நூலக ஆணை ஒரு சிலருக்கே கிடைக்கிறதே ஏன்?

-பீட்டர் துரைராஜ்

பரிசல் சிவ. செந்தில்நாதன்  இலக்கிய ஆர்வலர்களுக்கு  மிக பரிச்சியமான பெயர்!  ‘நல்ல புத்தகங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்’ என்ற இலக்கோடு முப்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். பதிப்புலகம் சந்தித்து வரும் சவால்கள், நூலக இயக்கம் , வாசிப்புப் பழக்கம் போன்றவை குறித்து பேசுகிறார்.

நல்ல புத்தகங்களை கொண்டு வர நினைக்கும் உங்களைப் போன்ற சிறு பதிப்பகத்தார் சந்திக்கும் சவால்கள் என்ன?

இங்கு மொழி பெயர்ப்பாளர்கள் குறைவு. மொழிபெயர்த்ததை  சரிபார்க்க, எடிட்டர்கள் இல்லை. ஒரு பதிப்பகம் என்றால் அதற்கு ஒரு கணினி, தட்டச்சு செய்பவர், மெய்ப்பு பார்ப்பவர், பலதரப்பட்ட நூல்களை படித்து தேர்வு செய்பவர், உதவியாளர் என குறைந்தபட்சம் நான்கு அல்லது ஐந்து பேராவது வேண்டும். அதற்கு சாத்தியம் இல்லாத நிலையி்ல்தான் பெரும்பாலான பதிப்பகங்கள் உள்ளன. அரசாங்கமானது, சிறு பதிப்பகங்களுக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று இலட்சம் என சிறு அளவில் கடன் தரலாம். அவர்கள் வெளியிடும் புத்தகங்களையும் நூலகங்களுக்கு, குறிப்பிட்ட அளவில் கொள்முதல் செய்யலாம். இன்னமும் பதிப்புத் தொழில் ஒரு குடிசைச் தொழிலாகவே உள்ளது. ஒருசில பதிப்பகங்கள் மட்டுமே செழிப்பாக உள்ளன.

பதிப்புத் தொழில் எதிர்காலத்தில் எப்படி  இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

கொரோனா முடிந்து, ஊரடங்கு தளர்ந்த போது எதிர்பார்க்காத அளவில் நிறைய புத்தகங்கள் விற்றன. தொலைக்காட்சியைப் பார்த்து  அலுத்துப்போன மக்கள்  புத்தகங்களை இணையம்  வழியாக வாங்கினர். மாவட்டம்தோறும் இப்போது புத்தக கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இளைஞர்கள் அதிக அளவில் புத்தகம் வாசிக்கத் தொடங்கி உள்ளனர். தமிழ் இந்து நாளிதழ் நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்கிறது. உங்கள் நூலகம், புத்தகம் பேசுது போன்ற இதழ்களும் வாசிப்பு இயக்கத்திற்கு உதவி புரிகின்றன.  எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து, இணையம் வழியாக புத்தகங்களைப்  பெறுபவர்கள் இருக்கிறார்கள்.

சென்னையில் வருகிற ஜனவரி 16,17,18 தேதிகளில் உலகப் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் பல்வேறு பதிப்பகங்களும், ஆர்வலர்களும் கலந்து கொள்கிறார்கள். இதனால் புதிய மொழிபெயர்ப்புகள், தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், மற்ற மொழிகளில் இருந்து தமிழ் மொழிக்கும் வரும்; புத்தகங்கள் குறித்த வணிகரீதியான ஒப்பந்தங்கள் ஏற்படும். அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும் கண்காட்சிகளில் இது மேலும் செழுமை பெறும். பதிப்புத்தொழில் அடுத்தக்கட்ட நகர்வை நோக்கிச் செல்கிறது என்றே கருதுகிறேன்.

நீங்கள் பதிப்பித்த நூல்கள் குறித்து சொல்லுங்களேன் ?

நான் இதுவரை கிட்டத்தட்ட 300 நூல்கள் பதிப்பித்து இருக்கிறேன். அவைகளில் 150 நூல்கள் இப்போது விற்பனையில் உள்ளன. அனகாபுத்தூரில், எனது இல்லத்தில் நான் வைத்திருந்த நூல்கள், 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் அழிந்து போயின. ‘நல்ல புத்தகங்களின் விற்பனையாளர்,  வெளியீட்டாளர்’  என்பதையே பரிசல் புத்தக நிலையத்தின் இலக்காக வைத்துள்ளேன்.

பரிசல் பதிப்பில் வெளியான,  பேராசிரியர் வீரபாண்டியன் எழுதிய ‘பருக்கை’ நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது கிடைத்துள்ளது. ‘இடைவெளி’ என்ற சிறு பத்திரிகை நடத்தினேன். இதற்கு சிறந்த சிற்றிதழ் பிரிவில், சுஜாதா விருதும், ஆனந்த விகடன் விருதும் கிடைத்தன. மத்திய அரசின் செம்மொழி நிறுவன விருது, நான் வெளியிட்ட பா.ஜெய்கணேஷ் எழுதிய ‘யாப்பிலக்கண உரை வரலாறு’, வெ.பிரகாஷ் எழுதிய ‘திணை உணர்வும் பொருளும்’ என்ற நூட்களுக்கு கிடைத்தது.  பேராசிரியர் வீ.அரசுவை சிறப்பாசிரியராகவும் வ.கீதா, பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவன கண்ணன் ஆகியோரை  ஆசிரியர் குழுவாகவும் கொண்டு ‘மாற்றுவெளி’ என்ற ஆய்விதழை நடத்தினோம். முன்பொரு காலத்தில்,  தடைசெய்யப்பட்ட நூல்களான ‘காந்தி ராமசாமியும், பெரியார் ராமசாமியும்’, காந்தியடிகளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் எழுதப்பட்ட ‘காந்தியார் சாந்தியடைய’, பெரியார் ரஷ்யா சென்று வந்த பிறகு எழுதிய ‘தடை செய்யப்பட்ட தலையங்கங்கள்’ என்ற நூல்களை வெளியிட்டுள்ளேன்.

பரிசல் சிவ.செந்தில்நாதன், தமிழ்த்தடம்

இந்த நூல்களுக்கு திராவிட இயக்கப் பத்திரிகையாளரான ப. திருமாவேலன் பதிப்பாசிரியராக இருந்தார். பரிசலின் 25 ஆண்டு விழாவில், ‘தமிழ்த்தடம்’ என்ற காலாண்டு ஆய்விதழைக் வெளியிட்டுள்ளோம். இதற்கு எஸ்ஆர்எம் கல்லூரி பேராசிரியரான பா. ஜெய்கணேஷ் ,  கி்.காவேரி, செல்வகுமார், பகத் அருண், சியாமளா, தேவராஜ் ஆகியோர் ஆசிரியர் குழுவாக இருந்து செயல்படுகிறார்கள். இதனுடைய அடுத்த  இதழும் வந்துவிட்டது.

பா.ரா. சுப்பிரமணியன்விருது கொடுக்கத் தொடங்கி இருக்கிறீர்களே ?

இந்த தமிழ்ச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் பெயரில் விருது கொடுக்க ஆரம்பித்து உள்ளேன். இவர் ஆய்வாளர்; மொழியில் அறிஞர்; கிரியா தமிழ் அகராதியின் முதல் ஆசிரியர்;  . பரிசலின் 25 வது ஆண்டு விழாவில், முதல்  விருதை கவிஞர். றாம சந்தோஷ் – க்கு அவர் கையாலேயே வழங்கச் செய்தோம். ரூ.10,000 த்தோடு விருது, ஆண்டு தோறும் ஒருவருக்கு வழங்குவோம்.

தமிழ்நாட்டில் நூலக இயக்கம் எப்படி உள்ளது ?

தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக நூலக ஆணை  பரவலாக அனைவருக்கும் கிடைப்பது இல்லை. நூலக ஆணை தான் சிறு பதிப்பாளர்களை ஊக்குவிக்கும். நூலகத் துறையைச் செம்மைபடுத்தாமல் பதிப்புத் துறை சிறக்க முடியாது. பதிப்புத் துறையை நம்பி டி.டி.பி ஆபரேட்டர், பிழை திருத்துநர், லேஅவுட் டிசைனர், பிரின்ட்டர், விற்பனையாளர் என ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும்தான் ஒரு புத்தகம் வெளிவர காரணம். இவர்கள் எல்லாரும் உழைப்பதால் தான் ஒரு பதிப்பகம் உயிர்ப்போடு செயல்பட முடிகிறது. ஆனால், நூலக ஆணை கிடைக்கும் போது, செல்வாக்கான ஒரு சில பதிப்பாளர்களுக்கு மட்டுமே எப்படி கிடைக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், கிரியா இராமகிருஷ்ணன் போன்றவர்கள்  எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டார்கள். யாருக்கும் பணம் தர மாட்டார்கள். இப்போது ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியில் மாற்றம் ஏற்படும் என காத்துள்ளோம். நல்லது நடக்கும் என நம்புவோம்.

மற்றவர்களைச் சந்திக்கும் போது புத்தகங்களை அன்பளிப்பாக தர வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தி வருகிறார். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும், புதிதாக உருவாக்கப்பட்டு வரும் கலைஞர் நூலகத்திற்கும் புத்தகங்கள் கேட்டு அறிவிப்பு வந்துள்ளது. எத்தனை நகல்கள், என்பது போன்ற  விபரங்கள் இனிமேல்தான் தெரிய வரும். நூலகங்கள் இப்போது சிற்றிதழ்களை வாங்கத் தொடங்கி உள்ளன. தமிழ்நாட்டு பாடநூல் நிறுவனம் நூல்களை வெளியிடத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே வெளிவந்து, அச்சில் இல்லாத புத்தகங்களை மறுபடியும் அச்சிட்டு வருகிறார்கள். மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுகிறார்கள். இவையெல்லாம் நல்ல அம்சம்.

ஆனால், நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் பெற்று படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றே கருதுகிறேன். பள்ளி அளவில் உலக சினிமாக்களை திரையிடுவது, பத்திரிகைகளை நடத்துவது போன்ற நல்ல நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை எடுத்து வருகிறது. எனவே, இது,போன்ற சாதகமான நடவடிக்கைகள்  நூலகத்துறையிலும் தொடரும்  என நம்பலாம்.

முன்பெல்லாம் சென்னை அண்ணாசாலை மாவட்ட மத்திய நூலக (எல்.எல்.ஏ.பில்டிங்) கட்டட நூலகத்தில் கலை, இலக்கியம், அரசியல் சார்ந்த நிகழ்வுகள் ஏதேனும் நடந்த வண்ணம் இருக்கும். அப்போது, நிறைய பதிப்பகங்கள் புத்தகங்களை விற்பார்கள். பிறகு அங்கு நிகழ்ச்சி நடப்பதற்கு காவல்துறை அனுமதி என்று கொண்டு வந்தார்கள். இதனை கே. சந்துரு, நீதிபதியாக இருக்கும்போது  ரத்து செய்துவிட்டார். எனவே, நடைபெறும் கூட்டங்களைத்  தடுக்கும் வகையில்,  ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் எல்.எல்.ஏ. கூட்ட அரங்கின் வாடகையை உயர்த்தி விட்டார்கள். இதனால் கூட்டம் நடைபெறுவது குறைந்து விட்டது. இதன் வாடகையை தமிழக அரசு குறைக்க வேண்டும். எழுத்தாளர்களும் பாரபட்சமின்றி, குழு மனப்பான்மையை கைவிட்டு நல்ல நூல்களைப் பற்றி பேச வேண்டும். இலக்கிய அமைப்புகள் புத்தகங்களைப் பற்றி பேச வேண்டும். ஒரு புத்தகம் வெளி வந்து விட்டால், அதைப் பற்றி பேசுவதை யாரும் தடுக்கக் கூடாது.

ஆவணப் படத் திரையிடல், நூல் விமர்சனங்கள்..உள்ளிட்ட பல நிகழ்வுகளை நிறைய செய்துள்ளீர்கள் அல்லவா..?

திருவான்மியூர் பனுவல் நூல் நிலையத்தில் நான் இரண்டு ஆண்டுகள் பணிபுரித்தேன். அங்கு ஒயாமல் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தினோம். அதில் தான் முதலில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தன் மீதான கருத்துரிமை தாக்குதலைப் பற்றி வாசகர்களிடையே பேசினார்.  ஏற்கனவே மக்கள் திரைப்பட இயக்கம், ‘படப்பெட்டி’ சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் அதே அரங்கில் புத்தக விமர்சனம், ஆவணப்படம் திரையிடல், நாடக அரங்கேற்றம், தொல்லியல் சுற்றுலா என பல நல்ல நிகழ்வுகளை முன்னெடுத்தோம்.  இதன் மாதிரியில் பல சிற்றரங்குகள் பின்னர் உருவாயின.

நீங்கள் பல ஆய்வு மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறீர்களே ?

‘தீக்கதிர்’ குமரேசனோடு சேர்ந்து தமுஎச கிளையை எம்எம்டிஏ காலனியில்  உருவாக்கினோம்.  அதன் வழியாக எனக்கு பேராசிரியர் வீ்.அரசு தொடர்பு கிடைத்தது. அவர் மூலமாகத்தான் நான் பதிப்புத் துறைக்கு வந்தேன். சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களை வைத்து  கருத்தரங்குகள் நடந்தன. அவைகளை நூல்களாக வெளியிட்டேன். ‘கங்கு’ வரிசை நூல்கள் என்று அவை அழைக்கப்பட்டன. ஆய்வு மாணவர்களுக்கு தேவையான நூட்களை அலைந்து தேடி பெற்றுத் தருவேன். பழைய புத்தக கடைகளில் அப்போதெல்லாம் நல்ல புத்தகங்கள் கிடைத்தன. ஆகச் சிறந்த அரிய நூல்களை வணிக சமரசமின்றி தொடர்ந்து கொண்டு வருவதனால் பதிப்புலக வரலாற்றில் ‘பரிசல்’  இடம் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

நேர்காணல்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time