டிஜிட்டல் கரன்சின்னா என்ன? க்ரிப்டோ கரன்சி ஆபத்தா?

-செழியன் ஜானகிராமன்

மத்திய அரசு டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளது.  இதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள், மாற்றங்கள் என்ன?  க்ரிட்டோ கரன்சி யை வாங்க வைக்க  பல முயற்சிகள் நடக்கின்றன! க்ரிப்டோ கரன்சியை வாங்கலாமா?  தாறுமாறாக நடக்கும் க்ரிப்டோ கரன்சி மோசடிகளுக்கு என்ன தீர்வு? 

க்ரிப்டோ கரன்சியை இந்திய அரசே வெளியிடப் போகிறது என்று பலர் நினைத்துக் கொண்டு இருந்தனர். அதன் முன்னோடியாக தான் முன்கூட்டியே க்ரிப்டோ வர்த்தகத்திற்கு வரி விதிக்கப்பட்டுள்ளது என்றும் கிரிப்டோ வர்த்தகத்தில் ஈடுபட்ட வந்துள்ளவர்கள் பேசி வந்தனர்.

இந்தக் கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு க்ரிப்டோ கரன்சிக்கும் – டிஜிட்டல் கரன்சிக்கும் உள்ள வித்தியாசங்களைப் பார்ப்போம்!

டிஜிட்டல் கரன்சி என்பது புதியதான ஒன்றல்ல. சில வருடங்களாகவே நாம் டிஜிட்டல் கரன்சி உபயோகித்து வருகிறோம். சிறிய டீ கடையில் கூட டீ குடித்து 10 ரூபாயைக் கூகுள் பே (Gpay) வழியாகப் பணம் அனுப்புகிறோம். அந்த டீக்கடைக்காரர் மளிகைக் கடைக்குச் சென்று கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி பணத்தைக் கூகுள் பே வழியாக மளிகை கடைக்காரருக்கு அனுப்புகிறார்.

இந்த இரண்டு பரிவார்த்தனையில்  நேரிடையாக பணத்தாள் பயன்படுத்தவில்லை. டிஜிட்டல் வழியாக வெறும் எண்கள் பரிமாறப்பட்டது. இதுவும் டிஜிட்டல் கரன்சிதான். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பணத்தாள் பயன்படுத்தாமல் மொபைல், கம்ப்யூட்டர்  வழியாக அனுப்பப்படும் பணப் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் கரன்சிதான். இதையே சில மாறுதல்கள் கொண்டு அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிட்டுள்ள கரன்சிதான் டிஜிட்டல் கரன்சி ஆகும்.

சரி டிசம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட டிஜிட்டல் கரன்சி என்ன மாற்றங்களைக் கொண்டு வரும்? எப்படிச் செயல்படுகிறது?

தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாய்த் தாள் மதிப்பிலேயே டிஜிட்டல் ரூபாய் வெளியிடப்படுகிறது. அதாவது 1 ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்று என்ன விதங்களில் பணம் தாள் உள்ளதோ, அதே வகையில் டிஜிட்டல் ரூபாய் இருக்கும்.  இந்த டிஜிட்டல் ரூபாயை ஒரு  wallet வழியாகச் சேமித்து வைக்க, பரிமாற்றம்  செய்ய முடியும். வங்கி கணக்கு தேவை இல்லை.

பணத்தாள் போன்றே டிஜிட்டல் கரன்சியும் வங்கி வழியாகவே மக்களுக்குச் செல்லும். முதல் கட்டமாகச் சோதனை அடிப்படையில் 4 வங்கிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ பாங்க், யெஸ் பாங்க், ஐ.டி.எப்.சி பாங்க் இதை செய்யும். (State Bank of India, ICICI Bank, Yes Bank and IDFC First),  4 நகரங்களில்(Mumbai, New Delhi, Bengaluru and Bhubaneswar) சில குறிப்பிட்ட வாடிக்கையாளர் மூலம் சோதிக்கப்படுகிறது.

பிறகு 4 வங்கிகள் இதில் இணைகின்றன! அவை பாங்க் ஆப் பரோடா, யுனியன் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எப்.சி பாங்க், கோடாக் மகெந்திரா ஆகியவையாகும்! (Bank of Baroda, Union Bank of India, HDFC Bank and Kotak Mahindra)  அதே போல் சோதிக்கும் நகரங்களும் விரிவு படுத்தப்படுகிறது. (Ahmedabad, Gangtok, Guwahati, Hyderabad, Indore, Kochi, Lucknow, Patna and Shimla).

இந்த இரண்டு சோதனை முயற்சி வெற்றி அடைந்து இதில் ஏற்படும் இன்னல்களை களைந்து பிறகு நாடு முழுவதும் அனைத்து மக்களும், அனைத்து வங்கிகளும் பயன்படுத்தப்படுத்தும் நிலை வரும்.

இதே நேரத்தில் கையால் பரிமாறும் பணமும்   பயன்பாட்டில் இருக்கும். டிஜிட்டல் கரன்சி தற்போது இணையம் வழியாகப் பரிமாறப்பட்டு வருகிறது. இணையம் இல்லாமல் எப்படிப் பயன்படுத்துவது போன்ற முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.  முழுவதும் டிஜிட்டல் கரன்சி மட்டும் பயன்படுத்தும் நிலை வர 10 ஆண்டுகள் மேல் ஆகும்.

தற்பொழுது google pay பயன்படுத்துபவர்கள் அனைவரும் இந்த டிஜிட்டல் கரன்சியை எளிமையாகப் பயன்படுத்தலாம்.

இப்பொழுது க்ரிப்டோ கரன்சியை பார்ப்போம்!

ஒரு நாட்டின் கரன்சி அந்த நாட்டின் மத்திய வங்கி தான் வெளியிடும். மக்களால்  அதை வெளியிட முடியாது. அப்படி இருப்பதால்தான் பணம் என்றும் மதிப்பு மிக்கதாக உள்ளது. யார் வேண்டுமென்றாலும் வெளியிடலாம் என்ற நிலை இருந்தால் அதற்கு மதிப்பும் இருக்காது, நம்பகத்தன்மையும் இருக்காது. இதுதான் க்ரிப்டோ கரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் கரன்சி தெளிவாக அதன் மதிப்பைக் குறிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பு எந்த காலத்திலும் மாறாது. ஒரு ரூபாய் டிஜிட்டல் கரன்சி எந்த ஆண்டும் ஒரு ரூபாய் தான். அவை இரண்டு ரூபாயாக மாறாது. ஆனால், இங்கு தான் கிரிப்டோ கரன்சி மாறுபடுகிறது.

ஓர் கிரிப்டோ கரன்சி மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். அதே போல் குறைந்து கொண்டும் வரும். நிலையாக ஒரு மதிப்பு அதற்கு இருக்காது.  1 ரூபாய் 2 ரூபாயாக மாறும், 100 ரூபாயாகவும் மாறும்! அதே போல் மதிப்பு குறைந்து 50 பைசா வரும்! சில நேரம் பூஜ்யம் கூட ஆகிவிடும்!  நிலையான மதிப்பு இல்லாததால் க்ரிப்டோ கரன்சியை  நம்பி எந்தச் செயலும் செய்ய முடியாது. செய்ய முயற்சித்தால் நம்பகத் தன்மை போய்விடும்.

சிறு அளவிலான நம்பகத் தன்மை கூட இதன் மீது வைக்க முடியாததற்குக் காரணம், க்ரிப்டோ கரன்சியை வெளியிடுவது ஒரு நாட்டின் மத்திய வங்கி இல்லை. தனி நபரால்  வெளியிடப்படுகிறது. அதனால், அந்த நபரின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த கரன்சி செயல்படும். இதனால் மோசடிகள் தான் அதிகம் நடைபெறுகிறது.

க்ரிப்டோ கரன்சியின்  விலை மாறுதல்களை ஒரு உதாரணம் மூலம் பார்த்தால் இவை ஒரு ஆபத்தானது மட்டும் இல்லாமல் அவசியமற்றதும் ஆகும் என்று தெரிந்து கொள்ளலாம். கடந்த ஜனவரி 1ஆம் தேதி ஒரு பிட்காயின் விலை 37 லட்சம் ஆகும். இன்று ஒரு பிட் காயின் விலை 13 லட்சம் ரூபாய் ஆகும். 37 லட்சம் கொடுத்து வாங்கியவரின் நிலை என்னாவது?

எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சி ஒன்று 3 லட்சம் ரூபாயாக  இருந்தது தற்பொழுது அதன் விலை 96 ஆயிரம் ரூபாயாக உள்ளது.  FTX என்ற க்ரிடோ கரன்சி நவம்பர் 7ஆம் தேதி 1,760 ரூபாயாக இருந்து மறுநாளே 400 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்து இன்று 104 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இதேபோல்  அடுத்தடுத்து  வரும் க்ரிப்டோ கரன்சி விலை குறைந்து கொண்டே  உள்ளது! சில கிரிப்டோ கரன்சிகள் ஆட்டத்தை விட்டே வெளியேறிவிட்டது. அதாவது, முற்றிலும் வீழ்ச்சி அடைந்து பணம் போட்டவர்கள் ஏமாந்து போனார்கள்.

இதற்கு எல்லாம் காரணம், கிரிக்கெட் பார்க்க வந்த நபரைக் கூப்பிட்டுச் சிறந்த ஆட்ட நாயகன் விருது கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது, க்ரிப்டோ கரன்சி விலை விலை உயர்வும், தாழ்வும்! சிறிதும் மதிப்பு இல்லாத க்ரிப்டோ கரன்சியை செயற்கையாக விலை உயர்த்தி, அனைவரையும் வாங்க வைத்து ஏதாவது சிறு தகவல்கள் கூட முதலீடு செய்தவர்களைக் கலவரம் செய்து அப்படியே க்ரிப்டோ கரன்சி விலை சரிந்து காணாமல் போய் விடுகிறது!

தங்கத்தை அடமானம் வைக்கலாம் அல்லது விற்று பணமாக மாற்றலாம்! வாங்கிய விலையில் நஷ்டம் வராது. இது போல் எந்த சிறு மதிப்பும் இல்லாத க்ரிப்டோ கரன்சியை வாங்கி ஏமாந்து போனவர்கள் தான் இன்று அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள். நாளும், பொழுதும் இவை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!

இங்குதான் டிஜிட்டல் கரன்சி vs கிரிப்டோ கரன்சி வித்தியாசத்தைக் கவனிக்க வேண்டும்.

ஒரு ரூபாய் மதிப்பு உள்ள டிஜிட்டல் கரன்சி என்றும் அதே மதிப்புதான்.

ஒரு ரூபாய் க்ரிப்டோ கரன்சி மறுநாளே ஐந்து ரூபாயாக மாறலாம் அல்லது பூஜ்யம் ஆகலாம்.

டிஜிட்டல் கரன்சி நாட்டின் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. முறைப்படுத்தச் சட்ட திட்டங்கள் உண்டு.


கிரிப்டோ கரன்சி தனி நபர்கள் வெளியிடுகிறார்கள். எந்த சட்ட திட்டங்களும் இல்லை. முறைப்படுத்தபடுவதும் இல்லை. இதை விளம்பரமாகவே க்ரிப்டோ கரன்சி விளம்பரங்களில் பார்க்கலாம்.

டிஜிட்டல் கரன்சியை நாட்டின் வங்கி வழியாகவே மக்களைச் சென்று சேர்கிறது. கண்காணிக்க மத்திய வங்கி உள்ளது.

கிரிப்டோ கரன்சி யார் வேண்டுமானாலும் வெளியிடலாம்! யாரும் கண் காணிக்கவில்லை. இணையத்தில் நேரடியாக வாங்கலாம்.

ஒரு டிஜிட்டல் கரன்சி மற்றவர்களுக்குக் கொடுத்தால்,  அதற்கு ஈடாக அவர்கள் பொருள் கொடுப்பார்கள்.

க்ரிப்டோ கரன்சி மற்றவர்களுக்குக் கொடுத்தால் அதற்கு ஈடாகப் பணம் கொடுக்க வேண்டும். பணம் என்பது ஒன்றை வாங்கத்தான் பயன்படுத்துகிறோமோ தவிர, பணத்தையே பணம் கொடுத்து வாங்குவது தான் க்ரிப்டோ கரன்சி ஆகும்.

கடந்த ஆறு மாதத்தில் அனைத்து க்ரிப்டோ கரன்சிகளும் அதளபாதாளத்தில் விழுந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் ஆகும். ஊழலில் சம்பாதித்தவர்கள் வேண்டுமானால் இதில் முதலீடு செய்து அழிந்து போகட்டும். ஆனால், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இதில் முதலீடு செய்யாதீர்கள்!

அரசு வெளியிடும் டிஜிட்டல் கரன்சியை பயன்படுத்துவோம். எந்த காரணம் கொண்டும் க்ரிப்டோ கரன்சி பக்கம் செல்லாதீர்கள். சிறு சேமிப்பை முழுவதும் இழந்துவிடுவீர்கள். நிறைய பேர் வலை விரிக்கிறார்கள், சிக்கிவிடாதீர்கள்!

இன்று ”க்ரிப்டோ கரன்சி சிறந்தது” என்று சொல்லும் சிலரின் உள் மனம் கூட, ‘இது ஒரு ஆபத்தான சூதாட்டம்’ என்று சொல்லும். ஆனால், அது வெளியே கேட்பதில்லை.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time