அரசியலில் பெண்கள் சுயமரியாதையோடு இயங்க முடியாதா?

- சாவித்திரி கண்ணன்

திருச்சி சூர்யா சிவாவின் பேச்சு கொலைவெறிக் கோபாவேசம், அநாகரீகத்தின் உச்சம்! காட்டுமிராண்டித்தனம்!..எனத் தெளிவாக தெரிய வந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலையால் இயலவில்லை! சசிகலா புஷ்பா பாதிக்கப்பட்டதற்கும் நடவடிக்கை இல்லை. காரணம் என்ன?

பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணிடம் போனில் பேசும் சூர்யாவிடம் தன் கோபம் இன்னதற்கானது தான் சொல்லும் நிதானம் கூட இல்லை. ‘எதிர்முனையில் பேசுபவர் பெண் என்பதால் என்ன செய்துவிட முடியும்’ என்று நினைத்திருக்கிறார் போலும்!

”நீ படுத்து தானே பதவி வாங்கினே..?”

”உன்னை  நடுரோட்டில் இழுத்து போட்டு உதைப்பேன்”

”லாரியில் அடிபட்டு செத்து போவாய்!”

”சாலையில் அநாதையாக செத்து போவே! அதுக்கு காரணம் நானாக இருப்பேன்.”

”உன் – அறுத்து மெரீனாவில் வீசுவேன்…”

போன்ற பாலியல் ரீதியாக மிகவும் இழிவுபடுத்தி, மிகக் கடுமையாக பேசியுள்ளார்!

பதிலுக்கு டெய்சி ராணி என்பவர் ‘இதை பதிவு செய்கிறோம்’ என்ற புரிதலில் மிக நிதானமாக விவகாரத்தை எதிர் கொண்ட போதிலும், பதிலுக்கு அவரும் ஆபாசமாக திருச்சி சூர்யாவின் தாயையும், மனைவியையும் இழிவுபடுத்தி பேசுகிறார்.

இந்த ஆடியோ பொதுவெளிக்கு வருவதற்கு முன்பே அண்ணாமலை வசம் சென்ற போதிலும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இந்த ஆடியோவை சிலர் ‘லீக்’ பண்ணியுள்ளனர்.

அரசியல் எந்த அளவுக்கு சீர்கேடு அடைந்துள்ளது என்பதற்கு இந்த உரையாடலை விடவும் வேறு சாட்சி இருக்க முடியாது! பாஜக நிர்வாகி ஒருவரின் பெயரைச் சொல்லி அவரிடம் படுத்து தானே இந்த பதவி வாங்கினாய்..? என சூர்யா பேசுவதில் இருந்து, ‘பாஜகவில் பெண்கள் செல்வாக்கான நிர்வாகிகளின் இச்சைக்கு அடி பணிந்தால் மட்டுமே பதவி பெற முடியும்’ என்ற நிலை இருப்பதாக உணர்த்துகிறது! அந்த நிர்வாகி குறித்து இப்படி பலரும் கருத்து கூறியுள்ளனர். ஆனாலும், பிடித்து வைத்த கேசம் கலையாத விநாயகரைப் போல அவரும் அந்தப் பதவியில் அசைக்க முடியாதவராகத் தான் உள்ளார்! அவர் மீதான குற்றச்சாட்டு பொய் என்றால், இந்த நேரம் சூர்யா மீது நடவடிக்கை பாய்ந்திருக்கும் தானே!

சில மாதங்களுக்கு முன்பு எம்.பியாக இருந்த சசிகலா புஷ்பா மீது பொன். பாலகணபதி என்ற பாஜக நிர்வாகி பொதுவெளியில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதைப் பார்த்த யாருக்குமே ஒரு கோபம் உருவாகி அந்தக் அயோக்கியனை உதைத்தால் என்ன..? எனத் தோன்றும். இந்த நிகழ்வு தொடர்பாக சசிகலா புஷ்பாவின் கணவர் காவல்துறைக்கு புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனத் தெரிய வருகிறது. அதேசமயம் சசிகலா புஷ்பா தனக்கு ஏற்பட்ட இந்த அவமானம் தொடர்பாக கட்சிக்குள் புகார் தந்தாரா..? எனத் தகவல் இல்லை. வீடியோ ஆதாரத்தை வைத்தே அந்த நபர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்து இருக்கலாம். ஆனால், எதுவும் எடுத்தது மாதிரி தெரியவில்லை. ஒரு எம்.பியாக இருந்த பெண்ணுக்கே பாஜகவில் இது தான் நிலைமை.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியின் முக்கியஸ்தர் கே.டி.ராகவன் என்பவர் தன் வீட்டு பூஜை அறையில் இருந்தவாறு ஒரு பெண்ணிடம் ஆபாசமாக சைகை செய்து, சுய இன்பம் காணும் காணொலி வெளியானது. இது சமூகத்தில் அந்தக் கட்சிக்கான மரியாதையை தரைமட்டமாக்கிய போதும் அந்த நபர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. வெகு சீக்கிரம் அவர் மீண்டும் ஹய்லைட்டுக்கு வரலாம்!

அண்ணமலைக்கு முன்பு எல்.முருகன் பாஜகவின் மாநில தலைவராக இருந்த போது அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நாளும், பொழுதும் வெளிவந்த வண்ணம் இருந்தது. இதன் எதிரொலியாக தினமலர் நாளிதழ்லேயே பாஜக நிர்வாகிகள் பெண் பித்தர்களாக உள்ளதான ஒரு பெரிய செய்திக் கட்டுரை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக எல்.முருகன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், அவருக்கோ மத்திய இணை அமைச்சர் என்ற பதவி உயர்வு தான் வழங்கப்பட்டது.

அதென்னவோ தெரியவில்லை. பாஜகவில் மட்டும் பொறுப்புக்கு வருபவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளது. இன்று கவர்னர் ஆக பதவி உயர்வு பெற்றுள்ள இல.கணேசனும் தமிழக மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த போது, இந்தப் புகாரில் தொடர்ந்து அடிபட்டார். அப்போதைய மகளிர் அணித் தலைவியோடு அவரை தொடர்புபடுத்தி அவரது கட்சிக்காரர்களே பொதுவெளியில் பலவாறாகப் பேசி வந்தனர். மேலும், அவர் தன் டிரைவர் வீட்டிலேயே சில்மிஷம் செய்யப் போய் தாக்கப்பட்டதான செய்திகளும் அன்றைய புலனாய்வு இதழ்களில் வந்தன! அவர் கல்யாணம் பண்ணாத பிரம்மச்சாரியாக அறியப்பட்டாலும், அவரது குடும்பத்திலேயே தன் பாலியல் அத்துமீறல்களை செய்ததாக கட்சி வட்டாரத்தில் பலமான பேச்சு அடிபட்டது. அதன் தொடர்ச்சி தான் தற்போது அவர் தன் அண்ணனின் 80 வது பிறந்த நாள் விழா நடத்திய நிகழ்வை பாஜகவின் தமிழக தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புறக்கணித்தனர்.

மற்றொரு பிரபல பாஜக தலைவராக அறியப்பட்ட சண்முகநாதன் என்பவர் இல.கணேசனைப் போல ஆர்.எஸ்.எஸ்சில் இருந்து வந்தவரும் கூட! அவருக்கு பெரிய பதவியான கவர்னர் பதவி தரப்பட்டது. ஆயினும், அவர் மணிப்பூர் கவர்னராக இருக்கும் போது அளவுக்கு மீறி பாலியல் விவகாரத்தில் இல்லாத சேட்டைகளை எல்லாம் செய்து பெயரைக் கெடுத்துக் கொண்டு வெளியேறினார்.

தற்போதைய விவகாரத்தை எடுத்துக் கொண்டால், நியாயப்படி, இந்த விவகாரத்தில் அண்ணாமலை விரைந்து நடவடிக்கை எடுத்து சூர்யாவை கட்சியில் இருந்து விலக்கி இருக்க வேண்டும். இதை தட்டிக் கேட்ட காயத்திரி ரகுராம் மீது பாயும் வேகம் ஏன் சூர்யா விஷயத்தில் இல்லாமல் போனது. அப்படியானால், ‘எப்பேர்ப்பட்ட தப்பு செய்தாலும் ஆண் மீது நடவடிக்கை பாயாது! அதை தட்டிக் கேட்டால், பெண் தண்டிக்கபடுவார்’ என்பது பாஜகவின் கட்சி விதிகளில் இருக்குமோ, என்னவோ?

கேட்க சகிக்க முடியாத காட்டிமிராண்டித்தனமான பேச்சு பேசும் யாருமே பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களே! டெய்சி சரண் என்பவர் இவ்வளவு ஆபாசமாக பேசும் ஒருவரின் டெலிபோன் இணைப்பை உடனே துண்டித்து இருக்க வேண்டும். மாறாக அவர் மேன்மேலும் சூர்யாவின் கோபத்தை தூண்டி பேச வைக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. இந்த கேட்க கூசும் ஆபாசமான பேச்சு அவரை அதிர்ச்சியடைய வைத்ததாக தெரியவில்லை. பதட்டமடையவும் வைக்கவில்லை. தார்மீகச் சீற்றத்தையும் ஏற்படுத்தவில்லை! இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உண்மையில் இந்த படுமோசமான ஆபாச பேச்சுக்கு பாஜகவின் மகளிர் அணி கொந்தளித்து இருக்க வேண்டும். எந்தப் பெண்ணாக இருந்தாலும் இதை கேட்கும் போது கோபம் ஏற்படுவது தான் இயல்பு. எனில், பாஜகவில் உள்ள குஷ்பு  உள்ளிட்ட பெண்களுக்கு ஏன் தார்மீக சீற்றம் வரவில்லை? ஏன் அடங்கி மெளனம் காக்க வேண்டும்? அப்படியானால், பாஜகவின் அரசியலில் தாக்குபிடிக்க பெண்கள் தங்கள் சுய மரியாதையை இழக்க வேண்டும் என்பது இன்றைக்கு எழுதப்படாத விதியாக மாற்றப்பட்டு வருகிறதா? என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

நியாயப்படி பார்த்தால் சூர்யாவின் கொலைவெறி மிரட்டல் பொதுவெளியில் பரவலானதைத் தொடர்ந்து அவரை தமிழக காவல்துறை தானே முன் வந்து கைது செய்யலாம்! ”பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூட தன்னை தடுத்துவிட முடியாது…உன்னை …செய்தே தீருவேன்..” என பகிரங்கமாக சூர்யா சவால்விட்ட பிறகு, இதில் மெளனம் சாதிப்பதோ, காலதாமதப்படுத்துவதோ ஆபத்தாக முடியலாம்! சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏதேனும் பெரிய அநீதி நிகழ்ந்த பிறகு தான் காவல்துறையும், கட்சியும் விழித்துக் கொள்ளுமா தெரியவில்லை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்