ஒன்றிய அரசோடு மோதத் துணிந்தது உச்ச நீதிமன்றம்!

-ச.அருணாசலம்

தேர்தல் ஆணையர் சுதந்திரமாக செயல்பட முடியாதா? ஏன் இத்தனை சிக்கல்கள்! தேர்தல் ஆணையரை கைப்பாவையாக்கும் பாஜக அரசுக்கு நீதிமன்றம் கடிவாளம் போட முன் வந்துள்ளது! இதில் வெகுண்ட சொலிசிடர் ஜெனரல், நீதிபதிகளையே மிரட்டுகிறார். வெற்றி பெறப் போவது நீதிமன்றமா? பாஜக அரசின் அதிகாரமா..?

ஒரு வாரமாக தேர்தல் ஆணையம் அதன் ஆணையர்கள் அவர்களது நியமனம் மற்றும் செயல்பாடு பற்றி ஊடகங்கள் பரவலாக பேசி வருகின்றன. இதற்கு காரணம் நடந் து முடிந்த இமாச்சல் மாநில தேர்தலோ அல்லது  நடக்கவிருகின்ற குஜராத் தேர்தலோ அல்ல. மாறாக தேர்தல் ஆணையர்கள் நியமனத்தை பற்றியும் அவர்களது சுதந்திரமான செயல்பாட்டின் அவசியம் பற்றியும் தொடுக் கப்பட்ட  மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 17 ந்தேதி ஐந்து நீதிபதிகளை கொண்ட உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வின் முன்  நடந்து கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டுமெனில் , தேர்தல் ஆணையர்கள் நடுநிலையாளர்களாக , நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் . இதை உறுதி செய்ய ஆணையர்களின் பணி நியமனத்தில் அரசு தலையீடு , கட்டுப்பாடு இருக்க கூடாது என மனுதாரர்கள் வாதிட்டனர் . பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோரை தவிர்த்த ஒரு  “தேர்வுக் குழு” தான் ஆணையர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், அத்தகைய தேர்வுக்குழுவில் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அங்கம் வகிக்கலாம் என வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் வாதிட்டார்.

அப்பொழுது, “தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் எவ்வளவு தகுதியும், சாமர்த்தியமும் நிறைந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளே இருக்கிற அரசியல் சார்பு மனோநிலை அவர்கள் பணியாற்றும் பொழுது நிச்சயம் வெளிப்பட்டே தீரும் “என்று  கே.எம்.ஜோசப் தலைமையிலான – அஜய் ரஷ்டேஜி, அனிருத்தா போஸ், ஹிரிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகிய ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியது.

நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐவர் அமர்வு!

இந்த முக்கியமான கருத்தை தொடர்ந்து  நீதிபதி கே.எம். ஜோசப் , பத்தாவது தலைமை தேர்தல் ஆணையராக வந்த திரு. டி.என்.சேஷனின் செயல்பாட்டை சுட்டிக்காட்டினார் .

சேஷன் தனியாளாக இருந்து தேர்தல் அமைப்பையே தூய்மைப்படுத்தினார் , அவர் சுதந்திரமாக செயல்பட்டதோடு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு சில விதிமுறைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.  அதனடிப்படையில் செயல்பட்டால் தேர்தல் ஆணையர்கள் யாருடைய அனுமதிக்கும்,கண்ணசைவிற்கும் அதிகாரத்திற்கும் வளைய வேண்டியதில்லை. தேர்தல் ஆணையம் ஒருபொறுப்பான  அமைப்பாக- அதன் ஆணையர்களது அரசியல் எண்ணச் சார்புகள் எப்படியிருப்பினும்- நடுநிலையுடன் செயல்பட அவர் நடைமுறைபடுத்திய விதிமுறைகள் வழிகாட்டின என்று கூறினார்.

உண்மைதான் ! அன்று அதாவது 1990-1996 கால கட்டத்தில் அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஆணையத்தை பற்றிய – உண்மையில் ஆணையர் சேஷன் என்ன செய்வாரோ என்ற – பயத்தை சேஷன் ஏற்படுத்தினார் . அரசியல் கட்சிகளும் தேர்தல் விதிகளை “மதிக்க” தொடங்கினர், ஒழுங்கும் சமநிலையும் தேர்தல் அரசியலில் நிலை கொள்ள ஆரம்பித்தன. அதையொட்டி உலகெங்கிலும் இந்திய தேர்தல்களின் வெளிப்படைத்தன்மையும், தேர்தல் ஆணையத்தின் நேர்மையான , நடுநிலையான செயல்பாடும் பாராட்டுக்கள் பல பெற்றன.

ஆனால் இன்றைய நிலை?

இது நடந்து முடிந்து- சேஷன் காலம் முடிந்து- ஏறத்தாழ  முப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன, அதனுடன் ஆணையத்தின் மீதான பயமும், மரியாதையும் சேர்ந்தே உருண்டு தொலைந்து விட்டன. காரணம் தேர்தல் ஆணையத்தின் அமைப்பு அதன் ஆணையர்களின் நியமனம் மற்றும் செயல்பாடு ஆகியவை கேள்விக் குறியாக மாறி விட்டதுதான் .

தேர்தல் தேதிகளை அறிவிப்பது முதல் தேர்தல் விதிகளை நேர்மையாக செயல்படுத்துவது வரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு அனைவரையும் வியக்க வைத்துள்ளது இன்றுள்ள நிலைமை.

ஒருதலை பட்சமாக செயல்படுவதுவும், ஆளுபவர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுப்பதும் இன்றைய ஆணையத்தின் வழிமுறையாக உள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளை பாரபட்சமாக அமுல்படுத்துவதிலும் , ஆளுங்கட்சி எதிர்கட்சிகள் இடையே சம நிலையை மறுதலிப்பதிலும் தேர்தல் ஆணையம் தனது சார்பை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இதன்மூலம் தனது சுதந்திரமான செயல்பாட்டை குறுக்கி ஆணையத்தின் அரசியல் மாண்பையும் மரியாதையையும் குழி தோண்டி புதைக்கிறது எனலாம்.

தேர்தல் வாக்காளர் பட்டியலை உண்மையாகவும் ,வெளிப்படை தன்மையுடனும் நடுநிலையாகவும் புதுப்பித்தல் அனைத்து பிரிவு மக்களையும் பட்டியலில் இணைத்தல், தேர்தல் மின்னணு வாக்கு எந்திரத்திற்கும் வாக்காளர் காகித தணிக்கை சுவட்டிற்கும் (EVM/VVPAT)  இடையே உள்ள முரண்பாட்டினை முறையாக தீர்த்தல், தேர்தலில் பணத்தின் ஆளுமையை களைதல், தேர்தல் ஒட்டிய நன்னடத்தை விதிகளை நடுநிலையாக அமுல்படுத்துதல்  போன்ற விஷயங்களில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கதாக உள்ளது . இது ஆளுங்கட்சிக்கு மிகவும் சாதகமாகவே அமைகிறது. இதன் பொருட்டே தேர்தல் ஆணையர்களை நியமிப்பதிலும், அவர்களது அதிகார வரைமுறைகளிலும் ஒருமித்த கருத்து  நிலவ வேண்டும் . தகுதியான நபர்கள் நியாயமான தேர்வுக்குழுக்களால் – அரசு தலையீடின்றி – தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு சுதந்திரமான தேர்தல் அல்ல என்று எதிர் கட்சிகள் மட்டுமின்றி, அரசியல் சாசன செயல்பாட்டு குழுவை சார்ந்த (Constitutional Conduct Group-CCG) 64  முன்னாள் மூத்த உயரதிகாரிகளும் ( former Senior Civil servants) 83 முன்னாள் ராணுவ உயரதிகாரகளும் அறிக்கை வெளியிட்டனர் . அதை தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பித்தனர்.

ஆனால், தேர்தல் ஆணையத்தின் “கள்ளத்தனமான “”மௌனத்திற்குப்பின்  முன்னாள் உச்ச மன்ற நீதிபதி திரு. மதன் பி. லோக்கூர் தலைமையிலான சிட்டிசன் கமிஷன் ஆன் எலக்‌ஷன்ஸ் ( Citizen Commission on Elections) தேர்தல் ஆணையத்தின் தவறுகளை ஓரவஞ்சனைகளை பட்டியலிட்டு தொகுத்து இரண்டு தொகுதிகளாக 2021ல் வெளியிட்டது.

இந்திய ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்றால், தேர்தல்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவது மிக மிக அவசியம். அதற்கு ஆணையர்கள் நேர்மையாளர்களாக இருப்பது அவசியம் . அது மட்டும் போதுமா? அவர்கள் சுதந்திரமாக செயல்பட சூழல் வேண்டுமல்லவா? அச்சுறுத்தல்களுக்கும் ஆசை வார்த்தைகள் பதவிகளுக்கும் அப்பாற்பட்டு அவர்கள் இயங்க சட்டங்களில் வழி வேண்டாமா?

இது குறித்த வாத பிரதி வாதங்கள் உச்ச நீதி மன்ற விசாரணையில் உள்ள போதே மோடி அரசு அருண் கோயல் என்ற அதிகாரியை தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்மொழிந்து அவர் திங்கட்கிழமை (நவம்பர் 21) அன்று பதவியும் ஏற்றுள்ளார் !

அதிரடியாக பதவி ஏற்ற தேர்தல் ஆணையர் அருண் கோயல்!

நவம்பர் 17ந்தேதி வரை -தேர்தல் ஆணையர் நியமனம் அவர்தம் பதவிக்காலம் அதற்கான சீரிய நடைமுறை ஆகியவை பற்றியான வழக்கு விசாரணைக்கு நவம்பர் 17ல் வந்த நிலையில் – ஒன்றிய அரசின்   கனரக தொழில் துறையின் செயலாளராக இருந்த திரு. அருண் கோயல் தனது விருப்ப ஓய்வு மனுவை 17 ந்தேதி சமர்ப்பித்து பதவியை”துறந்துள்ளார்”. அன்றே அம் மனுவை பரசீலித்து ஒன்றிய சட்ட அமைச்சகம் இவரது விருப்ப ஓய்வை ஏற்றுக் கொண்டதாம்! ஒரே நாளில்…!

நவம்பர் 18ந்தேதி தேர்தல் ஆணையர் பதவிக்கான பட்டியலில் இவர் நான்காவதாக இணைக்கப்பட்டு பிரதமர் பார்வைக்கு அனுப்பபட்டதாம் , அவர் இவரை தேர்ந்தெடுத்து குடியரசு தலைவருக்கு முன்மொழியப்பட்டு, உடனடியாக குடியரசு தலைவரும் அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து இட்டாராம். இதெல்லாம் நடந்தது ஒரே நாளில் நவம்பர 18ந்தேதி.

நவம்பர் 19ல் அரசு ஆணை வெளியீடு ; அருண் கோயல் நவம்பர் 21ல் தேர்தல் ஆணயராக பொறுப்பேற்றார் . நவம்பர் 20 அன்றே அவர் பொறுப்பு ஏற்றிருப்பார் , ஆனால் அன்றைய தினம் ஞாயிற்று கிழமை ஆதலால் ஒருநாள் தாமதித்து நவம்பர 21 திங்களன்று பதவியேற்றுள்ளார். மே மாதத்திலிருந்து காலியாக உள்ள தேர்தல் ஆணையர் பதவிக்கு  இத்தனை வேகமாக அருண்கோயலை நியமித்தது உலகோரை மட்டுமின்றி உச்ச நீதி மன்றத்தையும் உலுக்கியுள்ளது.

சர்க்காரியா கமிஷன் மூலம் நாம் விஞ்ஞானபூர்வ ஊழலை புரிந்து கொண்டோம்  ஆனால் இன்று , ஆட்சியில் இருந்து கொண்டே அரசியல் சட்டத்தை எப்படி நொறுக்குவது என்ற வித்தையை பார்க்கிறோம்.

இதைதான் , ‘ஏன் இந்த அவசர கோலம்? ‘ என்று உச்ச நீதி மன்றம் ஒன்றியத்தை கேட்கிறது.

அரசியல் சாசன அமைப்புகளில் முக்கியமான ஒன்றான தேர்தல் ஆணையத்தை செல்லாக்காசாக்குவது மட்டுமின்றி,  உச்ச நீதி மன்ற விசாரணை உள்ள போதே உச்ச நீதி மன்றத்திற்கு சவால் விடும் பாணியில் அவசர நியமனம் நீதித்துறையையே உதாசீனப்படுத்துவதாகவே அறியப்படும் . இதில் யாருக்காவது ஐயம் ஏற்பட்டால் இன்று அரசு தலைமை வழக்குரைஞர் -அட்னர்னி ஜெனரல்  வெங்கட் ரமணி நீதிமன்றத்தை நோக்கி,

” Hold your mouth  for a while …….. to look into the issue in entirety “ –  ”எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு விஷயத்தை முழுமையா பாருங்கள் ” எனக் கூறியதில் இருந்து அது புலப்படும்.

அரசு நிர்வாகம் , அரசியல் சாசன அமைப்புகள் , அரசு உளவு மற்றும் நுண்ணறிவு அமைப்புகள், பல்கலைகழகங்கள் சுய அதிகார அமைப்புகள் என அனைத்திலும் ஆமாம் சாமிகளை -YES MAN- களை இட்டு நிறப்பும் இன்றைய ஆட்சியாளர்கள் நீதி துறையையும் ஒரு கை பார்க்க தயங்க மாட்டார்கள். அதற்கு அஞ்சுபவர்களும் அல்ல. இதை எப்படி நீதி துறை எதிர் கொள்ளப் போகிறது என்பது வேண்டுமானால் ஊடகங்களில் சுவாரசியத்தை கூட்டுமே அல்லாமல், இந்திய மக்களுக்கு ஜனநாயக ஆர்வலர்களுக்கு இதை எதிர் கொள்ளும் தார்மீக உரிமையும், திராணியும் உள்ளது என்பதை பறைசாற்ற வேண்டிய நேரமிது!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time