மலைக்க வைக்கும் மன்னர்கள் உண்ட உணவுகள்!

பொ.வேல்சாமி

அந்தக் காலத்தில் மன்னர்கள் என்னென்ன உணவுகள் எல்லாம் சாப்பிட்டு இருப்பார்கள்..? என அறிந்து கொள்வதில் பலருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும்! பிரமிக்க வைக்கும் உணவு வகைகளின் பட்டியலைப் பார்த்தால் ஒரு வேளை உணவுக்கு இத்தனை வகையறாக்களா..என மிரள வைக்கிறது..! 

நாயக்க மன்னர்கள் என்னென்ன வகை உணவுகளை உட் கொண்டனர் என்பதற்கு  விடை சொல்கிறது நாயக்க மன்னர் விஜய ராகவ நாயக்கர் எழுதிய இரகுநாதப்பதயம் எனும் நூல்!

இந்த நூல் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரில் ஒருவரான இரகுநாத நாயக்கர் தன் தேவியர் மூவருடன் சேர்ந்து சாருவிலாச போஜன மண்டபத்திற்கு வந்து உணவருந்தும் காட்சியை விவரிக்கிறது!

ஒரு மிகப் பெரிய மேஜையில் தங்க தாம்பாலம்! அதில் வாழை இலை விரித்து உணவு பறிமாறப்பட்டதாம்! மற்றும் பல சின்னச் சின்ன தங்கம் மற்றும்  வெள்ளிக் கின்னங்களில் ஏராளமான பக்க உணவுகள் வைக்கப்பட்டு இருந்தன! சில வகை உணவுகள் வாழை தொன்னைகளிலும் வைக்கப்பட்டனவாம்!

அவற்றின் பட்டியலைப் பார்ப்போம்;

இனிப்பு வகைகள்:

போளி

மாண்டே

லட்டு

பூரண கலச மோதகம்

கஜ்ஜாயம் (சேமியாவில் செய்தது)

அதிரசம்

பருப்பு வைத்த மோதகம்

ஸாரத்துலு

மணுகு பூல் (இனிப்பு முள் முருக்கு)

மிகட் சட்லு – பாஸந்தி

வடை வகைகள்

கறி வடை

தயிர் வடை

ஆம வடை

ரொட்டி வகைகள்;

தேங்காய் ரொட்டி

வறுவல் ரொட்டி

சாம்பார் ரொட்டி

பானங்கள்;

திரட்டுப் பால்

தேங்காய் பால்

பன்னீர் பாயாசம்

ஜீரகப் பாயாசம்

குளிர்ந்த பாயாசம்

ஜொஜ்ஜி பாயாசம்

பழ வகைகள்

ரசதாழப் பழம்

தேன் கலந்த பழாப்பழம்

தே கலந்த மாம்பழம்

தேன் கலந்த திராட்சைப் பழம்

பல தேசங்களில் விளையும் பேரிச்சம் பழம்

நேரேடு, ரேடு

விளாம்பழம்

கித்தடி

பாலபண்டலு

வெள்ளரிப் பழம்

மாதுளம் பழம்

பிரதான உணவு வகைகள்;

சீகரணி மற்றும் சர்க்கரை சாதம்

பலவிதமான அன்னங்கள்!

பல வகை காய்கறிகளில் செய்த உணவு வகைகள்!

அப்பளம் எள்ளுப் பொடியிட்ட கர்பூரக் கோழி.

தேங்காய் பொடி, கறிவேப்பலைப் பொடி உள்ளிட்ட பொருள்கள் கலந்த குங்குமக் கோழி

உளுந்து கடலைப்பருப்பு சானகி சூரணம் ஆகிய பொருள்கள் கலந்து தயாரிக்கப்பட்ட கஸ்தூரிக் கோழி.

சர்க்கரை, வெண்ணை உள்ளிட்ட பொருள்கள் கலந்து தயாரிக்கபெற்ற பால் கோழி

வெங்காயம், பூண்டு மசாலாப் பொடிகள் சேர்த்து தயாரிக்கப்பட்ட கட்டுக் கோழி

நுலுவக் கோழி

மீன் வறுவல் வகைகள்

கொத்தவரை பொறியல்

வாசனையுள்ள ஜாலபத்ரி, ஜாதிக்காய், பருப்பு வகைகள் கலந்த பிரிஜ்ஜி!

வடாம் பொறித்து கூட்டின பொடிமாஸ்கறி

அப்பளம் – வடாம்

எலுமிச்சை ரசம், உப்பு ரசம்

நீர் மோர்

ஏலம், சுக்கு, வெட்டி வேர் கலந்த தண்ணீர்

பிரமிக்க வைக்கும் இவை, ஒரு வேளைக்கான உணவுப் பட்டியலாகும். இவை எந்த அளவுக்கு மன்னர்கள் மிகுந்த போஜனப் பிரியர்களாக இருந்துள்ளார்கள் என்பதை உணர்த்துகிறது!

இதே காலகட்டத்தில் வாழ்ந்த மிகப் பெரும்பான்மையான மக்கள் வெறும் கஞ்சி உணவை மட்டுமே அறிந்திருந்தனர்! அரண்மனை மன்னர்களும், அவர் தம் உறவுகளும், அமைச்சர்களும், தளபதிகளும், அமைச்சர்களும் மிக சுகபோக வாழ்வு வாழ்ந்த போதிலும் பெருவாரியான பாமர மக்களுக்கு அரை வயிற்றுக் கஞ்சியே உணவாக இருந்துள்ளது எனவும் தெரிய வருகிறது.

இது ஏதோ நாயக்க மன்னர் காலகட்டத்தில் மட்டுமல்ல, ஏடு அறிந்த வரலாற்றுக் காலங்கள் முழுமையும்  சிந்தனையற்ற பாமர மக்களும் அவர்களுடைய குழந்தைகளும், வாரிசுகளும் சோற்றுக்கு சிங்கியடித்து பிச்சையெடுத்து வாழ்ந்தே வந்துள்ளனர்! வரலாற்று காலங்கள் பூராவும் ஆட்சியாளர்களும் அவர்களுடைய பரிவாரங்களும், எடுபடிகளும் உண்டுக் கொழுக்கும்படியான பல்வேறு வகையான உணவு வகைகளை தின்று ஏப்பம் விட்டு திரிந்தே வந்துள்ளனர். இவற்றைத் தான் உலக நாடுகளில் கிடைத்துள்ள குறிப்புகளும், இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளும் இலக்கியப் பதிவுகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

பிரான்ஸில் நெப்போலியனின் அரண்மனையில் அவன் ஒருவன் மட்டும் உண்பதற்காக 200 க்கு மேற்பட்ட கோழிக்கறி வகையறாக்களை  தயாரித்துக் கொண்டே இருப்பார்களாம். ஏனென்றால், நெப்போலியன் எந்த நேரத்தில் வந்து கேட்டாலும், புதிதாகவும் சூடாகவும் உணவு படைக்க வேண்டும் என்று அரண்மனையில் உத்தரவு இருந்ததாம்.

இதேபோன்று தமிழ்நாட்டு வரலாற்றிலும் பாமர மக்களில் பெரும் பான்மையோர் கஞ்சிக்குக் கதறிக் கொண்டிருந்த காலங்களிலும் ஆண்டைகளும், ஆதினங்களும், மிட்டா மிராசுகளும் சுகபோக வாழ்க்கையே வாழ்ந்துள்ளனர்!

இன்றைய காலத்திலும் அரசியல்வாதிகளும் சினிமாகாரர்களும் தின்றுக் கொழுத்து வாழ்ந்து  வருவதை நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஒரு இத்துபோகும் நடிகனுக்குக் கூட பால் அபிஷேகமும், நாட்டையே கொள்ளையடிக்கின்ற அரசியல் பாவிகளுக்கு தங்கள் பெருத்த ஆதரவையும், தெய்வத்தின் பேரால் பக்கா அயோக்கியதனம் செய்கின்ற சாமியார் பயல்களுக்கு தங்களுடைய தாழ்ந்த வணக்கத்தையும் தெரிவித்து வருகின்ற மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்ற நாடு தான் இது.  இந்தியாவில் உண்டான பஞ்சங்களில் பல ஆதிக்க வர்க்கத்தின் பேராசையால் உருவானவை தாம்!

பஞ்சத்தில் உடல் நலிந்த ஏழை, எளிய பாமர மக்கள்!

இது போன்ற உணவுகளை எப்படி தயார் செய்திருப்பார்கள் என்ற ஆவல் பலருக்கும் தோன்றலாம். அந்த ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக தஞ்சாவூர் அரண்மனையில் சரபோஜி மன்னர் காலத்தில் தயாரிக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளைப் பற்றிய செய்முறைகளைக் கூறும் நூல்கள் போஜன குதூகலம், சரபேந்திர பாக சாஸ்திரம் ஆகியவற்றை சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிட்டுள்ளனர். அந்த நூல்களின் இணையதள இணைப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

போஜன குதூகலம்

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM3kupy&tag=%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D#book1/

சரபேந்திர பாக சாஸ்திரம்

https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZpek0xd&tag=%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D#book1/

இந்த நூல்களை எழுதியவர் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பால சுப்பிரமணியன் என்பது குறிப்பிடத் தக்கது!

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி

கரந்தை தமிழ் கல்லூரி புலவர், வரலாற்று ஆய்வாளர், ‘பொற்காலங்களும் இருண்ட காலங்களும்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time