நேர்மையான தேர்தலில் விருப்பமில்லையா ஒன்றிய அரசுக்கு?

-ஹரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி)

நீதிமன்றம் என்ன சொன்னாலும் நாங்க என்ன செய்வோமா , அதை தான் செய்வோம் என ஒன்றிய அரசு மூர்க்கமாக இயங்குகிறதா ..? தேர்தல் ஆணையர் தேர்வே சரியில்லை என்றால், ஜனநாயகத்திற்கு சவால் விடுவதாக தான் அர்த்தமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்ட பிரிவு 324 நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைமை தேர்தல் அதிகாரியும், இரு தேர்தல் அதிகாரிகளும் இருப்பார்கள்.

நேர்மையான தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். எனவேதான் தலைமை தேர்தல் ஆணையரை நீக்குவது அரசிற்கு சாத்தியமில்லை.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிகளுக்கு பாதுகாப்பு அளித்திருப்பது போல தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்கும் அரசமைப்புச் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது.ஆனால் இந்த பாதுகாப்பு மற்ற தேர்தல் ஆணையர்களுக்கு இல்லை.

தலைமை தேர்தல் ஆணையருக்கு பதவி பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருப்பினும் அவரை நியமிப்பது ஒன்றிய அரசே ஆகும். அதேபோல மற்ற தேர்தல் ஆணையர்களையும் ஒன்றிய அரசே நியமிக்கிறது.தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 65 வயது முடியும் வரை அல்லது ஆறு ஆண்டுகள் ஆகும்.

1950 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் 8 ஆண்டுகளுக்கும் மேல் பணியில் இருந்தார். ஆனால் சமீப காலமாக குறிப்பாக 2004 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தல் ஆணையர்கள் பதவியில் இருக்கும் காலம் சில நூறு நாட்களே ஆகும்.

இத்தகையை சூழல் தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயல்படுவதை தடுக்கிறது என்பதால் உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷனர் நியமனம், லோக்பால் நியமனம், சிபிஐ டைரக்டர் நியமனம் போன்றவற்றில் ஒன்றிய அரசு மட்டுமே நியமனம் செய்யும் அதிகாரம் இல்லாதது போல தேர்தல் ஆணையர்களையும் ஆளுகின்ற அரசின் பிரதமரோ அல்லது எதிர்க்கட்சி தலைவரின் தலையிடோ இன்றி ஒரு அமைப்பால் நியமனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கு 17-11-2022 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது. மே 2022 முதல் ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் செயலாளர்களில் ஒருவராக இருந்த அருண் கோயில் அவர்கள் 17-11-2022 அன்று விருப்ப ஓய்வில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

18-11-2022 அன்று பதவி காலி அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கு அருண் கோயிலிடம் மனு பெறப்பட்டு அவர் மனு ஏற்கப்பட்டு தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அவர் 20-11-2022 திங்கள் அன்று பணியில் சேர்ந்தார்.

மேற்சொன்ன வழக்கு 22-11-2022 செவ்வாய் அன்று விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் 2004 ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் ஆணையர்கள் மிக குறுகிய காலத்தில் பணியாற்றும் படி நியமனம் செய்யப்படுகிறார்கள் என்றும் எனவே ஒரு சுதந்திரமான தேர்தல் ஆணையம் செயல்பட ஆறு ஆண்டுகள் பணி புரிவது போல நியமனம் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது கருத்தை கூறியது.

நவம்பர் 17ஆம் தேதி அன்று நடந்த விசாரணைக்கு பின்னர் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை வழக்கு தொடுத்தவர்களின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் ஒரு நேர்மையான வெளிப்படையான மெக்கானிசம் ஒன்றை உருவாக்குவதே ஒரு சுதந்திரமான தேர்தல் ஆணையம் இயங்க வழிவகுக்கும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர் தற்போதைய நியமன முறையில் நீதிமன்றம் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இதனை மறுத்த நீதிமன்றம் எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு அனுசரணையான வளைந்து கொடுக்கக்கூடிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதால் இதில் தலையிட வேண்டிய கட்டாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது என்றார். .

மேலும் பத்தாவது தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்ட சேசன் அவர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு நற்பெயரையும் நேர்மையாக செயல்படும் திறனையும் வெளிப்படுத்தினார். அதுபோல ஒவ்வொரு தேர்தல் ஆணையரும் செயல்படும் வகையில் தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

மீண்டும் வழக்கு 23 11 22 அன்று விசாரணைக்கு வந்த போது தேர்தல் ஆணையர் ஆமாம் சாமி போடுகின்ற நபர்களாக இருக்கக் கூடாது என்றும், தேவைப்பட்டால் பிரதமர் பேரிலும் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு திறன் உள்ளவராக தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆமாம் சாமி போடுபவராக தேர்தல் ஆணையர் இருப்பாரானால் தேர்தல் ஆணையம் ஒரு செயல் இழந்த அமைப்பாக ஆகிவிடும் என்ற கருத்தையும் தெரிவித்தது.

அரசுக்கு பணிந்து போகும் ஆமாம் சாமியாக இல்லாமல் வாழ்க்கைக்கு ஆபத்தே வந்தாலும் அதையும் எதிர்கொள்பவர் ஆக தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும் அப்போதுதான் தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்த முடியும் என்றும் கருத்து தெரிவித்தது.

தேர்தல் ஆணையர் சுதந்திரமாக இயங்குபவராக இருக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக அரசு சொல்வதை அப்படியே செய்பவராகவும், எடுப்பார் கை பிள்ளையாகவும், ஆமாம் சாமியாகவும் அரசின் கொள்கைக்கு ஒத்துப்போகும் தன்மை உடையவராகவும் உள்ள தேர்தல் ஆணையரைதான் தான் எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் நியமனம் செய்கிறது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

அடுத்த நாள் விசாரணையான 23-11-2022 அன்று அருண் கோயல் அவர்களை தேர்தல் ஆணையராக நியமனம் செய்த கோப்புகள் அனைத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அரசிற்கு உத்தரவிட்டது.

நீண்ட காலமாக மே மாதம் முதல் நிரப்பப்படாமல் இருக்கையில், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் தேர்தல் ஆணையரை நியமனம் செய்தது சரிதானா என்றும் வினா எழுப்பியது. எந்த நடைமுறையை பின்பற்றி அருண் கோயல் நியமனம் நடந்தது என்பதை விளக்குமாறு அரசிடம் கேட்டது உச்ச நீதிமன்றம்.

24-11-2022 அன்று விசாரணையின் பொழுது, தேர்தல் ஆணையர் மின்னல் வேகத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்ற கருத்தை தெரிவித்த உச்சநீதிமன்றம் அதாவது 17-11-22 வரை அரசின் செயலராக இருந்த அருண் கோயல் அவர்கள் 18-11-22 அன்று வேகமாக 24 மணி நேரங்களுக்குள் நியமனம் செய்யப்பட்டதை பற்றி வினா எழுப்பியது.

அதற்கு பதில் அளித்த ஒன்றிய அரசின் தலைமை வழக்குரைஞர், 2015 ஆம் ஆண்டில் இருந்தே தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்படுவது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மிக வேகமாக அரசு செயல்பட்டால் அதில் குறை காண்பது சரி அல்ல என்றார் தலைமை வழக்குரைஞர்.

விருப்ப ஓய்வில் சென்ற அடுத்த நாளிலேயே அருண் கோயலை நியமனம் செய்யப்பட்டது போல் தான் மற்ற நியமனங்களும் நடந்ததா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தேர்தல் ஆணையர் நியமனம் செய்யப்படும் போது இதற்கு முன்னர் அவரின் பதவி காலத்தில் எவ்வித குறையும் இன்றி செயல்பட்டார் என்பது மட்டும் போதாது என்றும், சுதந்திரமாகவும், தனித்து இயங்குபவராகவும், எதற்கும் அஞ்சாதவராகவும், தேர்தல் ஆணையர் இருக்க வேண்டும் என்றும் அதற்கான ஒரு அமைப்பை உண்டாக்குவது அவசியம் என்று நீதிமன்றம் கருதுவதாகவும் தெரிவித்தது.

கோப்பை பரிசீலனை செய்ததில் சட்ட அமைச்சர் ஒரு நான்கு நபர்கள் கொண்ட பட்டியலை தயார் செய்ததாகவும், அதில் மூன்று நபர்கள் 62 வயதை கடந்தவர்களாக இருந்ததையும் சுட்டி காட்டியது உச்சநீதிமன்றம்.
நியமிக்கப்படும் தேர்தல் ஆணையர்கள் 6 ஆண்டுகள் பணி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அரசின் அதிகாரிகளை மட்டும் நியமனம் செய்யாமல் அதையும் தாண்டி நியமனம் இருக்க வேண்டும் என்றும், தலைமை தேர்தல் அதிகாரி நேரடியாக நியமிக்கப்படலாம் என்றும், தலைமை தேர்தல் அதிகாரி பதவியை ஒரு பதவி உயர்வுக்கான பதவியாக கருதி தேர்தல் ஆணையரை தேர்தல் தலைமை அதிகாரியாக நியமனம் செய்வது சரியில்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் கூறியது.

தேர்தல் ஆணையர் நியமனம் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களிலும் தான் விரும்புபவர்களை உடனடியாக நியமிப்பதும் மற்றவர்களை நியமிக்காமல் இருப்பது அல்லது தாமதமாக நியமிப்பது என்ற கோட்பாட்டை இப்போதைய ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது.

சுதந்திரமாக செயல்படக்கூடிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது சம்பந்தமான வழக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை செய்தது.

JUSTICE K.M .JOSEPH

மேற் சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் அவர்கள் நியமனத்திலும் இது நிகழ்ந்தது. உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் இருந்தபோது உத்தரகாண்ட் மாநில அரசை ஒன்றிய அரசு கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்த போது அதை ரத்து செய்தார் நீதிபதி கே.எம்.ஜோசப்.

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு உச்ச நீதிமன்றத்தின் கொலேஜியம் ஜனவரி 2018 இல் ஹிந்து மல்கோத்ரா அவர்களின் பெயருடன் சேர்த்து கே.எம்.ஜோசப் பெயரையும் பரிந்துரைத்த போது ஹிந்து மல்கோத்ராவை நியமித்த ஒன்றிய அரசு நீதிபதி கே.எம்.ஜோசப் தொடர்பான கோப்பை திருப்பி அனுப்பியது.

இந்து மல்கோத்ரா அவர்கள் ஏப்ரல் 2018 இல் நியமனம் செய்யப்பட்ட போது கே.எம்.ஜோசப் அவர்கள் ஆகஸ்ட் மாதம் தான் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் உச்ச நீதிமன்றத்தின் கொலேஜியம் மீண்டும் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியதின் காரணமாக நியமனம் செய்யப்பட்டார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி முரளிதர் இருந்த போது டெல்லியில் நடந்த இஸ்லாமியருக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசுக்கு எதிரான கேள்விகளை எழுப்பியதன் காரணமாக அவர் இரவோடு இரவாக பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.

Justice Muralidhar

பின்னர் ஒரிசாவிற்கு மாற்றமானார். தற்சமயம் உச்சநீதிமன்ற கொலைஜியம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி முரளிதர் பரிந்துரை செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் அவர் நியமனம் செய்யப்படவில்லை ஒன்றிய அரசால்.

குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கையில் நீதிபதி பர்தி வாலா அவர்கள் 2015 ஆம் ஆண்டில் ஒரு தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில் இந்தியாவின் பின்னடைவுக்கு காரணம் இரண்டு என்றும் அதில் ஒன்று ஊழல் மற்றொன்று இட ஒதுக்கீடு என்றும் கூறினார்.

இதனால் 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்நிலையில் அவர் மேற்சொன்ன தீர்ப்பின் சம்பந்த பட்ட பகுதியை நீக்கினார். எனவே தீர்மானம் கைவிடப்பட்டது.

நீதிபதி பர்தி வாலாவை உச்ச நீதிமன்ற கொலேஜியம் மே ஐந்தாம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்தது. உடனடியாக அவர் நியமனம் செய்யப்பட்டு மே மாதம் ஒன்பதாம் தேதி நீதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைவிட சீனியர்கள் அதே நீதிமன்றத்தில் இருந்தபோது அவர்களை புறந்தள்ளி அவர் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல பல உதாரணங்களை சொல்லலாம்.

இவை எல்லாம் தேர்தல் ஆணையர நியமனம் ஆனாலும் சரி நீதிபதிகள் நியமானாலும் சரி, நேர்மையானவர் என்ற அளவுகோலை காட்டிலும் நமக்கானவரா என்ப திலேயே இன்றைய ஒன்றிய அரசு கவனம் கொள்கிறது என்பது தெரிய வருகிறது.

— ஹரிபரந்தாமன் (முன்னாள் நீதிபதி)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time