ராஜிவ் கொலை! ஹரிபாபு – ‘சுபா’சுந்தரம்-‘தேள்கடி’ ராமமூர்த்தி!

-சாவித்திரி கண்ணன்

ராஜிவ்காந்தி கொலையுண்ட போது ஸ்ரீபெரும்புதூர் ஸ்பாட்டில இருந்தவரு ‘தேள்கடி’ ராமமூர்த்தி! ராஜிவ் கொலையில் இவரும் முக்கிய திருப்பமானார்! இவர் தான் ஹரிபாபு இறப்பையும், அவன் கேமரா அங்கே அனாதையாகக் கிடந்ததையும் சி.பி.ஐக்கு கவனப்படுத்தியவர்! சி.பி.ஐக்கு கொலையாளிகளைத் தேடிக் கண்டடைய காரணமானவர்! 

படபடவெனப் பேசுவார்! ஆனால், பேச்சு ஷார்ப்பா இருக்கும்! எதையும் நேர்பட அணுகுவது அவர் ஸ்பெசாலிட்டி! ‘தேள்கடி’ ராமமூர்த்தினு அவரை அழைப்பாங்க! அந்தப் பட்டப் பேருக்கான காரணத்தை பெறவு சொல்றேன்!

‘’தேள்கடி ராமமூர்த்தி இறந்துட்டாரு தெரியுமா கண்ணன்’’னு நம்ம கல்கி பிரியன் போன் பண்ணி சொன்னப்ப ஆடிப் போயிட்டேன்!

ஏன்னா மூன்று நாளுக்கு முன்பு தான் அவரு எனக்கு போன் பண்ணினாரு! அவருக்கும், எனக்கும் பெரிய சினேகமெல்லாம் இல்லை. இப்படி அத்திபூத்தாப்புல போன் பண்ணுவாரு! 72 வயசுன்னாலும் ரொம்ப எனர்ஜிடிக்கானவரு!

‘’கண்ணா உன்னோட ஆதன் சேனல் பேட்டி பார்த்தேன்! ராஜிவ் கொலை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை ரொம்ப யதார்த்தமா பேசி இருந்த! எக்ஸ்லண்ட்! இப்படி பேலன்ஸ்டா ஒளிவு மறைவில்லாமல், தைரியமா சொல்ல எலோராலையும் முடியாது!’’ என்றார்.

‘’ரொம்ப மகிழ்ச்சி சார்! நீங்க நல்லா இருக்கீங்களா?’’ என்றேன்.

‘’நான் நல்லா இருக்குறேன். யதேட்சையா தான் உன் பேட்டி பார்த்தேன். உண்மையிலேயே சொல்றேன். ரொம்ப அருமை, ஹானஸ்டா பேசியிருக்கே! இந்தப் பேட்டியைப் பார்க்கும் யாருமே சாவித்திரி கண்ணனுக்காக தங்கள் உயிரைக் கூட கொடுப்பாங்க..! அப்படி ஒரு நேர்மையான பிரசண்டேஷன்!’’

அவர் பேசுனதை கேட்டப்ப ரொம்ப கூச்சமாக இருந்தது! அதனால டக்குனு பேச்சை வேறு பக்கமாக திசை திருப்பி பேசிட்டு வைத்தேன்!

ராமமூர்த்தி யாரையும் லேசில புகழ்ந்து பேசுபவரும் இல்லை, நக்கல்,  நையாண்டி செய்பவரும் இல்லை! அதனால’ அவர் இப்படி பேசியது அபூர்வத்திலும் அபூர்வம்! அந்தப் பேச்சை ஒரு வகையில் எனக்கான அங்கீகாரமாகவே எடுத்துக் கொண்டேன்.

ராஜிவ்காந்தி கொலையுண்ட போது ஸ்ரீபெரும்புதூர் ஸ்பாட்டில இருந்தவரு ‘தேள்கடி’ ராமமூர்த்தி!

இவரு தான் சம்பவத்திற்கு அடுத்த நாள் எனக்கு போன் பண்ணி, ”கண்ணா உன் கூடவே இருப்பானே… கருப்பா, சிரிச்ச மூஞ்சியா ஒரு சின்ன பையன்! அவன் ஸ்ரீபெருபுதூரில் நடந்த குண்டுவெடிப்புல ராஜிவ்காந்தி கூட  செத்துட்டான்யா!’’ ன்னு எனக்கு சொன்னவரு!

உயிரைக் கொடுத்து ராஜிவ் கொலைக்கு ஆவணங்களை தந்த ஹரிபாபு!

ஒரு நிமிடத்துல நிலைகுலைந்து போனேன்!

‘’ஐயையோ ஹரிபாவுவ சொல்றீங்களா சார்! ஆமா, சார்! நேற்று என் கூட நல்லா கலகலப்பா பேசிட்டுத் தான் ராஜிவ்காந்தி நிகழ்ச்சிக்கு ஸ்ரீபெரும்புதூர் போனான்! உண்மையத்தான் சொல்றீங்களா? நல்லா பார்த்தீங்களா? அவன் தானா?’’ என்றேன்.

‘’இல்ல, கன்பார்மாக அவன் தான். அதனால தான் மெனக்கெட்டு உனக்கு போன் பண்ணினேன்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து தான் மேற்கு சைதாப்பேட்டையில் இருந்த ஹரிபாபுவின் குடிசை வீட்டைத் தேடிச் சென்று நான் விசாரித்த போது, அவன் அம்மா, ‘’தம்பி வீட்டிலே இல்லையே.. ஏதோ வெளியூர் போவதா சொல்லி நேத்து போனவன் இன்னும் வரலை’’ என சகஜமாகச் சொன்னாங்க!

அப்புறம் நான், ‘’இல்லங்க அவன் ஸ்ரீபெரும்புதூர் போனான். அங்க ஆக்சிடெண்ட் ஆகி இருக்கு! ஹாஸ்பீட்டலில் அட்மிட்ன்னு நெனைக்கிறேன்’’ என்றேன்!

இப்படி நாசுக்கா சொல்லும் போதே அவங்க அம்மா கண்ணுல ஒரு மிரட்சியும், பயமும் பொசுக்குன்னு துளிர்விட்டுச்சு.

”பாபுவுக்கு என்னாச்சுன்னு..”  ஈனஸ்வரத்துல குரல் ஒடிஞ்சு கேட்டப்ப கண்ணில் தண்ணி எட்டிப் பார்த்தது! அதுக்கு மேல அவங்கள பார்க்க எனக்கு சக்தியில்லாம, ‘’பதட்டப்டாதீங்க எங்க ஹரிபாபுவோட அப்பா?’’ என்றேன்.

‘’இல்லையே, எங்க போயிருக்காரோ..! ராவுக்கு தான் வருவாருன்னாங்க!’’ என்றார். அவன் அப்பா படிப்பறிவில்லாதவரு, தச்சர்! அப்பாவி! ஆக, நாம தான் உதவி செய்யனும்னு தெரிஞ்சுகிட்டேன்.

‘’சரி, இருங்க, நான் விசாரிச்சுட்டு வாரேன். நாம் போவோம்ன்னு சொல்லிட்டு நேரே எக்மோர் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் போயி, ‘’ராஜிவ்காந்தியோட ஸ்பாட்டுல இருந்த என் பிரண்டு போட்டோகிராபர் செத்துட்டான்! பாடியை எங்க போய் பார்க்கிறது’’ன்னு கேட்டேன்.

‘’சார், ஜி.ஹெச்சுக்கு போய் பாருங்க, இல்லை காஞ்சிபுரம் ஹாஸ்பிட்டல் போங்க’’ ன்னு வழி காட்டினாங்க.

ஜிஹெச்சுல பாடி இல்லன்னாவுடன் பிறகு ஹரிபாவுவோட வீட்டுக்கு போயி, எல்லோருமா காஞ்சிபுரம் சென்று, சிதைந்து போன பாடியை வாங்கி வந்து இறுதி காரியம் செய்தோம்!

கேமிராவோடு இறந்து கிடக்கும் ஹரிபாபு

ராமமூர்த்தி மட்டும் எனக்கு போன் பண்ணி சொல்லாட்டி, இந்த பிராசஸ் நடந்திருக்குமா? எவ்வளவு தாமதமாக தெரிய வந்திருக்கும்னு சொல்ல முடியாது!

பெறவு கொஞ்ச நாள் கழித்து, ‘தேள்கடி’ எனக்கு போன் பண்ணி, ‘’உன்ன அவசியமா பார்க்கணும். உங்க வீடு எங்க, நான் வாரேன்’’ னாரு!

அப்ப நான் சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் என் அக்கா வீட்டில் தான் இருந்து கொண்டிருந்தேன்.

ராமமூர்த்தி ரொம்ப பதட்டத்தோட வந்தாரு! ப்ரியாக மனம்விட்டுப் பேச அவரை மொட்ட மாடிக்கு கூட்டிப் போனேன்!

‘’யோவ் கண்ணா! நான் என்னையா தப்பு பண்ணீனேன்? ஹரிபாபு செத்துட்டான்னு போன் பண்ணி தகவல் தந்தது ஒரு குத்தமா போச்சு!’’ என்றார்.

‘’அதுல எந்தக் குத்தமும் இல்லையே என்னாச்சு?..’’ என்றேன்.

‘’இந்த பாருய்யா! ஹரிபாபு இறந்ததை நான் முதலில் சுபா சுந்தரத்திற்கு தான் போன் பண்ணீனேன். அதுவும் அந்தன்னைக்கே இரவில் வரும் வழியில் ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில இருந்து போன் பண்ணி அவர்கிட்ட சொன்னேன். ஏன்னா அவன் அங்க வேலை பார்க்கும் பையன்னுங்கிறதால சொன்னேன்.’’

‘தேள்கடி’ ராமமூர்த்தி

”சரி தான்! சுபாசுந்தரம் நியூஸ் போட்டோ சர்வீஸ்ல தான் அவன் வேலை பார்த்தான்! ஆனா, அவன் தற்போது கடைசியா அங்க வேலை பார்க்கலே! அந்த எல்.டி.டிகாரங்களோட தான் சுத்திக்கிட்டு கிடந்தான்! இருந்தாலும் சுபா சுந்தரம் இடத்துல தொழில் பழகுன பையன்ற வகையில நீங்க சொன்னது தப்பில்லை’’ என்றேன்.

‘’ஆனா, நான் ஹரிபாபு இறந்ததை சொன்ன போது, சுபா சுந்தரம் ”அவன் கேமரா என்னாச்சு? அதுல ஏதாவது முக்கியமான போட்டோ இருக்குமே அதை எடுத்துட்டு வரலாமே…’’ என்றார்! ‘’இல்ல சார், நான் ஸ்பாட்டுல இருந்து வெகு தூரம் வந்திட்டேன். இப்ப இந்த கலவரச் சூழலில் அந்த கேமராவை தேடி எடுக்க வாய்ப்பில்லை’ என்றேன். அவர் மேற்கொண்டு வற்புறுத்தினாரு! நான் முடியவே முடியாது, அது சாத்தியமில்லை’ எனச் சொல்லிவிட்டேன். நான் ஸ்பாட்டுல இருந்தவன்ற முறையில சிபிஐ என்னை விசாரித்தப்ப, இந்த தகவலை கேஸுவலாக சொல்லிட்டேன்!

அதுக்கு சுபா சுந்தரம், ”நீ எப்படி சிபிஐயில நான் கேமரா எடுத்து வரச் சொன்னதை சொல்லலாம்? காட்டிக் கொடுத்திட்டியே”ன்னு கன்னபின்னான்னு திட்டுறாரு..எனக்கு மனசு நிம்மதியே போச்சு’’ ன்னு சொல்லி ரொம்ப வருத்தப்பட்டார்.

உண்மையில் சிபிஐயிடம் ராமமூர்த்தி இதை சொன்னதால தான் ஹரிபாபுவின் கேமராவை தேடி கண்டடைய வேண்டும் என அவர்களுக்கே தோன்றியது என எண்ணுகிறேன். பிறகு சற்று தேடலுக்கு பிறகு அந்த கேமராவை லோக்கல் போலீஸ் போட்டோகிராபரிடம் இருந்து கைப்பற்றித் தான் ராஜிவ் கொலையாளிகளை சிபிஐயால் பிடிக்க முடிந்தது! ஆக, ராஜிவ் கொலையில் தேள்கடியாரின் சாட்சி முக்கிய திருப்பமானது.

கையில் சந்தன மாலையுடன் நிற்பவர் தனு, வெள்ளை குர்தாவில் நிற்பவர் சிவராஜன்- ஹரிபாபுவின் போட்டோ

நான் அவரை ஆற்றுப்படுத்தி, அனுப்பி வைத்தேன். இப்படியாக கொலையில் சம்பந்தப்படாவிட்டாலும் ஸ்பாட்டில் இருந்த முக்கிய ஆவணமான கேமராவை எடுத்து வரச் சொன்னதாலயும், சொல்லிட்டு, ”அதை நான் சொல்லவே இல்லை’’ என்றும் சுபா சுந்தரம் சிபிஐயிடம் மறுத்துப் பேசப் போய், கைது செய்யப்பட்டு எட்டாண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்!

கொஞ்ச காலம் இந்த பத்திரிகை துறையே வேணாம்னு சொல்லிட்டு பால் வியாபாரம் செய்து வாழ்ந்தார் தேள்கடி ராமமூர்த்தி! அப்புறம் பிள்ளைங்க தலை எடுத்தவுடன் அதைவிட்டுட்டு அமைதியாக ஓய்வு வாழ்க்கையை கழித்து வந்தார்!

அவருக்கு ‘தேள் கடி’ன்னு பேர் வந்ததற்கான காரணம், இது தான்! 1970 களில் நடந்த ஒரு சம்பவமாகும்!

‘பள்ளிக் கூடம் போகமாட்டேன்’ என்று அடம் பிடித்த சின்னஞ்சிறு குழந்தையை வலுக்கட்டாயமாக பெற்றோர்கள் ஸ்கூலுக்கு கேன்வாஸ் ஷுவை போட்டு அனுப்பியுள்ளாங்க! ஸ்கூலுக்கு போக மறுத்த குழந்தை காலை உதறி, உதறி அழுதுருக்கு! ஆனா, குழந்தை அடம் பிடிக்குதுன்னு பெற்றோர்கள் ரெண்டு சாத்துசாத்தி’ ஸ்கூலில்விட்டு இருக்காங்க! கொஞ்ச  நேரத்துல குழந்தை மயங்கி விழுந்து இறந்துவிட்டது. அப்ப குழந்தை போட்டு இருந்த கால் ஷுவை கழட்டின போது, அதுக்குள்ள ஒரு தேள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தைக்கு ஷு போடும், போது, அதை நன்கு உதறிவிட்டு போடாமல் விட்டதனாலும், குழந்தை காலை உதறி துடித்ததை பிடிவாதமாகக் கருதியதாலும் நடந்த அநியாய சாவு இது! இந்த சம்பவத்தை அன்று பத்திரிகையில் எழுதி வெளிக் கொண்டு வந்தவர் ராமமூர்த்தி. இந்த சம்பவம் அன்றைக்கு தமிழகத்தையே உலுக்கி எடுத்த ஒரு சமாச்சாரமாகும். அதில் இருந்து அவருக்கு ‘தேள்கடி’ என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது!

சுமார் அரை நூற்றாண்டு காலமாக இதழியல் துறையில் இயங்கிய ‘தேள்கடி’ ராமமூர்த்தியார் இன்று இல்லை! ‘தேள்கடி’ ராமமூர்த்தியின் ஆன்மா சாந்தி கொள்ளட்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time