ஆளுநரை கேள்வி கேட்க தயக்கம் ஏன் ?

சாவித்திரி கண்ணன்

ஆளுநரிடம் கேள்வி கேட்க எங்களுக்கு உரிமை இல்லை. அவர் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல முடியும்…என்கிறார் அமைச்சர் ரகுபதி. முதல்வரோ மெளனம் சாதிக்கிறார்! இளைஞர்களை தற்கொலைகளுக்கு தூண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் மறுப்பதன் பின்னணி என்ன?

இளைஞர்களைக் கடுமையாக பாதிக்கும், எதிர்காலத்தையே  சூறையாடும், தற்கொலைக்குத் தூண்டி குடும்பங்களை நிர்மூலமாக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் அனுமதிக்க மறுத்துள்ளார்! கொஞ்சக் காலம் அதைக் கிடப்பில் போட்டு ஆளுநர் மறுத்தது ஒரு அநீதி என்றால், மறுத்த ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை தங்களுக்கு இல்லை என திமுகவின் அமைச்சர் ரகுபதி சொல்வது உண்மையா?

இந்தியா என்பது ஜன நாயக நாடு தானே! அதில் ஒரு தனி நபர் மட்டும் எப்படி பொதுச் சமூகத்திற்கு எதிரான பல செயல்களைச் செய்து கொண்டு என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது எனச் சொல்ல முடியும்?

அதுவும் அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் கேள்விக்குப் பதில் மட்டுமே எங்களால் சொல்ல முடியும்? ஆனால், அவரிடம் கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது!

இந்தக் கூற்று உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது.

அப்படியானால் திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது பன்வாரிலால் புரோகித்தை கடுமையாக விமர்சித்தது எப்படி? அவருக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியது எப்படி? ஆளும்கட்சியான பிறகு இருக்கும் உரிமையைக் கூட விட்டுக் கொடுத்து உரிமை இல்லை என்று தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொள்வது ஏன்?

பாஜகவின் கவர்னர்கள் எதிர்க்கட்சி ஆளும் இடங்களில் எல்லாம் அரசியல்வாதியாக மாறி அதிகார அரசியல் செய்கிறார்கள்! இதனால், அந்த மாநில மக்களின் நலன்களுக்காகக் கொண்டு வரப்படும், சட்ட, திட்டங்களைத் தடுத்து மக்களுக்கு அநீதி இழைக்கிறார்கள்! ஆனால், இந்த அதிகார மமதை கொண்ட கவர்னர்களை அந்தந்த மா நில முதல்வர்களும்  கடுமையாக எதிர்த்துப் போராடுகிறார்கள்! எதிர்த்து எதிர்க் கேள்வி கேட்கிறார்கள்.அவர்களின் அதிகாரத்திற்குச் சவால்விடுகிறார்கள்!

ஆளுநர் மாளிகையில் அரவிந்த்     கேஜிரிவால்

அதற்கு இங்கே சில உதாரணங்களைப் பார்ப்போம்;

டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் அரசு ரேஷன் பொருட்களை அரசே மக்களின் வீடு தேடிச் சென்று சேர்பிக்கும்படி ஒரு திட்டம் கொண்டு வந்தார். அதற்கு ஒப்புதல் அளிக்க டெல்லி துணை நிலை ஆளுநருக்கு அனுப்பிய போது, அரவிந்த் கேஜ்ரிவால் அரசுக்கு மக்களிடம் நல்ல பெயர் வரக் கூடாது என்ற எண்ணத்தில் பாஜக மேலிட உத்தரவின்படி ஆளுநர் அனுமதி மறுத்தார். கேஜ்ரிவால் மீண்டும், மீண்டும் வற்புறுத்தினார். ஆளுநர் காதில் கேட்காதது போலப் பாவனை செய்தார்! நேரில் சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார். நேரில் சந்திக்க ஆளுநர் சம்மதிக்கவில்லை. ஆனால், முதல்வர் தன் சகாக்களுடன் ஆளுநர் மாளிகை சென்று வரவேற்பறையில் அமர்ந்தார்.

ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்..என நேரம் போய்க் கொண்டே இருந்தது. இரவு வந்தது! அரவிந்த் கேஜ்ரிவால் தன் சகாக்களுடன் அங்கிருந்த சோபாவில் படுத்துக் கொண்டார். ஆனால், தான் தங்கி இருந்த நேரம் முழுமையும் சோஷியல் மீடியாவில் தன் காத்திருப்பு குறித்துப் பதிவு போட்ட வண்ணம் இருந்தார்! தேசம் முழுக்க இதுவே பேசு பொருளானது. ஆளுநருக்கு அவமானம் பிடுங்கி தின்றது.

மக்கள் வயிறார சாப்பிடுவதற்கான உணவு பொருட்களைக் கொடுக்க ஆளுநர் மறுத்து அழிச்சாட்டியம் செய்வதா? என மக்கள் கொந்தளித்தனர். இறுதியில் ஆளுநர் பணிந்தார்.

மேற்குவங்கத்தில் என்ன நடந்தது?

ஜெகதீப் தன்கர் -மம்தா பானர்ஜி

இதே போல மிகவும் திமிர் பிடித்த ஆளுநர் ஜகதீப் தன்கர் எந்த மசோதாவிற்கும் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டார். ‘ஹரே கவர்னர் சாகேப் எங்கிருந்தோ வந்து எனக்கு  நீங்க தண்ணி காட்டுவீர்களா? பதிலுக்கு நான் காட்டுகிறேன். நான் இந்த மண்ணின் மகள். மக்களால் ஆள்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவள். இங்க எங்க தயவுல தான் உங்களுக்கு எல்லா மவுசும், மரியாதையும்! பாருங்க இனி என்னாகும்’னு தன் வித்தையை காட்டினார். ஆளுநர் கேட்டால் தலைமைச் செயலாளரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காது! அவர் சாலையில் காரில் பயணப்பட்டாலோ, எங்கும் போனாலோ மக்கள் சூழ்ந்து, கேள்வி கேட்டு, எதிர்த்துக் கோஷமிட்டனர். ‘தனக்குப் பாதுகாப்பு இங்கில்லை..எனக்கு எங்கு போனாலும் அவமரியாதை..’ என கவர்னர் புலம்பும் நிலையை உருவாக்கினார் மம்தா பானர்ஜி!

தமிழிசை -சந்திரசேகர் ராவ்

தெலுங்கானாவில் தமிழிசை கவர்னராக ஆக்கப்பட்ட போது ஆரம்பத்தில் நல்ல மரியாதை செய்தார் சந்திரசேகரராவ்! ஆனால், தமிழிசை அரசின் சட்ட,திட்டங்களுக்குத் தடை ஏற்படுத்திய தொடங்கியவுடன் சந்திரசேகரராவ் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்திவிட்டார்.

கவர்னர் இல்லாமலே சட்ட சபை கூட்டத் தொடர் நடக்கும். கவர்னர் எந்த மாவட்டம் போனாலும் அங்கே அவரை வரவேற்க கலெக்டரோ, எஸ்.பியோ போகமாட்டார்கள்! அவரை  எந்த இன்ஸ்டியூசனும் சிறப்பு விருந்தினராக அழைக்கக் கூடாது. இங்கே அவர் ஒரு அநாதை. இருப்பதும், வெளியேறுவதும் அவர் விருப்பம் என மூர்க்கமாகப் புரிய வைத்தார் சந்திரசேகர ராவ்! அவ்வளவு தான் அடங்கிப் போனார் தமிழிசை! அதுக்குப் பிறகு எப்பவாச்சும் தெலுங்கானாவில் தலைகாட்டுவதோடு சரி. தற்போது புதுச்சேரி, தமிழ் நாட்டில் தான் அவர் ஜாகை!

ஆரிப் முகமத் கான்- பினராய் விஜயன்

கேரளாவில் ஆளுனர் ஆரிப் முகமதுகானின் அதிகார ஆட்டத்தை முடக்கிப் போட்டுவிட்டது இடதுசாரி அரசு! ஆளுநரை பல்கலைக்கு கழக  வேந்தர் பதவியிலிருந்தே தூக்கும் அவசரச் சட்டத்தைச் சட்ட சபையில் நிறைவேற்றி அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளது. பல்கலைக் கழக துணைவேந்தர்களை அதிரடியாகப் பதவி நீக்கம் செய்த ஆளுநரின் அதிகாரத்தை உயர் நீதிமன்றமும் நிறுத்தி வைத்துவிட்டது.

இப்படி இன்னும் கூட உதாரணங்களைச் சொல்ல முடியும். ஜனநாயகத்தில் உரிமை என்பதும் கடமை என்பதும் ஏற்கனவே தரப்பட்டு உள்ளது! அதை எடுத்துக் கொள்ளும் ஆளுமையும், துணிச்சலும் நமக்கு உள்ளதா என்பதே கேள்வியாகும்.

தமிழகத்தில் இது வரை 21 மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது! அவை அனைத்தையும் பட்டியலிட்டு, அதன் முக்கியத்துவத்தைக் கூறி,  அவை நிறைவேற்ற்படாத காரணத்தால் மக்களுக்கு உள்ள இழப்பையும் எடுத்துரைத்து ஆளுநரை நிர்ப்பந்திக்க வேண்டும் நமது முதல்வர். இதன் மூலம் ஆளுநரின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தி, மக்களின் பேசுபடு பொருளாக அவரை மாற்றி, நிம்மதி இழக்க வைக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சித் தலைவராக மட்டுமல்ல, மக்களுக்கான முதலமைச்சர் என்ற வகையில் அவரது கடமை! அதற்கான உரிமையை யாரிடமும் யாசகம் கேட்டுப் பெற வேண்டியதில்லை.

திமுக அரசின் பணிவானது, பன்னீர் செல்வத்தையே விஞ்சும் அளவுக்கு  இருப்பது துரதிர்ஷ்டவசமானது! முதல்வர் ஸ்டாலின் கள்ள மெளனம் சாதிப்பது அவரது கோழைத்தனத்தின் வெளிப்பாடாகத் தான் எடுத்துக் கொள்ளப்படும்.

இதோ நேற்று கூட ஒரு சகோதரி சங்கரன் கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துள்ளார். அந்த மரணத்திற்கு கவர்னர் பொறுப்பில்லையா? அனுப்பப்பட்டவுடன் மசோதாவிற்கு அனுமதி கிடைத்திருந்தால், அந்த சகோதரியின் மரணம் தடுக்கப்பட்டு இருக்குமே! இன்னும் எத்தனை தற்கொலைகளை நாம் பார்க்க போகிறோமோ? எனில், இவ்வளவு தீமைக்குரிய – மக்களை பாதிக்கும் ஒரு சூதாட்டத்தை தடை செய்வதற்கு தடை போடுகிறார் என்றால், ஆளுநர் சம்பந்தப்பட்ட சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதற்கான விளக்கத்தை மக்களுக்கு தெரிவித்தே ஆக வேண்டும். இதன் பின்னணி ஆராயப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அம்பலப்படுத்த வேண்டியதும் கூட! இதில் எந்த தயக்கமும் தேவை இல்லை.

திமுக அரசு இதை அரசியலாக்கி கவர்னரை உலுக்கி இருக்க வேண்டாமா? நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை திமுக எவ்விதம் கையாண்டது? அந்த திமுகவின் வீரியம்  தற்போது எங்குப் போனது?  இந்த விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் ஒருவர் தான் கவர்னரை கண்டித்து அறிக்கை தந்துள்ளார். நியாயமாக அதிமுக பொங்கி எழுந்து, திமுகவின் கோழைத்தனத்தை அம்பலப்படுத்தி அரசியல் செய்யப் பொன்னான தருணம் இது!

ஆனால், அந்தோ பாவம்! சமீபத்தில் கவர்னரை சந்தித்த எடப்பாடி  பழனிச்சாமி, ”ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் சிறப்பாக எதிர்க்கட்சி அரசியல் செய்கிறார்” எனப் புகழ்ந்துள்ளார்!

என்ன கேவலம் இது! ஆளுநர் அரசியல் செய்வதை எடப்பாடி அங்கீகரிப்பார் என்றால், எதிர்க்கட்சி என்ற அதிமுக எதற்கு? பேசாமல் அதைக் கலைத்துவிட்டு ஆளுநருக்குக் கூஜா தூக்கப் போகலாமே எடப்பாடி பழனிச்சாமி! ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வருவதில் இழுத்தடிப்பு செய்து காலம் தாழ்த்திய போது தமிழக அரசை இடித்துரைத்த எடப்பாடி பழனிச்சாமியும், சீமானும்,  அண்ணாமலையும் கவர்னரை தட்டிக் கேட்காமல் மெளனம் சாதிப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் உள்ளனர்!

தமிழக அரசியலுக்கு இது போதாத காலம் போலும்!

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time