வியாபார அரசியலா? விரும்பத்தக்க அரசியலா?

- சாவித்திரி கண்ணன்

வெற்றிகரமான சினிமா தயாரிப்பாளர், விநியோகஸ்தர்! நடிகர்! வசீகரமான இளைஞர்! பழகுவதற்கு இனிமையானவர்! ஆனால், அவரது அரசியலின் நோக்கம் என்ன? இது வரையிலான அவரது செயற்பாடுகள் உணர்த்துவது என்ன? கடந்த கால அரசியல் காட்டும் தோற்றம் என்ன..? தமிழக மக்கள் உதயநிதியிடம் எதிர்பார்ப்பது என்ன?

வாரிசு அரசியலாகத் தான் உதயநிதியின் அமைச்சர் பதவி ஏற்பு நடந்துள்ளது என்றாலும், இது அதிர்ச்சி தரவில்லை. அதிரடியாக நிகழ்ந்ததாகக் கருத இடமுமில்லை. எதிர்பார்த்த ஒன்றே! எனினும், வாய்ப்புக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்கிறாரா? இல்லை, தந்தையைப் போல தடுமாறப் போகிறாரா? என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

50 ஆண்டுகளாக கலைஞருடன் அரசியலில் இருந்தும், ஸ்டாலின் தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் ஸ்டாலினுக்கு பொறுப்புகள் வழங்குவதில் கருணாநிதி அதீத காலதாமதம் காட்டினார். ‘அந்த தயக்கம் சரியானதே’ என்பதைத் தான் இன்றைய ஸ்டாலின் ஆட்சி நிருபித்து வருகிறது.

உதயநிதியை பொறுத்த வரை அரசியலில் கால் பதித்து ஐந்தே ஆண்டுகளுக்குள் அமைச்சர் பதவியை அடைந்து விட்டார். இதற்கு காரணம், அவரது அம்மா துர்கா ஸ்டாலின், தன் கணவருக்கு தந்த நெருக்கடிகளே. இன்னும் சொல்வதென்றால், ‘ஸ்டாலின் முதல்வராக பொறுப்பு ஏற்கும் போதே உதயநிதிக்கு அமைச்சர் பதவிதர வேண்டும்’ என குடும்பத்தில் அழுத்தம் இருந்ததாக செய்திகள் அப்போதே கசிந்தன! ஆகவே, ‘அவர் தான் இந்த கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலம்’ என்பது அந்தக் கட்சியின் உயர்மட்டம் தொடங்கி அடிமட்டம் வரை ஆழமாக உணரப்பட்டுவிட்ட நிலையில் நாம், ‘வாரிசு அரசியல் செய்கிறீர்கள்’ என வசை பாடிப் பயனில்லை. அந்தக் கட்சிக்குள் அந்த உணர்வு இயல்பாக எழாத வரை, வெளியில் இருந்து பேசுவதெல்லாம் வீழலுக்கு இறைத்த நீர் தான்!

அப்படியான உணர்வு அந்தக் கட்சிக்குள் தோன்றாத அளவுக்கு அரசியலின் தரமும், சூழல்களும் உள்ளன என்பதையும் கவனத்தில் கொண்டே இதை அணுக வேண்டியுள்ளது. இன்று இந்தியா முழுக்க வாரிசு அரசியல் வளர்ந்து, வியாபித்துள்ள நிலையில், மக்களுமே கூட அறச் சீற்றத்திற்கு ஆளாகாமல் வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டனர்.

நாம் அவதானித்த வகையில், உதயநிதி இது வரை அணுகுவதற்கு எளிதானவராகவே இருந்துள்ளார். மூத்தோரிடம் மரியாதையுடன் பழகும் பண்பும் அவரிடம் வெளிப்பட்டு உள்ளதை மறுப்பதற்கில்லை. ”பழகுவதற்கு இனிமையானவர்” என பலரும் சொல்கிறார்கள். கட்சி இளைஞர்களிடம் அவருக்கு ஒரு செல்வாக்கு இருக்கிறது. எல்லாம் சரி தான்! மகிழ்ச்சி! ஆனால், இது போதுமானதா?

தன்னை தகவமைத்துக் கொண்டாரா?

‘தாத்தா தமிழகத்தின் மாபெரும் தலைவர்’ என்ற போதிலும், அவர் உயிரோடு இருந்த வரை அரசியலில் ஆர்வமே காட்டவில்லை உதயநிதி ஸ்டாலின்! குறைந்த பட்சம் கலைஞரின் பேச்சுக்களை கேட்பதிலோ, அவரது எழுத்துக்களை படிப்பதிலோ கூட அவர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 45 வயதாகும் உதயநிதி தன் நாற்பதாவது வயதில் தான் அரசியலில் காலடியே எடுத்து வைத்தார். தமிழகத்தின் முதன்மையான அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தும், உதயநிதி அரசியலில் இருந்து, நாற்பது வயது வரை விலகியே இருந்துள்ளார் என்பது கவனத்திற்குரியது.

கல்லூரி படிப்பு முடித்ததும் ‘ஸ்நோ பவுலிங்’ என்ற ஒரு விளையாட்டு கூடத்தை தான் நடத்தி வந்தார். அப்போது அவர் ஒரு பிளே பாயாக அறியப்பட்டிருந்தார். பிறகு சினிமா தயாரிப்புகளில் இறங்கினார். சினிமா விநியோகத்திலும் இறங்கினார். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா அரசின் சில கெடுபிடிகளை எதிர்கொண்டார். திடீரென்று நடிக்க ஆரம்பித்தார். அதில் சில படங்கள் கமர்சியல் ரீதியாக வெற்றி தந்தன! சினிமாவிலும் கூட கலா பூர்வமாவோ, கருத்தியல் தளத்திலோ முத்திரை பதிக்கும் எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. ஆனால், வெற்றிகரமான வியாபாரியாக வலம் வந்தார்.

2021 -ல் ஆட்சிக்கு வந்தததும், ஆட்சி அதிகார பலத்தை திரைத் துறையில் செலுத்தி, சில அத்துமீறல்களை நிகழ்த்தவும் அவர் தயங்கவில்லை. விநியோகத்துறையில் பல்லாண்டுகளாக சாதாரணமாக வளைய வந்த சிறு விநியோகஸ்தர்கள் அனைவரையுமே அனேகமாக சினிமா துறையில் இருந்தே அப்புறப்படுத்திவிட்டார்! இன்றைக்கு ஒரு ‘மோனோபாலியாக’ தமிழ் சினிமா விநியோகத்துறையை ஆக்கிரமித்துள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களில் எம்.எல்.ஏ என்ற வகையில் சட்டமன்ற விவாதங்களில் பல்வேறு வகைகளில் பேசி இருக்கலாம், விவாதங்களில் பங்கெடுத்து இருக்கலாம். ஆனால், அப்படியான ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை. தமிழக மக்கள் பிரச்சினைகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ளவாவது ஆர்வம் காட்டி உள்ளாரா? நேர்மையான அரசியலை தர விரும்புவரா? மதவாத பாஜகவை எதிர்க்கும் எண்ணமுண்டா? அரசியலில் பயிற்சி பெறுவதற்காவது ஆர்வம் காட்டினாரா..?

தமிழகத்தின் பிரதான பிரச்சினைகளில் அவரது புரிதல் என்ன? பார்வை என்ன? என்பதற்கு எல்லாம் நமக்கு விடை இல்லை. தன்னை எதிர்காலத் தமிழகமாக கருதி மரியாதை தந்து கொண்டிருக்கும் கட்சிக்காரர்களின் நம்பிக்கைக்கு மரியாதை தரும் விதத்திலாவது அவர் குறைந்தபட்ச அளவிலேனும் செயற்பட்டிருக்கலாம். ஆனால், துர்அதிர்ஷ்டவசமாக அவர் கவனம் முழுமையும் சினிமாவிலேயே குவிந்திருந்தது.

இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை;

தற்போது, தன் இயல்பிற்கு ஏற்ப அதிக சிரமம் தராத ஒரு துறையை அவர் கேட்டு பெற்று இருக்கிறார். இளைஞர் நலன் எனும் போது விளையாட்டுகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது, பொது மைதானங்களை, ஸ்டேடியங்களை அமைப்பது, உடற்பயிற்சி கூடங்களை அமைப்பது என்பது சிறப்பான அணுகுமுறை தான்! ஆனால், அதைக் கடந்து இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரும் வேலை வாய்ப்புகளுக்கும் அவர்களை தயார்படுத்தலாம். இன்றைக்கு பெரும்பாலான தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்கே தயாரற்ற நிலையில் உள்ளனர்! இதனால் தான் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட வட நாட்டு இளைஞர்கள் இங்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தப் பின்னடைவுகளுக்கு அரசே மும்முரமாக நடத்தும் டாஸ்மாக் மதுக் கடைகளே முக்கிய காரணம் என்பதை உதயநிதி உணர்வாரா எனத் தெரியவில்லை. ஆனால், டாஸ்மாக்கின் வீரியத்தை மட்டுபடுத்தாமல், இளைஞர் நலனை பற்றி இங்கே யோசிக்கவே முடியாது.

உதயநிதி ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் ஏற்பட செயல்புரிவார் என நாம் நம்பத் தயாரில்லை! தற்போது வரம்பு மீறி போய்க் கொண்டிருக்கும் திமுக அரசின் ஊழல்களோடு அவரும் ஒன்றிணையாமல் தனித்து நிற்பார் என நம்பவும் வழியில்லை. இவர் அமைச்சரானதால் கள்ளக்குறிச்சி வழக்கில் மர்ம மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதி கிடைத்துவிடும் என யோசிக்கவே முடியவில்லை. விஸ்வரூபமெடுத்து வரும் மதவாத பாஜகவிற்கு எதிர்நிலை அரசியலை துணிச்சலோடு எதிர்கொள்வார் என்பதிலும் நம்பிக்கை இல்லை. இப்படி நடந்தால், அது பேராச்சரியம் தான்!

ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் ஆவதற்கு படிப்பும் உண்டு, பயிற்சியும் உண்டு என்றால்.., அரசியல்வாதியாக – அதுவும் ஆட்சியாளராவதற்கு – கண்டிப்பாக அனுபவப் படிப்பும், பயிற்சியும் வேண்டும். ஆனால், இதெல்லாம் தேவையில்லை. மரபு ரீதியிலான உரிமையே போதுமானது என்ற ரீதியில் பொறுப்புக்கு வருவது மன்னராட்சி காலகட்டத்திலும், பாரம்பரிய குடும்ப வியாபாரத்திலும் தான் நடக்கும்! ஜனநாயக யுகத்தில், அரசியலில் இது போன்று நடப்பது ஏற்புடையதல்ல!

இருந்த போதிலும், குறைந்தபட்சம் டாஸ்மாக் தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடி வருவதில் இருந்து அவர்கள் மீட்க உதயநிதி கொஞ்சம் அக்கறை காட்டினாலே, தமிழ்ச் சமூகம் அவர் அமைச்சரானதை கொண்டாடும் நிச்சயம்! டாஸ்மாக் வீரியம் மட்டுப்படாத வரை இளைஞர் நலன் எனப் பேசுவதும், செயல்படுவதும் பெரிய அளவு பலனைத் தராது.

இது தவிர அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களின் சிறப்பு திட்ட செயலாக்கத்தை மேற்பார்வையிடும் அதிகாரமும் அவருக்கு தரப்பட்டு உள்ளதால், அவர் அரசியல் பயிற்சிக்கு நல்ல வாய்ப்பு தரப்பட்டு உள்ளது. ஆனால், இந்த வாய்ப்பை அனைத்து துறைகளிலும் பொருளாதார ரீதியாக ஆதாயம் பார்க்கும் விதமாக கையாளவும் முடியும். உதயநிதி எவ்வாறு செயல்படப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.

இந்தச் சமயத்தில் முதலமைச்சர் குடும்பத்தில் தற்போது ஒரு மறைமுக அதிகார மையமாக செயல்பட்டு வரும் சபரீசனைப் பற்றி பேசாமல் கடக்க முடியாது. கடந்த 15 ஆண்டுகளாக சபரீசன் ஒரு மறைமுக அதிகார அரசியலில் கோலோச்சி வருகிறார்! கிட்டதட்ட நிழல் முதல்வராகவே செயல்படுகிறார். ஜெயலலிதாவிற்கு சசிகலா எப்படி இருந்தாரோ, அதைப் போல ஸ்டாலினுக்கு இவர் இருக்கிறார் என்ற வலுவான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

முதலில் சபரீசனிடம் இருந்து விலகி நின்ற உதயநிதி, தற்போது கைகோர்த்து விட்டதாகவும் தெரிகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். உதயநிதி செய்யப் போவது சபரீசனுக்கு போட்டியான வியாபார அரசியலா? அல்லது விரும்பத்தக்க அரசியலா?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time