சங்க காலத்தில் பெண் துரோகத்திற்கு தண்டனை என்ன?

-பொ.வேல்சாமி

வீட்டுக்கு தெரியாமல் வேறொரு பெண்ணிடம் பழகி நம்பிக்கை தந்து, அனுபவித்துவிட்டு, பிறகு அந்தப் பெண்ணை தனக்கு தெரியவே தெரியாது எனச் சொல்லும் மைனர்கள் பலரை பார்க்கிறோம். சங்க காலத்தில் இப்படி பெண்ணை ஏமாற்றும் ஆணுக்கு என்ன தண்டனை தரப்பட்டது என்பதை சங்க இலக்கியமான அக நானூறு சொல்கிறது!

அரசியல் ஆதாயத்திற்காக வரலாற்றில் நிகழ்வுகளை மாற்றிப் பேசி, கடந்த காலம் ஒரு பொற்காலமாக இருந்தததாகவும், நிகழ்காலம் தான் மிகவும் மோசமாகிவிட்டது என்றும் பிரச்சாரம் செய்பவர்கள் உண்டு! இப்பேர்பட்ட புனைவுகளுக்கு இவர்கள் தேர்ந்தெடுக்கும் விசயங்கள்  மதம், இனம், மொழி என்பவையாக இருந்துள்ளன. தமிழ்நாட்டு வரலாற்றிலும் இத்தகைய நிகழ்வுகள் சென்ற காலங்களில் நடைபெற்றுள்ளன.

அவைகளில் குறிப்பிடத்தக்கவை; ‘சங்க காலம் பொற்காலம்’  ‘களப்பிரர்கள் பொல்லாதவர்கள்’  ‘புகழ்பெற்ற அரசர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள்’ என இப்படியான பலவிதமான கற்பனை கதைகளைக் கட்டி பறக்க விடுவார்கள். அப்படி இவர்கள் விட்ட கதைகளில் ஒன்று, ‘சென்ற கால தமிழக வரலாற்றில் வாழ்ந்த மக்கள்  தவறுகளே செய்யாத உத்தம புத்திரர்களாகவும், இலட்சியவாத வாழ்க்கை வாழ்ந்ததாகவும்’ கூறி அப்பாவிகளின் காதுகளில் பூ சுற்றுவார்கள்.

அப்படி இவர்களால் கூறப்பட்ட புனைவுகளைப் பொய்யாக்கும் தகவல்கள் நம்முடைய வரலாற்றில் ஆங்காங்கே பதிவாகியுள்ளன.  அப்படி பதிவாகியுள்ள சான்றுகளை இவர்கள் மறைத்துவிட்டு தங்களால் புனையப்பட்ட கதைகளை அவிழ்த்து விடுவார்கள். உண்மையில் சங்க காலம் பொற்காலமல்ல, களப்பிரர்கள் பொல்லாதவர்கள் அல்ல! புகழ் பெற்ற அரசர்கள் எல்லாம் குற்றமற்ற உத்தமர்களல்ல!

அவ்வாறு கூறுகின்ற இத்தகையவர்களின் புனைவுகளை மறுதலிக்கும் குறிப்புகளும் நிறையவே உள்ளன.  உதாரணமாக, சங்க இலக்கியத்தில் உள்ள எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் சில குறிப்புகள் உள்ளன. அத்தகைய குறிப்புகளுள், புலவர் மதுரைத் “தமிழ்க் கூத்தனார் காவன் மள்ளனார்” எழுதிய 256 ம் பாடலில் உள்ள செய்தி நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது.

மருதத்திணை சார்ந்ததாக இயற்றப்பட்டுள்ள இந்தப் பாடலில் ஒரு குடும்பத் தலைவன் தன் வீட்டார்க்கு தெரியாமல் வேறு பெண்ணிடம் சென்று கூத்தடித்து விட்டு வந்து, அதை மறைக்கப் பார்த்து மாட்டிக் கொண்டதை,  அந்த ஊரில் நடந்த ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டி தோழி நகைப்பதாகப் பாடப்பட்டுள்ளது.

அந்தப் பெண் நடந்ததாகக் குறிப்பிடும் செய்தியாவது; ஒரு இளைஞன் ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக நீண்ட காலம் பழகி வந்ததை மறுத்து விட்டு, தனக்கு அந்தப் பெண்ணொடு சம்பந்தமே இல்லை எனத் தப்பியோட பார்க்கின்றான். இந்த நிகழ்வை சரியான முறையில் ஆராய்ந்த அப் பெண்ணின் உறவினர்கள் அவன் பித்தலாட்டம் செய்கிறான் என அறிந்ததனால் அவனைப் பிடித்து ஒரு மரத்தின் கிளையில் கட்டி வைத்து செம்மையாக உதைத்ததும் அல்லாமல், ”பொய் சத்தியம் செய்கிறாயா..?” என்று அவன் தலையில் சாணத்தையோ அல்லது மலத்தையோ ஊற்றியதைக் கண்ட மக்கள் ஆரவாரம் செய்ததை விட பரத்தையர்கள் செய்த ஆரவாரம் மிகுந்து இருந்ததாகக் கூறுகின்றார்.

குறிப்பு;

எல்லாக் காலங்களிலும் எல்லா வகையான மனிதர்களாலும்  நல்லதுகளும், கெட்டதுகளும் கலந்து தான் உலகம் இயங்கி வருகின்றது. இத்தகைய இழிந்த செயல்பாடுகள் மிகப் பழமையான காலத்திலும் நடந்து வந்துள்ளதை இந்தப் பாடல் நமக்குச் சொல்லுகின்றது. அது மட்டுமின்றி, ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவன் அன்று சமூகத்தில் எவ்வாறு தண்டிக்கப்பட்டான் என்பதையும் இந்த சங்கப் பாடல் விளக்குகிறது!

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி

கரந்தை தமிழ் கல்லூரி புலவர், வரலாற்று ஆய்வாளர், ‘கோவில், நிலம், சாதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time