சேதுபதி செப்பேடு சொல்லும் ஆணவப் படுகொலை!

பொ.வேல்சாமி

இரு வேறு சாதிகளுக்கு இடையில் ஏற்பட்ட காதலை அன்றைய சமூகம் எப்படிப் பார்த்தது என்பதற்கு இந்த நிகழ்வே சான்று! கி.பி 1691 ல் இராமநாதபுர சேதுபதி மன்னர் காலச் செப்பேடு ஒரு முக்கிய ஆவணமாகிறது. ‘தமிழ்ச் சமூகத்தில் இப்படியெல்லாம் கூட நடந்திருக்குமா..?’ என அதிர்ச்சியின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது!

சேதுபதி அரசர் காலத்தின் அந்த செப்பேட்டில் வேலாந்தரவை என்னும் ஊரைச் சேர்ந்த வலையர் குலத்து இளம் பெண்ணான வீராயிக்கும், இளமநேரி என்ற ஊரைச் சேர்ந்த சேர்வைக்காரர் குலத்தைச் சேர்ந்த வாலிபரான நயினுக்குட்டி என்பவருக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பினால் வீராயி கர்ப்பமாகி விடுகின்றாள்.

இந்த நிகழ்ச்சியை ஆராய்ந்து உண்மையை அறிந்து கொண்ட வீராயின் உறவினர்களான வலையர்கள் கொந்தளிப்பில் வீராயியைக் கொன்று விடுகின்றனர்.  இளம் பெண் வீராயி சொந்த சாதி மக்களால் கொல்லப்பட்ட  நிகழ்ச்சி ஒரு பெரும் பிரச்சினையாக மாறுகின்றது. இப்படி ஒரு ஆணவக் கொலை” நிகழ்வதற்கு  இந்தப் காதல் பிரச்சனையானது காரணமாகி விட்டது. எனவே,  இதனால் தங்கள் இனத்தைச் சேர்ந்த உயிர் ஒன்றை  இழக்கும்படி ஆகிவிட்டது. இவ்வாறு நடந்து முடிந்த துயர நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட எங்கள் சாதியினருக்கு  நியாயமான தீர்ப்பை அளித்து நீதியை நிலை நாட்டும்படி அன்று தங்களை ஆண்டு வந்த இராமநாதபுரத்து அரசரான  “இரகுநாத சேதுபதி”யிடம் முறையிட்டனர்.

அதாவது தங்கள் இனத்துப் பெண்ணை தாங்களே கொல்லும்படி நேரிட்டது. இதற்கு காரணமான இளைஞரும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் அவர்களால் வைக்கப்பட்டது.

இவர்கள் முறையிடுவதைக் கேட்ட அரசர் இத்தகைய குற்றச் செயலுக்கு தண்டனை என்பது “உயிருக்கு உயிரைக் கொடுப்பது தான் நீதியாகும்” என்பது பரம்பரையான நடைமுறையாக இருப்பதனால்  சேர்வைக்காரர் சாதியினரைப் பார்த்து, ‘நயினுக் குட்டியை வலையர் குலத்தினரிடம் ஒப்படைத்து விடும்படி’ ஆணையிட்டார்.

சேதுபதி மன்னர் கால செப்பேடுகள்!

தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் நயினுக்குட்டியை பலிக்குப் பலியாகக்  கொன்றுவிடலாம் என்பது அரசரால் அளிக்கப்பட்ட தீர்ப்பு  என்பதால், அவனைக் கொன்று விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது நயினுக்குட்டியானவன் அந்த மாற்று சமூகத்தாரிடம், ”உங்களுக்கு பலியிட ஒரு உயிருக்கு இன்னொரு உயிர்தானே தேவை அதற்கு என்னுடன் பிறந்த தங்கை “உடையக்காள்” ஐ தருகிறேன். நீங்கள் அவளை பலிக்குப் பலியாகக் கொன்று விடலாம்” என்று வேண்டுகோள் விடுத்தான். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.

பின்னர் தங்களால் முன்னரே கொல்லப்பட்ட வீராயின் உடலை ஒரு சிதையிலும், பக்கத்தில் ஒரு சிதையை உருவாக்கி அதில் நயினுக்குட்டியின் தங்கை உடையக்காளையும் படுக்க வைத்து தீ மூட்டி எரித்துக் கொல்லும் சடங்குகளை செய்தனர்.

இங்கே கவனிக்க வேண்டுவது என்னவென்றால், தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவன் ஒரு ஆணாக இருக்க, எந்த விதத்திலும் இதில் சம்பந்தப்படாத ஒரு பெண் தண்டிக்கப்பட ஒத்துக் கொள்ளப்படுகிறது! இதில் அந்தப் பெண்ணின் விருப்பம் பொருட்படுத்தப்படவே இல்லை! நமது வரலாற்றில் இது போன்ற பெண் பலியிடல்கள் பல நடந்துள்ளன!

செப்பேட்டில் சொல்லப்பட்டவை;

இந்தச் சம்பவத்தின் உச்சகட்ட கிளைமாக்சில் எந்தப் பாவமும் செய்யாத அப்பாவிப் பெண் கொல்லப்படப் போவது கண்டு கலங்கிப் போன வலையர் சாதியைச் சேர்ந்த பெண்கள் பலரும் சேர்ந்து இதை தடுத்திட முயன்றனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சாதியில் உள்ள நாட்டாமைகளிடம் பணிந்து ஒரு வேண்டுகோள் வைத்தனர்!

”அந்த உடையக்காளைக் கொல்ல வேண்டாம். நம்முடைய பெண்ணே நமக்குத் திரும்பவும் கடவுள் அருளால் கிடைத்து விட்டதாக நினைத்து, நம் சாதியார் அனைவருக்குமான மகளாக உடையக்காளை ஏற்றுக் கொள்வோம்’’ என்று கண்ணீர் மல்க கூறினா்.

இவ்வாறு தங்கள் சாதிப் பெண்கள் கண் கலங்கிக் கூறியதை பார்த்து வலையர் குலத்துப் பெரியவர்கள் அந்த கோரிக்கையை ஏற்றனர்! உடையக்காள் இவ்விதமாக உயிர்பலியிடக் கூடிய நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டாள்! இவ்வாறு காப்பாற்றப்பட்ட உடையக்காள் கண்ணியத்தோடு வாழ்வதற்கான உத்திரவாதங்களும் ஏற்படுத்தப்பட்டன!

இப்படியாக அவர்கள்  தங்கள்  பெண்ணாக  உடையக்காளை ஏற்றுக் கொண்டதற்குச் சான்றாக  பல்வேறு வகையான உரிமைகளைத் தங்கள் சாதியின் வழியாக வழங்கி, நிலைபெற செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.  இப்படி இவர்கள்  செய்த முடிவை   ஒரு பட்டையமாக  எழுதி அந்தப் பட்டையத்தை அரசரிடம் செலுத்தி, அனுமதியும் பெற்றுக் கொண்டனர். என்ற இந்தச் செய்திகளைப் பதிவுசெய்த செப்பேடு தான் இது. இப்படி இவர்கள் பதிவு செய்து கொண்ட செப்பேட்டிற்கு “பலிசாதனச் செப்பேடு” என்று பெயர்.

இப்படி உயிர் பிழைத்த உடையக்காள் கடைசி வரை ஒரு பெண் துறவி போல வாழ்ந்து அந்த மக்களின் அன்பை பெற்றதாகத் தெரிய வருகிறது!

இந்த பலிசாதனச் செப்பேடு  பேராசிரியர் செ.ராசு அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு  1994 இல் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள “சேதுபதி செப்பேடுகள்” என்ற நூலின் தொகுதியில் 38 வது செப்பேடாக 188 வது பக்கத்தில் பதிவாகி உள்ளது.

இதில் நம்மை உறுத்தும் செய்தி, ஒரு இளம் பெண் வீராயி தன் சாதியாரால் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை அன்றைய சமூகமும் குற்றமாக பார்க்கவில்லை! அரசரும் குற்றமாகப் பார்க்கவில்லை. மற்றொரு ஆறுதல் தரும் செய்தி, ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு நேரவிருந்த அநீதி தடுக்கப்பட்டது மட்டுமல்ல, அதை சாதித்ததும் பெண்களே என்பது! அத்துடன் காப்பாற்றப்பட்ட பெண் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உத்திரவாதமும் தரப்பட்டு உள்ளது என்பதே!

கட்டுரையாளர்; பொ.வேல்சாமி

கரந்தை தமிழ் கல்லூரி புலவர், வரலாற்று ஆய்வாளர், ‘கோவில்- நிலம் -சாதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும், சமகாலத்திற்கான மாற்று அரசியலை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time