அடடே, இத்தனை பலன்களா..? அதிசய மூலிகை முருங்கை!

-எம்.மரிய பெல்சின்

‘முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ‘ -மருத்துவம் சார்ந்த இந்தப் பழமொழியின் பொருள், நம்மை ஆரோக்கியத்துடனும், இளமையுடனும் வைத்துக் கொள்ளக் கூடியது முருங்கைக் கீரை  என்பதாகும்!  பற்பல அரும்பெரும் அற்புதங்களை நிகழ்த்தி பல நோய்களுக்கு தீர்வு தருகிறது!

இந்தக் கீரையை யார் ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்கிறாரோ அவர் வயதானாலும் கையில் கம்பு, குச்சி ஊன்றாமல் நடந்து செல்வார் என்பதாகும். முருங்கை கீரை தாய்ப்பால் ஊறச் செய்யும், ஆண்மைக் குறை போக்கும்!

ஆனால், நம்மில் பலர் இந்தப் பழமொழியை தவறாக புரிந்துகொண்டு, தங்கள் வீடுகளில் முருங்கை மரம் நடுவதை தவிர்த்து வருகிறார்கள். அதாவது, முருங்கை மரத்தை நட்டவன் ஓட்டாண்டியாகி விடுவான் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

முருங்கைக் கீரை மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு கீரை. ஆனால் இதில் ஏராளமான சத்துகள் உள்ளன. குறிப்பாக இரும்புச்சத்து, வைட்டமின் பி, பி2, வைட்டமின் சி சத்துகள் அதிகமாக உள்ளன. முருங்கையின் கீரை மட்டுமல்லாமல் அதன் பூவையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் அதிகரிக்கும். அதுமட்டுமல்ல எலும்புகளும், பற்களும் வலிமை பெற உதவும். கண் கோளாறுகள், பித்தம் தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற்றுத் தரக்கூடியது முருங்கைக்கீரை. அதேபோல் முருங்கையின் ஈர்க்கும்கூட மருத்துவ குணம் நிறைந்தது.

வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் பல்வேறு நலக்குறைபாடுகள் தீரும். முக்கியமாக வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. பொரியல், கூட்டு மட்டுமல்லாமல் சூப் செய்தும் சாப்பிடலாம். இதுபோன்று அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் சாதாரண தலைவலியில் தொடங்கி இருமல், சளித்தொல்லைகளில் இருந்து விடுபடலாம். காரணம் இந்தக்கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. உடல் வலி ஏற்பட்டால் முருங்கைக்கீரையில் ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

குழந்தை பெற்ற தாய்மாருக்கு முருங்கைக்கீரை மிகவும் நல்லது. முக்கியமாக தாய்ப்பால் ஊறுவதற்கு முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தாலே போதும். குழந்தைக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முருங்கைக்கீரை சமைத்துச் சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் தாய்மாருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நன்மை கிடைக்கும். அதாவது வாயுவை உண்டாக்கக்கூடிய உணவுகளை தாய்மார் சாப்பிட்டால் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும் பாதிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகளின் வயிறு கல் போன்று வீங்கி உப்பிக்கொண்டு மிகுந்த தொல்லையை கொடுக்கும், மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். இது போன்ற நேரங்களில் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிடுவது பலன் தரும்.

முருங்கை கீரை வடை, முருங்கை கீரை கூட்டு

கைப்பிடி முருங்கைக்கீரையை எடுத்து கசக்கி சாறு பிழிந்து கல் உப்பு சேர்த்து கரைக்க வேண்டும். அதனுடன் வெந்நீர் சேர்த்து ஒரு பாலாடை (சங்கு) அளவு குழந்தைக்கு கொடுத்தால் போதும். வாய்வு விலகி அழுத குழந்தை சமாதானமாகிவிடும். பிரச்சினை அதிகமாக இருந்தால் முருங்கைக்கீரை சாற்றுடன் வசம்புத்தூளினை சேர்த்து குழந்தையின் தொப்புளைச்சுற்றி பற்று போட்டு வந்தால் பிரச்சினை சரியாகும். குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் சிலநேரம் சிறுநீர் போகாமல் வயிற்றில் தேங்கி பாடாய்ப்படுத்தும். அதுபோன்ற நேரங்களில் முருங்கைக்கீரையுடன் வெள்ளரி விதை சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து தொப்புளில் பற்று போட்டால் நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் வெளியேறும். செலவே இல்லாத எளிய வைத்தியம் இது.

முருங்கை பொறியல், முருங்கை ரசம்!

மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பகல் வேளை உணவுடன் முருங்கைக் கீரையை பொரியல் செய்து சாப்பிடலாம். இல்லையென்றால் சூப் செய்து குடிக்கலாம். முருங்கைக் கீரைதான் என்றில்லை முருங்கை ஈர்க்குகளை ரசம் அல்லது சூப் வைத்துக் குடித்து வந்தாலே மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். வாரத்தில் ஒருநாள் முருங்கைக்கீரை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையில இருந்து விடுபடலாம். இன்றைய சூழலில் நம்மில் பலருக்கு இருக்கக்கூடிய உடல்நலக்கோளாறுகளில் மலச்சிக்கல் பிரச்சினை முக்கியமானது. வாதக்கோளாறு, மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக் கீரையுடன் வாதநாராயணன் கீரை, லெச்சக் கெட்ட கீரை சேர்த்து சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.

இனிமேலாவது முருங்கைக் கீரையின் மகிமையை புரிந்துகொண்டு நாம் அனைவரும் அடிக்கடி முருங்கைக்கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது. பல வகைகளில் இதை சமைக்கலாம்! முருங்கை கீரை ரசம், முருங்கை கீரைக் கூட்டு, முருங்கைப் பொறியல், முருங்கை கீரை வடை..என அசத்தலாம்!  சுவைக்கு சுவை! சத்துக்கு சத்து!

குழந்தையின்மை, ஆண்மைக்குறை பிரச்சினை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்துச் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல், முருங்கைப்பூவையும் சமைத்துச் சாப்பிடலாம். முருங்கைப்பூவை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு போதுமான பலம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கண் கோளாறுகள், பித்தக்கோளாறுகளில் இருந்தும் விடுபடலாம். முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு குறையும். இதனால் சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை வராமல் தடுக்கலாம்.

ஆனால், முருங்கைக்கீரையை அதிகம் வேக வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அதில் உள்ள சத்துகள் நமக்குக் கிடைக்காது. அதனால்தான் வெந்து கெட்டது முருங்கை, வேகாமல் கெட்டது அகத்தி என்று ஒரு மருத்துவ பழமொழி சொல்வார்கள். பழமொழியைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இரவு உணவில் இந்தக் கீரை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது!

வீட்டுக்கு ஒரு முருங்கை மரம் வளர்த்து முருங்கையில் அதன் கீரை மட்டுமல்லாமல் பூ, பட்டை, பிசின், ஈர்க்கு என அனைத்து பாகங்களிலும் உள்ள மருத்துவ குணம் இருக்கிறது என்பதை புரிந்து நலம்பெறுவோம்.

இத்தனை சிறப்பு வாய்ந்த கீரையின் மருத்துவ குணம் பற்றி இன்னும்கூட நம்மில் பலருக்கு தெரியாதது வருத்தமே. ஏன் சொல்கிறேன் என்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மறைந்த கியூபா நாட்டின் பொதுவுடைமை தலைவர் ஃபிடெல் காஸ்ட்ரோ அவரது முதுமைக்கால நோய்களிலிருந்து விடுபட முருங்கைக்கீரையை பயன்படுத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல கியூபாவின் பக்கத்து நாடான ஹைத்தி தீவில் 2010-ம் ஆண்டு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டு பலர் இறந்தனர். அதுமட்டுமல்ல அதைத்தொடர்ந்து வந்த காலரா நோயால் லட்சக்கணக்கான மக்கள் இறந்திருக்கின்றனர்.  இதற்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என்று ஆலோசித்தபோது அதற்கு முருங்கைக்கீரை ஒன்றே தீர்வு என்பதை அறிந்தார். ஃபிடெல் காஸ்ட்ரோ அப்போது ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் கண்ணெதிரே மடிந்துபோகும் மக்களுக்கு உதவ எண்ணினார்.

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முருங்கை எங்கே இருக்கிறது என்று தேடியபோது அது இந்தியாவில் இருக்கிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளரான டாக்டர் கெம்பா ஹெர்கோ என்பவர் தெரிவித்திருக்கிறார். இந்தியா மீது பிடெல் காஸ்ட்ரோவுக்கு தனி பாசம் உண்டு. உடனே  டாக்டர் கெம்பா ஹெர்கோ மற்றும் குழுவினரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் முதலில் தமிழகம் வந்து முருங்கையின் மருத்துவ பயன்பாடு மற்றும் முருங்கை சாகுபடி பற்றி கேட்டறிந்தனர். அத்துடன் ஆந்திரா, கேரளாவுக்கும் சுற்றுப்பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. கியூபா திரும்பும்போது கையில் முருங்கைச் செடிகளை எடுத்துச் சென்று அவற்றை வளர்த்து காலரா பாதித்த மக்களுக்கு கொடுத்து பலரை காப்பாற்றியதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஆக, காலரா பாதித்த பலரை சாவிலிருந்து மீட்ட இந்த முருங்கையை நம்பினால் நிச்சயம் அது நம்மையும் காக்கும். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்ற பழமொழியின் உண்மையை அறிந்து நடப்போம். உடல் நலம் காப்போம்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்,

மூலிகை ஆராய்ச்சியாளர்,

கைபேசி; 9551486617

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time