வ.உ.சியை வாழ்க்கை துணையாக்கும் நூல்!
இடது சமூக அரசியல்,கலை இலக்கிய காலாண்டிதழ் வ.உ.சியை நினைவு கூர்ந்து, சிறப்பிதழ் ஒன்றை வ.உ.சியின் 150 ஆவது பிறந்த நாளுக்கான ஆவண சிறப்பிதழாக நேர்த்தியாகக் கொண்டு வந்துள்ளது. வ.உ.சி குறித்து இது வரை ஏராளமான செய்திகள் வெளி வந்துள்ளது. ஆனால், இந்த இதழை படித்த போது இன்னும், இன்னும் வ.உ..சி பற்றி பேசவும், எழுதவும் நிறைய உள்ளது எனத் தோன்றியது! அவ்வளவு அரிய தகவல்களை தொகுத்து தந்துள்ளனர்!
‘மக்கள் வாழ்வில் வ.உ.சியின் அறியப் படாத வாய்மொழிக் கதைகள்’ என்ற முதல் கட்டுரையே படு சுவாரஷ்யமாக உள்ளது. குடியானவருக்கு பரிவு காட்டிய வாய்மொழிக் கதையில் தன்னை தேடி வந்தவர்களை மட்டுமல்ல, சாலையில் தான் நடக்கும் போது சந்திக்க நேரும் குடியானவனின் முகக் குறிப்பறிந்து விசாரித்து பரிவோடு அவர்களின் தீராப் பிரச்சினைகளையும் எளிதில் தீர்த்து வைத்தவர் எனத் தெரிய வருகிறது! மற்றொரு வாய் மொழிக் கதையில் அன்றைய உணவிற்கான வருமானத்திற்கு சாணி வறட்டி தட்டி விற்கும் நிலையில் அவர் குடும்பச் சூழல் இருந்தது தெரிய வரும் போது மெய் சிலிர்த்தது. இப்படியாக ஒன்பது வாய்மொழிக் கதைகளையும், அந்தக் கதையின் மூலத்தையும் சில ஆதாரங்களோடு ரெங்கையா முருகன் ஆவணப்படுத்தி உள்ளார்!
‘வ.உ.சியின் மொழியும், பொருளியலும்’ என்ற கதிர் நம்பியின் கட்டுரை வ.உ.சியின் மொழி வழி தேசிய சிந்தனை குறித்து அழகாக விளக்கி எழுதப்பட்டுள்ளது. மொழியின் முக்கியத்துவம், பிற மொழிக் கலப்பற்ற தமிழின் தனித்தன்மை குறித்து வ.உ.சி ஆழமாகவே சிந்தித்து உள்ளார். அத்துடன் பொருளியல் தற்சார்பு தேசியம் என்ற கருத்தாக்கத்தையும் வ.உ.சி முன் வைத்துள்ளார்! புறவயமாகப் பொருளியல் மேம்பாட்டையும், அகவயமாக மொழித் வழித்தேசத்திற்கான கட்டுமானத்தையும் வடிவமைக்க வ.உ.சி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றி இந்தக் கட்டுரை புது பரிமாணங்களைத் தருகிறது!
‘வ.உ.சி அவர்களின் சமூகப் பார்வை” என்ற கொளத்தூர் மணியின் கட்டுரை வ.உ.சியின் முற்போக்கு சிந்தனைகளை, சாதி, சமயங்களைக் கடந்த உன்னதங்களை, பற்பல நிகழ்வுகள் வழியே படம் பிடித்துக் காட்டுகிறது. வ.உ.சி மறைவுக்கு பெரியார் எழுதியுள்ள கட்டுரை நம் கண்களைக் குளமாக்குகிறது. மற்றொரு கட்டுரையில் வ.உ.சி இறப்பை ஹிந்து, தினமணி, மெயில், மித்ரன் போன்ற இதழ்கள் அலட்சியப்படுத்தியமைக்கு கொந்தளித்துள்ளார் பெரியார்!
‘பெரியாரின் சுயமரியாதையும், வ.உ.சியின் தன் விடுதலையும்’ என்ற கட்டுரையில் ப.திருமாவேலன்! வ.உ.சிக்கும், பெரியாருக்கும் உள்ள நட்பு, நெருக்கம் ஆகியவற்றோடு, வ.உ.சி என்ற ஆளுமையைப் பார்த்து தான் பொதுத் தொண்டில் இறங்கியதாகக் குறிப்பிடும் பெரியாரின் வாக்குமூலத்தையும் திருமாவேலன் பதிவு செய்துள்ளார். வ.உ.சியின் காலத்தை 1904 முதல் 12 வரை அரசியல் விடுதலைக்காகன காலமாகவும், 1918 முதல் 36 வரை சமூக விடுதலைக்கான காலமுமாக குறிப்பிடும் திருமாவேலன், அது பற்றியே இந்த கட்டுரையை எழுதியுள்ளார். ‘பார்ப்பன ஆதிக்கத்தை குறித்தும் , அதன் தாக்கங்கள் குறித்தும் பெரியாரை போலவே வ.உ.சியும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தார்’ என இந்த கட்டுரை ஆவணங்களோடு நிறுவுகிறது.
‘வ.உ.சிதம்பரனாரின் சிந்தனைப் புலம்’ என்ற கட்டுரையை கண.குறிஞ்சி எழுதியுள்ளார். ‘சாதி ஒழிப்பு பற்றி வெறுமனே பேச்சில் அல்லாமல் வாழ்ந்து காட்டியவர் வ.உ.சி’ என பல சம்பவங்களை நினைவுபடுத்தி சொல்கிறார் கண.குறிஞ்சி. வ.உ.சி காலம் கடந்து சிந்தித்தவர். ‘பெண்கள் குறித்த அவரது பார்வை இன்றைய பெண்ணியச் சிந்தனைகளுக்கு முன்னோடியாக இருக்கின்றன. ..’ என்று கூறும் ஆசிரியர், ஆண் – பெண் சம உரிமை குறித்தும், பெண் கல்வி குறித்தும் வ.உ.சி நிறையவே எழுதியும், பேசியும் வந்துள்ளதை மேற்கோள் காட்டியுள்ளார்!
”வறுமையினும், வியாதியினும் சகிக் கொணாக்
கொடியது அடிமைத்தனமே” என்கிறார் வ.உ..சி!
வ.உ.சி குறித்த பாரதிதாசனின் அருமையான கவிதை ஒன்றையும் இந்த சிறப்பிதழ் வெளியிட்டு உள்ளது!
‘வ.உ.சியின் காலமும், இக்காலமும்’ என்ற தலைப்பில் குருசாமி மயில் வாகனன் வ.உ.சியின் சுதேசி கருத்துக்களை இந்தக் காலகட்டத்தோடு பொருத்தி, அதன் அவசியத்தை நன்றாக விளக்கியுள்ளார். அன்னியப் பொருட்களை புறக்கணித்து, சுதேசியத்திற்காக பாடுபட்ட இந்திய தேசம் இன்று அன்னிய பொருட்களை அரவணைத்து வரும் அவலத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
‘ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு ஜாதியாய் இருந்தால் என்ன?’ என்ற கட்டுரையில் அறிவழகன் பெருஞ் சொல்லாக வ.உ.சி பேசியவற்றை மூன்றாக காட்டி, அடையாளப்படுத்துகிறார். சுய அரசாட்சி, வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பிராமணரும் பிராமணதல்லாரும் ஆகிய மூன்றைக் குறித்த வ.உ.சியின் பார்வைகளை நன்கு விளக்கியுள்ளார்! ”சுய அரசாட்சிக்கு அடிப்படையாய் சாதி, மத வேற்றுமைகளை களைதல் முக்கியம்” என்கிறார் சிதம்பரனார்.
வ.உசி பற்றிய நாமக்கல் கவிஞரின் கவிதையும், கவிஞர் முத்துலிங்கம் எழுதிய கவிதையும், சுரதா கவிதையும் இந்த சிறப்பிதழுக்கு அழகுக்கு அழகூட்டுகின்றன!
கடைசியாக சொல்ல வேண்டுமென்றால், இடது வெளியிட்டுள்ள இந்த வ.உ.சி சிறப்பிதழ் வெறுமனே வ.உ.சியின் புகழ் பாடவில்லை. தற்காலச் சூழலில் வ.உ.சியின் பொருத்தபாட்டினை உணர்த்துகிறது! நம்மை இன்றைய சமூக, அரசியல் செயல்பாடுகளுக்கு முன் நகர்த்துவதாகவும் உள்ளது!
விமர்சனம்; சாவித்திரி கண்ணன்
நூல்; இடது காலாண்டிதழ், வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ்
ஆசிரியர்; கண.குறிஞ்சி
வெளியீடு; புதுமலர் பதிப்பகம்
விலை; ரூ100
தொடர்புக்கு; 94433 07681
—————————————————————————————————————
ஈழப் போராட்டத்தின் வீரத்தையும், சோகத்தையும் படம் பிடிக்கும் நூல்!
என்னுடைய மனதுக்கு மிக நெருக்கமான புத்தகங்கள் உண்டென்றால், அதில் முதலாவதாக இடம்பெற்றிருப்பது தீபச்செல்வன் எழுதிய ‘நடுகல்’ என்னும் புத்தகம்தான். இது எம் தமிழ் மண்ணைப் பற்றியது; எம் மண்ணின் மைந்தர்களான தமிழர்களைப் பற்றியது என்பதால்கூட அப்படி இருக்கலாம்.
இந்த நூலைப் படிக்கும்போது கதை நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன். பல நேரம் நூலின் வரிகளை உதடுகள் உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கண்கள் கசிந்து கொண்டே இருந்தன. வாசிப்பதற்கே இத்தனை துயரம் ஏற்படுகிறது என்றால், அந்தத் துயரங்களையெல்லாம் நேரில் அனுபவித்த தமிழர்களின் வலிகள் மிகக் கொடூரமானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தேன்.
ஈழ விடுதலைப் போராட்டத்தில் மரணத்தோடு போரிட்ட தமிழ் மக்களின் போராட்டத்தையும், அவர்களின் போராட்ட வாழ்வியலையும் கதை சொல்லல் வழியாகக் கட்டமைத்திருந்தது நடுகல்.
ஈழத்தில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது, தந்தையின் ஆதரவு ஏதும் இல்லாமல் ஒரு குடும்பம் படும் பாட்டை விவரிக்கிறது நடுகல்.
போரில் வீர மரணம் அடைந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் தொன்மைப் பண்பாடுகளுள் ஒன்று. தீபச்செல்வனின் நடுகல்லானது, ஒரு போராளியைப் பற்றிய நினைவுகளைச் சுமந்திருக்கும் புதினமாய் வந்திருக்கிறது.
அதாவது, ஈழப்போராட்டத்தில் தன் முதல் மகன் களப்போராளியாகி வீரச் சாவடைய, வீர மரணம் அடைந்த அவனை நினைவு கூற ஒரு புகைப்படம்கூட கைவசம் இல்லாத நிலையில், அவனைப் பற்றிய நினைவுகளையே நடு கல்லாய்ச் சுமந்து வருகிறாள் ஒரு தாய். மகனைப் பறிகொடுத்தவள், தன் மகனின் முகம் பார்க்க வைத்திருந்த புகைப்படங்களையும் தொலைத்த வலியோடு கதை முழுதும் பயணிக்கிறார் அந்தத் தாய்.நேசித்தவனை இழப்பது துயரம் என்றால், அவனுடைய நிழற்படத்தையும்கூட இழப்பது மிகப்பெரும் துயரம்.
இதில், கதை சொல்லியாக வரும் இரண்டாவது மகன் வினோதன், தன் அப்பா வருவார் என்ற நம்பிக்கையில் இருந்து இருந்து ஏமாந்து விடுகிறான். அவன் அண்ணன் இல்லாமலும்,போரின் போது தங்கை மற்றும் அம்மாவுடன் சேர்ந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயரும் போதும் வழிநெடுகப் போரின்போது கொல்லப்பட்ட மனித உடல்களே எங்கும் கிடந்ததைப் பற்றி வினோதன் கூறும் பகுதிகள் இரத்த சாட்சிகளாய் இருக்கின்றன. வீதிகள் முழுக்க சருகுகள் கிடக்கும் காட்சிகள் போல சனங்கள் செத்துக் கிடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்குகிறது.
போரின் போது தமிழ் மக்கள் அடைந்த வேதனைகள் அனைத்தையும் மிக வேதனையோடு விவரித்திருக்கும் அந்தப் பகுதிகள் கண்ணீரும் வலியும் நிரம்பியவை.பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் பதுங்கு குழியிலும், சாதிக்க வேண்டிய வயதில் சவப்பெட்டியிலும் இருந்த நிலைமைகள் இனி வேறு எந்த இனத்திற்கும் வரக்கூடாது.
இயக்கத்தில் சேர்ந்திருந்த தனது மகன் வீரச் சாவடைந்த பிறகு, அவனது நினைவாக ஒரு கல்லை நட்டு, அந்தக் கல்லையே மகனாகப் பாவித்துக் கொண்டிருப்பார் அந்தத் தாய். மகனாகப் பாவித்துக் கொண்டிருந்த அந்தக் கல்லை சிங்கள இராணுவ வீரன் உடைத்து விடுவான். அப்போது அந்தத் தாய் கூறும்போது “எங்கட பிள்ளயளின்ரை நினைவுகளுக்கு நீங்கள் பயப்படுற வரைக்கும் உங்களாலை அவங்களை அழிக்கேலாது”.
இந்த நூலின் கதையை நகர்த்திப் போவது பிரசன்னா என்ற போராளி வெள்ளையனைப் பற்றிய நினைவுகள்தான். சொல்லப்போனால், இந்த நூல் முழுக்க போராளி பற்றிய நினைவுகளே நிரம்பிக் கிடக்கின்றன. மகனை இழந்த தாயின் தவிப்பு, அண்ணனை இழந்த தம்பி மற்றும் தங்கையின் சோகம் என, உறவுகளை இழந்தவர்களின் வலியை மிகுந்த வலியோடு படைத்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன்.
போராளி வெள்ளையனின் தம்பியாக வரும் வினோதன், தன் அண்ணன் படத்தைத் தேடி கதை முழுக்கத் தேடுவான். ஆனாலும், அது கிடைக்காத போது அவன் கலங்குவது வேதனை அளிக்கும்.
வீரச்சாவடைந்த போராளி அண்ணனின் ஒளிப்படத்தைத் தேடியலையும் தம்பியின் தவிப்பும் நடுகல்லில் பரவிக் கிடக்கிறது.
நடுகல் என்றாலே, போரில் பங்கேற்ற போராளிகளின் கதைகளே பெரும்பாலும் சொல்லப்படும். ஆனால், தீபச்செல்வனின் நடுகல் நூலானது, வீரச்சாவடைந்த போராளிகள் என்பதையும் தாண்டி, அந்தப் போராளிகளைப் பெற்றெடுத்த தாய்மார்களின் நினைவுகளையும் தவிப்பையும் பேசியிருக்கிறது. மேலும், வீரச் சாவடைந்த போராளிகள் – போரில் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்ட உறவுகளையும் கனவுகளையும் தொலைத்த குடும்பங்களின் கண்ணோட்டத்தில் நடுகல் எழுப்பியிருக்கிறது. அதோடு, போரினால் நிராயுதபாணியான மக்களின் துயரப் பக்கங்களையும் நடுகல்லாய்ப் பேசுகிறது.
நினைவுகள் வலிமையானவை. ஏனெனில், அந்நினைவுகள் ஒரு காலத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்பவை. அதே நினைவுகள்தான் கசப்பான காலத்தையும், இரத்தம் படிந்த வரலாற்றையும் மாற்றி எழுதுவதற்கான உந்துதல்களைத் திரும்பத் திரும்பத் தந்து கொண்டிருக்கும்.
நினைவுகளில் உறைந்து கிடக்கும் உணர்வுகளைச் சொற்களால் ஆன நடுகல்லாய் மிக நேர்த்தியான கதைசொல்லல்வழி கொண்டு வந்திருக்கிறார் ஆசிரியர் தீபச்செல்வன். இப்படைப்புக்காக, தீபச்செல்வன் அவர்களுக்கு மிக்க நன்றி.
நூல் விமர்சனம்; அ.ம.அங்கவை யாழிசை
நூல்; நடுகல்
ஆசிரியர்; தீபச் செல்வன்
வெளியீடு; டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு; 99404 46650
————————————————————————————————–
நபிகள் நாயகத்தையும், இஸ்லாத்தையும் அறியத் தரும் நூல்!
இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டால் பிறகு இஸ்லாம் பற்றி எந்தச் சந்தேகமும் வாசகனுக்கு வராது!
“நபிகளாரின் சமூக உறவு..!” என்னும் தலைப்பில் 115 பக்கங்கள் கொண்ட ஓர் அரிய புத்தகத்தை பேராசிரியர் எம்.ஹச். ஜவாஹிருல்லா படைத்திருக்கிறார். 115 பக்கங்களும் 12 அத்தியாயங்களும் கொண்ட இந்தப் புத்தகம் “கடுகைத் துளைத்து எழு கடலைப் புகட்டிய…” என்று சான்றோர்கள் சொல்லும் வரிக்குப் பொருத்தமான நூலாக அமைந்திருக்கிறது. இஸ்லாம் மார்க்கம் என்பது கடல் போன்ற தத்துவங்களும் எண்ணில் அடங்கா சம்பவங்களும் பெருமைக்குரிய பல்வேறு நிகழ்வுகளும் கொண்ட மாபெரும் சமுத்திரம். அந்தச் சமுத்திரத்தை மிக நுட்பமான முறையில் மொத்தச் சித்திரமும் ஒரு புத்தகத்தில் கிடைக்கிற மாதிரி படைத்து வைத்திருக்கிறார் நமது பேராசிரியர்.
.”வலக்கரத்தில் சூரியனையும், இடக்கரத்தில் சந்திரனையும் தந்தாலும் நான் என் கொள்கையிலிருந்து மாற மாட்டேன்…!”
என்று கூறும் நபிகள் பெருமானாரின் நெஞ்சுறுதியும் “அவரவர் மார்க்கம் அவரவர்க்கு…” என்னும் இஸ்லாத்தின் பெருந்தன்மையான கோட்பாடும் “மார்க்கத்தில் கட்டாயமில்லை..!”
என்னும் அதன் விசாலமான சிந்தனைப் போக்கும் மிகத் தெளிவாக இந்தப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டி ருக்கிறது.
அரசியல் ஆய்வாளர்களும் உலக வரலாற்று ஆசிரியர்களும் வியந்து போற்றுகிற இஸ்லாத்தின் “மதினா சாசனம்!” பற்றிய செய்தியை விலா வாரியாக விவரித்துப் பேசியிருக்கிறார் நூலாசிரியர். அதே போல இஸ்லாமிய வரலாற்றில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய முக்கியமான உடன்படிக்கைகள் பற்றிய எல்லா விவரங்களும் தெளிவாகவும் பின்னணியோடும் தரப்பட்டிருக்கின்றன.
தனிமனித சுதந்திரம்- அவரது உரிமைகள்- பிறர்நலம் பேணும் கோட்பாடு- இவை அனைத்தும் மதீனா உடன்படிக்கையில் பொதிந்து கிடப்பதை நாம் படிக்கிற போது நெஞ்சம் பூரிக்கிறது. அதேபோல ‘ஹுதைபியா உடன்படிக்கை’ பற்றிய பல அரிய தகவல்களை நூலாசிரியர் தருகிறார். ‘நஜ்ரான் உடன்படிக்கையின்’ பின்னணி வரலாறும் அதில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. கடுகளவு கூட மதவெறி இல்லாமல் பிற சமூகத்தாரின் உரிமைகளையும் சுயமரியாதையையும் மதித்துப் போற்றிய நபிகளாரின் பெருந்தன்மை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
பக்கத்திலிருக்கும் மனிதனைப் பசியோடு வைத்துக் கொண்டு தான் மட்டும் உண்ணுவது கொடும்பாவம் என்று பேசும் இஸ்லாத்தின் சிந்தனைப் போக்கு மனித குலத்திற்கே சொல்லப்பட்ட வழிகாட்டும் நெறிமுறையாகும். தருமம் செய்வதைக் கட்டாயக் கடமையாக இஸ்லாம் மார்க்கம் மட்டுமே ஆக்கியிருக்கிறது என்பதனை நாம் பார்க்கும்போது மிகுந்த பெருமையாய் இருக்கிறது. “அறப்பணிகளில் வளரும் சமூக உறவுகள்…!”என்னும் அத்தியாயம் இந்தப் புத்தகத்தின் மையக்கரு என்று கூடச் சொல்லலாம்.
“இந்திய முஸ்லிம்களுக்கு நபிகளார் காட்டும் வழி”…என்னும் அதிகாரம் இந்தப் புத்தகத்தின் மிக மையமான பகுதி. இன்றைய இந்தியாவின் சமூக அரசியல் சூழலில் சிறுபான்மைச் சமுதாயமான இஸ்லாம் சமுதாயம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு கை விளக்கை ஏற்றிக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். நபிகளாரின் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் போதித்த போதனைகளை அறிவுரைப் பாடமாக எடுத்துக்கொண்டு இந்திய முஸ்லிம்களுக்கு என்று சில நெறிமுறைகளை வகுத்துக் காட்டியிருக்கிறார் திரு ஜவாஹிருல்லா.
இந்தப் புத்தகத்தின் பின் இணைப்பாக இரண்டு மிக முக்கியமான பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்று நபிகளாரின் இறுதிப் பேருரை. இரண்டாவது சான்றோர்களின் பார்வையில் பெருமானார். 1,40,000 பேர் முன்னிலையில் நபிகள்நாயகம் ஆற்றிய இறுதிப் பேருரை கொள்கை முழக்கமாகும். எம்பெருமானார் நபிகள் நாயகம் அவர்கள் அரபா பெருவெளியில் ஆற்றிய உரை எதிர்கால மனித குலம் எப்படி நேர்வழியில் நடக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிற உரையாகும். சாதித் திமிரையும் நிறத் திமிரையும் பணத் திமிரையும் என் காலடியில் போட்டு மிதிக்கிறேன் என்று உரத்துக் குரல் கொடுத்திருக்கிறார் பெருமானார். இந்த உரையை அப்படியே வரிசைப்படுத்தித் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றி முழுமையாகவும், முடிவாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிற ஓர் ஆராய்ச்சியாளன் அல்லது வாசகன் உட்கார்ந்த இடத்தில் ஒரே நேரத்தில் அதன் எல்லா ஆழ அகலங்களையும் உணர்ந்து கொள்வதற்கு வெகு நாள்கள் பிடிக்கும்; பல்வேறு அறிஞர்களோடு விவாதிக்க வேண்டி யிருக்கும்; பல நூறு புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுக்க வேண்டியிருக்கும். இவை அத்தனை வேலைகளையும் ஒன்றாகச் சுருக்கி ஒரே ஒரு புத்தகத்தைப் படித்தால் மொத்த இஸ்லாமையும் தெரிந்து கொண்டு விடலாம் என்கிற அளவிற்கு “நபிகளாரின் சமூக உறவு…!” என்னும் இந்தப் புத்தகம் தனது வேலையை மிக நுட்பமாகச் செய்து முடித்திருக்கிறது. இதில் இல்லாத வரலாற்றுத் தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாத்தின் அனைத்துச் செய்திகளையும்- வரலாற்று நிகழ்வுகளையும்- அள்ளி விதைத்திருக்கிறார் பேராசிரியர் ஜவாஹிருல்லா.
எந்தக் கோட்பாடு பற்றியும் எந்த நிகழ்வு பற்றியும் சந்தேகம் வரும் போதெல்லாம் ஓர் அகராதியைப் போலப் புரட்டிக் கொள்ளத் தக்க புத்தகம் ஒன்றை இவர் படைத்தது எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்கது. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டால் பிறகு இஸ்லாம் பற்றி எந்தச் சந்தேகமும் வாசகனுக்கு வராது என்பதுதான் உண்மை. ஒரு சிற்பி தன் கையில் இருக்கும் உளியால் பார்த்துப் பார்த்து ஒரு சிலையைச் செதுக்குவதைப் போல இந்த நூலாசிரியர் இந்தப் புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.
Also read
பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டிய பெட்டகங்களில் ஒன்று இந்தப் புத்தகம். இஸ்லாம் பற்றி அறிய விரும்பும் நண்பர்களுக்கு நன்கொடையாக கொடுக்க சிறந்தது இந்தப் புத்தகம். நூலாசிரியரை நாம் மனமார வாழ்த்துவோம். இந்த நூல் “அந்தகாரத்தில் ஏற்றப்பட்ட அறிவுச் சுடர்!
நூல் விமர்சனம்; திரு. வீரபாண்டியன்
நூல்; நபிகளாரின் சமூக உறவு
ஆசிரியர்;எம்.எச்.ஜாஹிருல்லா
வெளியீடு ; மாற்றுப் பிரதிகள்
விலை; ரூ 90
தொடர்புக்கு ; 8220658318
வ.உ.சி 150 ஆவணச் சிறப்பிதழ்
ஆசிரியர்; கண.குறிஞ்சி
வெளியீடு; புதுமலர் பதிப்பகம்
விலை; ரூ100
தொடர்புக்கு; 94433 07681 – நூல்; நடுகல்
ஆசிரியர்; தீபச் செல்வன்
வெளியீடு; டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்புக்கு; 99404 46650 – நூல்; நபிகளாரின் சமூக உறவு
ஆசிரியர்;எம்.எச்.ஜாஹிருல்லா
வெளியீடு ; மாற்றுப் பிரதிகள்
விலை; ரூ 90
தொடர்புக்கு ; 8220658318
Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me? https://www.binance.com/en/register?ref=P9L9FQKY