உயிர் பறிக்கும் சாலை விபத்துகளை தடுப்பது எப்படி?

-த.அன்பழகன்

சாலை விபத்துக்கள் விலைமதிப்பற்ற மனித உயிர்களை கொத்து கொத்தாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. எந்தெந்த விதங்களில் இதை தடுக்கலாம் என நாம் யோசித்து சிலவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் அனைவருக்கும் பங்குள்ளது. அது பற்றிய விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

நான், சுற்றுலா வாகனங்களை இயக்கும் தொழிலில் 1986 ஆம் ஆண்டில் கால் பதித்தேன்.  எங்கள் நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப் பட்ட பிறகு சுற்றுலா தொழில் மிகப்பெரிய பின்னடைவில் உள்ளது. இந்த சரிவை சரி செய்ய மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம்.

38 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ள என்னை மிகவும் பாதித்த விஷயம்  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் தான்.

கல்வி, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல துறைகளில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு துரதிஷ்டவசமாக சாலை விபத்துகள் நிகழ்வதிலும் நாட்டின் இரண்டாவது மாநிலமாக  திகழ்கிறது.

2020 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி, இந்தியாவில் நடைபெற்ற மொத்த சாலை விபத்துக்கள் எண்ணிக்கை 3,66,138 ஆகும்.

இதில் உயிரழந்தோர் எண்ணிக்கை 1,20,806.

இதே ஆண்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து   துறை அளித்துள்ள விபத்து ஆய்வு அறிக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 45,480 விபத்துக்கள் நடந்துள்ளன. இங்கு உயிரிழப்பு 8,060 ஆக பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடந்த விபத்துக்களில் சென்னையின் பங்கு ஐந்தில் ஒரு பாகம்.அதாவது இம்மாநகரில் நிகழ்ந்த மொத்த  விபத்துகள் 4,397, உயிர்பலி 874.

சாலை விபத்துகளை தடுக்க கடந்த 27 ஆண்டுகளாக  விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகிறோம்..! இதுவரை முந்நூறுக்கு மேற்பட்ட கூட்டங்கள் நடந்துள்ளன.

சுற்றுலாவை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. ஏழை எளிய மக்கள் கூட   ஆண்டுக்கு ஒரு முறை  பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை , ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகு உருவான பெருநகரம் ஆகும். எனவே, விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலை வழியாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கிறார்கள்.

பல்வேறு காரணங்களால் மிகப்பெரிய விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து வருவதை பார்க்கிறோம். 5 பேர் 10 பேர்  என்று கொத்து கொத்தாக  உயிரிழப்புகள் நேர்கின்றன. குடும்பத் தலைவர்  திடீர் என பலியாகும் போது அந்த குடும்பமே நடுத்தெருவுக்கு வரும் நிலைமை ஏற்படுகிறது.

விபத்துகளுக்கான காரணங்களை நாம் ஆராயும் போது, ஓட்டுநர்களின் அஜாக்கிரதை, அதிக வேகம், குடி போதையில் வாகனம் ஓட்டுதல், வாகனங்களை ஒழுங்காக பராமரிக்காதது, மோசமான சாலைகள், சிக்னலை மதிக்காமல் செல்வது, கண்ட இடத்தில் சாலையை கடக்கும் பாதசாரிகள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சுற்றுலாவுக்காக வாகனங்களை மக்கள் எடுக்கும்போது ஓட்டுனர் நன்றாக ஓய்வெடுத்து விட்டு வருகிறாரா? என்று கவனிக்க வேண்டும். சில சமயங்களில் ஓரிரு நாட்கள் தூங்காமல் தொலை தூரத்திற்கு சென்று விட்டு வரும் ஓட்டுநரை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர் பயணத்தின் போது கண் அயர  வாய்ப்பு உள்ளது. ஓட்டுநரிடம் பேச்சு கொடுத்து, ஓய்வெடுக்காமல் வந்திருப்பது தெரிய வந்தால் அவருக்கு ஓய்வு கொடுத்து பிரயாணத்தை தொடங்குவது நல்லது. டிராவல்ஸ் நடத்துபவர்களும் ஓய்வின்றி உழைக்கும்படி ஓட்டுனர்களை கட்டாயப் படுத்தக் கூடாது.

சமீபத்திய மழையால்  மாநகரங்களின் பெரும்பாலான சாலைகள் பொத்தலாகி கிடப்பதை காணலாம். மழை நீர் இவற்றில் தேங்கும் போது பள்ளமேடு அறிய முடியாமல்  வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகிறார்கள். அதிவேகம் காரணமாக எதிர் வாகன மோதலுக்கு ஆளாகாமலேயே  பள்ளத்தில் விழுந்தோ, சறுக்கி விழுந்தோ உயிரிழந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம்.

2020 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாத காரணத்தால் சென்னை மாநகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றோர்  50 பேர் உயிழந்ததாகவும்    இந்த எண்ணிக்கை தமிழக அளவில் 1346 ஆகும்  என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. எனவே, போலீசாரிடமிருந்து தப்புவதற்காக என்று நினைக்காமல் உளப்பூர்வமாக,  தரமான ஹெல்மெட்டை அணிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும்.

அலுவலகத்திற்கு அல்லது பள்ளியில் குழந்தையை விடுவதற்கு கடைசி நேரத்தில் பரபரப்புடன் புறப்பட்டு செல்லாமல், முன்கூட்டியே பொறுமையாக செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாநகரங்களில் காலை வேளையில் நடக்கும் பல விபத்திற்கு இப்படிப்பட்ட பயணங்கள் தான் காரணமாக உள்ளன.

வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை உரிய காலத்தில் சர்வீஸ் செய்து சக்கரங்களை சரிபார்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அண்மையில் மிகப்பெரிய செல்வந்தர் மும்பையில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி பலியானதை அறிவோம். அந்த விபத்து குறித்து ஆராய்ந்த போலீசார் அவர் சீட் பெல்ட் அணிந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார் என்று தெரிவித்தனர்.

சாலை விதிகளை மதித்து நடந்தாலே விபத்துகளை பெரும் அளவுக்கு குறைத்து விட முடியும், அரசு வாகனங்களை ஓட்டுவோரும்  இதை  மனதில் கொள்ள வேண்டும்.

மழை போன்ற இயற்கை சீற்றங்களால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை அரசு நிர்வாகங்கள் உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.

தமிழகத்தை பொருத்தவரை இங்கு நடைபெறும் சாலை விபத்துகளுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளும் ஒரு காரணமாகும். பல்லாயிரக்கணக்கானோர் குடிக்கு அடிமையாகி பகல் நேரத்திலும் குடிக்கிறார்கள். இவர்களில் பலர் குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி விபத்துக்கு காரணமாகிறார்கள். சமூக நலன் கருதி இந்த கடைகளை மூட வேண்டும்.

சென்னை, கோவை மதுரை போன்ற மாநகரங்களில் இருசக்கர வாகனங்கள் அதிக விபத்துக்கு உள்ளாகின்றன. அதிக வேகம், மோசமான சாலைகள் இதற்கு முக்கிய காரணங்களாகும். செல்போன் பேசிய படி வாகனம் ஓட்டுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் மூவர் அல்லது நால்வர் அமர்வதோ, அதிக எடை கொண்ட பொருளை வைத்துச் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும். ஆட்டு மந்தை போல மனிதர்களை வண்டிகளில் ஏற்றி செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பின்னால் வருபவர் ஹாரன் அடித்து வழி கேட்கும் பட்சத்தில் சற்று ஒதுங்கி வழிவிட்டால் நாம் குறைந்து போய் விட மட்டோம். பொதுவாக அதி வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது சாலச் சிறந்தது. ஏனெனில் 60 சதவிகித விபத்துக்கள் அதி வேகமாக வாகனம் ஓட்டப்படுவதில் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன!

காற்று மாசை குறைக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகும்.வாகனப் புகையில் உள்ள நைட்ரஜன் ஆக்சைடுகள் கண் மற்றும் சுவாச உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கிறது.இதில்

உள்ள ஹைட்ரோகார்பன் புற்று நோயை ஏற்படுத்தும் நச்சு கொண்டது.கார்பன் மோனாக்சைடு இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.

நான்கு சக்கர பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள் வைத்திருப்போர் என்ஜீனில் உள்ள புகைபோக்கியில் (மேன்யுபோல்டு) கார்பன் மோனாக்சைடின் அளவு 4.5 சதவீதம் அளவிற்கு மிகாமல் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். டீசல் வாகனங்களின் புகை தடையற்ற முடுக்கத்தில்( free Acceleration ) 65 ஹாட்ரிட்ஜ்(Hadridge) அளவுக்கு மிகப் படாமலும் முழு பார அளவில் 25 ஹாட்ரிட்ஜ் அளவுக்குள்ளும் இருக்க வேண்டும்  என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது

சாலை விபத்துகளை தடுத்து மனித சமுதாயத்தையும் சுற்றுச்சூழல் மாசை குறைத்து நம்மை வாழ்விக்கும் புவிப் பந்தையும் பாதுகாப்போம்.!

கட்டுரையாளர்; த.அன்பழகன்,

சமூக ஆர்வலர் . “சாலை பாதுகாப்பு” நூலின் ஆசிரியர்..

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time