கண் கலங்க வைக்கும் கதைக்களம் ‘விட்னெஸ்’

-தயாளன்

இந்தச் சமூகம் சுகாதாரத்துடன் திகழ, தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் கடைக்கோடி மனிதர்களின் வலியை ரத்தமும், சதையுமாக உயிர்ப்போடு காட்சிப்படுத்துகிறது படம்! மலக்குழி மரணங்களின் அரசியல் சாட்சியமாக, தமிழ்ச் சினிமா இது வரை பேசத் துணியாத கதைக் களத்தை காட்டும் ஒரு அபூர்வ வரவு!

அறிமுக இயக்குனர் தீபக் ஒளிப்பதிவு, இயக்கத்தில் ‘விட்னெஸ்’ தமிழ் திரைப்படம் தற்போது ‘சோனி லைவ் ஓடிடி’ தளத்தில் வெளியாகி உள்ளது. படம் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் நிகழும் மரணத்தின் கொடூரமான அரசியலை பேசுகிறது.

எரிச்சலான ஹீரோயிசம், முகம் சுளிக்க வைக்கும் காமெடி, அரைகுறை ஆபாச நடனங்கள், புளித்துப் போன காதல்கள், கேமராவை நோக்கி வீசப்படும் ஹீரோக்களின் பஞ்ச் டயலாக்குகள் என்ற தமிழ் சினிமாக்களின் அலுப்பான கிளிஷேக்கள் எதுவும் இல்லாமல் எடுத்துக் கொண்ட கதைக்கருவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்திருக்கும் படக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பொதுவாக, இது போன்ற படங்கள் பரப்புரை நெடியுடன் கருத்துக்களை வலிந்து திணிக்கும் படமாக இருக்கும். ஆனால், விட்னெஸ் இந்த அணுகுமுறையிலிருந்து மாறுபட்டு, கதைப் போக்குடன் உணர்வுகளை முன்னிருத்தி எதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது. இது மற்ற படங்களில் இருந்து விட்னெஸை வேறுபடுத்தி காட்டுகிறது.

சுகாதாரத் துறை தொழிலாளர்களின் வலியை சொல்லும் விட்னஸ்!

படத்தின் கதை எளிமையானது. சென்னையின் சாலைகளில் தூய்மை பணியாளராக பணிபுரிகிறார் இந்திராணி. இரவு முழுவதும் பணி. இந்திராணியின் ஒரே மகன், நம்பிக்கை எல்லாமே பார்த்திபன் மட்டுமே. ஒரு நாள் வேலை முடிந்து வரும் போது பார்த்திபன் இறந்து போய்விட்டதாக தகவல் வருகிறது. நொறுங்கிப் போகும் இந்திராணி மருத்துவமனைக்கு அலறி அடித்து ஓடுகிறார். அங்கே மலக்குழியில் இறங்கி மூச்சுத் திணறி பார்த்திபன் இறந்து விட்டதாக காவல் துறை சொல்கிறது. அலட்சியமாகவும் ஆணவத்துடனும் நடந்து கொள்ளும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக நீதிமன்ற படிகளை நாடுகிறார் இந்திராணி. அவருக்கு நீதி கிடைத்ததா? என்பது கிளைமாக்ஸ்.

இந்த எளிய ஒற்றை வரிக் கதையை மிக நேர்மையாக கையாண்டிருக்கிறார்கள்.  படத்தின் திரைக்கதையை முத்துவேலும், ஜே.பி சாணக்யாவும் எழுதி இருக்கிறார்கள். ட்விஸ்ட் என்ற பெயரில் கோமாளித்தனமான திருப்பங்களை செய்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி இருக்கிறார்கள். சரளமான காட்சிக் கோர்வைகளும், இயல்பான உரையாடல்களும் படத்தை நகர்த்த உதவுகின்றன.

கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அரசியல் புரிதலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.  பார்வதியாக வரும் ஷ்ரத்தாவின் பாத்திரப் படைப்பு இதற்கு உதாரணம்.  படத்தின் இறுதிக் காட்சி நேரடியான அரசியல் செய்தியாகவே வருகிறது.  உரையாடல்களும் கூர்மையாக இருக்கின்றன.  குறிப்பாக, நீதிமன்றக் காட்சிகளில் பொறுப்பு ஏற்க மறுக்கும் அதிகார வர்க்கத்தின் முன்னுக்குப் பின் முரணான சாட்சியங்களை அடுக்குவதின் மூலம் தோலுரிக்கிறார்கள்.

கதா பாத்திரமாக கரைந்து போன ‘ரோகிணி’

இந்திராணி பாத்திரத்தை ஏற்று நடிக்கத் துணிந்ததற்காகவே நடிகை ரோகிணியை பாராட்டலாம். சென்னை வட்டார வழக்கை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார்.  மகனுக்காக உருகும் போதும், நீதிக்காக பொங்கும் போதும், தன் மானத்தைக் காக்க ஆவேசம் கொள்ளும் உணர்ச்சிகரமான பாத்திரம். இந்திராணி பாத்திரம் ரோகிணியின் வாழ்வில்  முக்கியமான அடையாளம். தான் ஒரு கைதேர்ந்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்பதை காட்சிகளில் நிரூபிக்கிறார்.  இடதுசாரி அரசியலின் மீது தனக்கு இருக்கும் கமிட்மெண்டை நிரூபித்து உள்ளார்.  சிறந்த நடிகைக்கான விருதுகளை அவர் அள்ளக் கூடும்.

இன்னொரு முக்கிய பாத்திரம் பார்வதியாக வரும் ஷ்ரத்தா.  இப்படி ஒரு அட்டகாசமான நடிகையை தமிழ் திரையுலகம் கண்டு கொள்ளவே இல்லை என்பதை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறது. சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்களில் படபடப்பில்,  அநீதியைக் கண்டு பொங்குவது என்று போகிற போக்கில் படத்துடன் பொருந்துகிறார். படத்தில் இடதுசாரி போராளியாக வரும் தோழர். செல்வா தனது “கன்னி”ப்படத்தில் நடிக்க முயன்று உள்ளார். அந்த பாத்திரத்திற்கு அவரை விட இன்னொருவர் பொருத்தமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திபனாக வரும் இளைஞரும் எதார்த்தமான நடிப்பை வெளிக் கொணர்ந்து இருக்கிறார்.


படத்தில் கொண்டாடப்பட வேண்டிய முக்கிய அம்சம் ஒளிப்பதிவு. படத்தின் இயக்குனர் தீபக் ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால், கேமரா கதைக் களத்தில் ஒரு கேரக்டராக பயணிக்கிறது. இது ஒரு புனைவுக்கதை என்றாலும், கேமரா ஆவணப்படத்திற்கான ட்ரீட்மெண்ட்டை தருகிறது.  குறிப்பாக பேருந்து காட்சிகள். ஷ்ரத்தாவின் காரில் எடுக்கப்பட்டிருக்கும் ஷாட்கள், பெரும்பாலும் நிலைத்த ஷாட்களை தவிர்த்து விட்டு அலைபாயும் தன்மையை கொண்டு வந்திருக்கும் ஷாட்கள் முக்கியமானவை. ஷ்ரத்தா வரும் காட்சிகளில் கேமரா, நிலைத்த சீரான தன்மையை கொண்டு வருகிறது.

செம்மஞ்சேரியில் படமாக்கும் போது பெரும்பாலும் ஹேண்ட் ஹெல்ட் எனப்படும் கைகளால் எடுக்கப்பட்ட ஷாட்களும் இயக்குனரின் முத்திரையை வெளிப்படுத்துகின்றன.  சென்னை மாநகரம் புதிய கோணத்தில் காட்டப்படுகிறது. இயக்குனராக தீபக் கதைக் கருவுக்கு உண்மையாக இருந்திருக்கிறார். இசையும் படத்தொகுப்பும் படத்திற்கு தேவையான லயத்தை தருகின்றன.


படம் பேசும் அரசியல் நேரடியானது.  மலக்குழி மரணங்கள் நிறுவனப் படுகொலைகளாகின்றன! அதில் பலியாகும் உயிர்கள் கணக்கில் கூட வருவதில்லை என்பதை அழுத்தமாக பேசுகிறது படம்! ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், உழைக்கும் மக்கள் வதைபடும்போது அவர்களுக்கு இடதுசாரிகளே கை கொடுக்கிறார்கள் என்பதையும் படம் நிறுவுகிறது. பிரச்சார நெடியைத் தவிர்த்து உணர்வுப்பூர்வமான கதையில் உழைக்கும் மக்களின் அரசியலை பேசியதற்காக விட்னெஸை கொண்டாடலாம்.  விட்னெஸ் படக்குழு, தமிழ் சினிமாவின் எதிர்கால நம்பிக்கை!

விமர்சனம்; தயாளன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time