குஜராத்தில் பாஜகவிற்கு வெற்றி எப்படி சாத்தியமானது? பல மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்தது எப்படி? மக்கள் தீர்ப்பு மாற்றி எழுதப்பட்டது எப்படி..? பாஜக விஸ்வரூபம் எடுக்கிறதா? காங்கிரஸ் கரைகிறதா? என்ன நடந்து கொண்டுள்ளது இந்திய அரசியலில்..?
‘’குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வரலாறு காணாத வெற்றி’’ என்று பெரும்பாலான தொலைகாட்சிகளும், ஊடகங்களும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
பாஜகவின் பிடியிலிருந்த இமாச்சலப்பிரதேச ஆட்சியை வீழ்த்தி, மக்கள் காங்கிரசுக்கு முடிசூட்டியிருக்கிறார்கள் என்ற உண்மை சன்னமான குரலில் வெளியிடப்படுகிறது.
அதேபோன்று, அண்மையில் நடந்த பல மாநில இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா – அது ஆளும் உத்தரப்பிரதேசம் உட்பட பெரும் தோல்வியை அடைந்து பின்னடைவைச் சந்தித்துள்ள செய்தியும் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது.
ஆனால், பூதாகர வெளிச்சம் குஜராத்தின் பாஜக வெற்றி மீது மட்டுமே காட்டப்படுகிறது. எல்லாச் சேனல்களிலும் காவிப்புடைவை கட்டிய மகளிர் கூட்டம் கும்மியடித்துக் கொண்டாடுவதையே திரும்பத் திரும்பக் காட்டப்படுகின்றன.
உண்மையில், தேசந்தழுவிய அளவில், பாஜகவுக்கு மாற்றாக மக்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதே குஜராத், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
குஜராத்தை எப்படிச் சொல்லலாம் என்று உங்கள் விழிகள் வியப்பால் விரியலாம். ஆனால், அது தான் உண்மை.
குஜராத் 1998ஆம் ஆண்டுமுதல் பாரதிய ஜனதா ஆளும் மாநிலம்தான். கேசுபாய் படேலைத் தொடர்ந்து ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் நரேந்திர மோடி ஆண்ட மாநிலம் அது. குஜராத் மாடல் என்கிற முழக்கத்தை வைத்துத்தான் பாஜக இந்தியா முழுதும் கால் பரப்பியது. எனவே, அதைத் தொடர்ந்து பாதுகாக்க அக்கட்சி எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தது. ஆறுமுறை வென்று ஆண்ட கட்சி, இம் முறை வெல்வதற்காக கடைபிடித்த அராஜகங்கள், அதிகார அத்துமீறல்கள் அதன் அச்ச உணர்வையே காட்டின.
பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள் என்று ஒட்டுமொத்த இந்திய அமைச்சரவையே இம்முறை அங்கு கூடாரமிட்டது. பணம் தண்ணீராக வாரியிறைக்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்காக பெறப்பட்ட நன்கொடை நிதிப் பட்டியலில் பாஜக பெற்ற தொகை மட்டும் 94 சதவீதம் என்றால், கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
தேர்தல் நிதிப் பத்திர சட்டத்தை பாஜக திருத்தியபோது, இதை எதிர்த்த அமைப்புகள் இந்திய ரிசர்வ் வங்கியும், தேர்தல் ஆணையமும் என்பதை இங்கே குறிப்பிடவேண்டும். கள்ளப் பணப் பரிவர்த்தனை நடக்குமென்று ரிசர்வ் வங்கி அச்சம் தெரிவித்தது. ஆளும்கட்சிக்குத்தான் இது சாதகமாக அமையுமென்று தேர்தல் ஆணையம் விவரித்தது. அரசியல் சட்டத்தையே மதியாத பாஜக இவற்றையா ஒரு பொருட்டாக மதிக்கும்? அலட்சியத்துடன் தன் திட்டத்தை நிறைவேற்றி, குஜராத் தேர்தலில் அறுவடையும் செய்து காண்பித்துவிட்டது. இமாச்சலப்பிரதேச தேர்தல் நிதி வசூலிலும் பாஜகதான் அம்பாரமாய்க் குவித்தது.
மாநில அரசு எந்திரமும், மத்திய அரசு எந்திரமும் குஜராத்தை வெல்ல முடுக்கிவிடப்பட்ட காட்சிகளைப் பார்த்தோம்.
ஒரே நேரத்தில் நடைபெறவேண்டிய குஜராத், இமாச்சலப் பிரதேசத் தேர்தல்களை, தான் பிரச்சாரத்தில் பங்கெடுக்காமல் போய் ஏதேனும் தவறாகிவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே தேர்தல் ஆணையத்தின் மூலம் தனித்தனியே தேதிகளில் நடத்தவைத்தார் மோடி.
தேர்தல் கால விதிகள் குஜராத்தில் அப்பட்டமாக மீறப்பட்டன. தேர்தல் பிரச்சார காலம் முடிவடைந்த பிறகு, விதிகளுக்குப் புறம்பாக தேர்தல் நாளன்று, நாட்டின் பிரதமரே பேரணி நடத்திய தேர்தல் விதிமுறைமீறலை குஜராத்தில் பார்த்தோம். இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியபோது, ‘’அது பேரணி அல்ல, மோடி போனபோது தானாகத் திரண்டுவழிந்த மக்கள் வெள்ளம்’’ என்று தேர்தல் ஆணையம் வெட்கமின்றிச் சொன்னது. தேர்தல் வெற்றிக்கு நன்றி சொன்ன மோதி, மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கும் சேர்த்து நன்றி சொன்னது இதற்காகத்தான்.
குஜராத் வெற்றி இவ்விதம் அராஜகத்துடன் பறிக்கப்பட்டதுதான்.
இமாச்சல் வெற்றியைக்கூட புறந்தள்ளி, காங்கிரஸ் வீழ்ச்சி காங்கிரஸ் வீழ்ச்சி என்று தொடர்ந்து ஊடகங்கள் கூறுவதன் பின்னணி என்ன?
”காங்கிரஸ் வீழ்ந்துவிட்டது; அதற்கு சரியான தலைமை இல்லை; நேரு குடும்பத்தார் தலைமை தாங்குவதை காங்கிரஸ் தலைவர்களே விரும்புவதில்லை; நாடு முழுவதும் காங்கிரஸ் செயலிழந்துவிட்டது…” என்கிற ஒரு எதிர்மறைச் சித்திரத்தை மக்கள் மத்தியில் விதைக்கும் உத்தியை தொடர்ந்து பல்லாண்டுகளாக சிரத்தையுடன் முன்னெடுத்தது பாஜக! அதற்காக அத்தனை ஊடகங்களையும் தன்வசப்படுத்தி மக்களை நம்பவைக்க தொடர்ப் பிரச்சாரத்தை இன்றளவும் முடுக்கிவிடுகிறது.
ஒருநாள் பதவியில்லாவிட்டாலும்கூட, ‘மயிர் நீத்தால் உயிர் நீக்கும் கவரிமான்களான’ காங்கிரசின் தலைமையிலிருந்த நாற்காலிப் பித்தர்களை நேரு குடும்பத்தின்மீது ஏவுவதில் அது குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது உண்மைதான்.. கபில்சிபல், குலாம் நபி ஆஸாத் மட்டுமல்ல, அவர்களைப் போன்று அம்பலப்படப் போகிறவர்களை இனி வரும் காலங்களில் நாம் தொடர்ந்து பார்த்து அதிர்ச்சியடையக்கூடும்.
ராகுல் மட்டும் பாரத் ஜோடோ யாத்திரையின்மூலம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்க்கும் பயணத்தில் வெற்றி பெறத் தவறியிருந்தாரானால், நாம் துரோகப் படலத்தின் பல காட்சிகளை இந்நேரம் பார்த்துக் கடந்திருப்போம். ஆனால், அதை ராகுலின் மக்கள் சந்திப்புப்பயணம் மட்டுப்படுத்தி வைத்திருக்கிறது என்பதே உண்மை.
இன்று பாரதிய ஜனதாவுக்கு அடுத்தபடியாக தேசமெங்கும் கிளைகள் விரித்துள்ள ஒரே தேசியக் கட்சி காங்கிரஸ்தான். அதேபோல, பல மாநிலங்களில் தேர்தல்களில் வென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிகளை அமைத்த – அமைத்திருக்கவேண்டிய தேசியக் கட்சியும் காங்கிரஸ்தான்.
பாஜகவின் வளர்ச்சி என்பது என்ன?
மக்களின் ஆதரவைப் பொருட்படுத்தாமல் – ஜனநாயக விரோதமாக – குதிரைப் பேரம் நடத்தி – பணத்தாசை பதவி ஆசையைக் காட்டி – மக்கள் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சிகளைக் கவிழ்த்து, தன்னையும் தன் பொம்மைகளையும் ஆளவைத்த குயுக்திமூலம், காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது என்ற சித்திரத்தை நிலைநாட்ட முற்படுவது – வெறும் கானல் பிம்பப் பொய்மை மட்டும்தான்.
அருணாசல பிரதேசத்தில் நடந்த அத்துமீறல்கள்!
2014 அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க பெற்றது வெறும் 11 தொகுதிகள் மட்டும். பெரும் பணபலத்தால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பேரம் பேசி தூக்கியது! மத்திய பாஜக அரசின் பரிந்துரைப்படி காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்டது . அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவு வழங்குவதாகச் சொன்ன பா.ஜ.க 2016இல் கலிகோ புல்லை முதல்வராக்கி பொம்மை ஆட்சியை நிறுவியது.
நடந்த அத்துமீறல்களை உச்ச நீதிமன்றம் கண்டித்து, ஆளுநர் ராஜ்கோவாவின் ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது எனக் கூறி, பழைய அரசே தொடர வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டது. ஆனால், காங்கிரஸ் சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பீமா காண்டுவை வைத்து அரசியல் சதுரங்கம் ஆடிய பாஜக, மீண்டும் ஆட்சியைக் கபளீகரம் செய்து முடிசூட்டிக் கொண்டது.
2014- ல் காங்கிரசுக்கு துரோகமிழைத்து, பாஜகவின் கைப்பாவை முதல்வராயிருந்த கலிகோ புல், பாஜகவின் வஞ்சகத்தாலேயே செல்லாக்காசாக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டது தொடங்கி இன்று வரை பாஜக அருணாச்சலப்பிரதேசத்தில் செய்த ஜனநாயகப் படுகொலைகளை தனி கட்டுரையாகத்தான் எழுதவேண்டும்.
மணிப்பூரில் அரங்கேறிய மால் பிராக்டிஸ்!
2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 28 இடங்களை வென்ற காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிக்கும்போது, 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்த பாஜக, ஒற்றை இலக்க எண்ணில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் ஆதரவுடன் ஒரு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரையும் விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி பொறுப்பேற்ற கையோடு, மேலும் ஏழு காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, தன்னை வலுவாக்கி நாற்காலியை இறுகப் பிடித்துக் கொண்டது.
கோவா, மேகலாயாவில் நடந்த குதிரைபேர அரசியல்! 2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் 17 இடங்களில் வென்ற காங்கிரஸை பின்னுக்குத் தள்ளி, 13 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, 12 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கைப்பற்றியது . கோவா மக்கள் வாயடைத்து நின்றனர்.
2018 மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால், 2 தொகுதிகளில் மட்டுமே வென்ற பாஜக, மத்திய ஆட்சி அதிகாரத்தின் வலிமையால், தேசிய மக்கள் கட்சியிடம் குதிரைப்பேரம் நடத்தி – வேறு சில கட்சிப் பிரதிநிதிகளை விலைக்கு வாங்கி தந்திரமாக ஆட்சியைப் பிடித்தது.
கர்நாடாகாவில் களங்கப்படுத்தப்பட்ட ஜனநாயகம்!
2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை போதவில்லை. 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதல்வர் பதவியை அளித்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. எல்லாம் கொஞ்சநாட்கள் தான். 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், 3 மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களையும் வலைவீசி தன் பக்கம் இழுத்து முடிசூட்டிக்கொண்டது பாஜக.
மத்தியபிரதேசத்தில் மடைமாற்றம் செய்யப்பட்ட வெற்றி!
2018 மத்திய பிரதேசசட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்றது. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது, இரண்டு இடங்கள் கிடைத்தாலே ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜக, 109 இடங்களில் வென்றால் சும்மா இருக்குமா? அடுத்த ஆண்டுகளில், அதிருப்தியில் இருந்த ஜோதிராதித்திய சிந்தியாவை தூக்கியதோடு , அவர் வழியே 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியில் உட்கார்ந்தது. இந்த விலைபோன பட்டியலில் ஆறு அமைச்சர்களும் இருந்தார்கள் என்பதிலிருந்தே , பாஜகவின் துஷ்பிரயோகத்தை விளங்கிக்கொள்ள முடியும்.
புதுச்சேரியில் புதைக்கப்பட்ட ஜனநாயகம்;
2016இல் நம் அண்டை மாநிலமான புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வென்றது. தி.மு.க ஆதரவுடன் நாராயணசாமி முதல்வரானார். எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அடுத்தத் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் நமச்சிவாயம் உள்பட 8 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக. இது வரை ஒரு எம்.எல்.ஏ கூட புதுச்சேரியில் பாஜவுக்கு இல்லை. ஆனால், காங்கிரசை கபளீகரம் செய்து தற்போது 9 எம்.எல்.ஏக்களை கொண்டு, ரங்கசாமி தலைமையில் கூட்டணி வைத்து, அவரை பொம்மையாக்கி ஆட்சி நடத்துகிறது. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சியை தட்டிப் பறித்த கதைகள். காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகள் பட்டப் பாடுகளையும் பார்ப்போம்.
சிக்கிமில் சிதைக்கப்பட்ட ஜனநாயகம்!
2019 சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும்,15 தொகுதிகளில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றன. ஆனால், ஒரு தொகுதியில்கூட வெல்லாத பாரதிய ஜனதா ,சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்த கொடுமை மிகப்பெரிய ஜனநாயக இழிவு .
ஜம்மு காஷ்மீரில் நடந்த துரோகம்;
2015 ஜம்மு கஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றது 28 இடங்கள். தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. பாஜக 25 இடங்களைப் பெற்றது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. ஒரே ஆண்டில் முதலமைச்சர் முப்தி முகம்மது சயீத் இறந்ததால் , அவர் மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். முப்தி பாஜகவின் அதிகாரா ஆட்டுவிப்புக்கு இசைவு கொடுக்காததால், கூட்டணியை உடைத்து விலகி முப்தி ஆட்சியை அதிரடியாகக் கவிழ்த்தது பாஜக.
பிகாரில் பாஜகவின் சதிவலையில் ஐக்கிய ஜனதா தளம் வீழ்ந்ததும், மீண்டதும் நாமறிந்த கதை. அதைப்போன்றே மகாராஷ்டிராவில் சிவசேனாவின் தலைமையிலான கூட்டணி ஆட்சியை ஷிண்டே என்ற துரோகியைக் கொண்டு கவிழ்த்தனர். பிறகு ஷிண்டேவை கைபொம்மையாக்கி பாஜக கூட்டணி ஆட்சி நிறுவப்பட்டதும் அண்மையில் நாம் கண்டு அதிர்ச்சியுற்ற பாஜகவின் அரசியல் சித்து விளையாட்டில் ஒன்று.
இவ்விதம் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களிலும், மாநிலக் கட்சிகள் ஆண்ட மாநிலங்களிலும் ‘ஆப்பரேஷன் லோட்டஸ்’ என்று குறிக்கப்படும் இழிவான உத்தியைப் பயன்படுத்தி. மக்கள் தீர்ப்பை சூழ்ச்சியால் மாற்றி அமைத்து ஜனநாயகத்துக்குப் புறம்பாக அதிகாரத்தை பிடித்துள்ளது பாஜக! இப்படி சூதால் பெற்ற வெற்றிகளை விதந்தோதி நாட்டில் காங்கிரஸ் வீழ்ந்துவிட்டது – பலவீனமாகிவிட்டது என்று திரும்பதிரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கி விடத் துடிக்கிறது பாஜக.
உண்மையில் பாஜக பலவீனமான கட்சி தான்!
தமிழகத்தின் 234 மொத்த உறுப்பினர்களில் பாஜக -4
மிஸோரம் 40 மொத்த உறுப்பினர்களில் பாஜக – 1
தெலங்கானாவின் 119 மொத்த உறுப்பினர்களில் பாஜக -3
ஆந்திரத்தின் 175 மொத்த உறுப்பினர்களில் – பாஜக ஜீரோ தான்!
சட்டிஸ்கரின் 90 மொத்த உறுப்பினர்களில் பாஜக -14 தான்!
மேகாலயாவின் 60 மொத்த உறுப்பினர்களில் பாஜக -2 தான்!
நாகாலாந்தின் 60 மொத்த உறுப்பினர்களில் பாஜக -12 தான்!
ஒடிசாவின் 147 மொத்த உறுப்பினர்களில் பாஜக 22 தான்!
பஞ்சாபில் 117 மொத்த உறுப்பினர்களில் பாஜக 2 தான்!
புதுச்சேரியின் 30 மொத்த உறுப்பினர்களில் 9 தான்!
டெல்லி 70 மொத்த உறுப்பினர்களில் பாஜக 8 தான்!
இமாச்சலில் 68 மொத்த உறுப்பினர்களில் 25 தான்!
கேரளத்தின் 140 மொத்த உறுப்பினர்களில் பாஜக ஜீரோ தான்!
நாடாளும் பாஜக, நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் ஒற்றை இரட்டை இலக்கத்தில்தான் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகியவற்றில் பாஜக எவ்வளவோ சித்து வேலைகள் செய்தும் அங்குள்ள ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை.
Also read
பழைய தவறுகளைக் களைந்து, தளர்விலிருந்தும் மீண்டு, காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெறவேண்டியது இந்திய மக்களின் ஒருமைப்பாட்டுக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் அவசியமானது. அது தன்னை மீண்டும் பழைய எழுச்சிக்குத் தகவமைத்துக்கொள்ளும் என்கிற நம்பிக்கையை கட்சிக்குள்ளும், வெளியிலும் அதன் இளந்தலைவர் ராகுல் ஏற்படுத்தி வருகிறார்.
காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பழைய பல்லவியுடன், பாஜக எதிர்ப்பை பலவீனப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பிளந்து, குறுக்குச்சால் ஓட்டநினைக்கும் எந்தக் கட்சியும் இந்திய நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானவர்களாகவே முன்னிறுத்தப்படுவார்கள்.
கட்டுரையாளர்; ரதன் சந்திரசேகர்
மூத்த பத்திரிகையாளர்.
படித்தேன் என்னுடைய கருத்தும் அனுமானமும் இதுதான் !
After the accent of Modi and Shah in to the leadership the BJP degenerated to such low. It’s good for India if both of them were dumped by people
Really super. Thiru migu APJ Abdulkalam dream wouldn’t be come true
நடுநிலை / அறம் என்ற பெயரில் பாஜக வெறுப்பு மட்டுமே இந்தக்கட்டுரையில் வெளிப்படுகிறது. கர்நாடகாவிலும் மகாராஷ்டிரத்திலும் பெரிய கட்சியாக வந்தது பாஜக தானே. தேர்தலுக்குப் பின்னான உடன்படிக்கை மூலம் காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் ஆட்சி அமைத்தால் அது ராஜதந்திரம். அதை பாஜக செய்தால் குதிரைபேரம். ஒன்று இரண்டையும் சாடவேண்டும். அன்றேல் இரண்டையும் ஏற்கவேண்டும். ஒன்றை உயர்த்தி அதே செயலைச் செய்யும் இன்னொன்றை தாழ்த்துவதன் பெயர் நேர்மையன்று!