கடுகைக் கொண்டு காவு கேட்பதா மனித உயிர்களை?

-சாவித்திரி கண்ணன்

அணுகுண்டைவிட ஆபத்தானது விஷமாக்கப்பட்ட விதைகள்! இதில் எந்த உயிரும் தப்ப முடியாது! விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரால் விவசாயிகளிடம் திணிக்கப்படும் விதைகளால் விவசாயமும், மனித குலமும் பேரழிவை சந்திக்கின்றன! கடுகு விவசாயத்தில் வரவுள்ள மலட்டு விதைகளின் விளைவுகள் எப்படி இருக்கும்?

கடுகு இந்தியாவில் அதிக அளவில் வளர்க்கப்படும் எண்ணெய் வித்து பயிராகும், இது மொத்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் 28.6% பங்களிப்பு செய்கிறது. ஆக, இந்தியாவில் நிறைய விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்தியாவில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய கடுகு விதைகள் புழக்கத்தில் உள்ளன! கடுகு விளைச்சலும் இந்தியாவில் அமோகமாகத் தான் உள்ளது! புதிய வகை கடுகிற்கான தேவையே எழவில்லை!

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பது முன்னோர் வாக்கு! ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு தரப்பட்டுள்ளது. அதனால் தான் எல்லா விதக் குழம்புகள், கூட்டு, பொறியல் என யாவற்றிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்! வட இந்தியாவில் மக்கள் கடுகு எண்ணெய்யைத் தான் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

பல நன்மைகளைக் கொண்ட கடுகு, பசியை தூண்டக் கூடியது. இருமலை கட்டுப்படுத்த கூடியது, விஷத்தை முறிக்கவல்லது, ஜீரண கோளாறுகளை சரி செய்ய கூடியது, விக்கலை போக்கவல்லது, ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டது மாத்திரமல்ல, சுவை சேர்க்கும் சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாகும் கடுகு. இது நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகை நாம் இழக்கவிருப்பதை நினைத்தால் வேதனை பொங்குகிறது!

மரபணுமாற்றக் கடுகிற்கு அனுமதி!

இயற்கை தந்த வரமான கடுகை விவசாய ஆராய்ச்சி  என்பதன் பெயரால் அதற்குள் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியாக்களை செலுத்தி புது வகை கடுகை கண்டு பிடித்துள்ளனர்.

இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தியை அனுமதித்த போது, விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் பொருட்படுத்தாமல் விளைச்சல் அமோகமாக இருக்கும் எனக் கூறி அறிமுகப்படுத்தினர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாறாக, ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி, களைக் கொல்லி.. ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்தும் சூழலை அது உருவாக்கிவிட்டது. இதனால், இந்தியாவில் விவசாயிகள் வரலாறு காணாத அளவில் தற்கொலை செய்து மடிந்தனர்! பி.டி.பருத்தி அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் மடிந்துள்ளனர் என்பதை நாம் மறக்கக் கூடாது!

பி.டி.பருத்தியானது இந்தியாவில் புழக்கத்தில் விவசாயிகளிடம் இருந்த பாரம்பரிய பருத்தி விதைகளை எல்லாம் காணாமலடித்துவிட்டது. இன்று இந்தியாவில் மரபணு மாற்றப் பருத்தி தான் 95 சதவிகிதம் பயிரிடப்படுகிறது. இதனால், கிலோ 50 ரூபாய் இருந்த கடுகு விதை தற்போது கிலோ ருபாய் இரண்டாயிரமாகிவிட்டது.

வட இந்தியர்களின் சமையலில் கடுகு எண்ணெய் பிரதானம்.

நாட்டு பருத்தி விளவித்த போது அதில் பருத்திப் பால் குடித்துள்ளோம். அது சிறந்த மருத்துவகுணம் நிரம்பியதாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தியை உணவாகப் பயன்படுத்துவது நல்லதல்ல!

சமீபத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதை உற்பத்திக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் மரபணு பொறியியல் மதிப்பீடு குழு அனுமதி அளித்துள்ளது. டிரான்ஸ்ஜெனிக் கடுகு ஹைப்ரிட் என்ற DMH-11 என்ற பெயரிலான கடுகை டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துவிட்டது. இதை தற்போது உச்ச நீதிமன்றத் தடையையும் மீறி துணிச்சலாக வெட்ட வெளியில் பயிரிட்டும் விட்டனர்!

மரபணு மாற்றக் கடுகிற்கு எதிரான போராட்டங்கள்!

இந்த சூழலில் ஏன் கடுகு குறித்து புதிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது? ஒரு சில  சக்தி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் பலன் பெற இந்த வகையில் விஞ்ஞானத்தின் பெயரால் விஷ வித்தை நுழைக்கிறார்கள்! இதனால், தற்போது கடுகிற்குள்ள மருத்துவ குணங்கள் இல்லாமல் போவதுடன், அது விஷத் தன்மை கொண்டதாகவும் மாறிவிடும்.

ஏற்கனவே இப்படித்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகம் செய்யத் துடித்தனர். அப்போது பெரும் போராட்டம் நடத்தி அதை ஓட,ஓட விரட்டி அடித்தோம்.இந்தக் கடுகை எப்படியாவது மக்கள் மத்தியில் நுழைத்து விட சுமார் ஐந்தாறு ஆண்டுகளாகவே தீவிரமாக முயன்று வருகிறார்கள்! இது சர்வ நாசத்தையே விளைவிக்கும்.

இது ஒரு போரில் ஏற்படும் பேரழிவைக் காட்டிலும் பேராபத்தாக இருக்கும். பல கோடி மனித உயிர்களை பாதிக்கும். சுற்றுச் சூழல் அழிவதால் பூச்சிகளும், தேனீக்களும் கூட பாதிப்படையும். இந்தப் படுபாதச் செயல்கள் அனைத்தையும் விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயராலும், கூடுதல் விளைச்சல் பொய் பிம்பத்தாலும் சரி செய்யப் பார்ப்பது தான் கொடுமை!

மரபணு மாற்றுக் கடுகு விதைகள் விளைவிக்கப்பட்டு புழக்கத்திற்கு வந்துவிட்டால், பிறகு நமக்கு விமோசனமே கிடையாது! இதைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட 21 வகை உணவு பயிர்களையும் பதம் பார்க்க தயாராகி வருகின்றன ஆதிக்க சக்திகள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time