காசி தமிழ்ச் சங்கமம் – ஒரு நேரடி அனுபவம்!

-அ.உமர் பாரூக்

”இந்தியாவில் எந்த அரசும் செய்யாத சாதனை! காசியில்  தமிழ்க் குரல் ஒலிப்பதற்கான பெருமை பிரதமருக்கே” என்று வட இந்திய ஊடகங்கள் ஒருபக்கம் எழுதிக் குவிக்கின்றன. இன்னொருபுறம், ”காசி தமிழ்ச் சங்கமத்தால் தமிழுக்கு எந்த பயனும் இல்லை” என்ற கடும் எதிர்ப்புகள்!உண்மையில் காசியில் என்ன நடக்கிறது?

இது ஒன்றிய பாஜக அரசு சொல்வது போல கலாச்சாரப் பரிமாற்றப் பயணம்தானா..? உண்மையில் கங்கைக் கரையில் தமிழ் ஒலிகிறதா?

ஒன்றிய பாஜக அரசின் கல்வித்துறை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.டி இணைந்து எட்டு நாட்களுக்கான தமிழ்ச் சங்கமம் பயணத்தை அறிவித்திருந்தன. நவம்பர் 17 துவங்கி டிசம்பர் 16 வரை நடைபெறும் இப்பயணத்தில் தமிழகத்தில் இருந்து சுமார் 2500 பேர் பங்கேற்கும் விதத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள், தொழில் முனைவோர், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட 12 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் 212 பேர் என்ற விதத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சென்னை, கோவை, இராமேஸ்வரம் நகரங்களில் இருந்து காசி செல்லும் ரயில்களில் பயணம் குறித்த விளம்பரங்களோடும், மோடியின் படங்களோடும் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு, அழைத்துச் செல்லப்படுகின்றனர். நவம்பர் இறுதிவரை ஆறு குழுக்கள் சென்றுள்ளன. தொடர்ந்து இன்னும் ஆறு குழுக்கள் செல்ல உள்ளன.

காசி பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட முன்னாள் மாணவன் என்ற அடிப்படையில் தமிழ்ச் சங்கமத்திற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. சார்ந்த நபர்களோடு எவ்வாறு பயணிப்பது? என்ற தயக்கம் இருந்தாலும், எழுத்தாளர்கள் குழுவில் என்னை இணைத்திருந்ததால் ’என்ன செய்கிறார்கள்?’ என்று பார்த்து விட்டு வரலாம் என்று மூன்றாவது குழுவில் பயணித்தேன். ரயில் பயணம், உணவு ஏற்பாடு, தங்குமிடம், சுற்றுலாவிற்கான பேருந்துகள் என எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்கள். போலீஸ் பாதுகாப்புடன் கான்வாய் வரிசையிலேயே எல்லா இடங்களுக்குமான பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. பயண, உணவுச் செலவுகள் மட்டும் 2500 பேருக்கு சுமார் 5 கோடி ஆகியிருக்கலாம். இதுதவிர, பிரமாண்டமான நிகழ்ச்சிகள், பரிசுப் பொருட்கள், ஏற்பாடுகள் என்று எளிமையாகக் கணக்கிட்டாலும் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கலாம். இவ்வளவு பெரிய பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்ட தமிழ்ச் சங்கமத்தால் தமிழிற்கு  ஏதும் பயனில்லை என்பதுதான் அடிப்படையான பிரச்சினையே.

புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்க் கொலையை அரங்கேற்றிய வரவேற்பு பேனர்!

தமிழ்ச் சங்கமம் நிகழ்வினை ஒன்றிய பாஜக அரசு ஒருங்கிணைக்கிறது. விழா நடைபெறுவது உத்திரப்பிரதேச மாநிலத்தில். பயணத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு மக்கள். இந்த அடிப்படையில் இரண்டு மாநில அரசுகளின் ஓருங்கிணைப்பும், பங்கேற்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால், உ.பி.முதல்வர் யோகி மட்டுமே எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. அரசு சார்பில் யாரும் அழைக்கப்படவும் இல்லை. ஒரு மாநில அரசுக்கு தகவலே அளிக்காமல் அம்மாநிலத்தில் இருப்பவர்களை வைத்து நிகழ்வினை திட்டமிட்டுள்ளனர். இது, தமிழ்ச் சங்கமத்தின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கிறது.

காவி மயமான பயணங்கள்

எழுத்தாளர்கள் குழுவின் பயணம் நவம்பர் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து துவங்கியது.

மூன்று பெட்டிகளில் நிறைந்திருக்கும் எழுத்தாளர்களில் நிச்சயம் நமக்கு யாரையாவது தெரிந்திருக்கும் என்று அலைந்து, திரிந்ததில் கடைசி நேரத்தில் அவசரமாகச் சேர்க்கப்பட்ட மிகச் சிலரைத் தவிர யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அது என்ன குழு என்று தெரியாமலேயே பயணிப்பவர்களும் இருந்தார்கள். முகநூல் எழுத்தாளர்களும் இருந்தார்கள். புதுச்சேரி பல்கலைக்கழக்த்தின் தமிழ்த் துறை சார்பில் 30 கல்லூரி மாணவர்கள் இக்குழுவில் இணைக்கப்பட்டிருந்தார்கள். ஆக, 212 பேரில் சுமார் 40 பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் பி.ஜே.பி. கட்சிக்கார்களாகவோ, ஏதோ ஒருவகையில் கட்சியோடு தொடர்புடையவர்களாகவோ இருந்தார்கள்.

காசி தமிழ்ச் சங்கமத்திற்காக மோடி படம் வரைந்த ரயில் பெட்டிகள்!

ஒவ்வொரு முக்கியமான நிறுத்தத்திலும் அங்குள்ள பி.ஜே.பி. ஆட்கள் கொடிகளோடு பங்கேற்று வரவேற்பளித்தார்கள். ரயில் தமிழ்நாட்டைக் கடந்தவுடன் பயணத்தின் நிறம் காவியாக மாறிக் கொண்டேயிருந்தது. ரயில் பயணத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ரயில்வே பொறுப்பாளர்கள் சிலரும், சென்னை ஐ.ஐ.டி. அலுவலர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் நபர்களாக பி.ஜே.பி. ஆட்களே இருந்தார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. சென்னை, கோவை பகுதிகளைச் சேர்ந்த பி.ஜே.பி. ஆட்களே முழு பயணத்தையும் ஒருங்கிணைத்தார்கள்.

‘வணக்கம் அயோத்தியா’ என ஆங்கிலத்தில் வரவேற்கும் பேனர்!

”புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் நம்ம கட்சி ஆட்கள்தான்” என்றும், ”இது கட்சி ஆட்களுக்கான ஏற்பாடு” என்றும் பலர் வெளிப்படையாகவே பேசினார்கள். காவிக் குரல்களுக்கு மத்தியில் அவர்களின் வரலாற்று அறிவை யோசித்தபடி பயணம் செய்வது தனிமைச்சிறை போல கொடுமையானதாக இருந்தது. பங்கேற்றதிலும், ஒருங்கிணைத்ததிலும், ஊர் ஊருக்கு வரவேற்றதிலும் காவியே தூக்கலாக இருந்தது.

இது கலாச்சாரப் பகிர்விற்கான பயணமா?

ஒன்றிய அரசு இப்பயணத்தை கலாச்சாரப் பகிர்வுப் பயணம் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறது. உண்மையில் இது வட இந்திய – தென் இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிதத்தா..? என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். ரயிலில் போய் இறங்கிய முதல் நாள் முழுவதும் காசி கோயில்களைப் பார்வையிடுதல். இரண்டாம் நாளில் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன! இடையில் அசோகரின் நினைவுச் சின்னம் இருக்கும் சாரநாத்திற்கு சென்று திரும்புதல். மூன்றாம் நாள் அலகாபாத் கோயில்கள், நான்காம் நாள் அயோத்தி கோயில்கள். மறுபடியும் ஊர் திரும்புதல். இந்த நான்கு நாள் சுற்றுலா திட்டத்தில் எந்த கலாச்சாரம் இருக்கிறது?

காசி விஸ்வநாதர் கோவில்

புத்த மத்தின் புனிதச் சின்னமாக கருதப்படும் சாரநாத் தவிர, மற்ற அனைத்து இடங்களுமே இந்து மதக் கோயில்கள்தான். அதிலும், சாரநாத்தின் மிக முக்கியமான அருங்காட்சியகத்தின் விடுமுறை நாளன்று அழைத்துச் சென்றிருந்தார்கள். மிகக் குறைவான நேரத்தில் சாரநாத்திற்கு பெயரளவில் அழைத்துச் சென்று  திரும்பினார்கள்.

வட இந்தியாவின் பெளத்தம், ஜைனம், இஸ்லாம், கிறிஸ்துவம் உள்ளிட்ட இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் எந்த இடமுமே சுற்றுலாவில் இல்லை. குறைந்த பட்சம் இந்து மதத்தின் பன்முகத்தன்மைக்காவது நியாயம் செய்திருக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. சைவ சமயத்தின் புனிதத் தலமான காசிதான் சுற்றுலாவின் மையம். அங்கிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் இருக்கும் வைணவத் தலமாகவும். புத்த சமயத்தின் புனிதத்தலமாகவும் கருதப்படும் கயா தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கலாச்சாரம் குறித்த எவ்வித உரையும் விழாவில் இடம்பெறவில்லை. பனாரஸ் நிகழ்ச்சியில் ஒரே ஒரு கரகாட்டமும், அயோத்தி நிகழ்ச்சியில் ராமர் கதை நடனமும் தவிர தமிழ் பன்பாடு சார்ந்த எந்த கலை நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இதுதான் கலாச்சாரப் பகிர்வுக்கான திட்டம் என்று ஊடகங்களால் புகழப்படுகிறது.

கங்கைக் கரையில் தமிழ் முழக்கமா..?

மொத்த பயணத்திலும் இரண்டே இரண்டு நிகழ்வுகளை நல்லதெனச் சொல்லலாம். ஒன்று – காசியில் பாரதியார் 7 ஆண்டுகள் தங்கியிருந்த வீட்டினைப் பார்க்க ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆர்வத்தோடு கூட்டமாக அங்கு செல்லும் போது வீட்டின் கதவு அடைத்துக் கிடந்தது. வாசலில் கட்டிடத் தொழிலாளர்கள் வேலைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடனான ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, தரையை பழுதுபார்த்துக் கொண்டிருந்த பணியை தற்காலிகமாக நிறுத்தி விட்டு பத்து நிமிடத்தில் பார்த்து விட்டு வந்து விடுமாறு உள்ளே அனுமதித்தார்கள்.

பாரதியாரின் அத்தை மகன் கிருஷ்ணன் (வயது 96) ஓய்வில் இருந்தார். அவருடைய மகள் வந்தவர்களோடு உரையாடினார். பனாரஸ் நிகழ்ச்சிக்காக வருகை தரும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளநதரராஜன் இன்னும் சற்று நேரத்தில் பாரதி இல்லம் வருவதாகவும், அதற்காகத்தான் தரையை சரி செய்யும் பணி நடைபெறுவதாகவும் , எனவே அனைவரும் பார்த்து விட்டு உடனடியாக வெளியேறிவிடும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  பாரதிக்கு சுதந்திர உணர்வும், பெண்ணுரிமை குறித்த புரிதலும் ஏற்பட்ட வீடு இது. தலையில் இருந்த குடுமியை கத்தரித்து எறிந்து விட்டு, முண்டாசு கட்டிய நகரம் காசி. அதனை கொஞ்சம் நிதானமாகப் பார்க்கும் வாய்ப்பினையும் ஆளுநர் தமிழிசை பறித்துக் கொண்டார்.

இன்னொரு முக்கியமான இடம் – அலகாபாத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் சந்திர சேகர ஆசாத் பிரிட்டிஷ் போலீசிடம் போரிட்டு, அவர்களிடம் சிக்கக் கூடாது என்பதற்காக தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இடமான ஆசாத் பூங்கா. இந்த இரண்டு இடங்களையும் பயணத்திட்டத்தில் கழித்து விட்டால், இது முழுமையான காவிப் பயணமாகவே இருந்திருக்கும்.

சரி.. இந்தப் பயணம் தமிழுக்கு என்ன செய்தது..? கங்கைக் கரையில் தமிழ் ஒலித்ததா இல்லையா..?

மொத்த நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரே ஒரு கருத்தரங்கம் பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் சில பேராசிரியர்களும், எழுத்தாளர் மாலனும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்வின் துவக்கத்தில் தேசிய கீதம் பாடவும், பல்கலைக்கழக கீதம் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்த் தாய் வாழ்த்திற்கு இடமளிக்கப்படவில்லை. தீடீரென்று தமிழுணர்வு பெற்ற தமிழிசை மேடையிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடச் சொன்னார். அதற்கான எந்த ஏற்பாடும் இல்லாததால் பங்கேற்றோர் அனைவருமே இணைந்து பாடினோம். இது தான் காசி தமிழ்ச் சங்கமம் தமிழுக்குச் செய்த சிறப்பு.

தமிழிசை செளந்திரராஜனும், மாலனும் பங்கேற்ற கருத்தரங்கம்.

கருத்தரங்கில் தமிழ் குறித்த உரைகள் எதுவும் நடைபெறவில்லை. மாலனின் உரையில் பாரதியின் காசி வாழ்க்கை குறித்த செய்திகள் இடம்பெற்றிருந்தன. மகாகவி பாரதியார் காசியில் வாழ்ந்த காலத்தில்தான் தன்னுடைய குடுமியைக் கத்தரித்து, கிராப் வைத்துக் கொண்டார். நிவேதிதா அவர்களைச் சந்தித்து பெண்ணுரிமை குறித்த புரிதல் பெற்றார். சுதந்திர இந்தியா குறித்த கனவுகளை வளர்த்துக் கொண்டார். ஆக, பாரதியின் காசி வாழ்க்கை என்பது வைதீகத்திற்கு எதிரான மனநிலையை அளித்ததில் முக்கியப் பங்கு வகித்தது. மாலன் உரையில் தவிர்க்கவே முடியாத நிலையில் இச்செய்திகள் இடம்பெற்றிருந்தன. பாரதியார் குறித்த இன்னும் சில செய்திகளை தமிழிசை பகிர்ந்து கொண்டார். பாரதி குறித்த இந்த உரையை மட்டும் விட்டு விட்டால், தமிழ் பற்றிய எந்த உரையோ, நிகழ்வோ திட்டத்தில் இல்லை.

காசி விஸ்வநாதர் கோயிலுக்குள் கேமரா அனுமதி இல்லாததால் தப்பும், தவறுமாகத் தமிழ் தாண்டவமாடும் வரவேற்பு பலகைகளை பதிவு செய்ய இயலவில்லை. ஆனாலும், ஒரு பேனர் முகநூலில் பரவிவருகிறது.

கங்கைக் கரையிலும்சரி… கட்சிக்காரர்களைப் பார்க்கும் போதும் சரி.. அங்கு ஒலித்த குரல்கள் அனைத்தும் “பாரத் மாதாகீ ஜே” எனவும், “வந்தே மாதரம்” ”ஜெய்ஸ்ரீ ராம்“ “மோடிஜி வாழ்க” என்பதாகவுமே இருந்ததே  தவிர, தாய்த் தமிழை வாழ்த்தும் குரல் எங்கும் ஒலிக்கவில்லை.

பயணத்தின் உள்நோக்கம் என்ன?

இந்தப் பயணம் கலாச்சார பரிமாற்றத்திற்கானதும் இல்லை.. தமிழ் வளர்ச்சிக்கானதும் இல்லை. என்றால், அதன் நோக்கம்தான் என்ன?

சுற்றுலா செல்லும் இடங்களை கூர்மையாகக் கவனித்தால் இரண்டு நகரங்கள் வெளிப்படையாகத் தெரியும்… ஒன்று – காசி. இன்னொன்று – அயோத்தி. இடைச் செருகலாகவே அலகாபாத்தும், பெயரளவில் சாரநாத்தும் இருக்கிறது. காசிக்கும் – அயோத்திக்கும் ஒரு மிக முக்கியத் தொடர்பு உண்டு. இரண்டு நகரங்களில் உள்ள கோயில்களுமே பல ஆண்டுகளாக பிரச்சினைக்குரியவை.

மிக பிரமாண்டமாக கட்டி எழுப்பபட்டு வரும் அயோத்தி ராமர் கோவில்!

அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டதாக இருந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. ராமர் கோயில் – பாபர் மசூதி விவகாரத்தில் ஆதாயம் அடைந்தவர்கள் சங்கிகளும், பி.ஜே.பி.யும்தான் என்பது நமக்கு வெளிப்படையாகவே தெரியும் உண்மை.

காசியிலும் அதே போன்ற சர்ச்சை நடந்து வருகிறது.  இப்போது காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ள இடத்தின் மிக அருகே, கோயிலுக்குள் செல்லும் அனைவரும் கடந்து செல்லும் இடத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இப்போது அது ராணுவத்தின் பாதுகாப்பில் தடை செய்யப்பட்ட பகுதியாக, நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்போது ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் முன்பு காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது. அதனை முகலாய மன்னன் ஒளரங்கசீப் இடித்து விட்டு, மசூதியைக் கட்டினான்  என்ற நம்பிக்கை இங்கும் உண்டு. அந்த நம்பிக்கையில் 1750 இல் ஜெய்ப்பூர் மன்னர் மசூதிக்கு அருகில் இருந்த இடத்தை விலைக்கு வாங்கினார்.  மராட்டிய ராணி அகிலா பாய் அதில் சிறிய கோயிலை மசூதியின் அருகில் 1780 களில் கட்டினார். 1835 இல் பஞ்சாப் ராஜா ரஞ்சித் சிங், கோயிலை விரிவு படுத்தினார். இப்போது கோயிலின் அருகில் இருந்த வீடுகள், கடைகள் அனைத்தும் அரசால் கையகப் படுத்தப்பட்டு விரிவான கோயில் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மசூதியின் தண்ணீர் தொட்டியில் சிவலிங்கம் இருந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டு, வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது.

ஆக, பாபர் மசூதி இருந்த இடத்தில் இப்போது கோயில் கட்டப்படுகிறது. ஞானவாபி மசூதி இருந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என்று எண்ணத்தை உருவாக்கும் விதமாக சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் காசிக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்களிடம் ஞானவாபி – விஸ்வநாதர் கோயில் இவற்றைக் காட்டி பயணத்தில் இணைந்திருக்கும் சங்கிகள் “கோயில் இருக்கும் இடத்தில் எல்லாம் மசூதியைக் கட்டி வைத்திருக்கிறார்கள்” என்ற கருத்தினை  உருவாக்குகிறார்கள். மசூதியை எப்படி அப்புறப்படுத்தலாம் என்ற முன்மாதிரிக்காக தொடந்து, அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு ராமர் கோயில் காட்டப்படுகிறது. அங்கும், கோயில் வந்த கதை வெற்றிக் கதையாக சொல்லப்படுகிறது.

அயோத்தியில் வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருக்கும் பேனர் ஒன்று இவ்வாறு கூறுகிறது “Experience ayodhya in it’s original form”. அயோத்தியின் உண்மையான அமைப்பில் இப்போது  பார்க்க முடியுமாம்… அப்படியானால், இது எதைக்  குறிப்பிடுகிறது..? பாபர் மசூதியில்லாத அயோத்தியைத் தானே..?

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அரசு பாஜகவிடம் இல்லை. ஆனாலும், வன்முறை மூலம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. ஞானவாபி மசூதியை சட்டத்தைப் பயன்படுத்தியே கைப்பற்றிக் கொள்ள முடியும். ஏனென்றால், இப்போது அரசும் தொல்லியல் துறையும், நீதித் துறையும் அவர்கள் கையிலேயே இருக்கிறது.

தமிழ்ச்சங்கமம் நிகழ்வு கலாச்சாரப் பரிமாற்றத்திற்குப் பயன்படவில்லை. தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படவில்லை.  மாறாக, ஒற்றைக் கலாச்சாரத்தை நிறுவுவதற்கான கருத்தியலைப் பரப்பப் பயன்படுகிறது.

ஒன்றிய அரசின் திட்டப்படி, தமிழ் நாட்டின் வெகுமக்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றிருந்தால் கருத்தியல் ரீதியாக காவியின் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், சங்கிகளின் அவசரத்தால், பி.ஜே.பி. ஆட்களே இருக்கைகளைப் பூர்த்தி செய்து கொண்டதால், அந்த நோக்கமும் நிறைவேறப் போவதில்லை.

காசி தமிழ்ச் சங்கமத்தினை, காவி – தமிழ் சங்கமமாக மாற்ற முயற்சித்த ஒன்றிய அரசின் இந்த திட்டம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதே கள எதார்த்தம்.

கட்டுரையாளர்; அ.உமர் பாரூக்

காசி பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் பட்ட முன்னாள் மாணவர்.

‘பொக்கணம்’, ‘கோடிக்கால் பூதம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர், பிரபல அக்கு ஹீலர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர்.

Mail : [email protected]

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time