மூளைக்குள் சுற்றுலா
பெயருக்கேற்ப நம்மை ஒரு நீண்ட நெடிய பயனுள்ள அறிவார்ந்த ஒரு பயணத்திற்குள் இந்தப் புத்தகம் இட்டுச் செல்கின்றது. வெ இறையன்பு எழுதியிருக்கும் இந்த புத்தகம் 626 பக்கங்கள் கொண்டது. இந்த புத்தகத்தில் உள்ள தகவல் களஞ்சியங்கள் நம்மை பிரமிக்க வைக்காமல் இல்லை. மூளையைப் பற்றிய விரிவான பல கதைகள் நிரம்பிய சுவாரஸ்யமான என்சைக்ளோபீடியா என்றுக் கூறலாம்.
கிட்டதட்ட மூளை சம்மந்தமாக எதையுமே விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் ஆசிரியர் பரந்து விரிந்து தகவல்களை சேகரித்துள்ளார் என்பது தெரிகிறது. இதற்காக அவர் பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எழுதிய புத்தகங்களை படித்துள்ளார். பல ஆராய்ச்சிகளை உற்று கவனித்துள்ளார்.
இவை அறிவியல் மற்றும் மருத்துவம் சம்மந்தமான தகவல்களாக இருந்தாலும், ஆங்காங்கே குட்டி கதைகளையும், ஆங்கில இலக்கிய கதைகளையும் (குறிப்பாக ஷேக்ஸ்பியர்), புத்தர், பாரதியார், ஆதி சங்கரர் கூறிய கருத்துகளையும், நிஜ சம்பவங்களையும் எழுதி படிப்பவர்களுக்கு தொய்வு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். இந்த புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து விடலாம் என்று எண்ணி எடுத்தோமேயானால் அது சிறிது சிரமம் தான். அவ்வப்போது சிறிது சிறிதாக படிக்கும் போது மட்டுமே இதன் சுவையை நன்கு உள்வாங்க முடியும்.
பொதுவாக அறிவியல் சார்ந்த புத்தகங்களில் பல வார்த்தைகள் அப்படியே ஆங்கிலத்திலோ அல்லது தங்க்லீஷிலோ கையாள்வார்கள். ஆனால் இந்த புத்தகத்தில் கூடுமானவரை ஆங்கில அறிவியல் வார்த்தைக்கு சரியான தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகையச்சம் (Phobia), செவி ஒட்டு (Audio tag,) நெற்றிப்பொட்டு மடல் (temporal lobe) உறைப்பகுதி (Ventral Tegmental area) முன்பக்கப் புறணி (Pre-frontal Cortex) என்பது சில சான்றுகள். இந்த தமிழாக்கங்கள் வலிந்து புகுத்தப்பட்டது போல் இல்லாமல் பாமரர்களுக்கு புரியும் வண்ணமே இருக்கின்றது.
அறிவியல் படிக்காதவர்களுக்கும் புரியும் வண்ணம் விரிவாகவும், எளிமையாகவும் எழுத வேண்டும் என்று நினைத்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். யார் படித்தாலும் புரியும் வண்ணமே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது! மிக கடினமான அறிவியல் செய்திகளும், யதார்தங்களும், அழகாக எளிமை படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.
மனிதனின் மகத்துவம் என்ற தலைப்பைக் கொண்டு 8 அத்தியாயங்கள் எழுதியுள்ளார். அவற்றில், விலங்குகளோடு மனிதனை ஒப்பிட்டும், அவற்றை மையமாக வைத்து செய்த ஏராளமான ஆராய்ச்சிகள் பற்றியும் கூறியுள்ளார். “நம்முடைய மூளை பல விலங்குகளிடமிருந்து நாம் பெற்று அடைந்த பரிணாம வளர்ச்சியே தவிர, முழுக்க முழுக்க நமக்கே பிரத்தியேகமான சிறப்புகளைக் கொண்டது என்று கூற முடியாது” என்றுக் குறிப்பிட்டிருக்கிறார். குரங்குகள், ஃபிளமிங்க்கோக்கள், பல்லிகள், தவளைகள், நாய்கள், பூச்சிகள், எறும்புகள், யானைகள், திமிலங்கள்… என பல விலங்குகள் பற்றிய வித்தியாசமான தகவல்களை இந்த புத்தகம் மூலம் பெறலாம்.
மூளைக்குள் சுற்றுலா என்னும் தலைப்பில் மூளைக்குள் இருக்கும் அனைத்து பகுதிகள் பற்றியும் தெளிவாகவும், எளிமையாகவும் 14 அத்தியாயங்கள் மூலம் விளக்கியுள்ளார். மண்டையோடு, கபாலம், பெருமூளைப் புறணி, அடிநரம்பு முடிச்சுகள், தலாமஸ், ஹைப்போதலாமஸ், சிறுமூளை என்று பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். இவை அனைத்தும் நம் வாழ்வின் அன்றாட சம்பவங்கள் மூலம் விளக்கப்பட்டிருப்பது நமக்கு புரிந்து கொள்வதற்கு உதவியாய் இருக்கிறது.
ஐன்ஸ்டீன் மறைந்த பிறகு அவரின் மூளை எப்படி திருடப்பட்டது?, பெண்களின் மூளை ஆராய்ச்சிக்கு உகந்தது அல்ல என்று ஏன் கருதப்பட்டது?, பதினாறிலிருந்து இருபத்து மூன்று வயது வரை இருப்பவர்கள் மூளையில் திகழும் மாற்றம் என்ன? ஏன் அவர்கள் தலையை வாருவதும், ஆடையை சரிசெய்வதும், கண்ணாடி பார்ப்பதும் என்று இருக்கிறார்கள்? காதல் வயப்பட்டவர்கள் ஏன் பசியின்றி, தூக்கமின்றி இருக்கிறார்கள்? இப்படி பல கேள்விகளுக்கு பதில் அழகாக கொடுக்கப்பட்டுள்ளது.
பிறவிக் குறைகள், அல்ஜைமர், டிமென்ஷியா, பார்க்கின்சன், மூளைக்கட்டிகள் போன்ற மூளை சம்மந்தமான பிரச்சனைகள், மனம் சம்மந்தமான பிரச்சனைகள் குறிப்பாக மனநோய் அறிக்குறிகள், பதற்றம், ஹிஸ்டீரியா, இருதுருவ உணர்ச்சிச் சிக்கல், முதுமை மன நோய்கள் என்று பலவற்றை சிறப்பாக விளக்கியுள்ளார்.
புரியாத புதிர்கள் என்னும் தலைப்பில், கை துண்டிக்கப்பட்ட ஒருவர் வெகு நாட்கள் கழித்து இல்லாத அந்த கையில் அரிப்பு ஏற்படுவதை உணர்ந்த சம்பவத்தை எழுதியுள்ளார். மருத்துவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நோயாளி தன்னுடைய அப்புறப்படுத்தப்பட்ட கை என்னானது என்று தேடிப்போகையில் சவக்கிடங்கில் அது கை நோய் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். அங்கு அது புதைக்கப்பட்ட விஷயம் தெரிய, அந்த கையை தோண்டி எடுத்துப் பார்த்தனர். அதில் புழுக்கள் உருவாகியிருந்தன. உடனே, அவர் அதை எரியூட்டி இருக்கிறார். பின் அந்த பூதவலி மறைந்து போனது. பெருமூளைப் புறணியில் கை-கால்களைப் பற்றிய பதிவுகள் எப்படிப் பதிந்திருக்கின்றன என்பதை பொறுத்தே இம்மாதிரி உணர்வுகள் தோன்றுகிறது. இது குறித்த பல ஆய்வுகளையும் சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தப் பகுதியில் தந்துள்ளார். மூளை எப்படி சிலந்தி வலையைப் போல நம் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தொடர்புடையவை என்பதை விவரித்துள்ளார்.
காட்சிப்பிழை, மாயத்தோற்றம், பார்வை மயக்கம், பிம்பப்படுத்துதல் என்று பல பிரச்சனைகளை நாம் பொதுவாக அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயமாக கருதுவோம் ஆனால் அவற்றிற்கும் மூளைக்கும் உள்ள தொடர்பினை பல உண்மை சம்பவங்கள் மூலம் விவரிக்கிறார். தண்ணீர் இருப்பதைப்போல நினைத்து துரியோதனன் திரவுபதி முன்னால் வழுக்கி விழுந்த சம்பவம் முதல், பாரதியார் “நிற்பதுவே, நடப்பதுவே” என்ற பாடலில் காட்சிப்பிழை, மாயத்தோற்றம் என்ற இரண்டு மகத்தான சொற்களைத் தமிழுக்கு அளித்திருக்கிறார் என்ற தகவலும், பல திரைப்படங்களின் சான்றுகளும் நமக்கு ஒரு கதையை படிக்கும் சுவாரஸ்யத்தை அளித்து, அதோடு அறிவியல் உலகை எட்டிப் பார்க்கும் அனுபவத்தையும் தருகிறது.
மனம் என்பது மூளையில் இருக்கிறது என்பதை நம்பப் பலரும் தயாராக இல்லை. அறிவோடு தொடர்புடைய பகுதி உணர்வோடு தொடர்புடையதாக இருக்க முடியாது என நினைக்கிறோம். எனவே, இதயம் என்பதை உணர்விற்கான இடம் என்று அடையாளப்படுத்தி, அதை மனத்தோடு கற்பனை செய்து கொண்டோம். உண்மையில் இருதயம் என்பது ரத்தத்தைச் சுத்திகரிக்கிற இடம், ஆனால், இதயம் உணர்வுகளோடு தொடர்புடையது எனப் படைப்பாளிகள் கற்பனை செய்து கொள்கிறார்கள்” என்று உலகே மாயம் அத்தியாத்தில் எழுதியுள்ளார்.
புத்தகத்தின் இறுதியில் மேலும் வாசிக்கும் வசதிக்கு என்று பல நூல்களின் பட்டியலோடு சேர்த்து அவைகளோடு அவருக்குண்டான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். கலைச்சொல் திரட்டு பட்டியல்கள் ஆசிரியரின் சிரத்தையை காட்டுகிறது. மொத்தத்தில் இந்த புத்தகம் நமக்கே நமக்காய் வாங்கி வைத்து சிறிது சிறிதாய் சுவைத்து, அசைபோட சாலச் சிறந்தது.
நூல் விமர்சனம்; நா. ரதி சித்ரா
ஆசிரியர் ; வெ.இறையன்பு
வெளியீடு; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
அம்பத்தூர், சென்னை-98.
விலை: ரூ:1,500
044 – 26251968
“யானைகளின் வருகை”.
மேம்போக்காக எதையுமே தெரிவிக்காமல் களத்திற்கு சென்று ஆய்வுகளை நடத்தி, காட்டு பகுதிகளில் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு, சம்மந்தப்பட்ட மக்களை சந்தித்து, பேட்டிக் கண்டு, யானைகள் பற்றிய அருமையான நினைவு கூறும் தகவல்களையும், நடுநடுங்க வைக்கும் பல அதிர்சியினை ஏற்படுத்தும் செய்திகளையும் திறம்பட விவரித்துள்ளார் ஆசிரியர் கா சு வேலாயுதன்.
பிற இனங்களின் இருப்பினை நம் பேராசைக்காகவும், சுக போகங்களுக்காகவும் அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை இந்த புத்தகம் நம் மண்டைக்குள் ஆணியடித்து சொல்கின்றது. அத்தனை கம்பீரமும் மிடுக்கும் கொண்ட யானையை அடக்கி தன் கையில் பிச்சை எடுக்க வைப்பவன் தானே மனிதன். அவனின் பேராசைக்கு எல்லை ஏது என்று நம்மை வெட்கி தலை குனிய வைக்கின்றது. இத்தனை தகவல்களை களத்திற்கு சென்று திரட்டி சுவாரஸ்யம் கலந்து எழுத முடியும் என்றும் நிரூபித்துள்ளார் திரு கா சு வேலாயுதன். அதுவும் ஒவ்வொரு கட்டுரையும் நீண்டு இல்லாமல் மூன்று அல்லது நான்கு பக்கங்களுக்குள் சுருக்கி சிறப்பாக சொல்லியிருப்பது சாலச் சிறந்தது.
இந்த புத்தகம் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. நாம் இங்கு விமர்சனம் செய்திருப்பது இரண்டாவது பாகம். இந்து தமிழ்திசை இணையதளத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம். 30 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளது. “இந்நூல் திக்கற்றும் திசையாற்றும் அலையும் கானுயிர்களுக்கு…….” என்று சமர்ப்பித்துள்ளார். ஆம் அந்த கானுயிர்களின் குரல்களாகவே ஒலித்துள்ளார்.
சூழலியல் மாற்றங்கள் எப்படி யானைகளை சலனப்பட்டு திரிய வைக்கின்றன என்பதை இந்த புத்தகத்தில் அழகாக சில சம்பவங்கள் மூலம் விவரித்துள்ளார். எப்பொழுதுமே “யானைகள் அட்டகாசம்” “குடியிருப்புகளில் யானைகள் புகுந்தன” என்றெல்லாம் செய்திகள் வரும் பொழுது நமக்கும் கூட அந்த யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தான் தோனும். ஆனால் அவைகளின் வருகைக்கு காரணம் நாம் தான் என்று ஆதாரங்களுடன் இவர் எழுதியிருப்பது மனிர்களாக நாம் பிறந்ததற்காக வெட்கப்படும் அளவிற்கு நம்மை வேதனை படுத்துகின்றது.
வைதேகி நீர்வீழ்ச்சி காட்டுப் பகுதியில் மண்ணிற்கான மரங்கள் மாற்றப்பட்ட வகையில் அவை யானைகளை சலனப்படுத்தியதை எழுதியிருக்கிறார். அந்தந்த பூகோளத்திற்கு இயற்கையாக இருப்பவைகளை நாம் மாற்றக் கூடாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்சம் கீழே 5 கிலோமீட்டர் தூரம் கூட யானைகள் போகாதாம். இப்போதெல்லாம் தீவனத்தை தேடி 20 கிலோமீட்டர் தூரம் கூட கடக்கிறது என்று அந்த ஊர் மக்கள் கூறுவதை குறிப்பிட்டுள்ளார்.
யானைகளோட பிரதான தீவனமே மூங்கில் தான். இந்த காடுகளில் இந்த அளவு உயரத்தில் மூங்கில்கள் வளர்ந்திருக்கின்றன என்றால், அது எத்தனை விதமா எவ்வளவு பரப்புல வளர்ந்திருக்கும். எத்தனை யானைகள் அதை சாப்பிட்டிருக்கும்னு நினைச்சி பாருங்க” என்று கிராமவாசிகள் நினைவு கூர்ந்ததை எழுதியுள்ளார். காடுகளில் உணவுகள் கிடைக்காதது தான் அவை குடியிருப்புகளுக்கு வருவதற்கான முக்கிய காரணம் என்பதை இந்த புத்தகம் முழுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. “அப்ப பார்த்த காட்டு யானைகள் போல ஊக்கமான காட்டு யானைகளையும் இப்ப காண முடியறதில்லை. தீவனம் சரியா இல்லாம தண்ணியும் கிடைக்காம நோஞ்சலா திரியுதுங்க” என்று அருகில் வசிக்கும் மக்கள் கூறியிருப்பது நம் இதயத்தை பிசைய செய்கின்றன.
காட்டு யானைகள் உலாவும் பிரதேசத்தில் அதன் வலசைப் பாதைகளை ஒட்டிய பகுதிகளில்தான் பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும் என்று யார் வலுயுறுத்தியது? என்று அவர் எழுப்பியுள்ள கேள்வி அர்த்தமுள்ளது.
கல்லூரிகள், ஆன்மீக மையங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், புதிய கட்டுமானங்கள், பெரும் குடியிருப்புகள் அங்கு கூடும் மக்கள் கூட்டம் இவைகள் எல்லாம் தான் காட்டு யானைகள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதற்கு காரணம் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார். பாரதியார் பல்கலைக்கழகம் அங்கு அமைந்திருப்பது தான் பல கோளாருகளுக்கு காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். நான்கில் ஒரு பங்கு யானைகள் வசிக்கும் மலை ஓரங்களிலேயே இந்தப் பல்கலை கழகம் கட்டிடங்களை எழுப்பியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
காடுகள் அழிக்கப்பட்டதால் கடும் வறட்சி, சுற்றிலும் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி ஆயிரம் அடி ஆழத்தில் கூட நீர் உறிஞ்சப்பட்டதால் காடுகளில் பருக பொட்டு தண்ணீர் கூட இல்லை. எனவே, நீரைத்தேடி யானைகள் ஊருக்குள் புகுகின்றன.
காட்டு யானைகள் ஒரு பாதையை வகுத்தன என்றால், அதை மாற்றிக் கொள்ளாது. தனது மூதாதையர்கள் பயன்படுத்திய பாதையை மாற்றவும் அவைகளுக்கு தெரியாது. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் பல கட்டுமானங்களை கானகம் ஒட்டி வளர விட்டுவிட்டு இப்பொழுது அந்த இனத்தின் அழிவிற்கு நாமும் ஒரு காரணமாகி விடுவோமோ என்று தோன்றுகிறது.
வனத்துறையினர் யானைகளுக்காக தண்ணீர் தொட்டிகள் எற்படுத்தி தினம் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். கூட்டம் கூட்டமாக யானைகள் வந்து நீர் அருந்தும். திடீரென்று ஒரு நாள் ஒரு தொட்டி தரை மட்டமாக இடிக்கப்பட்டு விட்டது. இம்மாதிரியான செய்கைகள் யானைகளை பெரிதும் பாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
கோவையிலிருந்து ஆனைகட்டி அருகே பல கிராமங்களில் திரும்பின இடங்களிலெல்லாம் செங்கல் சூளைகள். அவர்கள் பனை மரங்களை இரண்டாக பிளந்து நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்தெறிந்து விட்டு விறகை பயன்படுத்தினர். இந்த பனை சோறு சாப்பிட்டு பல யானைகள் போதையில் தள்ளாடி செய்த சேட்டைகள் மக்களை அரண்டு போக வைத்தன என்று எழுதியுள்ளார்.
யானைகள் தீவனங்கள் சாப்பிடும் போது அதற்குள் சுருண்டிருக்கும் அவுட்டுக்காய் உட்கொள்ளும் போது தாடை கிழிந்து காயத்துடன் துடி துடித்து சில நாட்கள் சுற்றி திரிந்து இறக்கின்றன.
காருண்யா பல்கலை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி மையம், சி ஆர் எப் முகாம்கள், பண்ணை வீடுகள், சொகுசு பங்களாக்கள், ஈஷா யோகா மையம், கேளிக்கை விடுதிகள் என ஒவ்வொன்றும் யானைகளுக்கு எப்படி தொந்தரவுகளை கொடுக்கின்றன என்று சான்றுகளோடு விளக்கியுள்ளார். குடற்புழு தாக்கி யானைகள் இறக்கும் செய்தியையும் விவரித்துள்ளார். ஆனைகட்டி, வால்பாறை, கோவை போளுவாம்பட்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் இருக்கும் யானைகளின் சாணக்கழிவுகளில் 60 சதவீதம் பாலீதின் பொருட்கள் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது. ஒரு யானை போட்ட சாணத்தில் ஒரு குளிர்பான புட்டி முழுக்க இருந்தது படம் பிடித்துள்ளனர்.
அமெரிக்கா நிறுவனங்களின் குப்பைகளால் நம் காடுகள் நாசமாகி வருவதை தெளிவாக எழுதியுள்ளார். கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் காட்டினை அழிப்பதை விளக்கியுள்ளார்.
இந்த புத்தகம் வனவிலங்கு ஆர்வலர்கள் மட்டுமல்ல, பொறுப்பான குடிமகனாக வாழ வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு இவை தான் பாடங்களாக சேர்க்கப்பட வேண்டும்.
நூல் விமர்சனம்; நா.ரதி சித்ரா
ஆசிரியர் ; கா.சு.வேலாயுதன்
வெளியீடு; கதை வட்டம்
விலை; 220
கோவை புதூர், கோயம்பத்தூர்
பேச; 9994498033
————————————————————————————————
வேளாண் மரபின் தமிழ் அடையாளம்
–உழவுப் பண்பாடும், வேளாளர் சமூக வரைவியலும்!
இதன் ஆசிரியர் முனைவர் மகராசன் சமூக மாற்றத்திற்கான ஏர் எனப்படும் சிற்றிதழை நடத்தி பரவலான கவனம் பெற்றவர்.
தமிழ் மரபில் வேளாண்மை என்றாலே நெல் வேளாண்மை என்றே பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது. அது உணவு உற்பத்தி என்ற எல்லையையும் கடந்து, சமூக உருவாக்கம், அரசு உருவாக்கம், அரசியல் உருவாக்கம் எனப் படர்ந்து விரிந்திருக்கிறது…. அதாவது வேளாண்மை உற்பத்திக்கும், அதிகார உருவாக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு எனத் தொடக்கத்திலேயே அழகாக சொல்லிவிடும் ஆசிரியர், இந்த சமூகத்தின் மிக முக்கியமான உணவு உற்பத்தியின் அங்கமாகத் திகழும் வேளாண் மக்களை குறித்தான பேசு பொருட்கள் ஆய்வுகளாகவும், படைப்புகளாகவும் முன்னெடுக்கப்படவே இல்லை என்பதால் தானே அதை முன் எடுத்துள்ளார், இந்த நூலின் வாயிலாக! அந்த வகையில் வேளாண் மக்களின் வேட்கையையும், கோரிக்கைகளையும் சிறப்பாகவே கவனப்படுத்தி உள்ளார்.
வேளாண்மை உழவுத் தொழில் பற்றிய முதல் வரைவியல் இலக்கியமாக கம்பரின் ஏர் எழுபது நூல் தான் தனித்துவம் வாய்ந்ததாகும் என அதில் உள்ள சிறப்புகளை குறிப்பிடுகிறார்.
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னர் தானே மலர் தலை உலகம்
என்ற புற நானூற்றுப் பாடலையும்
வரப்பு உயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயரும்
என்ற அவ்வையின் பாடலையும் கூறி, உழவர்க்கு உள்ள முக்கியத்துவத்தை விளக்கியுள்ளார். தமிழ் நிலத்தின் வேளாண் மரபினரைக் குறித்தும், வேளாண் மரபினரின் தொழில் மரபுகள் குறித்தும், இதன் தொழில் நுட்பங்கள், பண்பாட்டு மரபியல் குறித்து பள்ளு இலக்கியங்கள் மிக அதிகமாகவே பதிவு செய்துள்ளதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
வேளாண் மரபில் ஆசீவகத் தடங்கள் என்ற தலைப்பில் சில அபூர்வ செய்திகளையும் தருகிறார். மூவேந்தர்கள் வெளியிட்ட காசுகளில் பொறிக்கப்பட்ட யானை, காளை, திருமரு முதலான சின்னங்கள், அம்மன்னர்களின் ஆசீவ ஈடுபாட்டினை விளக்கும் வரலாற்றுச் சான்றுகள் என்கிறார். வேளாண்மைக்கு உகந்த கண்மாய், குளம், ஏரி போன்ற பெரும்பாலான நீர் ஆதாரப் பகுதிகளில் அசீவகத்தின் அய்யனார் வழிபடு தெய்வமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இதைப் போலவே வேளாண் மரபில் பவுத்த அடையாளமாக விளங்குவது பொன்னேர் பூட்டும் உழவுச் சடங்கு என்கிறார்.
வேளாண் மரபினருக்கும், ஆரியர்களுக்குமான பகையும், முரணும் என்ற தலைப்பில் சுவையான செய்திகளை சொல்கிறார். முதன்முதலாக நிலவுடைமை சமுக அமைப்பின் தோற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்களே. கால் நடைகள் மேய்ப்பதை குலத் தொழிலாய் கொண்டிருந்த பிராமணர்கள் புதிய சமூக அமைப்பில் தங்கள் இருப்பு கேள்விக்கு உள்ளாவதாக கோபம் அடைந்தனர்! தங்கள் வேள்விகள், யாகங்கள் போன்ற சடங்குகளில் பல்லாயிரக்கணக்கில் கால் நடைகளை வானோர்க்கு பலியிட்டு, தாங்களும் உண்டு வந்த பிராமணர்களை வேளாண் குடிகள் தடுத்ததோடு, கால் நடைகளை உழவுத் தொழிலின் நண்பனாக, பங்களானாக, தெய்வமாகக் தாங்கள் கருதி வணங்குவதால் முரண்பட்டனர். இந்தப் பகை காலப் போக்கில் பிராமணர்களை திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்ததையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
வேளாண் மரபினரின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்களை சொல்லும் போது, உழவுத் தொழில் மரபினரின் தேவேந்திர குல வேளாளர் எனும் அடையாளப்படுத்தலானது, வேளாண் தொழில் அடையாளத்தையும் – வேளாண் தொழிலின் பண்பாட்டு அடையாளத்தையுமே உள்ளீடாகக் கொண்டுள்ளது. இது ஆரிய வைதீகத்தில் இருந்து உருவானதில்லை. மருத நிலத்தின் மரபில் இருந்தும், மழைத் தெய்வ வழிபாட்டில் இருந்தும் உருவானது என்கிறார். வேளாண்மைத் தொழில் மரபின் நீட்சியாக இருக்கும் உழவுகுடிகள் யாவரும் வேளாளர்கள் தான்! அவ் வகையில், வரலாற்றிலும், வாழ்வியலிலும், பண்பாட்டு வழக்கங்களிலும் உழவுத் தொழில் மரபினராகப் பல குலத்தினரும் பன்னெடுங்காலமாக அடையளப்பட்டு வருகின்றனர் என்கிறார்.
வேளாண் மரபினரின் நீர் மேலாண்மை குறித்த செய்திகளும் நூலில் நிறைந்துள்ளன! மழை பொழிவில் வழிகின்ற வழி நீரையும், மழை பொழிவுக்கு பின்பாக தன் போக்கில் செல்லும் ஆற்று நீரையும் பயன்பாடு கருதியும், வேளாண் தொழில் கருதியும் தேக்கி வைத்து, திசை திருப்பி, முறைப்படுத்தி, பயன்படுத்தி வந்திருக்கின்றனர் தமிழ் முன்னோர். இந்த வகையில் உருவாக்கப்பட்டதே அகழி, இலஞ்சி, ஊருணி, ஏரி, கம்மாய், கலிங்கு, குட்டை,கேணி, தாங்கல், மடை, மறுகால்.. போன்றவை! இப்படியாக பலவற்றைக் குறித்தும் அவை உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் அழகாக குறிப்பிட்டு உள்ளார்.
Also read
நீர் மேளாண்மையின் அங்கமான குடிமராமத்து பற்றியும், அதை அன்றைய தமிழ் சமூகம் எவ்வளவு சிரத்தையுன் பேணி பாதுகாத்தது என்பது குறித்தும் நல்ல தகவல்களை தந்துள்ளார். மன்னர் காலங்களில் நீர் நிலைகளின் மேலாண்மை அனைத்தும் கிராமப் பொதுச் சொத்தாகவே இருந்தன! அதில் அக்கால மக்கள் கண்ணும் ,கருத்துமாக இருந்துள்ளதையும் பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இந்த நூல் வேளாண் தொழில் மரபு குறித்த ஆகச் சிறந்த தகவல்களை தருவதோடு, இன்றைய நமது பின்னடைவுகள் குறித்த புரிதலையும், அதில் இருந்து மீள்வதற்கான உந்துதலையும் தருகிறது.
நூல் விமர்சனம்; அஜீத கேச கம்பளன்
ஆசிரியர்; ஏர்.மகாராசன்
யாப்பு வெளியீடு,
விலை;ரு250
கொரட்டூர், சென்னை.
பேச; 9080514506
The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/ru/signup/XwNAU