ஏழை,எளிய மக்களின் இறுதி நம்பிக்கை அரசுப் பள்ளிகளே. தமிழக அரசுப் பள்ளிகளில் சமீப காலமாக கற்றலுக்கும், கற்பித்தலுக்குமான கல்விச் சூழல் சிதைந்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவு நெருக்கடிகளை ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர்! அவை குறித்து இங்கு விவாதிக்க உள்ளோம்!
ஏற்கனவே, பல வருடங்களாக பெருவாரியான அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் இல்லாமல் உள்ளது. மாணவர்-ஆசிரியர் விகிதம் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 35 :1 என்று சில நிலைகளிலும் 40 :1 என சில நிலைகளிலும் கடைபிடிக்க வேண்டும். ஆனால், அதனை அரசு முழுமையாகக் கடைபிடிப்பது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் புதியதாக சேர்ந்துள்ளார்கள் என்ற போதிலும், அரசுப் பள்ளிகளில் பல நூற்றுக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன! பல பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக தொடர்வது அரசுப் பள்ளிகளை பெருமளவில் பலவீனப்படுத்தியுள்ளது.
இந்நிலையில்பள்ளியில் ஆசிரியர்களை மாணவர்களுக்கு பாடம் நடத்த விடாமல் ‘எமிஸ்’ (EMIS – Education Management Information System) எனப்படும் நிர்வாக செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இது ஆசிரியர்களின் கல்விப் பணிகளை பெருமளவில் பாதித்து வருகிறது.
# முறைசாரா கல்வித் திட்டங்களை தமிழக அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவது தொடர்கிறது. குறிப்பாக, ‘இல்லம் தேடி கல்வித் திட்டம் மற்றும் எண்ணும் எழுத்தும் திட்டம்’ . இவை தொடக்கக் கல்வியை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது என்ற பிம்பத்தை உருவாக்கி, இத்திட்டங்களுக்காக பல நூற்றுக்கணக்கான கோடிகள் செலவு செய்யப்படுகிறது. ஆனால், இவை இரண்டும் பள்ளிக் கல்வியை திசைமாற்றி வீணடிக்கும் ஆபத்தான திட்டங்களாகும்.

# 200 கோடி ரூபாய் திட்டச் செலவில் உருவாக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பள்ளி ஆசிரியர்களை மேற்பார்வையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என பல பொறுப்புகளில் நியமித்து பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தவிடாமல் செய்கிறது அரசு! அரசு பள்ளிகளே நிரந்தர ஆசிரியர் பணி நியமனம், அடிப்படைத் தேவைகள் இல்லாமல் சிரமப்படுகின்றன! இந்தச் சூழலில் இது போன்ற திட்டங்களில் கவனம் செலுத்துதல் நியாயமற்றது.
# கல்வி என்பது சேவையோ அல்லது பரோபகாரச் செயலோ அல்ல. மாறாக ஓர் மக்கள் நல அரசாங்கத்தின் அதிமுக்கியக் கடமையாகும். அத்தகைய கடமையைப் புறம்தள்ளி, ஏழை அரசுப்பள்ளி மாணவர்களை மட்டும், இல்லம் தேடி கல்வித்திட்டம் மூலம் தன்னார்வலர்கள் கரங்களில் விடுவது என்பது என்ன விதமான சமூக நீதி…?
# சர்வ சிக்க்ஷா அபியான் என்ற மத்திய அரசின் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. இது பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஏற்கனவே பெருமளவில் பாதித்துவிட்டது. அவற்றைக் களைய முற்படாமல் வெறும் நிதிக்காக இத்திட்டத்தை தொடர்வது தொடக்க கல்வி, இடைநிலை கல்வியை மேலும் சீரழிக்கவே செய்யும்.
# அதேபோல் இன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். இது ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு எண்ணையும், எழுத்தையும் மட்டுமே போதிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கூட எண்ணையும் எழுத்தையும் மட்டுமே தொடர்ந்து போதிப்பது மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தாமல் அவர்களை தேக்க நிலையில் வைக்கிறது!
‘செயல்முறை கற்றல்’, தன்னார்வலர்களை கொண்டு அரசுப் பள்ளிகளை நடத்துவது, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ போன்றவை தேசிய கல்விக் கொள்கை 2020இல் இருப்பதாகும்.
இவை சிறப்பான திட்டங்களாக இருப்பின், ஏன் தனியார் பள்ளிகளில் இவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. இத்திட்டங்கள் யாவும் ஏழை மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி மாணவர்களை, ‘இங்கு கல்வி சரியில்லை’ என தனியார் பள்ளிகளை நோக்கி விரட்டும் திட்டங்களாகவே அமைந்திருக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் கல்வி முறை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய சூழலில், பல்வேறு ஆசிரியர் பயிற்சிப் பட்டறைகள், எமிஸ் செயலியில் அன்றாடம் தகவல்களை அளிப்பது, தேர்தல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கற்பித்தல் அல்லாத பணிகளை ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் மீது சுமத்தி அவர்களது பணிச்சுமையை பல மடங்கு உயர்த்தி ஆசிரியர்களை பெரும் மன உளைச்சலில் பள்ளி கல்வித்துறை ஆட்படுத்தி வருகிறது.
தொடர்ந்து ஆசிரியர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொண்டுள்ள அதிகார வர்க்கம், மாணவர்களுடன் ஆசிரியர்களுக்கான நேர சுதந்திரம், கற்பித்தல் சுதந்திரம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு கல்விச் சூழல் சீர்கேட்டிற்கு பாதை அமைத்து வருகிறது.
பள்ளிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் உறவு வலுப்பட்டு, நடத்தை மாற்றங்கள் உருவாக வேண்டும் எனில், ‘சர்வ சிக்க்ஷா அபியான்’, ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ , ‘எண்ணும் எழுத்தும் திட்டம்’ போன்றவை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும். கற்பித்தல் அல்லாத பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்காமல் தனியாக பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும். இது போன்ற திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யும் கோடிக்கணக்கான நிதியை பள்ளிக் கட்டமைப்புக்காகவும் ஆசிரியர்கள் நியமனத்திற்காகவும் பயன்படுத்தி அனைத்துப் பள்ளிகளிலும் தரமான கல்விக்கு வழிவகுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளின் நிலையை உயர்த்த வேண்டும் எனில், அப்பொறுப்பை கல்வியாளர்களிடமும், ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் அரசாங்கம் விட வேண்டும். கல்விக்கான போதிய நிதி ஒதுக்குவது மட்டும் தான் அரசாங்கத்தின் கடமையாகும். அதை அரசாங்கம் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.
பள்ளி கல்வித்துறையின் நிர்வாகத்தை இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், கல்வியாளர்களிடமும், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமும் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான், கல்வியின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தி, சிறப்பான திட்டங்களையும், நடைமுறையையும் பள்ளிக் கல்வித்துறையால் செய்ய இயலும்.
எனவே, இவை குறித்து கலந்துரையாடல் துவங்கப் படவேண்டியது அவசியம். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அதில் பங்கேற்க வேண்டும். தீர்விற்கானத் துவக்கம் கலந்துரையாடலே…! இதை மையப்படுத்தி, அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி நடத்திய இணைய வழிக் கருத்தரங்கம் கடந்த டிசம்பர் மாதம் 7 அன்று மாலை நடந்தது. அதில் ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் சிறப்புரை ஆற்றினார்.பல கல்வியாளர்களும், ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
Also read
சென்னை சுவடு பதிப்பகம் நல்லு ஆர். லிங்கம் அவர்கள் நிகழ்வின் இணைய வழி ஒருங்கிணைப்பை மிகச் சிறப்பாக செய்து முடித்தார்.
கல்வி குறித்து ஆழமான கருத்துகளை ஒவ்வொருவரும் முன்வைத்ததை தொகுத்து அறம் இணைய இதழில் வழங்க இருக்கிறோம். தொடர்ந்து வாசித்து, விவாதத்தில் உங்கள் பங்களிப்பையும் உறுதி செய்யுங்கள்.
கட்டுரையாளர்; உமா மகேஸ்வரி
கல்வி செயற்பாட்டாளர்
பள்ளிக் கல்வி சந்திக்கும் சிக்கல்கள்! – தீர்வை நோக்கி-1
உமா மகேஸ்வரி
I am a student of BAK College. The recent paper competition gave me a lot of headaches, and I checked a lot of information. Finally, after reading your article, it suddenly dawned on me that I can still have such an idea. grateful. But I still have some questions, hope you can help me.