பலருக்கும் பல அரசியல் பார்வைகள் உண்டு. தம் நிலைப்பாட்டுக்கு வலிமை சேர்ப்பதற்காக, வரலாற்றை வளைத்தும், திரித்தும் எழுதுவது எவ்வகைக் கோட்பாளர்க்கும் பெருமை சேர்க்கும் செயல் அல்ல. மட்டுமல்ல, இத்தகைய செயல்கள் அவர்களின் அடிப்படை நோக்கங்களின் மீது அய்யத்தைப் படியவைக்கும் அவலத்தை அவர்க்கு ஏற்படுத்தும்.
தமிழகத்தின் பிரபலமான ஒரு பெண் கவிஞர் – சிறந்த பெண்ணியக் கவிதைகளை, சமூகம் சார்ந்த பிரச்சனைகளை முன்வைத்துச் சிறந்த படைப்புகளை உருவாக்கியிருப்பவர்.
அந்த அம்மாள், புதிய கண்டுபிடிப்பு என்று நினைத்து, ஓர் அறுதப் பழசான, பிய்ந்து கிழிந்த செய்தியைக் கொண்டுவந்து பாரதி பிறந்தநாளில் முகநூலில் கட்டித் தோரணம் தொங்கவிட்டிருந்தார்.
பாரதிக்குக் களங்கம் சுமத்துகிறாராம்!
பாரதி கடலூர்ச் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த செய்தியைத் தூசி தட்டிப் பிரசுரித்திருக்கிறார். பிற்பாடு தெரிந்தது, அவர் மட்டுமல்ல வேறு சில குறு சிறு நடுத்தர மதியாளர்களும் இதை முகநூலில் அன்றைக்குப் பரப்பியிருக்கிறார்கள் என்று.
பிராமணர் என்ற ஒற்றை வன்மப் பார்வை மூலம், காக்கைக் குருவி எங்கள் ஜாதி என்று பாடிய பாரதியை இழிவு செய்ய திராவிட இயக்கத்தாரில் நெடுஞ்செழியன் போன்ற சிலர் முயன்றதும், பொதுவுடைமை இயக்கத்தார் சிலர் தங்கள் பாணியில் அவரைப் பழித்ததும் பழைய வரலாறு. அதைத் திராவிட இயக்கத்தாரிடை தகர்த்தெறிந்தவர் பாரதிதாசன்.
தமிழ் மக்களிடையே பாரதியை அகலக் கொண்டு சென்றவர் கம்யூனிஸ்ட் தலைவரான ஜீவானந்தம். அவர் நிறுவிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாரதியை நிறுவுவதை ஒரு தொண்டாகவே செய்த காலம் ஒன்றிருந்தது.
பிளாஸ்டிக் குப்பைகள் எவ்விதம் மக்கிப் போகாதோ, அவ்விதம் விஷமக்கருத்துகளும், விஷக்கருத்துகளும் மக்கிவிடுவதில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், அந்தப் பொய்களுக்குச் சலங்கை கட்டி ஜோடித்து ஆடவிட இன்றைக்கும் சிலபேர் முற்படுகிறார்கள்.
என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? புதிய வரலாற்றாசிரியர் பட்டத்தைச் சூட்டிக் கொள்கிறார்கள்; மன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்; சாதிவெறியை வெளிக்காட்டுகிற சுகமும் கிடைத்தே விடுகிறது.
பல்வேறு அரசாங்கங்களை எதிர்த்து சிறை சென்ற பல்வேறு போராட்டக்காரர்களுள் பலர் – அதைத் தாங்கியும் சகித்தும் சிறை வாழ்வைக் கழித்த கதை வரலாறு நெடுகிலும் உண்டு. சிறைக் கொடூரம் சகியாமல் பலபேர் மன்னிப்புக் கடிதம் எழுதி வெளி வந்துமிருக்கிறார்கள்.
அதற்காக அவர்கள் அனைவரும் பணிந்தார்கள் என்று பொருள் அல்ல. இயலாமையாலும் சிலர் எழுதிக் கொடுத்திருக்கக்கூடும். உத்தியாகவும் சிலர் கடைப்பிடித்திருக்கலாம். அது அவர்களின் சூழலை மட்டுமல்ல, தொடர்ந்து ஆற்றிய ‘செயல்பாட்டையும்’ பொறுத்த விஷயம்.
பாரதி எழுதிக்கொடுத்து வெளிவந்த ‘அந்தக் கடிதம்’ – பெண் கவிஞருக்குப் ‘புதுமை’யாகத் தோன்றியிருக்கிறது. குதூகலத்துடன் பதிந்து பாரதியை ஏசியிருக்கிறார்.
அவர் பதிவின் பின்னூட்டத்தில்-
‘அரைகுறை வரலாறு! நமக்குத் தேவைப்படும்வரை வெட்டி எடுத்துக் கொள்வது! நல்ல நீதி! பாரதியை உங்கள் சாவர்க்கர் என்று நினைத்துக்கொண்டீர்கள் போலிருக்கிறது!’ என்று பதிந்துவிட்டு வந்துவிட்டேன். விளக்கிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால். புதிதாக முளைத்திருக்கும் புதிய சுயம்பு சைன்டிஸ்டுகள், ஏட்டுச்சுரைக்காய் வரலாற்றாசிரியர்கள் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வது வீண் வேலை என்பது பட்டறிவு. ஏற்றுக்கொள்வோரிடம் மட்டுமே உரையாடமுடியும்?
எனினும், மனம் பெறாமல், ‘நைந்து போகாத நெகிழிக்கழிவுகள் ‘ போலும் அச்சத்துடன் உண்மையை இங்குப் பதிகிறேன்.
பாரதி விடுவிக்கக் கோரி கடிதம் கொடுத்தது 1918 ஆம் ஆண்டின் இறுதியில் என்பதை நினைவில் கொள்க.
1919இல் சென்னை வந்த காந்தியை அனுமதி பெறாமல், வலியச் சென்று சந்திக்கிறார் பாரதி.
“மிஸ்டர் காந்தி! நான் இன்று மாலை திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெறும் கூட்டம் ஒன்றில் பேசுகிறேன். அந்தக் கூட்டத்திற்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்”. கேட்கிறார் பாரதி.
“இன்றைக்கு முடியாது. நாளைக்குத் தள்ளிவைக்க முடியுமா?” வினவுகிறார் காந்தி.
” முடியாது மிஸ்டர் காந்தி. நீங்கள் தொடங்க இருக்கும் இயக்கத்திற்கு என்னுடைய ஆசீர்வாதங்கள்!” என்று எழுந்து போகிறார் பாரதி.
திருவல்லிக்கேணியில் கடற்கரையில் எந்த நிகழ்வுக்காக அழைத்திருப்பார் பாரதி? ஸ்ரீராம காதை உபன்யாசத்துக்காக இருக்குமோ? அவர்தான் இயேசுவையும் தேவன் என்றவராயிற்றே! ஏதாவது ஆத்தும சரீர சுகமளிக்கும் பிரார்த்தனைக் கூட்டத்துக்காயிருக்குமோ?
மகாகவி பாரதியின் வரலாற்றை எழுதிய வ.ராமஸ்வாமி குறிப்பதைக் கேளுங்கள் :
‘பாரதியார் ‘புதுவையிலிருந்து சென்னைக்கு வந்தபின்’, திருவல்லிக்கேணி கடற்கரையில் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவது வழக்கம். பாரதியார் சொற்பொழிவைக் கேட்க, இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் கூடிவிடுவார்கள். வெகுநேரம் காத்துக்கொண்டிருப்பார்கள்!’
ஒரு நிகழ்வையும் சொல்கிறார், செவிமடுங்கள் :
‘ஒருமுறை – அது பாரதியாருக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் என்பதைக்கூடக் கவனிக்காமல், சத்தியமூர்த்தி துடுக்காக, “நீங்கள் வழக்கமாகக் கேட்கும் பாரதியார் நாளைக்குப் பேசுவார். இன்றைக்கு இத்துடன் கூட்டம் முடிவுபெற்றது” என்று அறிவித்துவிட்டுப் போய்விட்டார். ஆனால், கூட்டம் கலையவில்லை .
……ஓயாது என்று சொல்லும்படியான கரகோஷங்களுக்கு இடையே, பாரதியார் பிரசங்கமாரி பொழிந்தார். அன்றிரவு கூட்டம் கலையும்பொழுது மணி பதினொன்று இருக்கும்‘ என்றெழுதுகிறார் வ.ரா.
அன்றைய கூட்டத்தில்தான், ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை! இனியொரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்; தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற மங்காப்புகழ் பெற்ற பாடலையும் பாரதி பாடினார் என்பது கூடுதல் செய்தி.
கடிதமெழுதிக் கொடுத்துவிட்டு விடுதலையானவர், சிறையதிகாரியிடம் எழுதிக்கொடுத்தாற்போல், அரசியலைவிட்டு புறமுதுகிட்டு ஓடிவிட்டாரா என்ன? குற்றம்சாட்டுகிறவர்கள் பதில் சொல்லவும் கடமைப்பட்டவர்கள்.
விடுதலைக் குயிலான பாரதி சிறையில் அடைபடுவதை ஒருபோதும் விரும்பியிருக்கவில்லை என்பது உண்மை. முன்னர் சென்னையிலிருந்தபோதே கைது செய்யவந்த பிரிட்டிஷ் போலீசின் கண்களில் மண் தூவிவிட்டுத்தான் புதுவைக்குத் தப்பிச்சென்றிருந்தார் பாரதி.
டாக்டர் எம்.சி நஞ்சுண்டராவ் உதவியுடன் பக்கிங்ஹாம் கால்வாய் வழியே படகு மூலம் நள்ளிரவில் தப்பிச்சென்றார் என்றும், நண்பர் உதவியுடன் சைதை ரயிலடியில் ரயிலேறித் தப்பினார் என்றும் வெவ்வேறு இடங்களில் வாசிக்க நேர்ந்தது. இரண்டும் உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
‘‘உருநிலை தவறி வெறிகொண்டு நம்மைத் துன்புறுத்தப் புகும் ஸர்க்கார் கையிலிருந்து நமக்குத் தப்ப வழியிருக்கும் போது நாம் ஏன் சிக்கிக் கொள்ள வேண்டும்? துஷ்டனைக் கண்டால் தூர விலக வழியிருக்கும்போது, தூர விலகிப் போவோம்!”. என்று பாரதியின் வார்த்தைகளிலேயே நாம் அறியவும் முடிகிறது. இதுதான் அவர் மனநிலை..
அந்தக் கடிதம் குறித்த இன்னொரு செய்தி செய்தியும் உண்டு, கேளுங்கள்:
பாரதி கைதி செய்யப்பட்ட சேதி தெரிந்ததும், சுதேசமித்திரன் ஏ.ரங்கசாமி அய்யங்கார் மாகாண போலீஸ் ஜெனரலிடம் ஓடிச் சென்று மன்றாடுகிறார். இனி அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று மன்னிப்பு எழுதிக்கொடுக்கச் சொல்கிறார் அதிகாரி.
பாரதியிடம் போய் மன்னிப்பு எழுதிக் கொடுக்கச்சொல்லிக் கேட்கும் தைரியம் அய்யங்காருக்கு இல்லை; ஆனால், சீர் குலைந்து போயிருந்த பாரதியின் உடல்நிலை அவரை உந்தித்தள்ளுகிறது என்று குறிப்பிடும் வ.ரா., ‘ஒரு சூத்திரத்தை தமது ராஜதந்திர மூளையால் அய்யங்கார் தயார் பண்ணி பாரதியாரை விடுதலை செய்யும்படியான ஏற்பாட்டைச் செய்தார்’ என்றும் எழுதுகிறார்.
எனவே, விடுதலை பெற்றுக் கடமையாற்ற, அந்தக் கடிதம் ஓர் உத்தி என்பதை விளக்கத் தேவையில்லை.
விடுதலையானதும் , சிறிது நாள்கள் கடையத்தில் இருந்துவிட்டுச் சென்னை திரும்பிய பாரதி – திருவல்லிக்கேணி கோயில் யானையால் தூக்கிவீசப்பட்டு மருத்துவமனையிலும், வீட்டிலுமாக ஓய்விலிருந்த காலம் தவிர்த்து – தொடர்ந்து தன் விடுதலைப் போராட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டே தான் இருந்தார். நோயிலிருந்து மீண்ட பிற்பாடும், சாகும் நாளதுவரை எழுதுவதும் பேசுவதுமாக தன் அரசியல் கடமையை பாரதி நிறுத்தவேயில்லை என்பதுதான் உண்மை. அதற்கான வரலாற்றுச் சான்றுகள் நெடுகப் பதிந்து கிடக்கின்றன. அய்யமுள்ளோர் அவற்றை பாரதி இலக்கியத்தில் தேடிப் படிக்கவேண்டும். புனைசுருட்டு வரலாற்றில் அல்ல.
‘கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ என்று சொல்லிச்சென்ற மரபு தமிழருடையது. எளிய பாமரன்கூட கைக்கொள்ள வேண்டிய இந்த ‘ஆய்வுப் புத்தி’யை – எழுத்தாளர் என்று கிரீடம் சூட்டிக் கொள்வோர் கடைப்பிடிக்காமல், காதில் விழுந்ததைக் கேட்டு, வாய்க்கு வந்ததை அள்ளிவிட்டால் எப்படி?
சொன்னாலும் கேளாமல், நிறுவினாலும் ஒப்பாமல், தான் பிடித்த தவளைக்கு தொண்ணூறு கால் என்று வம்பளப்பவர்களை என் செய்ய?
‘இந்தத் திண்ணைப்பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும்அண்ணாச்சி’ என்று பட்டுக்கோட்டை சொன்னதுபோல் எச்சரிக்கையாகத்தான் இருந்தாக வேணும். அந்த விழிப்புக்காகவே இந்தப் பதிவு.
பாரதி குறித்து திராவிட இயக்கத்தின் போர்வாள் எனப் போற்றப்படும் பாரதிதாசன் சொன்னதே மெய் :
‘இந்நாட்டினைக் கவிழ்க்கும்
பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு!
படரும் சாதிப்படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்!
அயலார் எதிர்ப்புக்கு அணையா விளக்கவன்!’.
-ரதன் சந்திரசேகர்
பத்திரிகையாளர்
சிறப்பான கட்டுரை… அவசியமான காலப்பதிவு.
பிரிட்டிஷ் சட்ட நடைமுறைகளில் ஒன்று – பிணையில் விடுவிப்பதற்கு மன்னிப்புக் கடிதம் கோருவது. இப்போதும் சுதந்திர இந்தியாவிலும் இது நீடிக்கிறது. பெயில் கேட்கும் ஒவ்வொருவரும் தனக்கு தொடர்பற்ற வாசகங்கள் உள்ள மனுவில் கையொப்பமிட்டால் மட்டுமே வெளியே வர முடியும்.
சிறையிலிருந்து வெளியே வந்த பாரதி, என்ன செய்தார் என்பதுதான் அவருடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
பாரதி மறைவு வரை மகாகவி வரை எத்தனையோ சம்பவங்கள் உண்டு. பாரதியை தூற்றுபவர்கள் முன்பும் உண்டு இப்போதும் உண்டு எதிர்காலத்திலும் உண்டு.. அவன் மீதான பார்வை என்பது வன்மம் மிகுந்த சாதிய பார்வை .. அவனுடைய துணிவு அவனுடைய போராட்டம் அவனுடைய கவிதைகள் அவனுடைய எழுத்துக்கள் சாகா வரம் பெற்றவை .. கண்ணதாசன் வரிகளில் சொல்லுவது என்றால் போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் .. பாரதி பிடித்தேர்வடம் நடு வீதி கிடக்கிறது … அதைப் பற்றிப் பிடித்து இழுப்பதற்கு ஒன்று கூடுவோம் ! அருமையான கட்டுரை வாழ்க ரதன் ! வாழ்த்துக்கள்!
ரதன் சந்திரசேகர் மற்றும் உமர் பாரூக் இருவருக்குமே வாழ்த்துக்கள், நன்றி. தொடரட்டும் அமுத பயணம்.
பாரதியார் வெள்ளையனை எதிர்த்துப் போராடியதும், சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதும் உண்மை. தான் ஆரியர் என்கிற எண்ணமும், ஆரியம் உயர்ந்தது என்று எண்ணமும் அவரிடம் இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது. மற்றவரை தாழ்மைப்படுத்தவில்லை என்றாலும் ஆரியம் உயர்ந்தது என்று நினைத்திருக்க வாய்ப்பு உள்ளது தானே.
பின்வரும் வாட்ஸப் பதிவு அவருடைய கவிதைகளிலிருந்து ஆரியம் என்கிற வார்த்தைகளை தேடி எடுத்து தொகுத்துள்ளது.
#பாரதி யார் ?
பாரதியாரின் பாடல்களில், பாரதிக்கு ஆரிய சாதிவெறி இருக்கிறதா? ஆம், பாரதிக்கு ஆரிய சாதிவெறி இருக்கிறது?!
பாரதியார் பாடல்களில் , பாரதிக்கு ஆரிய இனவெறி பற்றிருக்கிறதா? ஆம், ஆரிய இனவெறி இருக்கிறது?!
குறிப்புகளைக் காண்மின்கள்!
1.பாடல் :
வந்தே மாதரம் – சரணம் -2 –
வரி -1 ” ஆரிய பூமியில் ”
2.எங்கள் நாடு –
பாடல் – 3- வரி 7 “உன்னத ஆரிய நாடெங்கள் நாடே ”
3.பாரதமாதா –
(1)பாடல் -1,வரி 4 “ஆரிய ராணியின் வில்”
(2)பாடல் -4 , வரி 4 ” ஆரிய ராணியின் சொல் ”
(3)பாடல் -6 , வரி 4 ” ஆரிய தேவியின் தோள் ”
4.பாரத தேவியின் திருத்த சாங்கம் –
பாடல் 2 – நாடு ,வரி4 ” ஆரிய நாடென்றே அறி ”
5.தாயின் மணிக்கொடி
பாடல் 5 – வரி 5 ” ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ ?”
6.தமிழ் நாடு –
பாடல் 2 வரி 1 ” வேதங்கள் நிறைந்த தமிழ்நாடு ”
7.தமிழ்த் தாய் ,
(1)பாடல் 1 ,வரி 2 “ஆரிய மைந்தன்”
(2)பாடல் 2, வரி 3-4 ” உயர் ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் ”
8.தமிழ் சாதி ,
வரி 132-133 ” ஆரிய நாட்டின் அறிவும் பெருமையும் ”
9.வாழிய செந்தமிழ் ,
வரி 6 -7 ” ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும் சீரிய முயற்சிகள்”
10.சுதந்திர தாகம்
(1) பாடல் 1 , வரி 6 ” ஆரியர் வாழ்வினை ஆதரிப்போனே ”
(2) பாடல் 2 , வரி 6 ” ஆரிய ! நீயும் நின் அறம் மறந்தாயோ ”
(3) பாடல் 2 , வரி 8 ” வீர சிகாமணி ! ஆரியர் கோனே ! ”
11.தேசிய இயக்கப் பாடல்கள்
(1) வரி 60 ” ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர் ”
(2) வரி 72 ” அச்சமுற் றிருப்போன் ஆரிய னல்லன் ”
(3) வரி 72 ” அன்பிலா திருப்போன் ஆரிய னல்லன் ”
(4) வரி 76 ” ஆட்சியி லடங்குவோன் ஆரிய னல்லன் ”
(5) வரி77-78 ” ஆரியத் தன்மை அற்றிடுஞ் சிறியர் ”
(6) வரி 91 ” ஆரியர் இருமின் ! ஆண்கள் இருமின் ! ”
(7) வரி 168 ” ஆரிய நீ திநீ அறிகிலை போலும் ! ”
(8) வரி 182 ” ஆரிய வீரர்காள் ! ”
12,தேசியத் தலைவர்கள்-
(1)வரி122 ” ஐவரன் னோர் தமை அருளினன் ஆரியன் ”
(2) வரி184 ” ஆரியர் சாதியுள் ஆயிரஞ் சாதி ”
(3)லாஜபதியின் பிரலாபம்
(i) கண்ணி 6 , வரி 1 ” ஆதிமறை தோன்றியநல் லாரியநா டெந்நாளும்”
( ii) கண்ணி 12 , வரி 1 ” ஆரியர் தம் தர்மநிலை ”
(iii)கண்ணி 15 , வரி 1 ” ஆரியர் பாழாகா தருமறையின் ”
13.கண்ணன் திருவடி ,
பாடல் 6 ” தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை ஆர்ப்பா ரமரர் பார்ப்பார் தவமே ”
14. சங்கு –
பாடல் 3 , வரி 4 ” ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம் “
ஆர்ய என்ற வடசொல்லுக்கு “மரியாதைக்குரிய” என்று பொருள். அதேபோல் திராவிட என்ற சொல்லுக்குத் தெற்குப்பகுதி என்று பொருள். ஆரிய திராவிட இன வாதம் வெள்ளையரால் கட்டமைக்கப்பட்ட பொய். இதற்கு உறுதுணையாயிருந்த மாக்ஸ் முல்லர் போன்ற அறிஞர்களே கூட பிற்காலத்தில் தங்கள் கோட்பாடு தவறானது / ஆதாரமற்றது என்று ஒப்புக்கொண்டுவிட்டனர். விவேகானந்தர் காலத்திலேயே ஆரிய திராவிட இனலாதப் பொய்யைக் கிழித்துத் தொங்கவிட்டாயிற்று. பின்னர் மரபணு சோதனைகளும் அத்தகு வாதங்களை நிர்மூலம் செய்தாயிற்று. இந்திய தேசமே ஆர்ய தேசம் என்றழைக்கப்பட்டது. பாரதியின் பாடலில் எல்லாம் ஆர்ய என்ற பதம் இந்திய / மரியாதைக்குரிய என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்றதோடு நில்லாமல் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று சேதன அசேதனப் பொருட்களனைத்தையும் ஒன்றாகக் கண்ட அத்வைத ஞானிக்குப் பிரிவினைவாத நிறம் கூட்ட முயற்சிக்கும் உங்கள் காமாலைக் கண்ணாடிகளைத் தயவுசெய்து கழற்றிலிட்டுப் பாரதியைப் படியுங்கள். சொல்லுக்கும் செயலுக்கும் சிந்தைக்கும் வேறுபாடே அற்ற ஒப்பற்ற மனிதன் மகாகவி.
மிக அருமை.
உதாரணங்களை அடுக்கிக் குவித்துவிட்டீர்கள்.
பாரதி நல்ல கவிஞர்தான்.
அவரது ஆரிய உயர்வு மனப்பான்மை மிக மிக கேவலமானது.
மாக்ஸ் முல்லர் போன்றவர்களெல்லாம் அப்படி திட்டமிட்டு செய்யவேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
ஆரியர்கள் என்பவர்கள் மரபணு தியரிப்படியும் ஈரானிலிருந்து ஐரோப்பாவுக்கு பிரிந்து சென்ற குழு பின்பு மீண்டும் ரஷ்யா வழியே இமயமலையின் பக்கம் வந்ததைக் குறிக்கிறது.
இனம் என்பது உடலமைப்பு நிறம் மொழி ஆகியவற்றால் கட்டமைக்கப்படுகிறது.
அப்படி தங்களை உயர்ந்த இனமாக தொடர்ந்து கற்பித்து வருபவர்கள் தான் ஆரியர்கள் எனப்படும் பிராமணர்கள்.
அவர்களுக்குள்ளே பல பிரிவுகள் இருந்தாலும் திராவிட இனமான கருப்பு நிறத்தவர்களை தங்களை விட கீழாக வைத்திருக்கவே சடங்குகள் , மதம் , இலக்கியங்கள் உருவாக்கினர்.
பக்கம் பக்கமாக மன்னிப்பு கடிதங்கள் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் குற்ற பாவங்களைக் குறைக்க முயலும் நோக்கத்தோடு பாரதியின் மன்னிப்பு கடிதத்தை பூதாகரமாகப் பெரிதாக்கி திரையிடுகிறார்கள். பாரதியின் மன்னிப்பு கடிதம் ஒரு சம்பிரதாய சடங்கு மட்டுமே. சாவர்க்கர் தொடர்ச்சியாக எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதங்கள் முற்றிலும் வேறு வகையை சேர்ந்தன. பாரதி சாகும் வரை தன் நெஞ்சு உரம் குன்றாமல் வாழ்ந்தவர் விடுதலைக்குப் பின்னர் சாவர்க்கர் தன் ஆயுள் முழுவதும் பிரிட்டிஷாருக்கு விசுவாசமான சேவகனாகத் திகழ்ந்தார். இந்திய விடுதலைக்குப் போராடிய காந்தியை பிரிட்டிஷ் சர்க்காரின் எதிரியாகக் கருதி கோட்ஸேவை ஏவிவிட்டு கொலை செய்யும் அளவுக்கு சாவர்க்கரின் பிரிட்டிஷ் விசுவாசம் கொடிகட்டிப் பறந்தது. ரதன் கட்டுரை மறைந்து கிடைக்கும் வரலாற்று உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு சிறந்த ஆய்வு ! — ஜெயராமன்
The point of view of your article has taught me a lot, and I already know how to improve the paper on gate.oi, thank you. https://www.gate.io/ja/signup/XwNAU