லஞ்சத்தை சட்ட பூர்வமாக்கும் தேர்தல்கள் நிதி பத்திரங்கள்!

ச.அருணாசலம்

குஜராத்தில் கொத்தாக வெற்றியை அள்ளிய பாஜகவின் பின்புலத்தில் இருந்தது இந்த தேர்தல் நிதி பத்திரங்களே! மொத்த தேர்தல் நிதியில் 94 சதவிகிதம் பாஜகவிற்கு மட்டுமே! மற்ற 6 % அனைத்து கட்சிகளுக்குமானது! கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி, தேர்தல் வெற்றிகளை அள்ளும் சூது எப்படி சாத்தியமானது?

ஜனநாயகத்தின் ஆணிவேராக கருதப்படுகிறது. தேர்தல் களம் என்பது , நேர்மையான வெளிப்படையான சமதளமாக இருக்க வேண்டும் . ஏற்ற தாழ்வுகளும் , அதிகார மற்றும் ஆதிக்க இடைவெளியும் ஏழை பணக்காரன் என்ற அடிப்படை வேறுபாடுகளும் நிரம்பிய ஒரு சமுதாயத்தில் அத்தகைய கள சமநிலை மிக மிக அடிப்படையானது , அவசியமானது.

தேர்தல் களத்தில்-அரசியல் கட்சிகள் , தனி நபர்கள் அதிகாரத்தில் அமர்வதற்கான போட்டி களத்தில்- பணத்தின் ஆளுமை என்பது மிக முக்கியமான காரணியாக உள்ளது. அதை கட்டுக்குள்  வைத்திராவிட்டால் -பணம் விளையாடினால் – முடிவுகள் விபரீதமாகவே இருக்கும் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வர்.

இப்படி போட்டியிடும் அனைவரும்  பணத்தை வாரியிறைக்க முன்வருவது தர்ம செயலா அல்லது இதைவிட பன்மடங்கு சம்பாதிக்க முடியும் (வெற்றிபெற்றால்) என்ற ஆதாயக்கணக்கினாலா என்பதை அறியாதவர்கள் யாருமில்லை.

அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க பெறப்படும் “நன்கொடை” கைமாறு கருதாத நன்கொடையல்ல, லாபம் கருதியே கொடுக்கப்படும்” முதலீடு ” என்பதே உண்மையாகும் .

யார் யார் யாருக்கு எந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது பொது வெளிக்கு வரவேண்டும் .

தேர்தல் நிதியா? திருட்டு நிதியா?

அப்படி வெளிப்படையாக தெரிந்தால்தான் “கொள்கை முழக்கங்களுக்கிடையில், வாக்குறுதிகளுக்கிடையில் வெற்றியாளர்கள் ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் யாருக்கு ஆதரவாக திட்டம் தீட்டுகிறார்கள் யார் மடியில் கை வைக்கிறார்கள் என்பது தெரியவரும்!

. 2016ம் ஆண்டு வரவு செலவு அறிக்கை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அருண் ஜெய்ட்லி (அன்றைய நிதி அமைச்சர்) வெளிப்படைத்தன்மையை உள்ளடக்கிய தேர்தல் சீர்திருத்தம் 2017ம் ஆண்டு அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.

இந்திய பொதுவெளியில் அனைத்து மட்டங்களிலும்- அரசியல் தலையீடு,  அதிகார முறைகேடு ஆகியவை  பல்கிப் பெருகி அரசு மற்றும் அதன் நிர்வாக  அமைப்புகள் கண்ணியத்தை இழந்து நிற்கின்ற வேளையில் ஆட்சிமுறையில் வெளிப்படைத் தன்மையை மக்கள் எதிர்பார்த்தனர்.

2017ம் ஆண்டு மிகுந்த படபடப்புடன் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது!

இதன் சாராம்சம் என்ன?

ஒரு தனிநபரோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பினால், அவர்கள் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றை அணுகி, விரும்பிய தொகை செலுத்தி அதற்கான மதிப்புடைய பத்திரங்களை பெற்றுக் கொள்ளலாம் . அவ்வாறு பெற்ற தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளின் அதிகாரபூர்வ வங்கி கணக்குகளில் செலுத்தலாம்.

இதன் மூலம் அனைத்து நன்கொடைகளும் வங்கி கணக்கு மூலமே நடைபெறும், எல்லாமே வெளிப்படையாக “ஒயிட்” மூலம் நடைபெற வழி ஏர்படுகிறது என்று மோடி அரசு தம்பட்டமடித்தது.

பாஜக அரசின் பொய்ப் பிரச்சாரங்கள்!

இதற்கு முன்னால் 20,000 ரூபாய்க்கு மேல் யார் நன்கொடை கொடுத்தாலும் அது காசோலை மூலம் நடைபெறும், அவர்களது வருமான வரி பான் நம்பர் PAN  குறிக்கப்படும் என்ற நிலையிருந்தது. கம்பெனிகள் தங்களது கடந்த மூன்றாண்டு வருமானத்தில் 7.5% அளவே நன்கொடை கொடுக்க முடியும் என்ற நிலையும் ,கொடுக்கும் நன்கொடை அவர்களது-கம்பெனி லாப நட்ட அறிக்கையில் காண்பிக்கப்படவேண்டும் என சட்டமிருந்தது.

இத்தகைய வெளிப்படை தன்மையை வலியுறுத்திய  சட்டவிதிகளை திருத்தி இந்த புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து, நிறுவனங்களோ , தனிநபரோ பெறப்படும் நன்கொடைகளுக்கு முன்பு வரைமுறையும் கட்டுப்பாடும் , சோதனையும் இருந்தன. FCRA சட்ட திருத்தங்களால் அவை செல்லாக்காசாக்கி விட்டன.

இன்று-இந்த திருத்தங்கள் மூலம்

# யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி அரசியல் கட்சிகள் யாரிடமிருந்தும் எந்த அமைப்பிடம் இருந்தும் , வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்தும் எவ்வளவு தொகையும் பெற்றுக் கொள்ள முடியும்.

# நன்கொடை அளித்தவர்கள் வருமான வரித்துறையிடம் கணக்கு காண்பிக்க வேண்டிய அவசியமில்லை.மேலும், இவர்களுக்கு வரிச்சலுகையும் உண்டு.

# கொடுத்தவன் யாருக்கு கொடுத்தேன் என்று சொல்ல வேண்டியதில்லை! கணக்கும் காட்டவேண்டியதில்லை!

# வாங்கியவன் யார் யாரிடம்  எவ்வளவு வாங்கினேன் என்று தெரிவிக்க வேண்டியதில்லை!

என்ன ஒரு வெளிப்படையான “திட்டம்” , பார்த்தீர்களா?

நிதியின் வழியே வாக்குகளை வென்றெடுக்கும் திட்டம்

தேர்தல் பத்திரங்கள் திட்டமானது அரசியல் கட்சிகளுக்கு (ஆளுங்கட்சிக்கு?) தங்கு தடையற்ற கார்ப்ரேட் மற்றும் அனாமதேய நன்கொடைகளுக்கு வழி வகுத்துள்ளது எனலாம் .

இத்திட்டத்தை எப்படி வெளிப்படைத்தன்மைக்கு உதாரணமாக ஆளுங்கட்சியினர் புனைகிறார்கள் என்பது வேடிக்கையானது!

இத்திட்டத்தை கம்யூனிஸ்ட்களும், சில தொண்டு நிறுவனங்களும், ஜனநாய சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ADR) மட்டும் எதிர்க்கவில்லை!

நாடெங்கும் உள்ள ஜனநாயக ஆர்வலர்களும் எதிர் கட்சியினரும் ஏன் ரிசர்வ் பேங் ஆப் இந்தியா  RBI அன்று எதிர்த்தது.

அகங்காரமும், அரைவேக்காட்டு தனமும் நிறைந்த நமது ஆட்சியாளர்கள் தமது குணத்திற்கேற்ப , பிபரவரி 1, 2017 அன்று வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் சட்டத் திருத்தங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் தேவை என்று தாமதமாக புரிந்த நிலையில், அவசரவசரமாக 28/01/2017 அன்று நிதி அமைச்சகம் சட்ட திருத்தத்திற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை கேட்டு கடிதம் எழுதியது.

ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பு;

அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கியின் ஜனவரி- 30, 2017 தேதியிட்ட கடிதம் இத்திட்டம் கள்ளத்தனமான பண பரிமாற்றத்திற்கும் வரி ஏய்ப்புக்கும் வழி வகுக்கும் என்றும், இதில் வெளிப்படைதன்மை சிறிதும் இல்லையென்றும், இது நிதி நடைமுறையில் முறைகேட்டை ஊக்குவிக்கும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்துள்ளது.

ஆனால் “பண மதிப்பிழப்பு” அறிவிப்பின் போது என்ன செய்தார்களோ அதையே இப்பொழுதும் செய்து முடித்தனர்.

கறுப்பு பணத்தை கபளீகரம் செய்து கட்சி வளர்க்கும் பாஜக.

தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பு

மேற்கூறிய காரணங்களை விலாவாரியாக விவரித்து இத்திட்டம் தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு வழி வகுக்கும் என்றும், நேர்மையான தேர்தலுக்கும் வெளிப்படையான நடைமுறைக்கும் இத்திட்டம் வேட்டு வைக்கும் என்றும் தேர்தல் களத்தில் சமநிலையை இது பெரிதும் பாதிக்கும் என்றும், ஆளுகின்ற கட்சிக்கே இதன்மூலம் அனுகூலம் கிடைக்குமென்று தேர்தல் ஆணையம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்த எதிர்ப்பையும் ஒன்றிய அரசு உதாசீனப்படுத்தியதோடன்றி , நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையம் இத்திட்டத்தை குறித்து ஆட்சேபனை கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று அன்றைய இணை அமைச்சர்” பொய்யான” தகவலை கூறினார்.

உச்ச நீதி மன்றத்தில் இந்த திட்டத்திற்கெதிரான வழக்கு 2017 ம் ஆண்டே தொடுக்கப்பட்டது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பும் (Association of Democratic Reforms) பொது நலன் (Common Cause) என்ற அமைப்பும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடுத்துள்ள வழக்கு தீபக் மிஸ்ரா தலமையிலான உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல்  கிடப்பில் போடப்பட்டது, பத்திரங்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டன.

ஊழல் செய்வதற்கான புதிய வழிமுறையாக்கப்பட்ட தேர்தல் நிதி பத்திரத்தை எதிர்த்து போராட்டம்!

2018 ல் மீண்டும் முறையாக விசாரிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது உச்ச நீதி மன்றத்தால்! காரணம், கர்நாடகா தேர்தல் அறிவிப்பு (மே, 2018) வெளியிடப்பட்டது தான்.

அதே ஆண்டு ஆறு மாநில தேர்தல்கள் நவம்பர் 2018ல் நடந்த போதும் இத்திட்டத்திற்கு தடை விதிக்க உச்ச நீதி மன்றம் மறுத்தது, காரணம் தேர்தல் தேதி அறிவிப்புதான் .

தேர்தலை ஒட்டியே தேர்தல் பத்திரங்களும் விற்கப்படும், அப்பொழுதுதான் -அந்த அநீதியை தவிர்க்க அதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற நியாயமான, நேர்மையான கோரிக்கையை தேர்தல் தேதி அறிவித்தாகி விட்டது என்ற விசித்திரமான காரணத்தை கூறி பத்திரங்கள் விற்பனைக்கு தடையில்லை என உச்ச நீதி மன்றம் அறிவித்தது.

இம்முறையும் தேர்தல் பத்திரங்கள் விற்பனை அமோகமாக நடந்தேறியது.

இதில்  சுடுகின்ற உண்மை என்னவென்றால் 2017-2018 இறுதி வரை நடைபெற்ற பத்திர விற்பனையில் 95% விழுக்காடு பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக சென்றது என்பதும் மீதமுள்ள 5 % விழுக்காட்டு பத்திரங்கள் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் சென்றது என்பதும் தான்.

தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படியே 95% நிதியைப் பெற்ற பாஜக!

மீண்டும் 2019 தேர்தலின் போது தடை கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை விசாரித்த ரஞ்சன் கோகோய் தலமையிலான உச்ச நீதி மன்ற அமர்வு இதுவரை விற்கப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் மதிப்பு அவைகள் எந்த எந்த கட்சிகளுக்கு சென்றன என்ற விவரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் உறையிலிடப்பட்ட அறிக்கையாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை பிறப்பித்தது, ஆனால் பத்திரங்கள் விற்பனைக்கு தடையில்லை என நீதி மன்றம் அறிவித்தது!

இதுவரை விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களின் மொத்த மதிப்பில் 90 விழுக்காடு அளவு பா ஜ கட்சியையே அடைந்துள்ளது. இத்திட்டம் அவர்களுக்குத்தான் உதவியது, உதவுகிறது, இனியும் உதவும் என்பது யாரும் அறிந்த உண்மை. இந்த கம்ப சூத்திரம் உச்ச நீதிமன்ற பார்வையில் தெரியாதது  அதிசயந்தான்!

இந்த சட்டதிருத்தம் ” நிதி மசோதா” வாக பாவிக்கப்பட்டு நாடாளுமன்ற மேலவையின் -ராஜ்ய சபா- ஒப்புதலின்றி, சட்டமாக்கப்பட்டதையும் ஆட்சேபித்தே இவ்வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய குஜராத், இமாச்சல தேர்தலை ஒட்டி தேர்தல் நிதி பத்திரங்கள் வழியே 524.25 கோடி கிடைத்துள்ளது! இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான நிதியை பாஜக தான் பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

ஜனநாயக மாண்பை சீர்குலைக்கும் இத்திட்டம் தேர்தல் நடைமுறையையே கேள்விக்குறியாக்கி கேலி செய்யும் இத்திட்டம், அரசியல் சாசனத்திற்கு முரணாக பாராளுமன்றத்தை அவமதிப்பு செய்த இச்சட்டம், முறைகேடான விளைவுகளையும் ஆளுங்கட்சிக்கே ஆதாயம் அளிக்கும் ஒருதலை பட்சமான முடிவுகளையும் தடுத்து நிறுத்த வேண்டிய உச்ச நீதி மன்றம் இன்று மீண்டும் வழக்கை விசாரிப்பதாக பாவனை செய்கிறது!!

காலங்கடந்த போதிலும் இப்போதாவது கவலை தரும் மோசடியான இந்தத் திட்டத்தை தடுக்காவிட்டால் இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

ஒவ்வொரு காலாண்டின் முதல்  பத்து நாட்கள் மட்டுமே பத்திர விற்பனை என்று சட்டவிதிகள் வரையறுத்துவிட்டு, 2018ல கர்நாடகா தேர்தலை ஒட்டி மார்ச் ஏப்ரல் மே மாதங்களிலும் பிரதமர் அலுவலகம் தலையிட்டு பத்திரங்கள் விற்றதை மறுக்கவியலுமா? அதே நிலைதான் ஆறு மாநில தேர்தல்கள் நவம்பர் 2018 நடைபெற்றபோதும் நடந்தேறியது?

2019க்குப் பிறகு 2022 ல் டிசம்பர் 5 முதல் ஒரு வாரத்திற்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்ய வங்கிகள் வற்புறுத்தப்படுகின்றன.

விற்பனை செய்யும் வங்கிகள் எங்கள் கட்டுப்பாட்டில்தான்! விற்பனையை கட்டு படுத்துவதும் நாங்கள்தான்! விற்ற பத்திரங்கள் பெரும்பாலும் எங்களிடமே வரவேண்டும் என்று அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்து மோசடி செய்யும் மோடி அரசை  உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்குமா? மோசடியான திட்டத்தை தடுத்து நிறுத்துமா? என்பதே தற்போதைய கேள்வி!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time