அனைவருக்குமான உணவை பாடுபட்டு விளைவித்துக் கொடுப்பவர்கள் விவசாயிகள்! அவர்களின் நெடிய போராட்டத்திற்கு பிறகு வாக்குறுதிகள் வழங்கியது ஒன்றிய அரசு! ஆனால், நிறைவேற்றாமல் அழிச்சாட்டியம் செய்கிறது. அதை நினவூட்டி மனு கொடுக்க சென்ற விவசாயிகளை ஆர்.என்.ரவி சந்திக்க மறுத்தது ஏன்?
# விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும்.
# பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய, விரிவான பயிர் காப்பீடு வழங்கவேண்டும். டெல்லி போராட்டத்தின்போது விவசாயிகள் மீது போடப்பட்ட போலி வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.
# போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒரு மாபெரும் பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடத்தியது! மிகுந்த எழுச்சியுடன் அணிவகுத்து கோஷங்களை முழங்கியபடி விவசாயிகள் ஆளுநர் மாளிகை நோக்கிச் செல்ல முயன்றனர். ஆனால், காவல்துறையினர் ஆரம்பத்திலேயே தடுத்து, தலைவர்களை மாத்திரம் ஆளுநரை சந்திப்பதற்காக என்று சொல்லி அழைத்து சென்றனர்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் மூலம் அனுப்புவதற்காக, ஆளுநரிடம் மனு கொடுக்க சங்க நிர்வாகிகள் சென்றனர். ஆனால், அதற்கு ஆளுநர் மாளிகை மறுத்ததால், கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தமிழக பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதனிடம் விவசாயிகளின் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் ( எஸ்.கே.எம்) மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: எங்கள் அமைப்பு விடுத்த அறைகூவலின்படி நவம்பர் 26 அன்று அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை நோக்கி அந்தந்த மாநில விவசாயிகள் அணி திரண்டு சென்று ஆளுநருக்கு மனு கொடுக்க சென்றோம்.டெல்லியை மையப்படுத்தியே விவசாயிகள் போராட்டம் என்றில்லாமல் ஒவ்வொரு இடத்திலும் நடத்துவதே இனி எங்கள் நோக்கம்!
அதன் அடிப்படையில் தமிழகத்தில் நவம்பர் 26 அன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் செல்வது எனவும், கோரிக்கை மனுவைத் தலைவர்கள் நவம்பர் 25ம் தேதி கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி கேட்டு 23ம் தேதியே ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்குக் கடிதம் கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பல தடவைகள் தொலைபேசி வாயிலாக நினைவூட்டியும், வேண்டுகோள் விடுத்தபோதும் எந்தவித பதிலும் வரவில்லை.
26ம் தேதி விவசாயிகள் பேரணி இராஜரத்தினம் விளையாட்டரங்குக்கு அருகில் பேரணி நடத்த வேண்டும் என்றும், ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர்கள் மனு கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும், சென்னை காவல்துறையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
அந்த அடிப்படையில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு முடிவில் SKMஇன் தலைமை தோழர்களைக் காவல்துறையினர் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஆனால் தலைவர்களை மாத்திரம் ஏற்றிக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல், கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். மனுவை RDO விடம் கொடுக்குமாறும், அவர் அதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புவார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ஆளுநர் மாளிகையில், விவசாயத் தலைவர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்’ என்பதாகும்.

இதனால், தாங்கள் காவல்துறை அதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த தலைவர்கள் கிண்டி வட்டாட்சி அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை GST சாலை அருகிலும் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் துயர் துடைப்பு செயலாளர் திரு ஜெகநாதன் அவர்கள் மூலமாக மனுவைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தனர்.
Also read
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்கள் எஸ்.கே.எம் தலைவர்களிடம் கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும், ஆளுநர் ஆர்.என்..ரவியின் எதேச்சதிகாரமான, அடாவடித்தனமான போக்கை வெளிக்காட்டும் வகையில் எஸ்.கே.எம் தலைவர்களிடம் மனுவை வாங்கிக் கொள்ள மறுத்தார். பாஜக தலைவர்களை சந்திப்பதை தினசரி வாடிக்கையாகக் கொண்ட ஆளுநர் ரவி விவசாய சங்கத் தலைவர்களை சந்திக்க மறுத்ததை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்”என்றார்,கே.பாலகிருஷ்ணன்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பிரச்சினைகளை ஆளுநரிடம் தான் கூற வேண்டும் என்றால் மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்த 38 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சம்பளம் எதற்காக ஐயா???
Dear aramonline.in administrator, You always provide clear explanations and step-by-step instructions.
To the aramonline.in admin, You always provide clear explanations and step-by-step instructions.