அழிவை நோக்கி நகரும் அரசு கேபிள் டி.வி!

-சாவித்திரி கண்ணன்

பழுதடையும் செட் ஆப் பாக்ஸ்கள்! வெறுப்பான மக்கள்! விலகிச் செல்லும் ஆப்பரேட்டர்கள்!முறைகேடான நிர்வாகம்! அரசு கஜானாவிற்கு வரவேண்டிய 4,440 கோடிகள் எங்கே போனது?  அரசுக்கோ நஷ்டம்! ஆபரேட்டர்களுக்கோ கஷ்டம்! ஊழலில் திளைப்பவர்களுக்கோ அதிர்ஷ்டம்!

தமிழகத்தில் வெறும் 500 கனெக்‌ஷன் வைத்துள்ள சின்னஞ் சிறிய ஆபரேட்டர்கள் கூட தன் குடும்பத்தை நடத்தக் கூடிய ஒரு கெளரவமான ஊதியத்துடன் வாழ முடிகிறது! ஆனால் 36 லட்சம் கனெக்‌ஷன்களை வைத்திருந்த அரசு கேபிள் படிப்படியாக 15 லட்சம் கனெக்‌ஷன்களை இழந்து நிற்கிறது. கட்டமைப்பும் குலைந்து வருகிறது! 25,000 ஆபரேட்டர்களைக் கொண்டிருந்த நிறுவனத்தில் இன்று கொஞ்சம்,கொஞ்சமாக விலகிய வண்ணம் உள்ளனர்! ‘விட்டால் போதும், அரசு கேபிள் கனெக்‌ஷன்களை தலையைச் சுற்றித் தூர எறிந்துவிடலாம்’ என்ற நிலையில் தான் பெரும்பாலான ஆபரேட்டர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு குளறுபடிகளும், குழப்பங்களும் கொண்டதாகத் தான் இந்த நிறுவனம் ஆரம்பம் முதல் இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சி தான் தற்போது இதன் தலைவராக இருந்த குறிஞ்சி சிவகுமார் விலக்கப்பட்டு உள்ளார். அரசாங்கத்தால் எந்த ஒரு தொழிலையும் நேர்மையாகவும் சிறப்பாகவும் பண்ண முடியாதோ என்று எண்ணத் தக்க அளவில் அரசு கேபிள் நிறுவனம் தேய் பிறையாகிக் கொண்டுள்ளது!

முதலாவதாக, ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு கேபிள் நிறுவனம் என்பது ஆத்திரத்திலும், அவசரத்திலும் உருவான நிறுவனமாகும்! திமுக குடும்பத்தில் மாறன் பிரதர்ஸுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் ஏற்பட்ட உரசல் காரணமாக உருவானது கலைஞர் தொலைகாட்சி! அந்தக் கலைஞர் தொலைகாட்சியை தடங்களில்லாமலும், மாறன் பிரதர்ஸுன் சுமங்கலி கேபிள் விஷன் தயவின்றியும் ஒளிபரப்ப 2007 ஆம் ஆண்டு உருவானதே அரசு கேபிள் நிறுவனம்!

அப்போது மாறன் பிரதர்ஸின் சுமங்கலி கேபிள் விஷன் தனிக்காட்டு ராஜாவாக கேபிள் தொழிலில் அராஜக தர்பார் நடத்திக் கொண்டு இருந்தது. அந்த சமயம் துணிச்சலும்,ஆற்றலும் மிக்க அரசு அதிகாரி உமா சங்கரை அரசு கேபிளுக்கு கலைஞர் பொறுப்பாக்கியதால் கஷ்டப்பட்டு 4.94 லட்சம் இணைப்புகளை அரசு கேபிளுக்கு அவர் உருவாக்கினார்.

கருணாநிதியால் நியமிக்கப்பட்ட உமாசங்கர் ஐ.ஏ.எஸ்

இதற்கிடையில் மத்திய அரசாங்கத்தில் டிராய் அமைப்பு, ‘மத்திய, மாநில அரசுகள் எம்.எஸ்.ஓ எனப்படும் கேபிள் கனெக்‌ஷன் தரக்கூடாது’ என சட்டவிதிமுறையைக் கொண்டு வந்தது. ஏனென்றால், ”அரசு வசம் அனைத்து தொலைகாட்சிகளின் ஒளிபரப்பும் சென்றால், அவை அரசை சுதந்திரமாக விமர்சிக்க முடியாது, கட்டுப்படுத்தப்படும், இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும்” என்றது.

ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதைப் பொருட்படுத்தாமல் அனைத்து தொலைக் காட்சிகளையும் கட்டுப்படுத்தி அடக்கியாள அரசு கேபிள் தான் சரியான ஆயுதம் என்ற வகையில், தொடர்ந்து சட்டவிதிகளை மீறி செயல்பட்டார்! இதைத் தொடர்ந்து இந்த பிரச்சினை நீதிமன்றம் சென்றது. பல்வேறு அரசியல் அழுத்தங்கள் தந்து அதிமுக அரசு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையையும் 2017ல் வாங்கியது!

உண்மையில் அரசு கேபிள் என்பதே ஒரு சட்ட விரோத நிறுவனமாகும்! அதை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் கனெக்‌ஷன் தருவதாகச் சொல்லி தமிழக அரசு நியாயப்படுத்தி வந்தது! இந்த தொழிலுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை முறையாக உருவாக்காமல், ஏற்கனவே எம்.எஸ்.ஒக்கள் உருவாக்கி இருந்த கட்டுப்பாட்டு அறைகளை அரசாங்க அதிகாரத்தில் தங்களின் கீழ் கொண்டு வந்து ஒளிபரப்பியது அரசு கேபிள் நிறுவனம். ஆப்பரேட்டர்கள் பங்களிப்பின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் பெற்றது. ஆனால், அது ஆப்பரேட்டர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை.

இதனால், எப்படியெல்லாம் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் இருக்க வேண்டும் என்று கனவு கண்ட சாமானிய கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கனவுகள் சிதறிப் போனது!அரசு அதிகாரிகள், ஆளும்கட்சி அரசியல்வாதிகள் தந்த நெருக்கடிகள், தொல்லைகளை அவர்கள் எதிர் கொண்டனர். இந்த வகையில் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் ஆப்பரேட்டர்களை நாசம் செய்து, தானும் நாசப்பாதையில் பயணித்தது!

வளம் கொழிக்கும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்தை வறுமையான தோற்றத்துடன் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டணி  நிர்வாகம் செய்தது!  கேரேஜ் கட்டணம் என்றும் பிளேஸ்மெண்ட் கட்டணம் என்றும் கொள்ளை வருவாய் இங்கே கொட்டுகிறது! ஆனால், அவை முறைப்படி அரசு கஜானாவிற்கு போவதே இல்லை!  சுமார் 36 லட்சம் இணைப்புகள் வைத்திருந்த அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம்  வருடத்திற்கு  160 கோடிக்கும் அதிகமாகவே இதில் வருமானமாகப் பெற்றது.

இதே போல உள்ளூர் சேனல் வருமானம் என்பது தனி விவகாரமாகும்!

தற்போதுள்ள 32 மாவட்டங்களில், 294 தாலுகாக்களில் ஒரு தாலுகாவிற்கு 3 முதல் நான்கைந்து உள்ளூர் சேனல்கள் உள்ளன! எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் சுமார் 900 உள்ளூர் சேனல்களை அரசு தன் வசம் வைத்துள்ளது!

ஒரு உள்ளூர் சேனல்களுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 2 லட்சம் வரை மாதமொன்றுக்கு வசூலிக்கப்படுகிறது!  இதன்படி பார்த்தால் இதன் மூலம் குறைந்த பட்சம் 120 கோடி அரசு கஜானாவிற்கு வர வேண்டும்.

இப்படியாக கிட்டத்தட்ட 280 கோடி ருபாய் வருமானம் வரும். இதுதவிர,  ஒரு இணைப்பின் மூலம் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு ரு 70 முதல் ரு100 வரை  கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானம் எல்லாம் எங்கே போகிறது? ஏன் அரசு நிறுவனமான அரசு கேபிள் கார்ப்பரேஷன் இது வரை தன் வரவு, செலவு கணக்கை பொது வெளியில் வைக்கவில்லை.

இது போக ஆப்பரேட்டர்கள் செலுத்தும் மாத சந்தாவில் FTA எனும் இலவச பேக்கேஜ் 30  ருபாய் என 36 லட்சம் இணைப்புகள் என்று கணக்கிட்டு பார்த்தால் மாதம் ஒன்றுக்கு சுமார் 10 கோடி ரூபாய் கிடைக்கும். இப்படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு ஆபரேட்டர்கள் கட்டும் சந்தா தொகை 125  கோடிகள்! இந்த வருமானத்தையாவது கணக்கு வைத்திருப்பார்களா எனத் தெரியவில்லை.

இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மொத்த வருமானத்தை கணக்கிட்டால் கரேஜ் கட்டணம், உள்ளுர் சேனல்களின் வருமானம்,

மாதச் சந்தா ஆகியவற்றை கூட்டி ஓராண்டிற்கு எவ்வளவு சம்பாதிக்க இயலும்…எனப் பார்க்கும் போது 11 ஆண்டுகளில் சுமார் 4,400 கோடிகள் வருமானம் வந்திருக்க வேண்டும்! இவை அரசு கஜானாவிற்கு வராமல் எங்கே போனது?

இந்த அளவுக்கு மிக இயல்பாக 4,400 ருபாய் கோடிகளில் வருமானம் பார்க்கும் அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் தரமான சர்வீஸ் தருவதில்லை! மக்கள் கேட்காமலே செட் ஆப் பாக்ஸ்களை இலவசமாக தந்தது அரசு! அப்படித் தரப்படும் செட் ஆப் பாக்ஸ்கள் பழுதடைந்தால் அதை சரி செய்து தர முடியாவிட்டால் எப்படி மக்கள் அரசு கேபிளில் தொடர்வார்கள்? அதற்கான சர்வீஸ் மையங்களையும், ஆட்களையும் உருவாக்கவே இவர்கள் சிந்திக்கவில்லை! பணத்தை வாங்கி பாக்கெட்டில் போடுவது மட்டுமே குறிக்கோளாக இயங்கினார்கள்! இதனால் தான் குறுகிய காலத்திலேயே 15 லட்சம் வாடிக்கையாளர்களை பறிகொடுத்து நிற்கிறது!

செயல்படாத செட் ஆப் பாக்ஸ்களையும், தரமில்லாத ஒளிபரப்பு சேவையையும் மக்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? மக்கள் தனியார் எம்.எஸ்.ஒக்களை நோக்கி நகர்ந்தார்கள்! இந்த சமயத்தை நன்கு பயன்படுத்தி ஷகிலனின் டி.சி.சி.எல் களம் கண்டு மிக குறுகிய காலத்தில் 33 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை அள்ளிக் கொண்டு தமிழகத்தின் மிகப் பெரிய எம்.எஸ்.ஓவாக வளர்ந்துள்ளது. அடுத்து புதிய வரவாக அமித்ஷா உறவினரால் நடத்தப்படும் குஜராத் டெலிகாம் கேபிளும் பல லட்சம் வாடிக்கையாளர்களை அள்ளிவிட்டது!

குறிஞ்சி சிவகுமார்,                                                          நீரஜ் மிட்டல்

இந்தச் சூழலில் அரசு கேபிள் கார்ப்பரேஷன் தன்னை கொஞ்சம் கூட சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் பயன்படுத்தப்படாத செட் ஆப் பாக்ஸ்களை மக்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். அல்லது அதற்குரிய பணத்தை கட்ட வேண்டும் என்பது படு முட்டாள்தனம் அல்லது முரட்டுத்தனமான அதிகாரத் திமிரே அன்றி வேறல்ல! மக்களிடம் இலவசமாக ஒன்றை தந்த பிறகு தரமற்ற அதை அவர்கள் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்றோ, திருப்பித் தர வேண்டும் என்றோ கட்டாயப்படுத்த முடியாது. அரசாங்கத்திற்கு தைரியம் இருந்தால், ”செட் ஆப் பாக்ஸ்களை மக்கள் திருப்பித் தரவும்” என ஊடகங்களில் அறிக்கை தந்து பார்க்கட்டும். ”ஓட்ட, உடைசலான செட் ஆப் பாக்ஸை திருப்பி வேற கேட்பீங்களா?” எனக் கொந்தளிப்பார்கள்!

யாருக்காக இந்த அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனம் துவங்கப்பட்டது…? யார் யாரெல்லாம் இதில் ரகசியமாக லாபம் அடைந்தார்கள் என்று பார்த்தால், முன்னாள் அரசு கேபிள் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் மட்டுமே இதில் குறைந்தபட்சம் 2,000 கோடிகள் பணம் பார்த்திருப்பார் என்பது திண்ணம்! ஓரண்டுக்கு முன்பு பொறுப்பேற்ற சிவகுமாரும் தன் பங்கிற்கு சில கோடிகள் சம்பாதித்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதே சமயம் அவருக்கும், அதிகாரிகளுக்கும் உறவு சுமூகமாக இல்லாமல் போய்விட்டது. அதிகாரிகளுக்கு முதல்வரிடம் உள்ள ஆதிக்கம் காரணமாக அவர் பதவியை பறித்துவிட்டனர்! ஆனால், இது அரசு கேபிள் கார்ப்பரேஷன் சிக்கலை மேலும் அதிகரிக்கவே செய்யும். கேபிள் தொழில் உலகம் பற்றிய அடிப்படை அரிச்சுவடி கூட அறியாத அதிகாரியான நிரஜ் மிட்டலின் நகர்வுகளை பார்க்கும் போது, அவர் வெகு சீக்கிரம் அரசு கேபிளுக்கு மூடுவிழா நடத்தவே வாய்ப்புள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time