிகத் தரமான பாரின் ஆர்ட் பேப்பரில், கண்ணைக் கவரும் நூற்றுக்கணக்கான கலர் புகைப் படங்களுடன் தன் பயண அனுபவங்களை நம் கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்!
ராம சுப்ரமணியன் சில புகழ் பெற்ற பெரிய நிறுவனங்களில் உயர் பொறுப்பு வகித்தவர். பிறகு தானே கல்விக் கூடம் உட்பட பல நிறுவனங்களை நடத்தி வருகிறார்! அந்த வகையில் நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளுக்கு சென்றவர் என்றாலும், இதில் 45 நாடுகளை மட்டுமே குறிப்பிட்டு எழுதியுள்ளார்!
நூலாசிரியருக்கு சின்ன வயதில் இருந்தே வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்துள்ளது. 26 வயதில் இத்தாலி சென்றது இவரது முதல் அனுபவம்! இதன் பிறகு வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, சீனா, இந்தோனேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை வியட்நாம், பிரான்ஸ், தைவான், தாய்லாந்து, தென் கொரியா, மாலத் தீவு, கியூபா என ஏகப்பட்ட நாடுகளில் கால் பதித்து நல் அனுபவங்களை பெற்றுள்ளார்.
கியூபாவைப் பற்றிய இவரது அனுபவங்கள் சுவையானவை! அங்கு பனைமரம் தான் தேசிய மரம் என்பது ஆச்சரியப்படுத்துகிறது! ”மக்கள் அனைவருக்கும் தங்குவதற்கான இடத்திற்கு அரசு பொறுப்பு ஏற்கிறது. கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாக தருகிறார்கள்! அரசு முதியோர்களை இலவச இல்லங்கள் ஏற்படுத்தி மிக நன்றாக பராமரிக்கிறது” என்கிறார். அதே சமயம் பொருளாதாரத்தில் கியுபா பின்தங்கி உள்ளதையும், விபச்சாரம் என்பது குற்றவுணர்வு இல்லாமல் நடப்பதாகவும் குறிப்பிடுகிறார். கியூபாவில் பசு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பசு வதை சட்டம் கொண்டு வந்துள்ளார்கள் என்ற தகவலையும் கூறியுள்ளார். கியுபாவில் 175 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். ஆகவே, மருத்துவருக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அதனால், அவர்களில் பலர் பகுதி நேர வேலையாக டாக்சி ஓட்டுவதாகக் குறிப்பிடுகிறார்!
நேபாள பயணத்தை மிகவும் பக்தி சிரத்தையோடு எழுதியுள்ளார். புத்தர் நேபாளத்தில் உள்ள லிம்பினி எனுமிடத்தில் அவதரித்தார் என்பதே உண்மை! புத்தர் இந்தியவில் பிறந்தார் என நாம் சொல்வதை நேபாள மக்கள் ரசிப்பதில்லை. புத்தர் இந்தியாவிலிருந்து அஹிம்சை செய்தியை உலகிற்கு தந்தார் என ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசியதற்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பு நிலவியதாக சொல்கிறார்! ராமாயண சீதையும் நேபாளத்தின் ஜனக்பூர் என்ற இடத்தில் பிறந்ததாக சொல்கிறார்.
பல நாடுகளுக்கு சென்ற போதிலும் பூடான் அவருக்கு நீங்கா நினைவுகளை தந்ததாகச் சொல்கிறார். இலங்கையில் சைவம் தழைத்தோங்கியதை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்துள்ளார். பல சின்னஞ் சிறிய தீவுகளிலும் கூட பயணம் செய்து சிலாகித்து எழுதியுள்ளார். பெரிய நாடு, சிறிய நாடு என்ற பாகுபாடு இல்லாமல் புதுப் புது அனுபவங்களை பெறுவதையே குறிக்கோளாக கொண்டு பயணம் செய்துள்ளார்.
Also read
இந்த அளவுக்கு வெளி நாடுகள் செல்லும் வாய்ப்பு வெகு சிலருக்கே வாய்க்கும். அதுவும் இவர் தான் மட்டுமே செல்லாமல் குடும்பத்தினரையும் பல நாடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார். அதே போல தான் நடத்தும் பள்ளியில் உள்ள மாணவர்களையும் ,ஆசிரியர்களையும் கூட கட்டணமில்லாமல் அழைத்து சென்று மகிழ்வித்துள்ளார்! பல நாடுகளைப் பற்றிய அரிய தகவல்களை அறிந்து கொள்ளும் பொக்கிஷமாக இந்த நூல் உள்ளது என்பது மிகைப்படுத்தப்பட்ட புகழுரையல்ல, உண்மை!
நூல்; நான் சென்ற சில நாடுகள்
ஆசிரியர்; டாக்டர் ந.ராம சுப்ரமணியன்
வெளியிட்டோர்; நடேசன் சாரிட்டிஸ், தாம்பரம் போன்; 91-44-22266614
நூல் விமர்சனம்; அஜிதகேச கம்பளன்
இந்திய ஆட்சிப் பணியும் சினிமாவும் மற்றும் நானும்- ஞான ராஜசேகரன் – டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,சென்னை- 78, 216 பக்கங்கள், ரூ. 250, செ.87545 0707 – நூல்; நான் சென்ற சில நாடுகள்
ஆசிரியர்; டாக்டர் ந.ராம சுப்ரமணியன்
வெளியிட்டோர்; நடேசன் சாரிட்டிஸ், தாம்பரம் போன்; 91-44-22266614