காசி தமிழ் சங்கமமா? காவி இந்துக்களின் சங்கமா?

-சாவித்திரி கண்ணன்

தமிழோடு எந்த சங்காத்தமும் இல்லாத ஐ.ஐ.டி தான் தமிழ் சங்கம ஏற்பாட்டாளராம்! சமஸ்கிருத அறிஞரான சாமு சாஸ்திரி தான் ஒருக்கிணைப்பாளராம்! தமிழ் அறிஞர்களை, படைப்பாளிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பல கோடி செலவில், படாடோப ஏற்பாட்டில் நடக்கப் போவது என்ன?

முதலில் 2,500 பேர் என்றார்கள்! தற்போது 5,000 பேராம்! இலவச குளிர்சாதன ரயில் பயணம்! போக்குவரத்து, தங்குமிடம், சாப்பாடு, கண்டு களிக்க கலை நிகழ்ச்சிகள்! அயோத்தி ராமர் கோயில் பாரதமாதா கோவில் போன்ற கோவில்களில் தரிசனம்… என ஏக தடபுடல்! அத்தனையும் இலவசமாம்! அரசாங்க செலவில் தங்கள் இந்துத்துவ பிரச்சாரம் செய்வதற்கு தமிழ் சங்கமம் என்ற பெயர்!

மத்திய அரசின் பாரதீய பாஷா சமீதி அமைப்பாளரான சமஸ்கிருத அறிஞரான சாமு கிருஷ்ண சாஸ்திரி தான் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறாராம்! தமிழ் சங்கமம் நிகழ்வை ஒருங்கிணைக்க நல்ல தமிழ் அறிஞரை கூட இவர்களால் அங்கீகரிக்க முடியவில்லையே! தஞ்சையில் மத்திய அரசின் பல்கலைக்கழகம் உள்ளதே அதை பயன்படுத்த இவர்களுக்கு மனமில்லையே!

காசி தமிழ் சங்கமம் தொடர்பான அறிவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டவர்களின் பெயர்கள் இந்தியில்!

சென்னை ஐஐடி க்கும் தமிழுக்கும் என்னய்யா சம்பந்தம்? தமிழே புழங்காத ஒரு கல்வி நிறுவனம் தானா கிடைத்தது? தங்கள் நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தை சேர்ப்பதற்கே அவர்கள் எவ்வளவு தயக்கம் காட்டினார்கள் என்பதை மறக்க முடியுமா? 90 சதவிகிதம் பார்ப்பன பேராசிரியர்களைக் கொண்ட ஒரு தொழில் நுட்ப கல்வி நிறுவனம் தமிழ் நிகழ்வை எங்கனம் நடத்த முடியும்? இவங்களுக்கு ஒத்தாசை பண்ணுவது காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாம்!

காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உறவு என்பது ஆன்மீகம் சம்பந்தமானது தானே அன்றி, தமிழ் சம்பந்தமானதல்ல! அப்படியே தமிழுக்கு சம்பந்தம் இருப்பதாகக் கொண்டாலும், அந்தத் தமிழ் சம்பந்தமும் ஆன்மீகம் தொடர்பானதே அன்றி வேறொன்றுமல்ல!

இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.என அறிவிக்கப்பட்டதை நம்பி பலரும் முயற்சி பண்ணி ஏமாந்தது தான் மிச்சம்!

ஏனென்றால், எல்லாமே ஓசி என்பது ஒரு புறம்! போவது பக்தி மற்றும் அரசியல் சுற்றுலா என்பது மறுபுறமுமாக இருக்கும் போது, அறிமுகமில்லாத தமிழ் அறிஞர்களோ, கலைஞர்களோ, எழுத்தாளர்களோ தேவையில்லை. எல்லாமே நம்மாவாக இருக்கட்டும் என தீர்மானித்து அவர்களே எல்லா பதிவையும் செய்து முடித்துவிட்டு ஒப்புக்கு இப்படி ஒரு தகவலையும் வெளியிட்டு தங்களை பாதுகாத்துக் கொண்டாங்க!

பாஜக அலுவலகத்தில் காசி தமிழ் சங்கமம் தொடர்பான சிறப்பு மலர் வெளியீடு!

216 பேரை உள்ளட்டக்கிய பனிரெண்டு குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்! இலக்கியவாதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், யோகா வல்லுனர்கள், ஆயுர்வேதா மருத்துவர்கள் ( தமிழ் மருத்துவமான சித்த மருத்துவம் கிடையாது) இசைக் கலைஞர்கள், பாடகர்கள், நடனமணிகள், வணிகர்கள், வலைப்பதிவர்கள் என ஏகப்பட்ட கேட்டகிரியில ஆட்களை உள்ளுக்குள் இழுத்து இருக்காங்க! ஆனா, உண்மையில் இதெல்லாம் வெளித் தோற்றத்திற்காக சொல்லப்பட்ட தகுதிகள்! ஆனால், இந்த காசி தமிழ் சங்கமத்தில் கலந்து கொள்வதற்கான முதல் தகுதி பார்ப்பனர், இரண்டாம் தகுதி பாஜக உறுப்பினர் என்பது சொல்லப்படாத அம்சமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது! இதை பாஜகவினர் வெளியிட்ட விளம்பரங்களாலும், ஐ.ஐ.டியின் பின்புலத்தாலும் நாம் அறியலாம்! ஆக, இது தமிழக பாஜக மாநாடு என்றும் சொல்லலாம்!

பிரதமர் மோடியே இதில் கலந்து கொண்டு பேசுகிறாராம்! காசியில் அனுமந்த் காட் எனப்படும் ஒரு பகுதியில் முழுக்க,முழுக்க தமிழ்ப் பார்ப்பனர்கள் தான் உள்ளனராம்! அவர்கள் தங்களின் தமிழக பார்ப்பன சொந்தங்களோடு அளவளாவும் வண்ணமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டதாம்!

வாரணாசியில்,. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்றைய தினமான நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கருத்தரங்குகள், விவாத அரங்குகள், கலாசார-பாரம்பரிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் எட்டு நாட்களுக்கான பயணமாக இதை திட்டமிட்டுள்ளனர். முதல் குழு நவம்பர் 16 புறப்படுகிறது. கடைசி குழு டிசம்பர் 20 சென்னை வந்தடைகிறது என்பாத ஏற்பாடாகியுள்ளது. அயோத்தி ராமர் கோவில், காசி விஸ்வா நாதர் கோவில், பிரயாக் என பற்பல கோவில்களை தரிசிக்க ஏற்பாடாம்! மேலும், இந்துத்துவ அறிஞர்களின் புராண, இதிகாச சொற்பொழிவுகளும் உண்டாம்!

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற பாஜகவிற்குள் கடுமையான போட்டா போட்டி நிலவியதில் அதிலும் கொஞ்சம் பாலிடிக்ஸ்! அண்ணாமலை கோஷ்டிக்கு, ஹெச்.ராஜா கோஷ்டிக்கு, வானதி சீனிவாசன் கோஷ்டிக்கு என ஆளாளுக்கு தங்கள் கோஷ்டி ஆட்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார்கள் என தெரிய வருகிறது. இதில் செலக்‌ஷன் கமிட்டி என்பது ஆர்.எஸ்.எஸ் தானாம்! கோடிக் கோடியாய் செலவுக்கு பஞ்சமில்லை! எல்லா செலவையும் மத்திய அரசு தான் செய்கிறது!

பாஜக அரசின் ஒரே நாடு, ஒரே கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என பாரதிய பாஷா சமீதி சொல்கிறது! ஒரே நாடு, ஒரே கல்வி என்பவர்களுக்கு ஒரே மொழி என்று சொல்வதற்கு இன்னும் கொஞ்ச காலம் தேவைப்படலாம்! பலி கொடுக்கும் ஆட்டை குளிப்பாட்டி அலங்கரித்து மாலையிட்டு வணங்கி தான் பலி கொடுப்பார்கள்! அந்த வகையில் இந்த பாஜக அரசும், ”தமிழ், தமிழ்..” என்று ஓவராக சீன் காட்டி அரவணைத்து தான் நம்மை அழிப்பார்கள்!

தமிழ் நாட்டு அரசையும், உண்மையான தமிழ் அறிஞர்களையும் முற்ற முழுக்க ஒதுக்கி வைத்து விட்டு தமிழுக்கு விழாவா? அறிவியல் தமிழை –  உண்மையான தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வுகளை – புறக்கணித்து ஆன்மீகம் மட்டுமே தமிழ் என்பதாக மாய்மாலமா? மக்கள் வரிப்பணத்தில் மத சித்தாந்தத்தை பரப்ப, மொழியின் பெயரால் நடத்தப்படும் அரசியல் சித்து விளையாட்டே இந்த காசி தமிழ் சங்கமம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time