கிழங்குகளில் உள்ள மருத்துவ குணங்கள்!

-எம்.மரிய பெல்சின்

காய்கறிகள், கீரைகளில் மட்டுமல்ல, கிழங்குகளிலும் சத்துகள், மருத்துவ குணங்கள் உள்ளன! பொதுவாக கிழங்குகள் வாய்வுக் கோளாறை ஏற்படுத்தும் என்பதால் வாய்வு, வாதக்கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பார்கள்! சில கிழங்குகளின் சுவையும், மருத்துவ குணங்களும் அபாரமானவை!

எல்லோருக்கும் விருப்பமான உணவுகளில் கிழங்கு வகைகளும் நிச்சயம் இடம் பெறும்.

கருணைக் கிழங்கு;

கிழங்குகளில் கருணைக் கிழங்கை மட்டுமே மிக முக்கியமானதாக வள்ளலார் சொல்கிறார். பெயரிலேயே கருணை குடி கொண்டிருக்கிறது! காரணம், மூல நோய் உள்ளவர்களை கருணை காட்டி குணமாக்கும் என்பதால் தான்! கருணைக் கிழங்கில் இரு வகை உள்ளன! அவற்றில் காரும் கருணை என்ற பிடி கருணைக் கிழங்கு தான் சிறப்பானது. பிடி கருணையை சமைப்பதற்கு முன்பு முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்தால், அதன் காரத் தன்மைக் குறையும். இல்லையென்றால், கடுமையான நாக்கு அரிப்பு தரும்.

பிடி கருணைக் கிழங்கு!

கருணைக்கிழங்கு நல்ல பசியைத் தூண்டும் .உடல் எடையைக் குறைக்கவும் சிலர் உட்கொள்வர். கால்சியம் நிறைந்திருப்பதால் எலும்புக்கு பலம் தரும். பித்த அளவை சீராக வைத்திருக்க உதவும். வாரத்தில் ஒரு நாளாவது உணவில் சேர்ப்பது நன்று.

உருளைக் கிழங்கு;

சாம்பார், புளிக்குழம்பு, காரக்குழம்பு, மட்டன், சிக்கன் போன்ற இறைச்சிகளுடன் சேர்த்து சமைக்கப்படும் உருளைக் கிழங்குக்கு நிறைய ரசிகர் பட்டாளமே உண்டு.

குழந்தைகள் இரண்டு வயதை அடைந்ததும் நன்றாகக் குழைய வேக வைத்த உருளைக்கிழங்கை ஊட்டி ஊட்டி வளர்ப்பார்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்தெடுத்த பிறகு நன்றாக மசித்து நெய், மிளகு, உப்பு சேர்த்து கொடுப்பார்கள். ஆனால், நம்மில் பலர் சிப்ஸ் போன்று எண்ணெயில் வறுத்துச் சாப்பிடுவதையே விரும்புகிறோம். இதேபோல் உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து வேகவைத்து எடுத்து இரண்டையும் நன்றாகப் பிசைந்து எடுத்துக் கொள்வார்கள். அதனுடன் நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், உப்பு என எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து வட்ட வடிவில் தட்டி எடுத்து பிரட் தூள் சேர்த்து எண்ணெயில் புரட்டி எடுத்துச் சாப்பிடக் கொடுப்பார்கள். உருளைக்கிழங்கு, முட்டை சேர்த்து செய்த இந்த கட்லெட்டை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

உருளைக் கிழங்கு

தோலுடன் சேர்த்து வேக வைத்த உருளைக் கிழங்கில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்பதால், தோலுடன் வேக வைத்து எடுத்து பயன்படுத்தலாம். இப்படி சாப்பிடுவதால் உடல் வனப்பு பெறும். வாய்வை உண்டாக்கும் என்பதால் தான் இஞ்சி, புதினா சேர்த்துச் சமைப்பார்கள். அப்படியும் வாய்வு சேர்கிறது என்றால், வேக வைத்த பூண்டு சாப்பிடுவது நல்லது. பொதுவாக உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் வயிற்றுப்புண் சரியாவதுடன் வயிறு மற்றும் குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் சரியாகும். பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய நோயாளிகளுக்கு நல்லது. மண் பரப்பில் விளையக்கூடியவை சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாது என்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.

கார்போஹைட்ரேட் அதிகமாகவும் புரதம் குறைவாகவும் உள்ள உருளைக்கிழங்கை மெலிந்த தேகம் உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லது. உடல் எடை அதிகரிக்க உருளைக்கிழங்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். எடையை அதிகரிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு தினமும் உருளைக்கிழங்கு சாப்பிடுவது தவறானது. உருளைக்கிழங்கு பிரியர்கள் அளவாகச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்து வந்தால் பிரச்சினை ஏதும் ஏற்படாது. பச்சை உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் ஆக்கி தேனுடன் கலந்து உடலில் பூசினால் சருமம் மிளிரும். மேலும் முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் புள்ளிகளை குணப்படுத்த உதவும்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு;

தென்தமிழகத்தில் சீனிக்கிழங்கு என்று அழைக்கப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு அனைத்து வயதினரும் சாப்பிட ஏற்ற ஒரு கிழங்கு. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவும், மாவுச்சத்தும் நிறைந்த இந்தக் கிழங்கில் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் கிழங்கி 70 முதல் 90 கலோரி ஆற்றல் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோயாளிகளுக்கு ஏற்ற இந்த கிழங்கில்  கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம். அதற்காக எல்லை மீறக்கூடாது.  உடல் ஆரோக்கியம் மற்றும் தோல் நரம்பு மண்டல செயல்பாட்டுக்கு உதவக்கூடியது. குறிப்பிட்டு சொல்வதென்றால் உடலுக்குத்தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும். நுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. புற்றுநோய் வராமல் தடுக்குமேயொழிய நோயை குணமாக்கும் என்பதற்கான ஆய்வுகள் ஏதும் செய்யப்படவில்லை.

உருளைக்கிழங்கைவிட சர்க்கரை வள்ளிக் கிழங்கில் கலோரி அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்க உதவும். இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் எலும்புகள் வலுப்பெற உதவும். இவை மட்டுமல்ல முதுமையின் தளர்வுகளைக் குறைத்து இளமை ததும்ப செய்யும். குறிப்பாக பார்வைக் குறைவு மற்றும் சரும சுருக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் படைத்தது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. நாம் உண்ணும் உணவு செரிமானத்துக்குப் பிறகு கழிவாக வெளியேறாமல் மலச்சிக்கலை ஏற்படுத்தி நாளடைவில் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை ஏற்படாமலிருக்க வேண்டுமானால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வந்தால் போதும்.

நார்ச்சத்து நிறைந்திருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து குடல் பகுதியில் புற்று நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளும். சீனிக்கிழங்கு எனப்படும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வெறுமனே உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிடும் பழக்கம் விவசாய பெருமக்கள் மத்தியில் உள்ளது. உருளைக்கிழங்கில் கூட்டு, பொரியல் செய்வதுபோல் இதையும் செய்யலாம். கிழங்கை வேக வைத்து கடலை மாவு மற்றும் வடைக்கு செய்ய தேவையான பொருள்களைச் சேர்த்து வடை செய்தும் சாப்பிடலாம். சாப்பிட சுவையாக இருக்கும் இந்த வடையை மாலைவேளையில் ஒரு சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.

பனங்கிழக்கு

தென் மாவட்ட – குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை மக்களின் முதன்மையான உணவாக பனங்கிழங்கை கூறலாம். பனங்கிழங்கில் பல்வேறு வகைகளில் உணவாக சாப்பிடும் கலை இவர்களுக்கு தெரியும்! பனங்கிழங்கு பொதுவாக நார்சத்து மிகுந்தது. ஆகவே மலச்சிக்கலை தீர்க்க வல்லது.

உடம்புக்கு குளிர்ச்சி தரும். பனங் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமை பெறும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட  சாப்பிடலாம். சர்க்கரை மட்டுப்படும்! பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும். மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடம்பில் சதை சேரும். பலம் பெருகும்!

ஆக, கிழங்குகளில் உள்ள மருத்துவ குணங்களை அறிந்து அளவுடன் சாப்பிட்டு பலன் பெறுவோம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்,

மூலிகை ஆராய்ச்சியாளர்,

கைபேசி; 95514 86617

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time