குடும்ப ஆதிக்கத்தால் குலைந்து போன நாயக்கர் ஆட்சி!

- பொ.வேல்சாமி

சோழ ராச்சியத்தை ஆண்ட நாயக்கர் ஆட்சி ஒரே இரவில் கவிழ்ந்து, மராட்டியர் கைவசம் போன  வரலாறு இன்றைக்கும் ஒரு படிப்பினை தான்! திறமையாளர்களையும், விசுவாசமானவர் களையும் புறக்கணித்து, வாரிசுகளை பட்டத்துக்கு கொண்டு வந்ததால், தஞ்சை நாயக்கர்கள் ஆட்சியை இழந்தது கவனத்திற்குரியது!

தென்னிந்தியாவை ஆண்ட நாயக்கர் அரசர்களுக்குள் ஒற்றுமையின்றி பல போர்கள் நடைபெற்று இவர்களுடைய பலம் குறைந்து கொண்டே வந்துள்ளதாகப் பல நிகழ்வுகளை நாயக்கர் வரலாறுகளில் பார்க்க முடிகின்றது. அப்படியான நிகழ்வுகளில் நாயக்கர் அரசுகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கிய நிகழ்வாக ஒருநிகழ்ச்சி 1675 இல்நடைபெறுகின்றது.

மதுரை நாயக்கர் அரசுக்கும், தஞ்சைநாயக்கர் அரசுக்கும் தொடர்ந்து பல புகைச்சல்கள் இருந்ததாகவும் அதன் அடிப்படையில் சிலபல போர்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.அப்படி நிகழ்ந்த போர்கள் சிலவற்றில் மதுரை நாயக்கரும் வேறு சிலவற்றில் தஞ்சை நாயக்கரும் வெற்றி பெற்றதாகவும் செய்திகள் உள்ளன.

தஞ்சை நாயக்கர் அரண்மனை

ஒரு கட்டத்தில் மதுரை அரசர் சொக்கநாத நாயக்கர்( 1659 -1682 ) தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கரின் (1631 – 1675 ) மகளை பெண் கேட்டதாகவும் அதனை தஞ்சை அரசர் மறுத்து விட்டார் என்றும் அதனால் மதுரை அரசர் தஞ்சை மீது படையெடுத்து வந்து தஞ்சையை முற்றுகையிட்டு அச்சப்படுத்திக் கொண்டிருந்தார். எனவே, இந்தப் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு தஞ்சை அரசர் பீஜபூர்சுல்தானிடம் படை உதவி கேட்டு இராயசம் வெங்கண்ணா ( இராயசம் என்பதை முதலமைச்சர் பதவி என்று கூறுகிறார்கள்) என்பவரை அனுப்பி வைத்தார்.

அங்கு சென்று  திறம்படப் பேசி, உதவி கேட்ட வெங்கண்ணாவின் வேண்டுகோளை ஏற்று பீஜபூர் அரசன் அல்லிய தில்ஷா,  கலாஸ்கான், அப்துல்ஹலீம் என்ற இருவருடன் தன்படைகளையும் சத்ரபதி சிவாஜியின் அண்ணன் ஏகோஜியின் படைகளையும் சேர்த்து தஞ்சையைக் காப்பாற்றி விஜயராக வநாயக்கரிடம் ஒப்படைக்கும்படி அனுப்பிவிட்டார். ( இப்படிப் படைகளை அனுப்புவதற்கு குறிப்பிட்ட தொகையை பேரமாக பேசி வாங்கிக் கொள்ளும் வழக்கம் அன்றைய காலத்தில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது )

நாயக்கர்களை சித்தரிக்கும் ஓவியம்

அவ்வாறு ஏகோஜியின் தலைமையில் தஞ்சை வந்தடைந்த படைகள், தஞ்சையை முற்றுகையிட்டிருந்த மதுரை படைகளை அடித்து விரட்டி விட்டு தஞ்சை அரசர் விஜயராகவநாயக்கரிடம் அதற்கான தொகையைக் கேட்டனர். அந்தத் தொகையை முழுமையாகக் கொடுக்க முடியதாதிருந்த தஞ்சை அரசர் பாதிதொகையை ஏகோஜியிடம் கொடுத்துவிட்டு மீதிதொகையை பாமினி சுல்தானின் ஆட்களிடம் சிலநாட்கள் கழித்து கொடுத்து விடுவதாக வேண்டிக் கொண்டு அவர்களுடைய ஆட்களையும் தஞ்சையில் நிறுத்திக் கொண்டதாகத் தகவல்கள் உள்ளன.

தான் பெற்றுக் கொண்ட தொகையுடன் புறப்பட்டு சென்ற ஏகோஜி கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடியில் தங்கியிருந்தார். அந்த நேரத்தில் தஞ்சையில் பலவிதமான குளறுபாடியான நடவடிக்கைகள் நடந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. அதில் ஒரு வகையான தகவலின்படி தஞ்சை அரசன் விஜயராகவநாயக்கர் தன்னுடைய வீட்டார் மற்றும் உறவினர்கள் பேச்சைக் கேட்டு இராயசம் வெங்கண்ணாவின் பதவியைக் குறைத்து, அவர் பதவியைவிட மேம்பட்ட பதவி ஒன்றை உதவாக்ககரையாக இருந்த தம்பிக்கு தந்து, அவருக்கு கீழ் வெங்கண்ணாவை செயல்படும்படியான நிலையை உருவாக்கிவிட்டார். இதனால் வெங்கண்ணா வெறுப்பும் கோவமும் அடைந்து விட்டதாகவும் செய்திகள் பதிவாகியுள்ளன. மன்னருக்கு நாம் ஆபத்து காலத்தில் எல்லாம் திறமையாக உடனுக்குடன் செயல்பட்டு, விசுவாசமாக இருந்ததற்கு இதுவா பரிசு? என மனம் வெதும்பினார் வெங்கண்ணா!.

இத் தருணத்தில் பீஜபூர் மீது ஔரங்கசீப் படையெடுத்து வந்து, அந்த மன்னனைக் கொன்று விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தத் தகவலைஅறிந்த ஏகோஜி தான் எங்கு செல்வது என்று குழம்பி நின்றதாகவும் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றால்  ஔரங்கசீப்பின் படைகளை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கலங்கியதாகவும் கூறப்படுகின்றன. இதே செய்திகள் இராயசம் வெங்கண்ணாவுக்கும் கிடைக்கின்றது. இத்தகைய ஒருவாய்ப்பை இராயசம் வெங்கண்ணா தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது மேற்படி குடும்ப ஆதிக்க நிகழ்வுகளால் கலங்கி நின்ற வெங்கண்ணா ஏகோஜியிடம் சென்று எங்கே போவது எனக் குழம்பி நின்ற ஏகோஜியை திருமழபாடியில் சந்தித்தார்! வெங்கண்ணாவைக் கண்ட ஏகோஜி, தன்னுடைய நிலையைச் சொல்லி என்னசெய்வது என்று புரியாமல் தவித்ததை கண்ட வெங்கண்ணா, ஏகோஜியிடம், ”நீங்களே தஞ்சையின் அரசராகி விடுங்கள்” என்று ஆலோசனைக் கூறுகிறார். ”அது எப்படி முடியும்?” என்று ஏகோஜி கேட்டதாகவும், ”மதுரை நாயக்கரிடமிருந்து தஞ்சையைக் காப்பாற்றிய நீங்களே ஏன் தஞ்சையை ஆளக்கூடாது?” என்று கேட்டதாகவும் செய்திகள் உள்ளன. இப்படியான ஒருசெய்தியை ஏகோஜியின் கனவில் தோன்றி அவருடைய குலதெய்வம் கூறியதாகவும்“ போன்ஸ்லே வம்ச சரித்திரம்” என்ற நூலிலும் பதிவாகி உள்ளது.

சரி அப்படியே தஞ்சையைக் கைப்பற்றி கொண்டாலும், அதனை எப்படி ஆட்சி செய்வது ? எனக்கு இந்தப் பகுதிகளைப் பற்றியும், இந்த மக்களைப் பற்றியும், இங்கு பேசப்படும் மொழியாகிய தமிழைப் பற்றியும் எதுவும் தெரியாமல் எப்படி ஆட்சி செய்வது ..? என்று தயங்கிநின்றதாகவும் அதற்கு இராயசம் வெங்கண்ணா, ”என்னை முதலமைச்சராக்கி விடுங்கள் நான் பார்த்து கொள்கிறேன்” என்று கூறியதாகவும் செய்திகள் உள்ளன. இதன்படி வெங்ண்ணாவை முதலமைச்சராக ஆக்கிவிட்டதாக போன்ஸ்லே வம்ச சரித்திரநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை மராட்டியர் அரண்மனை

இவருடைய யோசனையை ஏற்றுக் கொண்ட ஏகோஜி படைகளுடன் நடுஇரவில் தஞ்சை வருகிறார்.கி.பி.1675 பிப்ரவரி 3 ஆம் நாளில் தஞ்சை இராஜகோபாலசாமி கோயிலருகே நடந்த கடும் போரில் தஞ்சை நாயக்க மன்னன் விஜயராகவ நாயக்கர் சிவாஜியின் அண்ணனான ஏகோஜியால் கொல்லப்பட்டதாக “தஞ்சைநாயக்கர்வரலாறு” என்ற நூலில் அதன் ஆசிரியர் “குடவாயில்பாலசுப்ரமணியன்” குறிப்பிடுகின்றார்.

அடுத்த நாள் காலையில் தஞ்சாவூரில் நாயக்கர்அரசு மறைந்து மராட்டிய அரசு நிலைபெற்றுவிட்டது. இந்த வரலாற்று நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு சிலபல புனைவான செய்திகளும் கூறப்படுகின்றன. எப்படியோ ஒரே நாளில் சுமார் 135 ஆண்டு காலம் ஆட்சி செலுத்திய நாயக்கர் ஆட்சி துடைத்து எறியப்பட்டுவிட்டது. அதற்கு பிறகு வந்த மராத்தியர்கள் ஆட்சி தஞ்சையை 165 ஆண்டுகள் ஆண்டது!

அதாவது, இது போல நாயக்கர் அரசு நொறுக்கி தூக்கி எறியப்படும் நிகழ்ச்சி எந்தவகையான மோசமான வெளி எதிரிகளாலும் செயல் படுத்தப்படவில்லை. உடன் இருந்த திறமையான நிர்வாகியை உதாசீனப்படுத்தி குடும்பத்தினர் வேண்டுகோளை நிறைவேற்ற விழைந்ததால் ஏற்பட்ட விளைவே இது! இது போன்ற நிகழ்வுகள் இன்றைய அரசியலிலும் சாத்தியமாகக் கூடியவையே!

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி

கரந்தை தமிழ் கல்லூரி புலவர், வரலாற்று ஆய்வாளர், ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time