கொரோனாவுக்குப் பிறகு நம்மில் பலருக்கு புதிது புதிதாக நோய்கள் வரிசைகட்டி நிற்கின்றன. கொரோனா நோய் பாதித்தவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் உடல் நல பாதிப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. சமீபத்திய ஆய்வுகளின்படி ஆண்மைக்குறை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மாறிவிட்ட உணவுப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தம், வேலைப்பளு மற்றும் பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துக் காணப்படுகிறது. இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மருத்துவர்கள் பலர் வியாபார நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
குழந்தையின்மை மற்றும் ஆண்மைக்குறை பிரச்சினைக்காக மாதக்கணக்கில், வருடக்கணக்கில் சிகிச்சை பெற்றும்கூட தீர்வு கிடைக்காமல் பலர் விழிபிதுங்கி நிற்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்தக் கட்டுரை நம்பிக்கையூட்டும்விதமாக அமையும் என்று நம்புகிறேன்.
உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற அடிப்படையில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் பல ஆண்மைக்குறையை சரிசெய்யக்கூடியவை. ஆனால், சிலர் ஒரேநாளில் அத்தனை சத்துகளும் கிடைத்துவிடும் என்று அதீத நம்பிக்கையுடன் சில உணவுப்பொருள்களைச் சாப்பிடுகின்றனர்.
எண்பதுகளில் வெளியான முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் முருங்கைக்காயைச் சாப்பிட்டால் ஆண்மை பெருக்கெடுக்கும் என்பதுபோல கொஞ்சம் மிகைப்படுத்தி காட்சிசிப்படுத்தியிருப்பார்கள். பொதுவாக முருங்கைப்பூவை பாலில் போட்டு வைத்து கொதிக்கவைத்து இனிப்பு சேர்த்து குடித்துவந்தால் ஆண்மைக்கோளாறு விலகும்.
பகல் வேளைகளில் பிஞ்சு முருங்கைக்காய், முருங்கைக்கீரை, முருங்கைப்பூ போன்றவற்றை பொரியல், கூட்டு, சாம்பார் என பலவிதங்களில் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். அதேபோல் முருங்கைப்பிசினை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் குடித்துவந்தால் நீர்த்துப்போன விந்து கட்டும்.
பிரம்ம விருட்சம் என்று அழைக்கப்படும் முற்றிய முருங்கை விதையும்கூட இழந்துபோன தாதுவை மீட்க உதவும். ஆனால், ஒரே இரவில் அதிசயம் நிகழ்ந்துவிடாது. காலப்போக்கில் பலன் கிடைக்கும். முருங்கையில் உள்ள அனைத்துப் பொருட்களும் ஆண்களின் பிரச்சினையைத் தீர்க்க உதவும்.

தூதுவளைக்கீரை, தூதுவளைப்பூ மற்றும் அதன் காய் போன்றவற்றை சமைத்துச் சாப்பிட்டால் உடலுக்கு போதுமான பலம் கிடைக்கும். அத்துடன் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். தூதுவளையின் பூக்களை பாலில் வேகவைத்துச் சாப்பிடலாம். தூதுவளையின் காய்களை மோரில் ஊற வைத்து காயவைத்து வற்றலாக்கிச் சாப்பிடலாம்.
அதேபோல் தூதுவளைப்பூவை நெய்யில் வதக்கி தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடுவதன்மூலம் நீர்த்துப்போன விந்து கட்டும். சீரகத்தூளையும், வில்வப்பட்டையையும் பொடியாக்கி நெய்யில் குழைத்துச் சாப்பிட்டாலும் ஆண்களுக்கு போதிய பலம் கிடைக்கும். பலாக்கொட்டையும்கூட ஆண்களுக்கு அபரிமிதமான சக்தியைக் கொடுக்கும்.
பலாக்கொட்டையை அவித்து காய வைத்து பொடியாக்கி கருப்பட்டி அல்லது பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். அதேபோல் பலாக்கொட்டையை குழம்புடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தாலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
புளிச்சக்கீரையை சமைத்துச் சாப்பிட்டால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும்கூட தாம்பத்திய வாழ்க்கை மேம்படும். இந்தக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் காயவைத்துப் பொடியாக்கி இட்லி பொடி போன்று செய்து சாப்பிடுவதும் பலன் தரும்.
வெண்பூசணிக்காயை கூட்டு செய்து சாப்பிடுவது, சாம்பாரில் சேர்த்துச் சாப்பிடுவதும்கூட ஆண்களுக்கு போதுமான சக்தியைக் கொடுக்கும். இதை அல்வா செய்தும்கூட சாப்பிடலாம். வெற்றிலை போடுவதாலும்கூட இழந்த ஆண்மையை மீட்டெடுக்க முடியும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலவையுடன் ஜாதிக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.

கருஞ்சீரக எண்ணெயை வெற்றிலையில் தடவி சாப்பிட்டாலும் போதிய பலம் கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு வர வேண்டுமென்றால் ஆண், பெண் இருவருமே கசகசாவை ஊற வைத்து அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வரலாம். திருமணமான ஒரு மாதகாலம் இந்த பாலை குடிக்கக் கொடுக்கும் பழக்கம் சிலரிடம் இருந்து வந்திருக்கிறது.
ஆண்மைக்குறை உள்ளவர்கள் ஒரு வாரம் தொடர்ந்து கசகசா பால் அருந்தினால் போதுமான சக்தியைப் பெறலாம். கசகசாவை தேங்காயுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிடலாம். ஆனால், கசகசாவை ஒரு அளவுடன் சேர்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் அதற்கு போதையூட்டும் பண்பு உள்ளது. விதைகள்… குறிப்பாக அளவில் சிறிய விதைகளைக் கொண்ட பழங்களைச் சாப்பிட்டால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும்.

அதில் குறிப்பாக துரியன் பழம் சாப்பிட்டால் விந்தணுக்கள் பலப்படும். வைட்டமின் சி சத்து உள்ளதால் முதிர்ச்சியைத் தடுத்து இளமையை தக்க வைக்கும் திறன் துரியன் பழத்துக்கு உண்டு. அந்தவகையில் இந்தப் பழம் ஆண்களுக்கு ஏற்ற பழமாகும்.
அதேபோல் மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஆரஞ்சுப் பழத்தினைச் சாப்பிட்டு வருவதும்கூட ஆண்களுக்கு போதுமான சக்தியைக் கொடுக்கும். பேரீச்சம்பழம், அத்திப் பழம், அரசம் பழம், ஆலம் பழம் போன்றவையும் ஆண்களுக்கு ஏற்ற பழங்களாகும்.
செவ்வாழைப்பழம் ஆண்களுக்கு பல நன்மைகளை பெற்றுத்தரக்கூடிய பழமாகும். இரவில் செவ்வாழைப்பழத்துண்டுகளை தேனில் நனைத்துச் சாப்பிடுவது நல்ல உடல்வளத்தைக் கொடுக்கும். குறிப்பாக தாம்பத்தியத்திய உறவு சிறப்பாக செவ்வாழைப்பழம் உதவும்.

இவற்றைத்தவிர செம்பருத்திப்பூ ஒரு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு பசும்பால குடித்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும். சூடான பசும்பாலுடன் தேன் சேர்த்துக் குடிப்பதும்கூட நல்லது. அமுக்கரா சூரணத்தை பாலில் கலந்து குடிக்கலாம்.
அம்மான்பச்சரிக்கீரையை காய வைத்துப் பொடியாக்கி சிறிதளவு சீரகப் பொடியைச் சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் அதிகரிக்க உதவும். ஓரிதழ்தாமரை என்ற மூலிகையின் முழுச்செடியையும் சாப்பிடலாம்.
தூதுவளை, முருங்கைக்கீரை போன்றவற்றைச் சேர்ப்பதுபோன்று அரைக்கீரை, நறுந்தாளிக்கீரை போன்றவற்றை உணவில் சேர்ப்பதும்கூட ஆண்களுக்கு போதிய பலத்தைக் கொடுக்கும். ஆண், பெண் இருவரும் மாலை வேளைகளில் பேரீச்சம்பழத்தை பசும்பாலில் போட்டு ஊறவைத்து தேன், கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு போதிய பலனைப் பெறலாம்.
ஆண்களுக்கு போதிய பலத்தைக் கொடுக்கும் மாப்பிள்ளை சம்பா என்ற பாரம்பரிய அரிசியை ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொண்டு அதன் பலனைப் பெறலாம். இவைதவிர இன்னும் பல எளிய உணவுகள் உள்ளன. அவற்றை உண்பதன்மூலம் இழந்த ஆண்மையை மீட்டெடுக்கலாம்.
கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின், மூலிகை ஆராய்ச்சியாளர், 9551486617

Leave a Reply