பேனா நினைவுச் சின்னம்! திமுக-பாஜக உறவின் சாட்சியம்!

-சாவித்திரி கண்ணன்

க.செபாஷ்டின், வேலூர்

உழைத்தவர்களை ஓரம் கட்டி ஒண்ட வந்தவர்களுக்கு அரியாசனம் தருகிறது தலைமை என திமுகவின் ஆர்.எஸ்.பாரதி அங்கலாய்துள்ளாரே?

திமுக தொண்டர்கள் பலரின் குமுறலாக அவர் வெளிப்பட்டுதாகவே கருதுகிறேன்.

அதிமுக தலைமை கழித்துக்கட்டிய எச்ச.சொச்சங்களைக் கொண்டு தான் தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா என்ன?

அதிமுகவில் இருந்து வந்த எட்டு பேருக்கு தற்போது அமைச்சர் பதவி! இது போல மாவட்டம் தொடங்கி ஒன்றியம்,வட்டம் வரை அதிமுகவில் இருந்து வந்தவர்களே திமுகவை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆர்.எஸ்.பாரதி

சொந்தக் கட்சிக்காரனுக்கு சூனியம்! அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு ஆலவட்டம் என்பது தொடர்ந்து கொண்டே இருந்தால்.., இது போன்ற கொந்தளிப்புகள் இயற்கை தானே!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

”உதவியின் பெயரால் மதமாற்றம் செய்வது தவறு” என்கிறார்களே உச்ச நீதிமன்ற நீதிபதிகள்?

ஒத்துக் கொள்ள வேண்டிய கருத்து!

புறக்கணிப்பு, அவமானம், சொல்லொண்ணா வேதனை ஆகியவற்றால் சொந்த மதத்தை துறக்கிறார்களே… இப்படிப்பட்டவர்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்பவர்களை சார்ந்து, அவர்கள் செல்வதை நாம் எப்படிப் பார்ப்பது?

அந்நிய மதத்திற்கு செல்ல எளியவர்களை நிர்பந்தப்படுத்தும் சூழலை உருவாக்கிய ஆதிக்க சக்திகளையும் உச்ச நீதிமன்றம் எச்சரிக்க வேண்டும்.

எஸ், ராஜலட்சுமி, மதுரவாயில்

தமிழக பாஜகவில் அண்ணாமலை தனிக்காட்டு ராஜாவாக வலம் வருகிறாரோ…?

கம்பெனி சி.இ.ஓக்களுக்கு கட்டற்ற அதிகாரம் தருவது கார்ப்பரேட் பாணி! இங்கே ஒரு கத்துக் குட்டிக்கு அத்தகைய ஒரு அதிகாரம் கிடைத்திருப்பது தான் காலத்தின் கோலம்!

இது, உட்கட்சி ஜனநாயகத்தையே முற்றிலும் ஊனப்படுத்திவிட்டது. அதிகாரமும், பணபலமும் கட்சியை பலப்படுத்த போதும் என நினைத்து மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் கட்சியை பலப்படுத்துவதற்கு மாற்றாக பாடாய்படுத்துகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழக பாஜகவை கிரிமினல்களின் கூடாரமாக மாற்றும் முயற்சியை எல்.முருகனைத் தொடர்ந்து அண்ணாமலை முன்னெடுத்துள்ளார்!

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

”அதிமுக முடங்கி போனதற்கு ஒ.பி.எஸ், இ.பி.எஸ் தான் காரணம்” என்கிறாரே டி.டி.வி. தினகரன்…?

‘தன்னையே முடக்கி போட்டு விட்டதாக’ சசிகலா, தினகரனை குறித்து உறவினர்களிடம் புலம்பி வருகிறார்! ஒ.பி.எஸ்சையும், இ.பி.எஸ்சையும் சசிகலாவிற்கு எதிரியாக்கியவரும் டிடிவி தினகரன் தான்! இப்படி சகலைரையும் முடக்கிவிட்டு, சகட்டுமேனிக்கு அடுத்தவர் மீது பழியைப் போடுவது அவருக்கு கை வந்த கலையாகும்!

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

மாநில அரசின் மசோதாக்களில் உடனடியாக கையெழுத்து போட வேண்டிய அவசியம் கவர்னருக்கு இல்லை என்கிறாரே தமிழிசை செளந்திரராஜன்?

தமிழிசை செளந்திரராஜன்

அதனால் தான், ‘ஆளுனரே அவசியமில்லை’ என தெலுங்கானா அரசு முடிவெடுத்து தமிழிசையை விரட்டி அடித்துள்ள கதை நமக்கு தெரியாது என நினைத்து பேசுகிறார்!

ஆர்.ரமேஷ், பெங்களூர்

மாணவி ஸ்ரீமதி இறந்த கனியாமூர் பள்ளியின் மூன்றாவது தளத்திற்கு மட்டும் சீல் வைத்து பள்ளியை திறந்துள்ளனரே..?

சம்பவம் நடந்து 100 நாட்களுக்கும் மேலாக ஆன நிலையில் தற்போது தான் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் உள்ளிட்டோர் பள்ளியை பார்வையிட்டு மூன்றாவது தளத்திற்கு சீல் வைத்துள்ளனர். இது நாள் வரை ஒட்டுமொத்த பள்ளியும் பள்ளி நிர்வாகத்தின் கண்ரோலில் இருந்த போது என்னென்னவோ மாற்றங்கள் அரங்கேறி முடிந்திருக்குமே!

பள்ளிக் கூடத்தை அரசே பொறுப்பெடுத்து முன்னமே திறக்க வேண்டி வழக்கறிஞர் எம்.எல்.ரவி வழக்கு தொடர்ந்தார். தமிழக மக்களின் விருப்பமும் அதுவே! ஆனால், பலனில்லை.

கனியாமூர் பள்ளியின் குற்றச் செயல்களுக்கு தொடர்ந்து துணை போவது திமுக ஆட்சிக்கு களங்கமே!

எல். ஞானசேகரன், ஈரோடு

வரலாற்று ஆய்வறிஞர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மகாகவி பாரதியார் விருது அறிவித்துள்ளாரே தினமணி வைத்தியநாதன்?

சலபதி ஆகச் சிறந்த ஆய்வாளர்! இது அறிவு புலத்தில் ஏற்கனவே உறுதிபடுத்தப்பட்ட உண்மை!

வைத்தியநாதன், ஆ.இரா.வேங்கடாசலபதி

‘சலபதி சுயமரியாதை உள்ளவர். தினமணி வைத்தியநாதன் போன்ற ஒரு நபரின் கையால் இது போன்ற அங்கீகாரத்தை ஏற்கமாட்டார், தவிர்த்துவிடுவார்’ என கணித்திருந்தேன்.தவறாகிவிட்டது.

கோமதிநாயகம், கோவை

சென்னை மெரீனாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் எழுப்ப மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தும்படி ஒன்றிய பாஜக அரசு கட்டளை இட்டுள்ளதே?

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க வேறிடமே இல்லையா?

ஏற்கனவே பெரிய நினைவு சின்னம் கடற்கரையில் அமைக்கப்பட்டுவிட்டது. இச் சூழலில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் எத்தகைய சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அந்தப் பொறுப்பை தமிழகப் பொதுப் பணித்துறையிடம் மதிப்பீடு செய்து அறிக்கை தரக் கேட்டுள்ளது! இதிலேயே திமுக –பாஜகவின் கள்ள உறவு அம்பலப்பட்டுவிட்டது.

ஏனெனில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானதே இந்தப் பேனா நினைவுச் சின்னம்!

கருத்துக் கேட்பு கூட்டத்தை கண் துடைப்பு கூட்டமாக நடத்தத் தெரியாதா திமுக அரசுக்கு? தமிழக அரசின் விதி மீறல்களுக்கு தளம் அமைத்து தருகிறது ஒன்றிய பாஜக அரசு! இது என்ன டீலிங்கோ..? மக்களின் எதிர்ப்பு, சுற்றுச் சூழல் விதிமுறை மீறல் ஆகியவற்றைக் கடந்து கடலுக்குள் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் எழுந்தால், அது காலா காலத்திற்கும் பாஜக- திமுக உறவின் நினைவுச் சின்னமாகவும் பார்க்கப்படும்.

எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம்

தமிழகத்தில் சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் காவல்துறையின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனரே..?

’தமிழகக் காவல்துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு காவல் அரணாக விளங்கிறதோ…’ என்ற சந்தேகம் மக்களுக்கே எழுந்துள்ளது. கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம் தொடங்கி பெரம்பலூர் ராஜேஸ்வரி வரை தொடர்ந்து பெண்கள் பலியாவது பதற வைக்கிறது. எதிலும் உறுதியான நடவடிக்கை இல்லையே…! மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வியை மானபங்கபடுத்திய கார்த்திக் பிள்ளை மீது கூட கடுகளவும் நடவடிக்கை இல்லையே…?

சி.பி.எம் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி

கற்பழிப்பு புகார்கள் என்றாலே டி.ஜி.பி. சைலேந்திரபாபு சைலண்ட் மூடுக்கு போய்விடுகிறாரே..? தலைமையே இப்படி இருந்தால் கடை நிலைக் காவலரை என்ன சொல்வது?

அமைச்சர் செந்தில் பாலாஜியே அடியாட்களை வைத்து மிரட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் மாமுல் வசூலிக்கிறார் என டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் குற்றம் சாட்டி உள்ளதே?

திருடன் கையில் அதிகாரம் தரப்பட்டு உள்ளது என்பதற்கு இதை விட வேறென்ன அத்தாட்சி வேண்டும்?

மு. ரத்தினவேல், விருதாச்சலம்

தேர்தல் நிதி பத்திரங்களை அறிமுகப்படுத்தி உள்ளதே ஒன்றிய பாஜக அரசு?

கையூட்டாக, லஞ்சமாக, ஊழல் பணமாக தொழில் அதிபர்கள் இது வரை அரசியல் கட்சிகளுக்கு தந்து கொண்டிருந்த பணத்தை, இனி அதிகாரபூர்வமாக வங்கிகளின் தேர்தல் பத்திரம் வழியாகத் தர வகுக்கப்பட்ட திட்டம் தான் தேர்தல் நிதி பத்திரங்கள்! இன்னும் என்னென்ன அயோக்கியத்தனங்களை சட்டபூர்வமாக்கப் போகிறதோ பாஜக சர்க்கார்!

கருப்பசாமி, அருப்புக் கோட்டை

திறந்த வெளிச் சிறைச் சாலை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளாரே ஆய்வாளர் ஸ்மிதா சக்கரவர்த்தி?

எளிய கைதிகளுக்கு சித்திரவதைக் கூடங்களாக மாறிக் கொண்டிருக்கும் சிறைச் சாலைகளை சீர்படுத்த ஆகச் சிறந்த யோசனை!

கைதிகளை பொதுச் சமூக நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்துவது என்ற ஒரு தண்டனையே போதுமானது. அதே சமயம் அவர்களின் உழைப்பையும், அறிவாற்றலையும் சமூகத்திற்கு பயன்தரத்தக்க வகையில் பயன்படுத்த திறந்த வெளிச் சிறைச்சாலை உதவும்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time