10% இட ஒதுக்கீட்டை ஏன் எதிர்க்கிறோம்? – பேரா.மு. நாகநாதன்

-ம.வி.ராஜதுரை

10% இட ஒதுக்கீடு எதிர்ப்பு என்பது பார்ப்பன எதிர்ப்பா? இந்தியாவில் எந்தெந்த உயர் பதவிகளில் எத்தனை பார்பனர்கள் என்பதை அறிவீர்களா? அம்பேத்கார் சொல்வது என்ன? அரசமைப்பு சட்டம் சொல்வது என்ன? 10% இட ஒதுக்கீடு ஏற்படுத்தப் போகும் விளைவுகள் என்ன? பேராசிரியர் மு. நாகநாதன் நேர்காணல்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கியிருக்கும் விவகாரம் தொடர்பாக பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான மு.நாகநாதனை சந்தித்துப் பேசினோம். இது தொடர்பாக நம்முடைய “அறம்” இதழுக்கு அவர் அளித்த பேட்டி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட  வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு சரியான நடவடிக்கையாக இருக்குமா? நாட்டின் வளர்ச்சிக்கு அது உதவுமா?

” முற்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக இப்படி ஒரு முடிவு வரும் என்பது  நான் எதிர்பார்த்த ஒன்றுதான்.!

இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின் சமூகப் பொருளாதாரச் சூழலை ஆய்வு செய்த நோபல் பரிசு பெற்ற அறிஞர் குன்னர் மிர்தல்

” இந்தியா உயர் வர்க்கத்தினரால் ஆளப்படுகிறது. தேசிய அரசியல் தலைவர்கள் அனைவரும் ஆதிக்க வர்க்கத்தினராக உள்ளனர். புதிய அதிகாரமும், பொறுப்பும் அவர்களுக்கு மேலும் அதிக சலுகைகளை வழங்குகிறது” என்று  தெரிவித்தார்.

டெல்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் “யங்  இந்தியா” நிறுவனம்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு முக்கியமான சில தகவல்களை கேட்டு பெற்று வெளியிட்டது.

இந்த தகவல்கள் வாயிலாக நீங்கள் கேட்ட வினாவுக்கு விடையும் கிடைக்கும்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகள் 26 பேரில் பிராமண சமுதாயத்தினர் 23 பேரும் இதர பிற்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் 2 பேரும் எஸ்சி -எஸ்டி பிரிவில் ஒருவரும் உள்ளனர்.

மொத்தம் உள்ள 330 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் பிராமணர்கள் 306 பேரும்,  பிற்பட்ட வகுப்பில் 20 பேரும், எஸ்சி- எஸ்டி பிரிவில் 4 பேரும் உள்ளனர். நாடு முழுவதும் பரவலாக இருந்து,  நிர்வாக செயல்பாட்டுக்கு பொறுப்பு வகிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் 3,600 பேரில், 2750 பேர் பிராமணர்கள், 550 பேர் பிற்பட்ட வகுப்பினர், 300 பேர் எஸ்சி எஸ்டி பிரிவினர். மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 108 பேரில் 100 பேர் பிராமணர்கள், ஐந்து பேர் பிற்பட்ட வகுப்பினர் மூன்று பேர் எஸ்சி எஸ்டி.வகுப்பினர்.

ஜனாதிபதி அலுவலகம், துணை ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் , நிதி அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம்,கேபினட் செயலாளர்கள்… இப்படி மத்திய அரசின் 12 முக்கிய அலுவலகங்களில் பணிபுரிவோர் மொத்த எண்ணிக்கை 3,629. இதில் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2,928, பிற்பட்ட வகுப்பினர் 198, எஸ்சி எஸ்டி பிரிவினர் 103.

அரசாங்கமே கொடுத்த புள்ளி விவரம் இது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம், ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டுமே உள்ளவர்கள் எத்தகைய முக்கிய பொறுப்புகளில், எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை  இதன் மூலம் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

பேராசிரியர். மு. நாகநாதன்

இந்த சமூகத்தினர் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் எடுத்து வருகிறார்கள் என்பதை 2,000 ஆண்டுகளாகவே பார்த்து வருகிறோம்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரானவர் கே.கே‌. வேணுகோபாலன். இவருக்கு 2017 ல் பா.ஜ.க, அரசு பத்ம விபூஷன் விருது வழங்கியது. மத்திய அரசு  சார்பில் இவர் தெரிவித்த கருத்துக்களை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. தவறான தகவல்கள் பலவற்றை இவர் அப்போது சொன்னார் அதில் ஒன்று, ” பழங்குடியினர் தாழ்த்தப்பட்டோர் பெறும் பயன்கள் அரசு வழியாக குவிந்து வருகிறது (Loaded with benefits)” என்பதாகும்

மனசாட்சியை தொலைத்து விட்டு இப்படி பேசிய இந்த 91 வயது மூத்த வக்கீலுக்கு தான் வாதாடும் உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் தாழ்த்தப்பட்டவர்கள் பழங்குடியினர் என்பது தெரியாமலா இருக்கும்.?

மக்கள் சமமாக வாழ வேண்டும் ,சமூக நீதி காக்கப்பட வேண்டும். அது தான் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு வழி வகுக்கும்  என்று எண்ணி வாழ்ந்த – செயல்பட்ட  உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களையும் நாம் பார்க்க தான் செய்கிறோம்.அந்த பட்டியலில் ராஜாராம் மோகன் ராய் முக்கியமானவர். பழமைவாதிகளின் பிற்போக்குத் தனமான செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து நின்றவர்.  அவருடைய அண்ணன் இறந்தபோது அந்த சிதையில் அவருடைய அண்ணியையும் போட்டு  உயிரோடு எரித்தனர்..! அதை எதிர்த்த ராஜாராம் மோகன் ராய்க்கு எப்படி எல்லாம்  தொல்லை கொடுத்தனர்.

நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பி ராஜாராம் மோகன்ராய்.

1948 இல் சென்னை மாகாண முதல்வராக இருந்ததவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர் தான்.  அந்த சமயத்தில்  பிராமணர் அல்லாத சோமசுந்தரம் முதன்முறையாக நீதிபதியானார்.

அதை கண்டித்து இந்து நாளிதழ் கம்யூனல் அப்பாயிண்ட்மெண்ட்(Cmmunal Appointment) என்று தலையங்கம் தீட்டியது. உடனே,  ராமசாமி ரெட்டியார் இந்து அலுவலகத்திற்கு போன் போட்டு அங்கு உயர்பதவி வகித்தவரை  அழைத்தார்.

தன்னுடைய முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்த ஆறு பேரை சுட்டிக்காட்டி, இவர்களில் யாராவது என் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களா?  பாருங்கள் என்று கேட்டார். ஆனால், உங்களுடைய இந்து அலுவலகத்தில் முதல் மூன்று முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் ஐயங்கார்பிராமணர்கள்! இதே சமூகத்தை சேர்ந்த ஐயரை கூட நீங்கள் நியமிக்கவில்லை என்று கூறினார். அவரைத் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு வந்த குமாரசாமி ராஜாவும் உயர் வகுப்பைச் சேர்ந்தவர் தான். சமூகநீதிக்காக பாடுபட அவரும் தவறவில்லை. நாட்டின் மீது அக்கறை கொண்ட எவருமே இதைத் தான் செய்வார்கள்.

இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்களுக்கு தான் என்பதை டாக்டர் அம்பேத்கர் பாராளுமன்றத்தில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். உயர் வகுப்பினருக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்தார். அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக மக்களவையில் அவர் பேசிய நூறு நிமிட உரை பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கது.

இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர். அம்பேத்கார்

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளின்படி, குறிப்பாக 1951 இல் கொண்டுவரப்பட்ட முதல் திருத்தத்தின்படி சமூகம், கல்வித் தளங்களில் பின் தங்கியோருக்கு மட்டுமே இட ஒதுக்கீடு எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1991இல் நரசிம்மராவ் அரசு முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்த ஓர் அரசாணையை  வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டபோது உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு 1993 இல் வழங்கிய தீர்ப்பில் பொருளாதார அளவு கோலின் அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொள்கையை வழங்குவது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என குறிப்பிட்டும் இட ஒதுக்கீட்டு அரசாணையை நீக்கியது. ஆக, 10 சதவீத  இட ஒதுக்கீடு சட்டம்  அரசமைப்புச் சட்ட அமர்வின் தீர்ப்புக்கு எதிரானதாகும்.

மேலும், 2010இல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக சின்கோ தலைமையில்  அமைக்கப்பட்டு குழு அவர்களுக்கு சலுகைகள் தரலாம், ஆனால்,சட்டத்தை திருத்தி 10% வழங்க முடியாது எனக் கூறிவிட்டது.

பா.ஜ.க அரசின்  10% இட ஒதுக்கீட்டுப்படி, உயர் வகுப்பைச் சேர்ந்தவர் எட்டு லட்சத்திற்குள் வருமானம் இருந்தால்அவர் ஏழை. அதாவது மாதம் 66,000 சம்பளம் வாங்குபவர்   இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர். கிராமப்புறத்தில் 5 ஏக்கருக்குள் நிலம் இருப்பவருக்கு இந்த தகுதி உண்டு.

பொருளாதாரம் என்பது நிலையானது அல்ல.  இன்று பணக்காரனாக இருப்பவர் நாளை ஏழையாகி விடக்கூடும். நிலையற்ற ஒன்று எப்படி அளவுகோலாக இருக்க முடியும்?.

தமிழ்நாட்டில் நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, மூன்று போகம் விளையும் தஞ்சாவூருக்கு 15 ஏக்கரையும் வட ஆற்காடு  மாவட்டத்தில் 45 ஏக்கரையும் வறண்ட பூமியான இராமநாதபுரத்திற்கு  உச்ச வரம்பு அளவாக 65 ஏக்கராகவும் நிர்ணயித்தார்கள்.

ஒரு மாநிலத்திலேயே  இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும்போது, 5 ஏக்கர் அளவுகோலை நாடு முழுவதும் எப்படி கடைபிடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. பத்து சதவீத இட ஒதுக்கீட்டால் ஆதிக்க வர்க்கத்திற்கு கூடுதல் பலம் கிடைக்கும். சமுகத்தில் உள்ள இடைவெளி மேலும் அதிகரிக்கும்.

கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வாழும் பழங்குடி மக்களுக்கு நல நடவடிக்கை (Affirmative Action) என்ற பெயரில் இட ஒதுக்கீடு வழங்குகிறார்கள். அமெரிக்காவில் பழங்குடி மக்களுடன் கருப்பின மக்களுக்கும் சேர்த்து இது போன்ற சலுகை வழங்கப்படுகிறது. இது போன்ற முயற்சி தான் சமமான சமூகத்திற்கு வழிவகுக்கும். பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீடு எதிர்மறை விளைவுகளை தான் ஏற்படுத்தும்.

சமமான சமுதாயத்தை உருவாக்கப் போகிறோம் என்று சொல்லி சமமற்ற சமுதாயத்திற்கான சதி வேலை செய்தால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?.

காமராசர், அண்ணா, கருணாநிதி ,எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலங்களில் தொடர்ந்து பின்பற்றப்பட்ட இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கொள்கைகளை சிதைக்க ஒன்றிய அரசு முற்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் தனது தன்னலமற்ற பணிகளால் கட்டமைத்த சமூக நீதியை சமூக அமைப்பை வீழ்த்தி விடலாம் என்று திட்டமிடுகின்றனர்.

ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் உயர் வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய  எடுக்கப்பட்ட முடிவு  வரவேற்கத்தக்கது. சமூக நீதிக்கும் அரசமைப்பு சட்டத்துக்கும் எதிரான செயல்பாடுகள் தடுக்கப்பட வேண்டும்.” என்றார் பேராசிரியர் மு.நாகநாதன்.

நேர்காணல்: ம.வி.ராஜதுரை

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time