மு. ரத்தினவேல், விருதாச்சலம்
சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நாடக் லேபிட்டின் காஷ்மீர் பைல்ஸ் பற்றிய விமர்சனம் சரியானது தானா?
நாடக் லேபிட் கூறி இருப்பதாவது; ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ஆல் தேர்வுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்தோம். இது பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்ற எண்ணம் எங்களுக்கு தோன்றியது. இது போன்ற மிகவும் மதிப்புமிக்க திரைப்படவிழாவில் போட்டி பிரிவில் இந்த படம் வந்தது சரியானது அல்ல. வாழ்க்கைக்கும், கலைக்கும் விமர்சனம் குறித்து ஆலோசிப்பது திரைப்பட விழாவின் ஆன்மா என்பதால் இந்த மேடையில் எனது உணர்வுகளை வெளிப்படையாக உங்களிடம் கூறுகிறேன்’ என்றார். தனக்கு மட்டுமல்ல, தேர்வு குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்ப்பட்ட உணர்ச்சியை தான் அவர் குறிப்பிட்டு உள்ளார் என்பதை கவனிக்க வேண்டும்.
இது ஒரு உண்மையான கலைஞனின் ஆன்மாவில் இருந்து வெளிப்பட்ட உணர்வாகத் தான் தெரிகிறது. எந்த கலைஞனுமே அன்பையும், நேசத்தையும் தன் கலையின் வழியாக தூக்கி பிடிக்கவே விரும்புவான்! வெறுப்பையும், வன்மைத்தையும் உள்ளீடாகக் கொண்டு எடுக்கப்பட்டது கலைப் படைப்பல்ல! களை எடுக்கப்பட வேண்டிய படைப்பே!
ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர்
காசி தமிழ்ச் சங்கமத்தில் தமிழகத்தின் ஒன்பது ஆதினங்கள் கலந்து கொண்டார்களே.. கவனித்தீர்களா?
ஆம், தமிழகக் கோவில்களின் கருவறைக்குள் ஒலிக்க மறுக்கப்பட்ட தமிழை காசியிலாவது கேட்கலாம் எனப் போனார்கள் போலும்!
கு.தங்கவேல்,விருதாச்சலம்
காசி தமிழ் சங்கமத்தில் இளையராஜா பங்கேற்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளதே?
பங்கேற்றாலும் பங்கேற்றார்! அங்கே தமிழ்ப் பாடல்களை கம்பீரமாக பாடி வந்திருந்தால் கூட கொண்டாடப்பட்டு இருப்பார்! சிம்பொனியில் திருவாசகத்தை தந்த இளையராஜா அங்கே அதைப் பாடத் தயங்கி சமஸ்கிருதப் பாடல்களை பாடி வந்துள்ளார்! பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் பாடல்களையாவது பாடி இருக்கலாம்!
ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி
அரசு கேபிள் நிறுவனம் என்னாகும்?
அவசர கதியில் குறைப் பிரசவமாக பிறந்த அரசு கேபிள் நிறுவனம் தன் அந்திம காலத்தில் உள்ளது. அரசியல்வாதிகள் சூரையாடிய போது கூட தாக்கு பிடித்த அந்த நிறுவனம் தற்போது அதிகாரிகளின் ஆணவத்தால் அஸ்த்தனமாகிக் கொண்டுள்ளது.
என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை
தே.மு.தி.க எந்த நிலையில் உள்ளது..?
விஜயகாந்தின் வியர்வையால் உருவான அந்தக் கட்சியை பிரேமலதாவின் பேராசை ’ஸ்வாகா’ செய்து கொண்டுள்ளது.
என்.அபிராமி, நங்கநல்லூர் சென்னை
அதிமுகவின் பொதுக் குழு தொடர்பான விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளிப் போட்ட வண்ணம் உள்ளதே?
பாஜக எசமானர்கள் தரும் அழுத்தங்களோ, என்னவோ? உண்மையை வெளிப்படுத்துவதற்கு காட்டப்படும் தாமதம் பொய்க்கு ஆதரவானதாகத் தான் அர்த்தப்படும்.
கார்த்திகேயன், கடலூர்
கள்ளக் குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்தில் தமிழக போலீசின் தவறான போக்கை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளதே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்?
இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு அந்தந்த ஊர்களில் இருந்து புறப்பட்ட மாதர் சங்கத்தினரை அங்கேயே முடக்கியும், வழியிலும் கைது செய்துள்ளது காவல்துறை! அது மட்டுமின்றி போராடிய பெண்களை குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றியது! தமிழகத்தின் ஒட்டுமொத்த காவல்துறையும் கள்ளக் குறிச்சி குற்றவாளிகளை காப்பாற்றவே வேலை செய்கிறது. அப்போது அந்த டிஜிபி ஆபீஸ் வழியே முதல்வர் ஸ்டாலின் காவல்துறையின் அடக்குமுறையை கண் கொட்டாமல் பார்த்த வண்ணம் காரில் கடந்தது மற்றொரு அதிர்ச்சியாகும்!
க.லஷ்மணன், பெங்களூர்
அண்ணாமலை தலைமையிலான பாஜக, எப்படியோ ஒரு விதத்தில் வளர்ச்சியடைந்த வண்ணமாகத் தானே உள்ளது..?
அண்ணாமலை பொறுப்பு ஏற்றதில் இருந்து குற்றவாளிகளின் கூடாராமாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழக பாஜக! கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளுக்கு எல்லாம் அடைக்கலம் தரும் கட்சியாக தமிழக பாஜக இருக்கிறது என்பதற்கு சிறுவாச்சூர் கோவிலை புனரமைக்க பணம் வசூலித்து ஆட்டையப் போட்டு கைதான கார்திக் கோபிநாத், ஆருத்ரா கடன் திட்டம் என்ற பெயரில் பொது மக்களிடம் ஒன்பதாயிரம் கோடியை ஆட்டையப் போட்ட ஹரிஸ், திருச்சி மாநகரில் பல தில்லாங்கடிகள் செய்யும் சூர்யா தொடங்கி தமிழக காவ்ல்துறையின் குற்றப்பட்டியலில் இருக்கும் பல பிரபல ரவுடிகள் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளதே சாட்சியாகும்.ஆக, இது வளர்ச்சியல்ல, வீக்கம்!
கருப்பசாமி, அருப்புக் கோட்டை
உதயநிதி ஸ்டாலினின் தலைமைக்கு இப்போதே திமுகவினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனரே..?
கட்சிக்கு தலைவராக வருவதற்கும், கம்பெனிக்கு தலைவராக வருவதற்கும் வித்தியாசமில்லாத ஒரு காலகட்டம் இன்று நிலவுகிறது.
ரவி பிரசாத், சோழிங்க நல்லூர்
சூதாட்ட விளையாட்டான ஆன்லைன் ரம்மியை தடை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி தயக்கம் காட்டுவது ஏன்?
அந்த சூதாட்ட நிறுவனங்களுக்கும், பாஜக தலைமைக்கும் ஏதாவது மறைமுகமான தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது! ஏனெனில், மத்திய அரசே இதை தடை செய்திருக்க வேண்டும். பாஜக தலைமையின் விரலசைவுக்கு வில்லுப்பாட்டு பாடுபவர்கள் தானே கவர்னர்கள்!
எஸ்.ராமச்சந்திரன், திருச்சி
ஒரு துணை ராணுவ வீரரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டினார்களாமே?
திருமாவளவனின் பேச்சுக்கு அண்ணாமலையோ அல்லது மற்ற பாஜக தலைவர்களோ பதில் லாவணி செய்தால் அதை புரிந்து கொள்ளலாம். ஆனால். ஒரு ராணுவ வீரர் வலிந்து வம்பு சண்டைக்கு இறங்குவதை எப்படி புரிந்து கொள்வது? ஒரு ராணுவ வீரரைக் கூட இந்துத்துவ அரசியல் பேச வைத்து, அரசியல் களத்தில் ஹோதாவில் இறக்கிவிடுமளவுக்கு பாஜகவின் அரசியல், தரம் தாழ்ந்துள்ளதையே இது காட்டுகிறது!
எச்.ரங்கநாதன், சைதாப் பேட்டை, சென்னை
கீழ்த்தரமாக 50 வயதிற்கு மேற்பட்ட பெண்ணை மிக ஆபாசமாக பேசினார் திருச்சி சூர்யா! பொதுவெளிக்கு வந்துவிட்ட இந்த சர்ச்சையில் இருவருமே சமரசமாகியுள்ளனரே..?
ஆபாசத்தின் உச்சமான அந்தப் பேச்சே ஒரு அதிர்ச்சியாகத் தான் பார்க்கப்பட்டது தமிழக மக்களால்! இதற்குப் பின்னும் சமரசமாக முடியும் என்பது அதைவிட பேரதிர்ச்சி!
நாயும் பிழைக்குமிந்த பிழைப்பு!
Also read
மு.கோதை நாயகி, விழுப்புரம்
பாஜக தலைவர்கள் மட்டும் ஏன் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளில் அடிபட்ட வண்ணம் உள்ளனர்?
கமலாலயம் என்ற அழகிய பெயர் கொண்ட கட்சித் தலைமையகத்தை காமாலயமாக மாற்றும் ஆசை அவர்களுக்கு வந்துவிட்டதோ..என்னவோ? பாஜகவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதோடு, உயர் பதவிகளும் பெற்று வரும் சூழல் தான் இது போன்ற தவறுகளை ஊக்குவிக்கிறது என்று தோன்றுகிறது!
Leave a Reply