முதுபெரும் பத்திரிகையாளர்,இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியர் அ.மா.சாமி மறைவு

சாவித்திரி கண்ணன்

தினத்தந்தி, ராணி, ராணிமுத்து இதழ்களின் முன்னாள் ஆசிரியரும்,பல இதழியல் வரலாற்று நூல்களின் ஆசிரியருமான அ.மாரிசாமி என்ற அ.மா.சாமி அவர்கள் இயற்கை எய்திய செய்தி தமிழ் இதழியல்துறைக்கும்,தமிழ் வாசகர்பரப்புக்கும் பேரிழப்பாகும்.

அ.மா.சாமி அவர்கள் வேறு யாரும் சிந்தித்துப் பார்த்திராத வகையில் இந்திய மற்றும் தமிழ் இதழியல்வரலாற்றை ஆவணங்களுடன் எழுதி பதிவு செய்தவர்.

தமிழ் இதழ்கள் தோற்றம்-வளர்ச்சி

திராவிட இயக்க இதழ்கள்

நாம் தமிழர் இயக்கம்

வரலாறு படைத்த தினத்தந்தி

திருக்குறள் செம்பதிப்பு

தமிழ் இதழ்கள் வரலாறு

இந்திய விடுதலைப் போர் செந்தமிழ் தந்த சீர்

இந்து சமய இதழ்கள்

தமிழ் இசுலாமிய இதழ்கள்

தமிழ் கிறித்தவ இதழ்கள்

19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்

ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை

போன்ற சிறந்த நூல்களை எழுதியவர். இவை காலத்தால் அழியாத கருவூலங்களாகும்.அதுவும் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள், விடுதலை இயக்கத் தமிழ் இதழ்கள் ஆகியவை மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை! அதே போல தமிழ் இசுலாமிய  இதழ்கள்,  தமிழ் கிறித்தவ இதழ்கள், விடுதலை போரில் முஸ்லீம்கள் ஆகியவை அரிய வரலாற்றுத் தகவல்களை கொண்டவையாகும்!

அ.மா.சாமியின் மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில், ஒரு மிகச்சிறிய குக்கிராமமான குரும்பூரில் இருந்து, சிறிய வயதில் சென்னைக்கு வந்த சாமி அவர்கள், ஐயா சி.பா. ஆதித்தனார் அவர்களின் பேரன்பைப் பெற்றார்; தினத்தந்தி குடும்பத்தோடு, இரண்டறக் கலந்து, இதழியலுக்காகவே தன் வாழ்நாளை ஒப்படைத்துக் கொண்டார்.

கற்பனையுடன் நகைச்சுவை கலந்து வழங்கிய மூத்த எழுத்தாளர்களுள் முன்னோடி அ.மா.சாமி அவர்கள் ஆவார்கள். இலக்கியம் எழுதலாம், பேசலாம்; ஆனால், நகைச்சுவை எழுத்தும், பேச்சும் எல்லோருக்கும் எளிதில் வாய்த்து விடுவது இல்லை.

அதிலும் குறிப்பாக, ஒருவரைப் பகடி செய்கின்றபொழுது, அவர் தன்னைத்தான் அப்படிப் பகடி செய்கின்றார் என்பது புரியாமலேயே, எடுத்த உடன் முதலில் சிரித்துவிட்டு, பிறகு சிந்திக்கின்ற பொழுது, அவர் தன்னுடைய குறைகளைத்தான் அப்படி அழகாகச் சுட்டிக் காட்டி இருக்கின்றார் என்பதைப் புரிந்துகொண்டு, நினைத்து நினைத்து மகிழச் செய்யும் கலை நகைச்சுவை ஆகும். அத்தகைய எழுத்து நடை வாய்க்கப் பெற்றவர் அ.மா. சாமி அவர்கள். ஏழை, எளிய பாமர மக்களுக்கு எளிதில் புரிகின்றவகையில் எழுதுவதில் அவருக்கு இணை சொல்ல முடியாது.

பெர்னார்ட் ஷா போன்ற, மிகப் புகழ்பெற்ற அறிஞர்கள், தாங்கள் வாழ்ந்த காலத்தில், தங்கள் சமூகத்தைக் கேலி செய்து, சீர்திருத்தவாதிகளாகப் புகழ் பெற்றார்கள். அத்தகைய நிலையில் வைக்கத்தக்க ஓர் அரிய எழுத்தாளர்தான் அ.மா. சாமி அவர்கள் ஆவார்கள். சின்னச்சின்ன சொல்லோவியங்களை, மிக அழகாக வழங்கினார். அரிய ஆய்வு நூல்களையும் தந்தார்.  பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு வந்து, அவர் எழுதிய பயணக் கட்டுரைகளில் புதிய செய்திகளைத் தந்தார்.

மிக்க தேர்ச்சியோடும், அருமையான அழகியலோடும் தமிழில் எழுதியவர்களுள் முதல் வரிசையில் வைத்து மெச்சத்தகுந்த சாமி அவர்களின் மறைவு, எழுத்து உலகுக்குப் பேரிழப்பு ஆகும்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தன் அறிக்கையில் உருக்கமாகக் கூறியுள்ளார்.

அ.மா.சாமி அவர்கள் தமிழக அரசின் மூத்த இதழாலாளர் விருது,சென்னை பல்கலைகழகத்தின் சிறந்த இதழலாளர் விருது..ஆகியவற்றை பெற்றுள்ளார்.கலைஞர் இவருக்கு பெரியார் விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்.குறும்பூர் குப்புசாமி,அமுதா கணேசன் என்ற பெயர்களில் நிறைய சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

பழகுவதற்கு இனியவர்,பண்பாளர், இதழியல் முன்னோடி என்ற வகையில் அறம் இணைய இதழ் தன் அஞ்சலியை செலுத்துகிறது. அவர் புகழ் இதழியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time