ஊழல் மன்னன் எஸ்.பி.வேலுமணி முறைகெடான டெண்டர் வழக்கின் எப்..ஐ.ஆரில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். ‘போதுமான வலுவான ஆதாரங்கள் இல்லையாம்’! தேர்தலுக்கு முன்பே வேலுமணி குறித்த முழு ஆதாரங்களையும் ஆளுநரிடம் கொடுத்தவர் ஸ்டாலின்! எனில், அந்த ஆதாரங்கள் என்னானது?
திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் கோவை சென்று மிக அதிகமாக வறுத்தெடுத்தது வேலுமணியைத் தான்! ”எல்.இ.டி பல் தொடங்கி பினாயில் வரை ஒவ்வொரு அயிட்டத்திற்கும் பல மடங்கு கூடுதல் விலை வைத்து உள்ளாட்சித் துறையை சூறையாடிய வேலுமணியை நாங்க ஆட்சிக்கு வந்தால் உள்ளே தள்ளுவோம். இது உறுதி” என்றார்.
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி வேலுமணி இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை 60 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அதில் 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கம், 34 லட்சம் கிரிடோ கரன்ஸி முதலீடு மற்றும் சில ஆவணங்கள் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது! அடுத்து இரண்டாவது முறையும் கோவை மாவட்டத்தில் உள்ள 41 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 59 இடங்களில் சோதனை நடைபெற்றது. ஆனால், அதன் பிறகு கைதும் இல்லை, நடவடிக்கைகளும் இல்லை.வேலுமணி ஊழல் செய்து குவித்துள்ளதோ பல்லாயிரம் கோடிகள் இருக்கும். ஆனால், அரசோ அவர் மீது வெறும் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி சொத்து சேர்த்ததாக மட்டுமே வழக்கு போட்டு உள்ளது.
இதைத் தான் நாம் முன்பே அறம் இணைய இதழில்,
‘வேலுமணி மீதான ரெய்டுகள் நாடகமா? கண் துடைப்பா?’
என்று எழுதினோம்.
அந்த வகையில் தற்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”டெண்டர் வழக்கில் அமைச்சரின் சகோதரர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகக் கூறுவதால் மட்டுமே வேலுமணியை வழக்கில் சேர்க்க முடியுமா? அரசியல்வாதிகள் எல்லாம் ஊழல்வாதிகள் என்றொரு பொதுக் கருத்து நிலவுகிறது. அந்த பொதுக் கருத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது. ஜனநாயகத்தில் அரசியல்வாதிகளை தவிர்த்துவிட முடியாது. அதிகாரத்தில் உள்ள கட்சிகள் எதிர்கட்சிகளை வேட்டையாட அனுமதிக்க முடியாது. அதிகாரத்தில் இருக்கக்கூடிய கட்சிகளின் இசைக்கு ஏர்ப நடனமாடும் வேலையைத் தான் காவல்துறையினர் செய்து வருகிறார்கள் என்பது இந்த வழக்கில் தெளிவாகத் தெரிகிறது” எனக் கூறியுள்ளனர்.
நீதிபதிகளின் இந்த கருத்து விசாரணையை கடுமையாக பாதிக்கும். இந்த வழக்கில் மட்டுமல்ல, மற்ற அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணையையும் கூட மிகக் கடுமையாக பாதிக்கும். எப்படி இது போல் கூற முடிகிறது? மேலும், நீதிமன்றம் பேசி இருப்பவை எல்லாம் இந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாதவை, வரம்பு மீறியவை என்றே தோன்றுகிறது.
அமைச்சரின் சகோதரர்களுக்கும், பினாமிகளுக்கும் டெண்டர் ஒதுக்கப்பட்டு உள்ள உண்மையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது! ஆனால், ”அதற்காக அமைச்சரை வழக்கில் சேர்க்க முடியுமா?” என கேள்வி எழுப்புகிறது?
”ஏன் சேர்க்க முடியாது”? என்பதே நம் கேள்வி!
தனது சகோதரர்களான அன்பரசன், செந்தில் ஆகியோரை உள்ளாட்சித் துறையின் டெண்டர்களை கைப்பற்ற களமிறக்கினார் வேலுமணி. சகோதரர்கள் இருவரும் தங்களின் நண்பர்கள் மூலம் 18 நிறுவனங்களை உருவாக்கி அந்த நிறுவனங்களுக்கே மொத்த காண்ட்ராக்ட்டுகளும் கிடைக்க ஏற்பாடு செய்தனர் என்பது அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டிலும் உள்ளன! விசாரணையிலும் தெரிய வந்துள்ளது. இதற்கெல்லாம் அமைச்சரை பொறுப்பு ஆக்காமல் வேறு யாரை பொறுப்பு ஆக்குவது?
அதே சமயம் வேலுமணிக்கு நற்சான்றிதழ் வழங்க நீதிமன்றம் தயாராக இல்லை. என்றதையும், முறையான ஆரம்பகட்ட விசாரணையே நடக்கவில்லை என சுட்டிக் காட்டி இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, அரசின் மீது தான் தவறு இருக்கிறது! வேலுமணி ஊழல்களுக்கு எல்லாம் துணை போன ஊழல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை வழக்கில் முறையாக சேர்க்காமல் தவிர்த்துள்ளது திமுக அரசு என்பது தான் பெரும் பிழையாகும். அவர்களை காப்பாற்ற நடந்த முயற்சிகளால் வேலுமணியையும் தப்ப விட்டுவிட்டனர் என்றும் கூறலாம்!
ஊழலுக்கு உடந்தையாக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ், பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், டாக்டர் கே.எஸ். பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், எஸ்.பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், குமரவேல்பாண்டியன் ஐ.ஏ.எஸ், விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்டவர்கள் மீது ஏன் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்பதை திமுக அரசாங்கம் விளக்க வேண்டும். மேலும் இந்த அதிகாரிகள் எல்லாம் தற்போது மிகவும் பாதுகாப்பாக நல்ல துறைகள் தந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை நாம் புரிந்து கொண்டால் வேலுமணி விடுவிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
முதலாவதாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக அவர்கள் இலாக்கா இல்லாமல் முடக்கி வைக்கப்பட வேண்டும். இவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், விசாரணை வேகமெடுக்க வேண்டும் என நாம் அறத்தில் எழுதினோம்.
அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது. அதில் பல ஆதாரங்களை அவர்கள் சமர்பித்து இருந்தனர்.
அவற்றில் சில;
# ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டு இருந்தது. இது ஒரே நபர் தான் பல கம்பெனிகளை பினாமியாக வைத்து செயல்படுகிறார் என்பதற்கான சான்றாகிறது.
# பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன, வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது.
# பல கட்டங்களில் பெரும் பணம் விளையாடி உள்ளது. தார்ச் சாலை போடுவதில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்து கொடுத்தனர்.
# மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பதில் ஊழல்,
# அரசு நிலத்தை ஆக்கிரமித்து அம்மா ஐ.ஏ.எஸ் அகடாமி நடத்திய ஊழல்.. எனப் பல முறைகேடுகளின் பட்டியலை அறப்போர் இயக்கம் விலாவாரியாக தெரிவித்து இருந்தது.
வேலுமணி நாடறிந்த அராஜகமான ஊழல் பேர்வழி! ‘அவர் எப்படியெல்லாம் ஊழல் செய்தார்’ என்பது கோவை மாவட்டத்தில் பாமரருக்கும் தெரிந்த சங்கதியாகும்.
கோவை நகரத்தினுடைய குடிநீர் விநியோகிக்கும் உரிமையை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு 26 ஆண்டுகால ஒப்பந்ததில் கையெழுத்திட்டு கொடுத்தது ஒன்று போதாதா? இந்த மனிதனை வாழ் நாளெல்லாம் சிறைக் கொட்டடியில் தள்ள!
பல ஆண்டுகளாக மாநகராட்சிகளில் துப்புரவு பணி செய்த அடித்தட்டு ஏழைகளான எளிய சுகாதாரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்துவதற்கு கூட லட்சங்களில் லஞ்சம் பெற்றக் கொடிய மனிதர் இவர்!
ஆனால், இவர் பாஜகவிற்கும்,ஆர்.எஸ்.எஸ்சுக்கும் செல்லப் பிள்ளையாக செயல்படுகிறார். அவர்களின் பேரன்பை பெற்றவராக விளங்குகிறார்! அதனால் தான் இவர் மீதான வழக்கில் வேலுமணிக்காக மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரல் எஸ்.வி.ராஜிவே ஆஜரானார். ஆக, பாஜகவின் அழுத்தங்களும் மேற்படி பின்னடைவுகளுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆகவே, நீதிமன்றம் கூறியுள்ளதிற்கு ஏற்ப மறுபடியும் விசாரணை நடத்தி வேலுமணியை குற்றவாளியாக எப்.ஐ.ஆரில் சேர்க்க எந்தத் தடையும் இல்லை எனக் கூறியதை ஒரு சாதக அம்சமாக எடுத்துக் கொண்டு, திமுக அரசு உண்மையான அக்கறையுடன் ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுமா? அல்லது ஊழல்வாதிகளை வழக்கில் இருந்தே வெளித் தள்ளி விடுமா என்பதை வருங்காலம் தான் தெளிவுபடுத்தும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
உண்மையான பதிவு… மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்துவிட்டு கொக்கரிக்கும் இவரைப் போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் அரசு தயங்குவது ஏன் ?
அவருக்கும் திருட வேறவழியில்லாம ஐஏஎஸ் க தான் உதவுறாங்க அவங்கள மாட்டிவிட்டா ஆளாளுக்கு அண்ணாமலை ஆகி கதறவிட்டுருவாங்க.