காக்கை கூடும், ஓங்கில் இயற்கை கழகமும் இணைந்து நீலகிரி மாவட்டம் குன்னூரில் பறவை நோக்கு சூழலியல் சுற்றுலாவை மூன்று நாட்கள் நடத்தின! பறவைகள், விலங்குகள் பற்றிய புரிதலை அனுபவ ரீதியாகப் பெறுவதற்கான இந்த நிகழ்வு, ”அடடா இத்தனை அற்புதங்களா..” என மலைக்க வைத்தது!
பறவை நோக்குபவர்கள் ஒரு இடத்தில் கூடி பறவைகள் குறித்து பேசி, விவாதித்து, புதிய விஷயங்களை கற்று, காலை மாலை வெளியே சென்று பறவைகளைப் பார்த்துக் கழிக்கும் நிகழ்வாக அமைத்து இருந்தோம். 3 நாட்கள் (கடந்த வெள்ளி-சனி-ஞாயிறு) நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்றது.
தமிழகத்தின் சகல பகுதியிலிருந்தும் பறவை ஆர்வலர்கள் வந்து சேர்ந்தனர். சிலர் குடும்பமாக, பலர் ஒருவராக, இன்னும் சிலர் நணபர்களாக வந்திருந்தனர். 6 வயது முதல் 70 வயது மூத்த குடிமகன்கள் வரை, ஆண்கள்-பெண்கள்- சிறார்கள் அடக்கம்.
குன்னூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் தங்கும் பிரவீன் குடில் அமைந்துள்ளது. குன்னூரில் பொதுவாக 1 கிலோமீட்டர் தாண்டினாலே காடு வந்துவிடுகிறது. சாதாரணமாகவே காட்டு மாடுகள் குன்னூர் ஊருக்குள்ளேயே நடமாடத் தொடங்கி உள்ளதை அருகில் பார்த்தோம். தங்கியிருந்த குடில் சுற்றி 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
மாடுகளை எதிர் கொள்ளும் சூழல் வந்தால், அப்படியே நின்று விடுவது மட்டுமே சரியான செயல், பாதுகாப்பும் கூட. இதைவிட்டு மாட்டைத் துரத்தினாலோ, அருகில் கடந்து சென்றாலோ நம் பக்கம் திரும்பி முட்டத் தொடங்கும் என்று எச்சரித்து இருந்தனர். தனியாக ஒருவர் செல்ல வேண்டாம். குழுவாகச் செல்லுங்கள், மாலை 5.45க்கு மேல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தல். கரடி, சிறுத்தை நடமாடும் பகுதி என்பதும் கூடுதல் தகவல்.
முதல் நாள் காலை முதலே பறவை ஆர்வலர்கள் வரத் தொடங்கினர். மதிய உணவு முடிந்து 2 மணிக்கு முதல் நிகழ்வாக “புல்வெளி பறவைகள்” குறித்து கோயம்புத்தூர் இயற்கை கழகத்தைச் சேர்ந்த P.B.பாலாஜி எடுத்தார். புல்வெளி பறவைகள் தரையில் நடமாடி, தரையில் முட்டை இட்டு தரையிலேயே தங்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்பவை. இதில் சில பறவைகள் உயர்வாகக் கூட பறக்காது. காடை, கவுதாரியை உதாரணமாகச் சொல்லலாம். தரை பறவைகள் மண் நிறத்தில் இருக்கவே அதிகம் வாய்ப்பு உண்டு. இதனால் இங்கு ஒரு பறவை உள்ளது என்று கண்டுபிடிப்பது சிரமம். இதை உருமறை தோற்றம் என்று அழைக்கப்படுகிறது. எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கப்பாக இருக்கத் தரை பறவைகள் உடல் நிறம் இயற்கையாக மண் நிறத்தில் அமைந்துள்ளது.

மனிதர்களால் வேட்டையாடுவதாலும், புல்வெளி பகுதிகளை பெருமளவு அழிப்பதாலும் இத்தகைய பறவைகளின் வாழிடமும் அழிந்து, எண்ணிக்கையும் குறைந்து நாளடைவில் முற்றிலும் அற்றுபோவிடுகின்றன. உதாரணமாக கானமயில் இன்று தமிழகத்தில் முற்றிலும் அற்றுப் போய்விட்டது. இது ஒரு தரை பறவையாகும். இந்த பறவையைத் தான் இந்தியாவின் தேசியப் பறவையாக முடிவு செய்தனர். கடைசி நேரத்தில் மயில் தேர்வு செய்யப்பட்டது. புல்வெளி பறவைகள் குறித்து முழுமையாக பாலாஜி எடுத்து முடித்தார்.
மனிதர்களின் அன்றாட பேச்சில் பறவைகளும், விலங்குகளும் வராமல் இருப்பதில்லை. நரி போன்று தந்திரம் மிக்கவன், ஆந்தைகள் அபசகுணம் போன்று பிற உயிரினங்களைத் தவறாகவே சித்தரித்து வருகிறான் மனிதன். அப்படி ஒவ்வொரு தலைமுறையும் இந்த தவறை அடுத்த தலைமுறைக்குக் கடத்திக் கொண்டே செல்கிறது. பறவைகள் அப்படி அல்ல, மூடநம்பிக்கைகளுக்கு, பறவைகளுக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை என்று விரிவாகப் பல பறவைகளின் செயல்களைக் குறித்து கோவை சதாசிவம் பேசினார்.

அவர் பேச்சிலிருந்து இருவாட்சி பறவையைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பெட்டை இருவாட்சி பறவை முட்டை வைக்க மரப் பொந்தில் சென்று அமர்ந்து தன் இறக்கைகளை உதிர்த்து பொந்து சந்தை களிமண் போன்ற பூச்சால் அடைத்துக் கொள்ளும். அதன் அலகு மட்டும் கொஞ்சம் வெளியே தெரிவது போல் பார்த்துக் கொள்ளும். ஆண் பறவை தானும் உண்டு, பொந்தில் உள்ள பெட்டை இருவாட்சி பறவைக்கும் இரை கொண்டு வரும். முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவரும் வரை ஆண் இருவாட்சி தான் அனைத்தும் செய்ய வேண்டும்.
ஆட்காட்டி பறவை தரையில் முட்டை வைக்கக் கூடியவை. மனிதர்கள் முட்டை பக்கம் சென்றால் அல்லது இரைகொல்லி பறவைகள் அந்த பக்கம் வந்தால் அதனால் முட்டைக்கு ஆபத்து அல்லது குஞ்சுகளுக்கு ஆபத்து என்று உயரப் பறந்து ஒரே கூச்சல் இட்டு எதிரிகளைத் திசை திருப்பும். அந்த அபாயக் குரல் ஆங்கிலத்தில் “did you do it” என்ற வாசகம் போல் இருக்கும். தனக்கு வரும் அபாயத்தைக் குரல் கொடுத்து மற்ற உயிரினங்களையும் எச்சரிக்கை செய்வதால் இதற்குத் தமிழில் ஆட்காட்டி பறவை என்று அழைக்கப்படுகிறது.
இப்படி பறவைகளின் உண்மைத் தன்மையை விலகிச் சொல்லி இதில் எங்கு வருகிறது மூடநம்பிக்கை. அதனால் மூடநம்பிக்கைகளுடன் பறவைகளை இணைத்துக் கொள்ளாதீர்கள் என்று பேசிய கோவை சதாசிவம் பேச்சில் பேச்சு மொழியுடன் அவரின் உடல் மொழியும் இணைந்து இருந்தது.

பறவைகள் தானே யார் கேட்கப் போகிறார்கள் என்று பறவை முட்டையை திருடுவதும், பறவைகளைக் கல்லால் அடிப்பதும், கூட்டின் அருகில் செல்வதுமாக பலர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பறவை நோக்குதல் என்பது அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு. காட்டில் எப்படிச் செயல்பட வேண்டும் என்று விதிமுறை உண்டு. ஆனால் பெரும்பாலானோர் அதைப் பின்பற்றுவதில்லை என்று உயிர் இதழ் ஆசிரியர் சண்முகானந்தம் பேச்சைத் தொடங்கினார்.
தான் எடுத்த பறவைகள் புகைப்படத்தைக் காண்பித்து அது எப்படி எடுக்கப்பட்டது, என்று விளக்கியதோடு மட்டும் இல்லாமல் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்னார். எந்தவிதத்திலும் பறவைகளுக்கு, விலங்குகளுக்குத் தொந்தரவு தராமல், முட்டை உள்ள கூட்டிற்கு அருகில் செல்லாமல், பளீர் நிறத்தில் உடை அணியாமல், மிகப் பொறுமையாக இருந்து உயிரினங்களைக் கவனித்து படம் எடுக்க வேண்டும்.
காட்டுயிர்களை ஒளிப்படம் எடுக்க இன்று பலர் கிளம்பியுள்ளனர். ஆனால் உயிரினங்களைக் குறித்து ஒன்றும் அறிந்து கொள்ளாமல் படம் மட்டுமே குறிக்கோள் என்று தான் நினைத்தது போல் காட்டில் செயல்படுபவர்களால் பறவைகளுக்கு தான் ஆபத்து ஏற்படும் என்று பேசி முடித்தார்.
நாங்கள் தங்கிய குடில் தேயிலை பயிர்களால் சூழ்ந்து இருந்தது. காலை 9 மணி அளவில் பல பெண்கள் வேலைக்கு வருகிறார்கள். மாலை 4 மணி வரை தேயிலை பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். அங்கேயே காட்டு மாடுகள் வருகிறது. ஒன்றிரண்டு என்றில்லாமல் 10க்கும் மேற்பட்ட காட்டு மாடுகள் சுற்றி வருகின்றன.
பார்க்க சாதுவாக இருக்கும் காட்டு மாடுகள் உண்மையில் ஆபத்தானவை. எந்த நேரம் எப்படிச் செயல்படும் என்று கணிக்க முடியாது. வீரப்பன் பயந்த விலங்கில் காட்டு மாடும் ஒன்று.

நாங்கள் வெளியே செல்லாமல் குடில் உள்ளே இருந்தே மாடுகளை பார்த்து கொண்டு இருந்தோம். ஆனால் தேயிலை பறிக்கும் நபர்கள் அருகில் காட்டு மாடுகள் சென்றது அவர்கள் கையால் போ போ என்று சொல்கிறார்கள் அவை நகர்ந்து சென்று விட்டதை பார்த்தோம்.
இந்த மனிதர்களால் எந்த ஆபத்தும் இல்லை என்று காட்டு மாடுகள் நினைத்ததா என்று தெரியவில்லை ஆனால் நகர்ந்து சென்று விட்டது. அதை பார்த்ததில் ஆச்சரியமே. அன்று காலைதான் நம் குழுவை சேர்ந்த செல்வகுமாரை காட்டு மாடு துரத்தி சென்றது. அவர் ஓடி குடிலில் வந்து அடைந்தார்.
காட்டு பறவைகளை பார்க்க குன்னூர் காட்டு பகுதி சிறந்த இடமாக உள்ளது. குட்டைக் கிளியை (vernal hanging parrot) இங்குதான் பார்க்க முடிந்தது. . பச்சை கிளி வகையை சேர்ந்த குட்டை கிளி மர கிளையில் அமர்ந்து கீழ் நோக்கி தொங்கும். பார்க்க ஆச்சரியமாக இருக்கும். உருவில் சிறிய பறவை கூட.
மலபார் பச்சை கிளி, காட்டு மைனா, நீலகிரி ஈபிடிப்பான் பறவைகள் எங்களை சுற்றி பறந்து கொண்டு இருந்தது. காலை-மாலை பறவைகள் காண சென்றோம். கிட்டத்தட்ட 50 வகை பறவைகள் மேல் பார்க்க முடிந்தது. விலங்கில் காட்டு மாடு தவிர வேறு எதுவும் பார்க்க முடியவில்லை.
தமிழகத்தின் சிறப்பே யானைகள். யானைகள் வாழும் பகுதியில் பெரும்பாலும் மனித குடியிருப்புகள் உருவானதால் யானைகளின் வாழிடம் அழிப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியில் யானைகள் வர தொடங்கி உள்ளன. இது நாளிதழில் ஊருக்குள் யானைகள் அட்டகாசம் என்று தவறாக எழுதப்படுகிறது. இப்படி யானைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து இந்து தமிழ் திசை நாளிதழில் எழுதிய பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் பேச தொடங்கினார்.
ஒரு யானைக்கு வயிற்றில் கட்டி என்று அழைத்து வந்து மருத்துவம் பார்க்க தொடங்கி உள்ளனர். ஆனால் அதை பராமரிக்கும் பாகனோ அது கட்டி இல்லை குட்டி என்று சொல்லி உள்ளனர். அதை ஏற்காத மருத்துவர்கள் தொடர்ந்து மருத்துவம் பார்த்துள்ளனர். ஒரு நாள் விடியற்காலை அந்த யானை குட்டி ஈன்று எழுந்து நடக்கத் தொடங்கி விட்டது. அந்த யானைக்கு கட்டி என்று மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், நாங்க அப்பவே சந்தேகித்து வயிற்றில் குட்டி உள்ளது என்று மருத்துவம் பார்த்தோமே தவிர கட்டிக்கு மருத்துவம் பார்க்கவில்லை என்று பேட்டி கொடுத்தனர். இது கா.சு வேலாயுதனின் நேரடி அனுபவமாகும்!.
இப்படித்தான் யானைகளை பற்றி புரிந்து கொள்ளாமல் துன்புறுத்தி வருகின்றனர் என்று பேசி முடித்தார்.
இரவு பறவையான ஆந்தையை குறித்து சிவா பேசினார். ஆந்தையை முறையாக ஆராய்ச்சி செய்து வருபவர். ஆந்தை அபசகுன பறவை என்று நினைப்பவர்கள் இவர் பேசுவதை கேட்டால் அப்படி இல்லை என்று தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு ஆந்தை ஒரு நாளைக்கு இரண்டு எலிகளை இரையாக உண்ணும். ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 600 எலிகளுக்கு மேல் உண்டு விவசாயிளுக்கு பெரும் நன்மை புரிகிறது. எலிகளை கட்டுபடுத்துவதில் ஆந்தை தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் இனப்பெருக்க காலத்தில் 4 அல்லது 5 எலிகளை ஒரு இரவில் ஆந்தை உண்ணும். ஒரு விவசாய நிலத்தில் ஆந்தை இருந்தால் எலி பிரச்சனையை பெருமளவு கட்டுப்படுத்தலாம். இந்த முறையை நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர். ஆனால் நவீனமயமான இந்த காலத்தில் எதற்கு என்றாலும் மருந்து பயன்படுத்த தொடங்கியதால் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
Also read
அலையாத்தி காடுகள், சுனாமி வந்த பிறகுதான் பெரும் அளவு கவனிக்கப்பட்ட தாவரமாகும். இந்த தாவரம் இருக்கும் இடத்தில் சுனாமியின் பாதிப்பு பெருமளவில் இருப்பதில்லை. அலையாத்தி தாவரத்தின் அருகில் உள்ள பறவைகள், மீன்கள், நண்டுகள், மற்ற தாவரங்கள் எவை என்று அலையாத்தி தாவரத்தை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற மாசிலாமணி செல்வம் வகுப்பு எடுத்தார். தமிழகத்தில் பிச்சாவரம் பகுதியில் உள்ள அலையாத்தி தாவரத்தின் முக்கியத்துவத்தை சொல்லி எளிமையாக புரிய வைத்தார்.
குன்னூர் ஓங்கில் இயற்கை அமைப்பு நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்தது. வீட்டு முறை உணவு, மற்ற தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தவர் மலைநாடன் ஆசாத். மேலும், நிகழ்வுக்கு துணையாக ஆனந்த், நிர்மல், பாலாஜி உதவி செய்தனர்.
எந்த நேரமும் பனி மூடிய மலை, தரையில் இருந்து மேல் எழுந்து செல்லும் மேகங்கள், சுற்றி விலங்குகள், பறவைகள் சூழ்ந்த இடம். நகரத்தில் இருந்து சென்ற நமக்குத் தான் பாதுகாப்பு தேவையாக இருந்தது. பழங்குடிகள் இயல்பாக இருந்தனர்.
கட்டுரையாளர்; இளஞ் செழியன்
சிறப்பு. வாழ்த்துகள்.
தெளிவான முழுமையான பதிவு. நன்றி நண்பரே
பறவைகளுக்கு ஓர் சந்திப்பு படிப்பதற்கே மகிழ்வாக உள்ளது..
அருமை.. சிறந்த அனுபவம்.. வாழ்த்துக்கள்..
இந்த அருமையான வாய்ப்பைத் தவற விட்டு விட்டேன். இந்த கட்டுரை மூலம் அடுத்த முறை பறவை நோக்கு நிகழ்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் வந்து விட்டது. கட்டுரை ஆசிரியர்க்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..