சீனாவின் விஸ்வரூப வளர்ச்சிக்கு வித்திட்டவர்! 

த. நீதிராஜன்

உலக அரங்கில் சீனாவை பொருளாதாரத்திலும், ராணுவத்திலும் வலிமைமிக்க வல்லரசாக்கியவர்! சோசலீசத்தை நவீன சூழலுக்கு ஏற்ப கட்டமைத்தவர்! மார்க்சியத்தோடு சீனப் பாரம்பரியத்தை ஒருங்கிணைத்தவர்! பல சிக்கல்களைக் கடந்து வெல்லற்கரிய நாடாக சீனாவை செதுக்கியவர் ஜியாங் ஜெமின்!

சீனத்தின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின்  நவம்பர் 30 அன்று தனது 96 வயதில் மரணமடைந்தார். சீனாவின் முதன்மையான தலைவரான மாவோவுக்குப் பிறகு வந்த தலைவர்களில் ஜியாங் ஜெமின் முக்கியமானவர். அவரது  வளர்ப்பு தந்தை கம்யூனிஸ்ட் போராளியாக இருந்தவர். கல்லூரியில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டார் ஜெமின். எலக்ட்டிரிக்கல் பொறியியல் படித்த அவர் பல தொழிற்சாலைகளில் பணி செய்துள்ளார். மின்சாரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதினார். அவரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சி மேலும் வளர்த்தெடுத்தது.

சீனாவின் தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு அவர் பாடுபட்டதால் கட்சியிலும் அரசு நிர்வாகத்திலும் அவருக்கு பதவிகள் கிடைக்கத் தொடங்கின. சீன அரசாங்கத்தின் ஊழல்களைக்  கண்டித்து, தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது ஜியாங் ஜெமினின் வளர்ச்சி வேகமடைந்தது.

சீனாவின் தந்தையாக மாவோ (1893 டிசம்பர் 26 –1976 செப்டம்பர் 9) அறியப்படுகிறார். அவரது காலத்தில் தோன்றிய புதிய சூழல்களை எதிர்கொள்வதில் மாவோ தடுமாறி நின்றார். அந்த நேரத்தில் மாவோவின் சிந்தனைகளை வளர்த்தெடுத்தவராக டெங் ஜியோ பிங்  (1904–1997) அறியப்படுகிறார். அவரால் உருவாக்கப்பட்ட திசை வழியை கூர்மைப்படுத்தி வலுப்படுத்தியவராக ஜியாங் ஜெமின் (17.08.1926  – 30.11.2022) அறியப்படுகிறார்.

விவசாயிகளை பிழிந்து, பெரும் நவீனத் தொழில்களை உருவாக்கிய, சோவியத் யூனியன் மாடல் பொருளாதாரத்தை மாவோ ஏற்க மறுத்தார். சீன மக்களின் பயன்பாட்டுப் பொருள்கள் வழியாகவே தொழில் வளர்ச்சியை வளர்த்தாக வேண்டும் என்றார் அவர். இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்குச் சமமாக 15 ஆண்டுகளில் வளரவேண்டும் என்று மாவோ அறிவித்த ‘தாண்டி குதிக்கும்’  திட்டம் ஓரடி முன்னே போய் ஈரடி பின்னால் போய்விட்டது.

மாவோ உயிரோடு இருந்தவரைக்கும் தனது கருத்துகளில் பின்வாங்க மறுத்துவிட்டார். அவரது மறைவுக்குப் பிறகுதான் பொருளாதாரத்தை முன்னுக்குக் கொண்டுவர முடிந்தது. புதிய பொருளாதாரச் சிந்தனையின் மையமாக டெங் ஜியோ பிங் இருந்தார். கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் செய்யப்பட்ட சீர்திருத்தங்களின் விளைவுகளில் ஒன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழலை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம். அதை எதிர்கொள்வதில் கட்சிக்கு ஏற்பட்ட தடுமாற்றங்களுக்கு நடுவில் முளைத்து எழுந்தார் ஜெமின். சீனாவின் மூன்றாம்  தலைமுறை அரசியல் தலைவர் அவர்.

 கட்சியில் படிப்படியாக வளர்ந்து வந்த அவர் 13 ஆண்டுகள் பொதுச்செயலாளராக (1989 – 2002) இருந்துள்ளார்.  சீனாவின் ஜனாதிபதியாக பத்தாண்டுகளும் (1993 –2003)  பணியாற்றியிருக்கிறார். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக (1989 – 2004 ) 15 ஆண்டுகளும் பணியாற்றியிருக்கிறார். ஆங்கிலத்தையும் ,ரஷ்யனையும்  சகஜமாக பேசிய ஒரே சீனத் தலைவர் அவர்தான்.  அவரது மனைவி வாங் யெபின்னும் வெளிநாட்டு மொழிகளை திறமையாக பேசுவார்.

சீனாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய சிந்தனைப்போக்குகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது வேலைத்திட்டத்தில் பதிவு செய்துள்ளது. அதில் ‘மாவோவின் சிந்தனை’ க்கு அடுத்த இடத்தில் ‘டெங் ஜியோ பிங் கோட்பாடு’  உள்ளது. சீனாவை திறந்துவிடுவது மற்றும் சீரமைப்பது என்று அது பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது.

சோசலிசமா, முதலாளித்துவமா என்ற விவாதத்தை விட சீன மக்களை பொருளாதார பலம் உள்ளவர்களாக மாற்றுவதற்கான செயல்களே தேவை என்றார் அவர். ‘ஒரே நாடு, இரு பொருளாதார முறைகள்” என்று சொன்னார். தைரியமான சிந்தனையை வலியுறுத்திய அவர் “தரவுகளிலிருந்து உண்மையைத் தேடுவோம்”   என்றார். டெங்கின் கோட்பாட்டின் சுருக்கமாக இந்தப் பொதுவான சிந்தனைப் போக்கைச் சொல்லலாம். அந்தச் சிந்தனைப் போக்கில் குறிப்பான மூன்று இலக்குகளை  ஏற்படுத்தியவரே ஜியாங் ஜெமின்.

ஜியாங் ஜெமின் குடும்பமும், அமெரிக்க அதிபர் புஷ் குடும்பமும்!

வேகமான பொருளாதார வளர்ச்சிக்காக சோசலிசத்தோடு முதலாளித்துவத்தை கலந்தபோது சமூகத்தில் ஊழல்களும் போராட்டங்களும் வெடித்தன. அவற்றை கையாள்வதில் கம்யூனிஸ்ட் கட்சி தடுமாறியபோது, குறிப்பான மூன்று இலக்குகளை ஜெமின் அளித்தார். அவையே ‘மூன்று பிரதிநிதித்துவங்கள்’ என்ற பெயரில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்   வேலைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மூன்று பிரதிநிதித்துவங்கள் என்றால் என்ன?

முன்னேறிய உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப் போக்கு.

முன்னேறிய சீனப் பண்பாட்டின் திசைவழி

ஆகப்பெரும்பாலான சீன மக்களின் அடிப்படை நலன்கள்.

இந்த மூன்று போக்குகளின் பிரதிநிதியாக கம்யூனிஸ்ட் கட்சி இருக்கவேண்டும் என்று அவர் வாதிட்டார். அவரது விவாதம் சீனர்களுக்கு ஒரு தொலைநோக்குப் பார்வையை அளித்தது. அதன் பலனாக இன்று தொழில்நுட்பம் உள்ளிட்ட உற்பத்தி துறையில் சீனா பல சாதனைகளை செய்துவருகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கல்வி பயின்ற மாணவர்கள் சீனாவுக்குள் வந்து போராடிய காலம் மெல்ல மறைந்தது. வெளிநாடுகளில் அறிவியலும் தொழிநுட்பமும் பயின்று வந்த சீன இளைஞர்களுக்கு பெரும் பெரும் பொறுப்புகளை அளித்ததன் விளைவாக இன்று சீனாவில் பாலங்கள், சாலைகள் அமைப்பதில் பெரும்பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சீன மாணவர்களை அமெரிக்க பல்கலைகழகங்களில் சேர்க்க மாட்டோம் என்று அமெரிக்கத் தலைவர்கள் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. தியானன்மென் சதுக்க மாணவர் போராட்டம் அளித்த அனுபவங்களிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பாடங்களை பெற்றுள்ளது என்பதை இது காட்டுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர், சீன ஜனாதிபதி, ராணுவத் தலைவர் எனும் மூன்று பொறுப்புகளையும் ஒருவரே ஒருங்கிணைப்பதாக சீனாவின் அரசியல் வளர்ச்சிப்போக்கு உள்ளது.

ஜியாங் ஜெமின், ஹீ ஜிண்டோ, ஜி ஜின்பிங்

ஜியாங் ஜெமினுக்குப் பிறகான அடுத்த தலைவராக ஹூ ஜிண்டோ  பத்தாண்டுகள் இருந்தார். அவர் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை ‘அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி’  யாக இருக்க வேண்டும் என்பதில் அழுத்தம் கொடுத்தார். தற்போதைய தலைவர் ஜி ஜின்பிங் ‘புதிய சகாப்தத்துக்கான சீனத்தன்மைகள் கொண்ட சோசலிசம்’ எனும் கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

சீனாவை  பொருளாதார வல்லரசாக மாற்றுவதில் இத்தகையஒரு விவாதம் தொடர்ச்சியாக பரிணாமம் அடைந்து வருகிறது. அதன் திருப்புமுனையாக இருந்தவரே ஜியாங் ஜெமின். தனது 96வது வயதில் கடந்த நவம்பர் 30 அன்று காலமானார். 94 வயதான அவரது மனைவி தனது இரண்டு மகன்களோடு இன்னமும் வாழ்கிறார்.

உலகின் முதன்மையான பொருளாதார நாடு எனும் இலக்கை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிற சீனாவின் மனதில் ஜியாங் ஜெமின் நீண்ட காலம் வாழ்வார்!

கட்டுரையாளர்; த. நீதிராஜன்

மூத்த பத்திரிகையாளர், பதிப்பாளர், இந்திய வர்க்கப் போராட்டத்தின் எதிர்காலம் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time