பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன?

- சாவித்திரி கண்ணன்

கருப்பசாமி, அருப்புக் கோட்டை

பாஜகவிடம் தாங்கள் வியக்கும் அம்சம் என்ன?

இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக அது மாறி இருப்பது!

காங்கிரசை காலியாக்கிக் கொண்டிருப்பது!

திராவிடக் கட்சிகளை அடிமைகளாக ஆட்டுவிப்பது!

பாமக போன்ற ஏராளமான சாதிக் கட்சிகளை பொம்மலாட்டம் ஆட வைப்பது!

கண்ணுக்கு தெரிந்த வரை – இன்றைய நிலையில் – மற்ற கட்சிகளின் தலை விதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ள பாஜகவை தீர்த்துக் கட்டும் அரசியல் சக்தி ஒன்றைக் கூட காண இயலவில்லையே!

க.செபாஷ்டின், வேலூர்

‘அரசுப் பணியில் நிரந்தர வேலை கிடையாது. தற்காலிக பணியே! அதையும் ஏஜென்ஸி மூலம் தான் நிரப்புவோம்’ என அரசு ஆணை ( எண்;115) பிறப்பித்து உள்ளதே திமுக அரசு?

நீண்ட கால சர்வீஸ் கொண்ட பணியை தற்காலிகமாக்குவது ஒரு மோசடி! அதிலும் அரசே நேரடியாக நியமிக்காமல் காசு பார்க்க, ஏஜென்ஸிக்கு கைமாற்றுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

உதயநிதி தயாரிக்கும் படத்தில் சம்பளமில்லாமல் கமலஹாசன் நடிக்கவும், மணிரத்தினம் இயக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாமே, உண்மையா?

கை கோர்க்கும் கமலஹாசன், மணிரத்தினம், உதயநிதி

உண்மை தான்! ஆனால், சம்பளத்திற்கு பதில் லாபத்தை பங்கிட்டுத் தர ஒப்பந்தமாம்! ஆனால், கதையே இன்னும் தயாராகாமல் கைகோர்த்துக் கொண்டுள்ளனர்! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் அவர் சம்பளம் வாங்குவதோடு சரி! அந்தக் கலைஞன் எப்போதும் வியாபாரம் குறித்தெல்லாம் சிந்திப்பதில்லை. ‘வியாபாரம் பர்ஸ்ட்! கலை நெக்ஸ்ட்’ என்பது தான் இன்றைய சினிமா டிரெண்ட்!

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

மோடி அரசின் ரூ500, 1,000 பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான வழக்கில் நீதிபதிகளே கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனரே?

எத்தனை வாய்தாக்கள்! எத்தனை ஒத்திவைப்புகள்! அம்மோடியோவ்! நீதிபதிகளையே நிம்மதி இழக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள் பாஜகவினர்.

மு. ரத்தினவேல், விருதாச்சலம்

தன்னை வழி அனுப்ப வந்த இ.பி.எஸ், ஒ.பி.எஸ் இருவர் கைகளையும் இணைத்து வைத்து பூங்கொத்துக்களை வாங்கியுள்ளாரே மோடி?

ஒ.பி.எஸ் என்பவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட விஷம்! கடும் பிரயத்தனமெடுத்து வெளியேற்றப்பட்ட அந்த விஷத்தை மீண்டும் உட்செலுத்த முயற்சிக்கிறார் மோடி! அதிமுகவின் பாஜகவை நம்பிய பயணம் ஒரு தற்கொலை முயற்சியே!

எஸ், ராஜலட்சுமி, மதுரவாயில்

நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டங்களில் கணிசமான எம்.பிக்கள் கலந்து கொள்வதில்லையாமே?

மக்கள் மீது அவ்வளவு அக்கறையுள்ள எம்.பிக்களைத் தான் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பி உள்ளோம். இதில் அதிக ஆப்செண்ட் ஆன கட்சி பாஜக தான்!

எல். ஞானசேகரன், ஈரோடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உரிய முறையில் பயிர் காப்பீடு கிடைக்குமா?

பயிர் காப்பீடு திட்டத்தை எல்லாம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் லாபவேட்டையாக மாற்றிவிட்டது பாஜக அரசு! இந்தச் சூழலில் விவசாயிகள் பயிர் இழப்பை மட்டும் அனுபவிக்கவில்லை. அவர்களுக்கு பாலிசி கட்டிய பணமும் இழப்பு தான்!

ஆர்.ரமேஷ், பெங்களூர்

அரசு மருத்துவமனையில் இளம் விளையாட்டு வீராங்கனை பிரியா தவறான சிகிச்சை காரணமாக உயிர் இழந்துள்ளாரே?

காலபந்தாட்ட வீராங்கனை பிரியா

பேரதிர்ச்சி! பெருங்குற்றம்.

உரியவர்கள் தண்டிக்கப்படுவதோடு, இனி இந்த சம்பவத்துக்கு காரணமான பணிச் சூழல் உடனடியாக மாற வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஆரோக்கியமான பணிச் சூழலே இல்லை என்பதே இந்த மரணம் உணர்த்தும் செய்தியாகும். அலட்சிய மன நிலை உள்ள பணிச் சூழலுக்கு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமல்ல, அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவருமே  பொறுப்பு தான்!

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

பிரதமர், மோடி அமித்ஷாவை சந்தித்ததில் மன நிறைவு என ஒ.பி.எஸ் கூறியுள்ளாரே?

அடடா! இந்தப்படியே ஒ.பி.எஸுக்கு எப்போதும் மன நிறைவு கிடைக்க, பாஜகவில் சேர்ந்தால் அதிமுக பிழைக்கும்!

கோமதிநாயகம், கோவை

தமிழகத்தில் 60 இடங்களில் சுமார் 10,000 குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் வாழமுடியாத நிலையில் இடிக்கப்பட உள்ளதாமே?

குடிசை மாற்றுவாரிய வீடு கட்டித் தரும் திட்டம் அமலாகியே சுமார் 50 ஆண்டுகள் தான் ஆகின்றன! அப்போது சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் போன்ற இடங்களில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இன்னும் அப்படியே இருக்கின்றன! ஆனால் இடையில் 25, 30 வருடங்களில் கட்டப்பட்டவை சிதிலமடைந்துள்ளன! இரு கழகங்களின் ஊழல்களுக்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம்

குஜராத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா?

27 ஆண்டுகள் இடைவெளியின்றி ஒரே கட்சியின் ஆட்சி குஜராத்தை குற்றுயிரும், குலையுருமாய் மாற்றியுள்ளது கண் கூடாகத் தெரிகிறது. இந்த அதிருப்தியை அறுவடை செய்து கொள்ளும் அருகதை காங்கிரசுக்கு உண்டா என்பது தான் சந்தேகமாக உள்ளது. பாஜக மீண்டும் பதவிக்கு வந்தால், கதறுகின்ற மக்கள் கூட, உதறுகின்ற கட்சியாக காங்கிரஸ் பரிதாப நிலையில் உள்ளது என்பதே உண்மையாகும்!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time