கல்லீரலை ‘காவு’ கொடுத்தவர்கள் கவனிக்க!

-

Liver எனப்படும் கல்லீரல், மனித உறுப்புகளில் மிக முக்கியமானது! ஜீரணம் நடைபெறவும், ரத்தம் சுத்திகரிக்கப்படவும் கல்லீரல் அவசியம். இன்றைய தவறான உணவு பழக்கங்களும், மதுபான பயன்பாடும் கல்லீரலை கண்டமாக்கிவிடுகின்றன! எனில், கல்லீரலை காப்பாற்ற செய்ய வேண்டியது என்ன?

கல்லீரலானது செரிமான இயக்கம் நடைபெற பித்தநீரைச் சுரக்கச் செய்கிறது. அத்துடன் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றுகிறது. இன்று கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களை காண்பதே அரிதாகிவிட்டது! இப்படிப்பட்ட கல்லீரலை குடியால் கண்டமாக்கிக் கொண்டவர்களைக் கூட மீட்கலாம் இயற்கை மருத்துவத்தில்!

நமது உடலில் ஏற்படக்கூடிய வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கிய பங்காற்றக் கூடியது கல்லீரல். ஆனால், நாம் உண்ணக்கூடிய தவறான உணவுப் பழக்கங்களால் கல்லீரல் கெட்டுப் போக நேர்கிறது. இன்றைய சூழலில் கல்லீரல் பாதிப்புக்கு மிக முக்கியக் காரணமாக கண்டறியப் பட்டுள்ளது அளவுக்கு அதிகமாக மதுபானங்கள் அருந்துவதே. ஆனாலும்கூட, கல்லீரலானது ரத்தத்தை சுத்திகரித்து, ஆல்கஹாலை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதைப் போல, தொடர்ந்து மது அருந்திக்கொண்டே இருந்தால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கல்லீரல் செயலிழந்து போகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்களுக்கு மட்டும்தான்  பாதிப்பு உண்டாகிறது என்று நினைக்க வேண்டாம். ஏற்கெனவே சொன்னதுபோல தவறான சில உணவுப்பழக்கங்களாலும்கூட கல்லீரல் பாதிக்கலாம்.

பிரட் உள்ளிட்ட பேக்கரி உணவுகளை அதிகம் சாப்பிடுவோருக்கும், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்போருக்கும், சோடா உள்ளிட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை அடிக்கடி அருந்துவோருக்கும், அளவுக்கு அதிகமாக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவோருக்கும் கூட கல்லீரல் பாதிக்க வாய்ப்புள்ளது. புளியோதரை, புளிக் கொழம்பு போன்றவற்றை மிக அதிகமாக விரும்புவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு ஏர்படும்.

சிலர் வெறும் காய்கறி மற்றும் பழங்களை மட்டுமே மூன்று வேளையும் உணவாக எடுத்துக் கொள்வார்கள். அளவு அதிகரிக்கும் போது அவர்களுக்கும் கூட கல்லீரல் பாதிக்க வாய்ப்புள்ளது. நம்மில் பலர் இத்தகைய உணவுகளை உண்டு கொண்டிருக்கிறார்களே, அப்படியானால் அவர்கள் அனைவருக்கும் கல்லீரல் பாதிக்க வாய்ப்பிருக்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். எல்லை மீறினால் நிச்சயம் பாதிப்பு உண்டு என்பது யதார்த்தம்.

மது அருந்துவோருக்கு கல்லீரல் பாதிப்பு அதிகம் ஏற்படுவதால் அவர்களை மதுப் பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது. வில்வப் பழத்தை சாறாக்கி, அதை அருந்தச் செய்தால் கல்லீரல் பாதிப்பிலிருந்து அவர்கள் மீள்வதுடன் குடிப்பழக்கத்தை மறக்க உதவும்.

 சிவப்பு கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொடுப்பது, கொத்தமல்லி விதையை (தனியா) தேநீராக்கிக் கொடுப்பது, கற்பூரவல்லி இலைகளை சாப்பிடச் செய்வது போன்றவையும் குடிப்பழக்கத்தை மறக்கச் செய்யும்.

கல்லீரல் பாதிக்கப்பட்டால் ஒரு சில அறிகுறிகள் தென்படும். உதாரணமாக கால் வீக்கம், வயிறு உப்புதல், வயிறு வலி, வாந்தி, சோர்வு, மயக்கம், காய்ச்சல், தலைசுற்றல், குமட்டல், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது, கண் மஞ்சள் நிறமாக மாறுவது என பல அறிகுறிகள் வெளிப்படலாம்.

ஆனால், இங்கே சொல்லப்பட்ட அறிகுறிகள் வேறு சில பிரச்சினைகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அறிகுறிகளை வைத்து நாமே கல்லீரல் பாதிப்பு என்று முடிவு செய்து விடக்கூடாது. ஏனென்றால் இன்றைக்கு பலர் கூகுள் டாக்டர்களாக மாறி வருகிறார்கள். அறிகுறிகளை வைத்து இந்த நோய் பாதித்திருக்கிறது என்று தாமாகவே முடிவு செய்து அதற்கான சிகிச்சைகளையும் எடுக்கிறார்கள்.

அப்படி சுயமாக முடிவு செய்து சிகிச்சை எடுப்பது சரியானதல்ல. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவர்களிடம் ஆலோசனை செய்தபிறகே முடிவு செய்ய வேண்டும். கல்லீரல் பிரச்சினை முற்றினால் சில நேரங்களில் உயிர் இழக்க நேரிடும் என்பதால், மிகுந்த கவனமாக செயல்பட வேண்டும்.

சரி… பாதிப்புக்குள்ளான கல்லீரலை பழைய நிலைக்கு கொண்டு வர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்கிறது… நமது முன்னோர் பின்பற்றிய `உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற முறையின் மூலம் மீட்டெடுக்க முடியும். அதற்குமுன் மிக எளிமையாக அருந்தக்கூடிய கீழாநெல்லிச் சாற்றினைக் குடித்தால் கல்லீரல் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும். மழைக்காலங்களில் செழித்து வளரக்கூடிய கீழாநெல்லி ஈரப்பாங்கான இடங்களில் மற்ற காலங்களிலும் வளர்ந்திருக்கும். கீழாநெல்லிச் செடியின் அடிப்பகுதியில் சிறிய அளவு நெல்லிக்காய்களைப் போன்று வரிசையாக வளர்ந்திருக்கும். அதை வைத்து அடையாளம் கண்டு கீழாநெல்லி மூலிகையைப் பறித்து பயன்படுத்த வேண்டும். கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய் நெல்லி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கீழா நெல்லி இலை

கைப்பிடி கீழாநெல்லிச்செடியை எடுத்து அரைத்து சாறு எடுத்து பசும்பால் அல்லது மோர் சேர்த்து அருந்த வேண்டும். மூன்று நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் போதும். இதை குடிக்கும்போது உப்பு, புளி இல்லாத உணவு உண்டால் சிறப்பான பலன் கிடைக்கும். மஞ்சள்காமாலை நோய் பாதித்தவர்கள் 7 முதல் 21 நாட்கள் இதைச் சாப்பிடுவதன்மூலம் முழுமையாக குணம் பெறலாம்.

அதேபோல் பொன்னாங்கண்ணி, கரிசாலை, மூக்கிரட்டை போன்ற மூலிகைக் கீரைகளுடன் கீழாநெல்லி, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து மதிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம். மருந்தாக இல்லாமல் இதுபோன்று கலவைக்கீரைகளாக சமைத்துச் சாப்பிட்டு பலன் பெறலாம். இதேபோல் ஆவாரம்பூவும்கூட கல்லீரல் பாதிப்பிலிருந்து நம்மை மீட்டெடுக்கும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ? என்றொரு மருத்துவ பழமொழி உண்டு.

ஆவாரம் பூவை துவையல், சட்னி, சாம்பார் என பல வழிகளில் நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். இதே போல் ஆவாரம்பூவில் ஒரு குடிநீர் தயார் செய்து அருந்தினால், கல்லீரல் பாதிப்பிலிருந்து மீளலாம். ஆவாரம்பூவுடன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மாலைவேளையில் தேநீர் அருந்துவதற்குப் பதில் ஆவாரைக் குடிநீர் குடித்து வந்தால் கல்லீரலை பாதுகாப்பதுடன் சிறுநீரகக் கோளாறுகளில் இருந்து விடுபடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கும் கூட இந்த ஆவாரை குடிநீர் சிறப்பானது. கீரை விற்கும் பாட்டிமாரிடம் சொல்லி வைத்து ஆவாரம்பூவை வாங்கி பயன்படுத்துங்கள்.

கல்லீரலை பாதுகாக்கும் கொய்யா!

இன்றைக்கு பலருக்கு ஃபேட்டி லிவர் பிரச்சினை காணப்படுகிறது. கல்லீரலில் கொழுப்பு படிவதால் ஏற்படும் ஃபேட்டி லிவர் பிரச்சினைக்கு எலுமிச்சைச் சாறுடன், புதினா இலைச் சாறு, தேன் சேர்த்துக் குடித்தால் அதிலிருந்து மீண்டு வரலாம். எலுமிச்சைச் சாறுடன் தக்காளி சாறு மற்றும் தேன் சேர்த்தும் குடிக்கலாம். ஏதேதோ பானங்கள் அருந்துவதற்குப் பதில் இதுபோன்று தயார் செய்து குடித்து வந்தால் கல்லீரல் குறைபாடுகள் சரியாகும். ரத்த ஓட்டம் சீராவதுடன் இதயம் பலமடையும். பாலில் எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டு உடனே குடித்தால் கல்லீரல் குறைபாடுகளிலிருந்து நம்மை மீட்கும்.

மாதுளை, செவ்வாழை, நாவல் பழம்,கொய்யா போன்றவற்றைச் சாப்பிட்டு வருவதும் நல்ல தீர்வைத் தரும். பாகற்காய், சீந்தில் என இன்னும் ஏராளமான எளிமையாகக் கிடைக்கும் இயற்கைப்பொருள்களை உண்டு பலன் பெறலாம். எளிமையான இந்த மருத்துவத்தை எடுத்துக் கொள்வதற்குமுன் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

கட்டுரையாளர்;  எம்.மரிய பெல்சின்,

மூலிகை ஆராய்ச்சியாளர்,

தொடர்புக்கு; 9551486617

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time