தூக்கி எறியுங்கள், மருந்து, மாத்திரைகளை!

-எம்.மரிய பெல்சின்

இன்றைய மனித குலம் மாத்திரை, மருந்துகளுடன் வாழ்க்கை நடத்துகிறது! ஒவ்வொரு குடும்பத்திலும் மளிகைக்கு ஒரு பட்ஜெட் இருப்பது போல, மெடிக்கலுக்கும் பட்ஜெட் போடுகிறார்கள்! எந்த மருந்து, மாத்திரைக்கும் ஒரு பக்க விளைவு உண்டு! மருந்தே உணவாக மாறுவது ஆபத்து! உணவே மருந்தாக இருந்தால் ஏது நோய்?

`உணவே மருந்து மருந்தே உணவு’ என்று சொல்கிறது சித்த மருத்துவம். ஆனால், இன்றைய சூழலில் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் ஒருவேளை உணவைக் கூட உண்ண முடியாது, உயிர் வாழவும் முடியாது என்று சொல்லுமளவுக்கு நிலைமை மாறிப் போய்விட்டது. இத்தகைய மோசமான நிலைமை குறித்து நாம் வெட்கி தலைகுனிய வேண்டியுள்ளது. நமது சித்தர் பெருமக்கள் நாம் உண்ணக்கூடிய ஒவ்வொருவேளை உணவிலும் மருந்துப் பொருட்கள் இருக்குமாறு நமது கலாச்சாரத்தை, பண்பாட்டை அமைத்துச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நமது முன்னோர் பின்பற்றி வந்த நாட்கள்வரை நோய் பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை.

இன்றைக்கும் கூட நவீனம் பற்றி அறியாத மலைவாழ் மற்றும் பழங்குடி மக்களிடம் பெரிய நோய் பாதிப்பில்லை. முழுக்க முழுக்க இயற்கை விளைபொருட்களை மட்டுமே அவர்கள் உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் சமீபகாலமாக அவற்றிலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம்.

இன்றைக்கு நமது பாரம்பரியத்தை தொலைத்துவிட்டோம்; பல வீடுகளின் சமையலறைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. உணவு சமைக்காமல் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களை நம்பி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இங்கே நாம் குறிப்பிடுவது எல்லோரையும் அல்ல. இன்றைக்கு பெரும்பாலானோர் இப்படித்தான் மாறிவிட்டார்கள்.வெளி உணவை தொடர்ந்து உண்பவர்கள் நோயை நண்பனாக்கி விடுகிறார்கள்!

கடந்த சில ஆண்டுகளாக பல வீடுகளில் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பதில்லை. காய்கறிகளைக் கூட நறுக்குவதற்கு நேரமில்லாமல் பல மணி நேரத்துக்கு முன்பு வெட்டி கூறு போட்டு பாலித்தீன் கவர்களில் அடைக்கப்பட்ட காய்கறிகளையும், கீரைகளையும் வாங்கி சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலர். என்றைக்கோ பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை விரும்பி அருந்துகிறோம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தத் தவறுகளை பல காலமாக தொடர்ந்து செய்து வருவதால் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத் தலைவருக்கு சிறுநீரகக்கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் சில வியாதிகள். அதேபோல் அவரது துணைவியாருக்கு சர்க்கரை நோய், மாதவிடாய்க் கோளாறு மற்றும் உடல் பருமன். இதேபோல் அந்த குடும்பத் தலைவரின் பெற்றோருக்கும், குடும்பத்தலைவியின் பெற்றோருக்கும் வேறு சில பாதிப்புகள். ஆக இவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாத்திரை டப்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வேளை உணவை உண்பதற்கு முன்பும், பின்பும் மாத்திரைகள் இல்லாமல் அவர்களால் உணவை உண்ண முடியாத ஒரு சூழல். இன்றைய நவீன மருத்துவம் அவர்களுக்கு அப்படி கற்பித்துக் கொடுத்திருக்கிறது.

ந்தச் சூழலில் அவர்கள் என்னை அணுகியபோது அவர்களது உடல் ஆரோக்கியத்திற்காக அவர்களது வீட்டிலேயே வளர்க்கும் விதமாக சில மூலிகைகளைப் பரிந்துரைத்தேன். அதே நேரத்தில் அந்த மூலிகைகளை எப்படி பயன்படுத்த வேண்டுமென்பதையும் சொன்னேன். மாயன் கீரை என்ற ஒரு கீரையையும் அதை வளர்ப்பதற்காக செடியின் தண்டுப் பகுதியையும் கொடுத்தேன். மாயன் கீரையை சூப் செய்து குடித்தால் நாள் முழுக்க சோர்வு இல்லாமல் இருக்கலாம். அதன் தண்டுப்பகுதியை நீக்கிவிட்டு இலையை மட்டும் சூப் வைக்க பயன்படுத்த வேண்டும்.

மாயன் கீரை

வழக்கம்போல மிளகு, சீரகம், வெள்ளைப்பூண்டு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைத்தால் சூப் தயாராகிவிடும். பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். இலையை மட்டும் கொதிக்க வைத்து சிறிது எலுமிச்சைச்சாறு கலந்தும் குடிக்கலாம்.

இன்றைக்கு கிரீன் டீ, லெமன் டீ என்று வித்தியாசமாக தேநீர் தயாரித்து குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படியிருக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய இந்த மாயன் கீரையில் டீ செய்து குடிப்பதில் தவறேதும் இல்லை. மாயன்கீரை ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் உதவும். புத்துணர்ச்சி தரும் இந்தக் கீரை விஷக்காய்ச்சலையும் தணிக்கக்கூடியது என்றால் மிகையல்ல. ஆனால், அவர்களிடம் இந்தக்கீரையின் மகத்துவம் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களுக்கு அந்தக்கீரையை கையில் கொடுத்தும் பலனில்லை. ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே அதில் சூப் செய்து குடித்த அவர்கள் நேரமில்லை என்று சொல்லி அதன்பிறகு அதை பயன்படுத்தவில்லை. ஆக, உடல் ஆரோக்கியத்துக்காக நாம் நேரம் செலவு செய்வதில்லை.

அடுத்ததாக முதுமை என்றாலே மூட்டு வலி, உடல் வலி இருக்கும் என்பதால் முடவாட்டுக்கால் கிழங்கை சூப் செய்து குடிக்குமாறு சொன்னேன். அத்துடன் அந்த முடவாட்டுக்கால் கிழங்கையும் வாங்கிக் கொடுத்தேன். அதையும் சிலநாட்கள் மட்டுமே பின்பற்றினார்கள். நேரமின்மையையும், அதை செய்வதற்கு ஆளில்லை என்பதுபோன்ற காரணங்களையும் சொல்லிக் கொண்டு கடந்து சென்றுவிட்டார்கள். அதுமட்டுமல்ல அந்த குடும்பத் தலைவரின் தந்தைக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதாகவும், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை இருப்பதாகவும் கூறினார்கள். உடனே நன்னாரி வேரை நசுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து சூடு ஆறியதும் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிக்கச் சொன்னேன். இதை குடித்ததும் அவருக்கு இருந்த அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினை சரியானது. ஆனாலும் தொடர்ந்து செய்யாதால் அந்தப் பிரச்சினை ஓரளவே குறைந்தது.

மாத்திரைகளை சாப்பிட்டு அதற்கு பழக்கப்பட்டதால் அவர்களுக்கு மாத்திரை வடிவ மருந்து கொடுக்கலாம் என்று ஹோமியோபதி மருத்துவ நண்பரிடம் பேசி மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றார்கள்.

இத்தனை விளக்கமாக சொல்வதற்குக் காரணம் என்னவென்றால், நம்மில் பலர் உடல்நலனை கவனிப்பதில்லை. அப்படித்தான் நண்பர் ஒருவரின் சர்க்கரை நோய் பாதிப்புக்காக மூலிகை சாறு ஒன்றை பரிந்துரைத்தேன். அதாவது ஒரு நெல்லிக்காய் என்றால் அதைவிட இன்னொரு மடங்கு அதிகமாக பாகற்காய் எடுத்து இரண்டையும் சேர்த்து சிறிது நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து வடிகட்டி குடிக்கச் சொன்னேன். 10, 15 நாளில் பலன் கிடைத்தது. ஆனால், அவர் முயற்சித்தது மழைக்காலம் என்பதால் சளி பிடித்துவிட்டது. நெல்லிக்காயை சாப்பிட்டால் சிலருக்கு சளி பிடிப்பது போன்று தெரியும். ஏனென்றால் நெல்லிக்காய் உடல் சூட்டினைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே, புதிதாக சாப்பிடுபவர்கள் நெல்லிக்காயை நீரில் போட்டு ஊற வைத்து அதன் நீரைக் குடித்து வந்தால் அது பழகிவிடும். அதன்பிறகு சிலநாட்களில் அதை சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது.

இப்போது இதை இங்கே சொல்வதற்கு காரணம் என்னவென்றால், சர்க்கரை நோய் பாதித்த அந்த நபர் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இந்த நெல்லிக்காய், பாகற்காய் சாறு அருந்துவது சரியானது அல்ல, என்பதை ஒரு பரப்புரையாக செய்தார். அதன் பிறகு அவரிடம் நிலைமையை விளக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து 40 நாட்கள் நெல்லிக்காய், பாகற்காய் சாறு அருந்திய இன்சுலின் நோயாளிகள் சர்க்கரை நோய் பாதிப்புக்காக அதுவரை செலுத்திவந்த இன்சுலின் ஊசியை நிறுத்திவிட்டார்கள். அந்த அளவுக்கு நெல்லி, பாகல் சாறு இன்சுலினை சுரக்க வைப்பதில் சிறப்பாக் செயலாற்றக்கூடியது.

இதுபோன்று எண்ணற்ற எளிய மருத்துவம் நம்மைச் சுற்றி காணப்படுகிறது. ஆகவே, மக்களே இனியும் நோய்களை காரணம் சொல்லிக்கொண்டு மருந்து, மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருக்காமல் உங்களது சமையலறையில் உள்ள பொருள்களைக் கொண்டு உங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். நோய்கள் வராமல் காத்துக்கொள்ளுங்கள். எந்த பாதிப்புக்கு எதைச் சாப்பிடலாம் என்று தகுதிவாய்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு செயலாற்றுங்கள்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்,

மூலிகை ஆராய்ச்சியாளர்,

9551486617

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time