பிரியாவின் மரணமும், மருத்துவர் சங்க மிரட்டலும்!

-சாவித்திரி கண்ணன்

இளம்  வீராங்கனை பிரியாவின் மரணம் தமிழகத்தையே உலுக்கி இருக்குது! ”இது சாதாரண சிவில் நெக்கிலிஜென்ஸ், மருத்துவர்களை கைது செய்தால் போராட்டம் வெடிக்கும்”என வாள் சுழட்டுகிறார் தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தின் தலைவர் கே.செந்தில்!  இறப்புக்கு என்ன காரணம்?உண்மையில் நடந்தது என்ன?

டாக்டர் செந்தில் பற்றி கேட்டால் மருத்துவத் துறையிலேயே அந்தக் கே.செந்திலுக்கு அர்த்தம் கேடி செந்தில்ன்னு விளக்கம் சொல்கிறார்கள்! இவர் குறித்த தகவல்களை கட்டுரையின் கடைசியில் பார்ப்போம்.

இந்த சம்பவம் பற்றி நாம் பல தரப்பிலும் தீர விசாரித்த வகையில் எனக்கு தெரிய வந்ததை சொல்கிறோம்!

இன்றைக்கு விளையாடும் இளைஞர்கள் பலருக்கு காலில் சவ்வு விலகுவது, கிழிவது அல்லது தேய்வது என்பது சர்வ சாதாரணமாக உள்ளது! அதாவது, நூத்துல இருபது பேருக்கு இந்த பிரச்சினை வருகிறதாக மருத்துவர்களே சொல்றாங்க!

”இதற்கு அறுவை சிகிச்சை செய்வதே தேவையற்றது” என்கிறார்கள் மருத்துவர்கள்! இந்த மாதிரி பிரச்சினை வருபவர்களை மூட்டுவலிக்கு வைத்தியம் பார்க்கும் நல்ல நாட்டு மருத்துவர்களே ஆயில் மசாஜ் செய்து கட்டுப் போட்டு குணமாக்குவது மிக இயல்பாக பல இடங்களிலும் நடப்பதே! பிறகு ஓரிரு மாத ஓய்வில் தான் இது குணமாகும்.

விளையாட்டு வீராங்கனை பிரியா

சம்பந்தப்பட்ட பொண்ணு பிரியா முதலில் ஜி.ஹெச்சுக்கு தான் போயிருக்காங்க! அங்க இருந்த சீனியர் ஆர்தோ மருத்துவர்கள் ”அறுவை சிகிச்சை தேவையில்லை”ன்னு சொன்னதாக சொல்லப்படுகிறது. ஆனா, மருத்துவம் எதுவும் செய்யல.

அடுத்ததாக இந்த மாதிரி மருத்துவத்துக்குன்னே இருக்குற கே.கே.நகர் அரசு ஆர்த்தோ & பிசியோ தெரபி மருத்துவமனைக்கு போயிருக்காங்க! சம்பந்தப்பட்ட டாக்டர் அன்றைய தினம் வேலைக்கு வரலையாம். மத்தவங்களாவது சிகிச்சையும், அட்வைசும் தந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை. பாவம், அலைச்சல் தான் மிச்சம்!

இதற்கிடையில் கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனை முதல்வர் தொகுதி என்பதால் சமீபத்தில் விரிவுபடுத்தி இருக்காங்க! அங்கேயும், உள் நோயாளி, வெளி நோயாளின்னு கூட்டம் அதிகமாக இருக்கிறது! கூட்டத்துக்கு தக்க மருத்துவர் நியமனமும் அங்க இல்லை!

”நம்ம இடத்துலயே புதுசா அறுவை சிகிச்சை மையம் கொண்டு வந்திருக்காங்க! அங்க போய் பார்ப்போம்”ன்னு உள்ளூர் மக்கள் சொல்ல, அங்க போயிருக்காங்க பிரியா குடும்பத்தினர்!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா

அந்த மருத்துவமனையில் இது போன்ற அறுவை சிகிச்சை இது வரை செய்ததில்லை என்கிறார்கள்! ஆனால், அறுவை சிகிச்சை மையம் உருவாக்கியதால் மாதம் இத்தனை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டார்கெட் ஒட்டு டாக்டர்களை நிர்பந்திக்கிறார்களாம்! அப்புறம் இன்னொரு கொடுமை! இப்பெல்லாம் அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யப் போனால் இன்சூரன்ஸ் இருக்கான்னு கேட்டு நிர்பந்திக்கிறார்கள். இல்லாதவர்களுக்கு அந்த பிராசஸ் செய்து முடித்தால் தான் அறுவை சிகிச்சையே செய்ய முடியும்னு கொண்டு வந்திட்டாங்க! இது டாக்டர்களுக்கும் சரி, நோயாளிகளுக்கும் சரி பெரிய தலைவலியா உருவாகி இருக்கு! இதைப் பற்றி விரிவாக பிறிதொரு கட்டுரையில் சொல்கிறேன். அப்புறம் அறுவை சிகிச்சை செய்வதற்கான உபகரணங்கள் தொடங்கி தையல் போடுவதற்கான நூல், மருந்து, மாத்திரை எல்லாவற்றிலும் பற்றாக்குறை இருக்குது என்கிறார்கள் மருத்துவர்கள்!

இந்த மாதிரி மூட்டு அறுவை சிகிச்சை செய்தால், அதற்குப் பிறகு கட்டப்படும் கட்டை தானாக குறிப்பிட்ட நேரத்திற்குள் அவிழ்த்துவிடும் ஒரு மெஷின் இப்ப பெரிய மருத்துவமனைகள் அனைத்திலும் இருக்கு! அந்த மெஷின் இந்த மருத்துவமனையில் இல்லை. அதாவது, ரத்தம் வெளியேறாமல் இருப்பதற்காக இறுக்கமாக போடப்படும் கட்டை ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக கழற்றிவிட வேண்டும். கழட்டாவிட்டால் ரத்த ஓட்டம் காலின் கீழ் பகுதிக்குள் செல்லாமல் கால் செயலிழந்துவிடும். அந்தப் பகுதியில் உள்ள செல்களும் அழுகத் தொடங்கிவிடும். இதனால், உயிரை வாங்கத்தக்க அளவுக்கு வலியும் ஏற்படும். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் தங்கள் ”டியூட்டி முடிந்ததால் வீட்டு புறப்பட்டுவிட்டோம்” என நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்துள்ளது கவனத்திற்குரியது.

ஒரு அறுவை சிகிச்சை என்பது கூட்டுச் செயல்பாடு! டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர் அனைவருக்கும் இதில் பொறுப்பு உண்டு. டாக்டர்களுக்கு கூடுதல் பொறுப்பு வேண்டும். கால் கட்டை குறிப்பிட்ட நேரத்திற்குள் அவிழ்க்காத காரணத்தால் தான் வலி அதிகமாகி, காலை வெட்ட வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது என்பதே நிஜம். கால் வெட்டப்பட்டதையடுத்து அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டு உயிரே போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இதற்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பொறுப்பு ஏற்று, ”இதற்கான தண்டனை எதுவோ, அதை ஏற்கிறோம்” என தாங்களாகவே முன் வருவது தான் அவர்களின் படிப்புக்கும், தொழிலுக்கும் செய்யும் மரியாதையாகும். மாறாக, சம்பந்தப்பட்ட பால்ராம் சங்கரும், சோமசுந்தரமும் தலைமறைவாகி இருப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகும்! ”இது ஒரு சின்ன சிவில் நெக்கிலிஜென்ஸ் மட்டுமே! இது ஒன்றும் பெரிய குற்றமல்ல” என செந்தில் வாதிடுவது மனித தன்மையற்றது. இது போல எந்த மருத்துவர் சங்கத் தலைவர் சொன்னாலும் அது பொறுப்பற்றது.

இந்த சம்பவத்தையடுத்து, இதே போன்ற ஒரு நெக்கில்ஜன்ஸ் 18 ஆம் தேதி அதே ஜி.ஹெச்சில் மற்றொரு இளைஞருக்கும் ஏற்பட்டு கால் அகற்றும் நிலை உருவாகியுள்ளது! அதற்கு டாக்டர்கள் அந்தப் பெற்றோரிடம்,” நீங்க யாருகிட்ட வேணா புகார் செய்துகோங்க…” எனக் கூறியதாக அந்த இளைஞரின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறியதையும் பார்க்க நேர்ந்தது! ஆக, சம்பந்தப்பட்ட பெண், விளையாட்டு வீராங்கனை என்பதால் தான் இந்த மரணம் விளம்பர வெளிச்சம் பெற்றது! பலரது துயரங்கள் வெளியில் தெரியாமல் போய்விடுகின்றன!

மருத்துவர் சங்கம்,மெடிக்கல் கவுன்சில் இரண்டுக்கும் தலைவரான கே.செந்தில்

அரசு மருத்துவர்களுக்கு ஐந்து சங்கங்கள் உள்ளன! காரணம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் செந்திலின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து சென்றதால் உருவானவையே அவை! இவர் அடிப்படையில் அதிகார மையத்தின் ஒரு புரோக்கர்! ”இவர் மருத்துவப் பணியே செய்வதில்லை. மருத்துவர் சங்கத் தலைவர், மெடிக்கல் கவுன்சில் தலைவர் என்ற ஹோதாவில் எல்லாவற்றிலும் பணம் பார்ப்பது ஒன்றே வேலையாக வாழ்பவர்” என்பது சுகாதாரத் துறையில் அனைவருக்குமே தெரிந்த உண்மையாக உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது.

”சென்ற ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ‘குட்கா புகழ்’ ஊழல் மன்னன் விஜயபாஸ்கரின் எடுபிடியாக இருந்து அனைத்து ஊழல்களுக்கும் அவருக்கு வழிகாட்டி கமிஷன் பார்த்தவர் தான் இந்த செந்தில்” என்கிறார்கள்! அந்த வகையில் தான் ஆட்சி மாற்றம் நடந்ததும் இவர் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால், ரெய்டுக்கு பிறகு விஜயபாஸ்கரைப் போலவே இந்த ஆட்சியாளர்களை சரிகட்டி விட்டார். இவர் தமிழ் நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கும் தலைவராக உள்ளார். அந்த வகையில் தனியார் மருத்துவமனைகள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்தாலும், நோயாளிகளுக்கு எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும், அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு எல்லா புகார்களையும் நீர்த்து போக வைத்துவிடுகிறார். இது பற்றி நிறையவே விலாவாரியாக எழுதலாம்!

இப்படிப்பட்ட செந்தில் மீண்டும் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தேர்தலுக்கு நிற்பதால் டாக்டர்கள் ஓட்டை அறுவடை செய்யும் விதமாக, ஏதோ மருத்துவர்களின் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக் கொண்டு அரசியல்வாதிகள் ரேஞ்சுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். உண்மையில் இந்த அறிக்கையானது சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்கள் மீதுள்ள மக்களின் கோபத்தை ஒட்டுமொத்த அரசு மருத்துவர்கள் மீதும் மடை மாற்றுவது போலத் தான் உள்ளது.

அரசு மருத்துவர்களில் மிகப் பெரும்பாலோர் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றனர் என்பதை மக்கள் அறிந்தே உள்ளனர். நடைபெற்ற சம்பவத்திற்கு சட்டப்படியும், தார்மீக அடிப்படையிலும் உரிய தண்டனையை ஏற்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வருவதே இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு வழி வகுக்கும். ”டாக்டர்கள் என்ன செய்தாலும், சங்கம் காப்பாற்றிவிடும்” என்றால், மக்களுக்கு பாதுகாப்பு தான் என்ன? ஒரு துயர நேரத்திலும் இந்த மாதிரி பேசுவது மக்களின் பெரும் கோபம் ஒட்டு மொத்த டாக்டர்கள் மேலும் திரும்பவே வழிவகுக்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time