தமிழ் என்றால் கசக்கிறதா திமுக அரசுக்கு..?

-முழு நிலவன்

தமிழக அரசின் நிர்வாகச் செயல்பாடுகளில் தமிழ் நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது! ‘எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்’ என்பதற்காகவா இந்தி எதிர்ப்பு போராட்டங்களும், உயிர்த் தியாகங்களும் நடந்தன! மற்ற மாநிலங்களில் அவரவர் தாய் மொழியில் அரசின் திட்ட அறிவிப்புகள் வருகிறதே? இங்கு ஏன் தமிழ் புறக்கணிப்பு ?

”உங்கள் பிள்ளைகளுக்கு தமிழிலேயே பெயர் வையுங்கள்” என்று போன  வாரம் முதல்வர் ஸ்டாலின் ஒரு திருமண விழாவில் சொன்னார் .எல்லாப் பத்திரிக்கையிலும் வந்தது .

தமிழில் பெயர் வைப்பதற்கு முன்மாதிரியாக தானா , அரசின் கல்வி திட்டத்திற்கு  “நம்ம ஸ்கூல் பவுண்டஷன் “.என்று பெயர் வைத்தார்…? ஒரு வேளை எது தமிழ், எது ஆங்கிலம் என்ற புரிதலே ஆட்சியாளர்களுக்கு இல்லையோ என்னவோ? அதற்கு அமைச்சர் மா .சுப்பிரமணியன்  தனது பங்காக ONE LAKH ONLY என எழுதி ஒரு காசோலை கொடுத்தார். அந்த வங்கியில் ஒரு லட்சம் மட்டும் என எழுதிக் கொடுத்தலும் செல்லும்.

சில மாதங்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்தும் சன் ஷைன் பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்றார்.  தமிழகத்தின் எதிர்காலமாக அறிவிக்கப்பட்டு, தற்போது அமைச்சராகியுள்ள உதயநிதி ஸ்டாலின். மேடையிலேயே ஏற்பட்டாளரிடம் அனுமதி கேட்கிறார் …”தமிழில் பேசலாமா ?” என்று!

தமிழ் புழக்கமே இல்லாத இடத்தில் இப்படி ஒரு ஒரு தயக்கம் வருவது இயல்பு தானே..? ‘அந்தப் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் தமிழில் பேசினால் தண்டத்தொகை கட்ட வேண்டும்’ என்ற பேச்சு பரவலாக உள்ளது. அங்கு ஆங்கிலம், இந்தியும் தான் பாட மொழிகளாக உள்ளன!

திராவிட மாடல் அரசின் மற்றொரு திட்டத்தின் பெயர் “நம்ம ஊரு சூப்பரு “.அதன் குறியீட்டு சொற்தொடராக “சுற்றுச் சூழல் சூப்பரு ,சுகாதாரம் சூப்பரு “MASS CLEANING “என்பவை தவறாமல் இடம் பெறும், அடடா, தமிழை வளர்ப்பதற்கு அறிவாலயத்தின் மொத்த அறிவையும் பயன்படுத்தி இருந்தால் தான் இப்படி பெயர் வைக்க முடியும்!

லட்சோப லட்சம் மக்கள் வருகின்ற மெரீனா கடற்கரையில்!

சென்னை மாநகராட்சி சார்பில் ஒலி மாசு ஏற்படுத்த வேண்டாம் எனும் கருத்தைக் கொண்ட போக்குவரத்துத் துறை விழிப்புணர்வு நிகழ்ச்சியின் பெயர் ANTI HONKING CAMPAIGN .இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த எந்த ஒரு பதாகையிலும் தமிழில் ஒரு வார்த்தை கூட இல்லை .இதை யார் படித்திருப்பார்கள் ? யார் புரிந்திருப்பார்கள் ?

மாமல்லபுரத்தில் நடந்த உலக அளவிலான சதுரங்கப் போட்டியை “நம்ம செஸ் நம்ம பெருமை” என தமிங்கிலத்தில் தமிழ்நாடெங்கும் விளம்பரப்படுத்தினார்கள் .”நம்ம சதுரங்கம் ,நம்ம பெருமை ” என ஏன் விளம்பரப்படுத்தவில்லை..

வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்வு முடிந்தவுடன் அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேட்கிறார்கள்.

”குடமுழுக்கு தமிழில் நடந்ததா ? சமஸ்கிருதத்தில் நடந்ததா ?”

அவர் சிரித்துக்கொண்டே சொன்னார், ”ஆகமப்படி நடந்தது!” அவ்ளோ புத்திசாலியாம் , ‘தமிழில் நடத்த எங்களுக்கு துணிச்சல் இல்லை’ என்பதைக் சொல்லக் கூட பயப்படுகிறார்கள் .

அன்னைத் தமிழில் அர்ச்சனை என்பது விளம்பரத்திற்காக மட்டும் தான் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை ,அவ்வளவு தான் .அவர்களுக்குத்  தெரிந்த எல்லா நுணுக்கங்களிலும் சொல்லிவிட்டார்கள் .

சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு நிகழ்வின் பெயர் HAPPY STREET .அதன் குறியீட்டு  சொற்றொடர் “OUR ROAD ,OUR WAY”.

பெசன்ட் நகர், அண்ணா நகர், கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதான சாலையின் போக்குவரத்தை நிறுத்திவிட்டு, நடத்தப்பட்ட  ஒரு பொழுது போக்கு நிகழ்வு . தமிழர் கண்ணோட்டம் இதழில் இதை கண்டித்து ஒரு கட்டுரை வெளியானது . அதன் பின் கொரட்டூரில் நடத்தப்பட்ட நிகழ்வு ‘வீதித் திருவிழா’ என பெயர் மாற்றம் பெற்றது .

முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கும்போது BELONGS TO DRAVIDIYAN STOCK என எழுதிய முகக் கவசம் அணிந்து வந்தார். உதயநிதியும் அந்த வாசகம் தாங்கிய உடையை அணிந்து கொண்டார்! தன்னுடைய ஆட்சியை நித்தம் நித்தம் திராவிட மாடல் எனக் கூறிக்கொள்கிறார் ஸ்டாலின்! அது என்ன மாடல் ? இவைகளுக்கு மாற்றாக எத்தனையெத்தனை தமிழ் வார்த்தைகள் உள்ளன. அவை எங்கே ?

தமிழ் தினசரிப் பத்திரிக்கைகளில் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்படும் எழுபது விழுக்காடு விளம்பரங்கள் ஆங்கிலத்தில் தான் உள்ளன!  ஒப்பந்தப்  புள்ளிகள் கோருவது முதல் வேலைவாய்ப்பு விளம்பரம் வரை  அனைத்தும் ஆங்கிலத்தில் தான். அவ்வப்போது ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், தெலுங்கானா அரசின் விளம்பரங்கள் தமிழ்நாட்டின் தினசரிப் பத்திரிக்கைகளில் வருகிறது . அவை, தமிழில் தான் வருகின்றன.டாடா போன்ற பெரு நிறுவனங்கள் கூட, நல்ல தமிழில் இப்போது விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். தமிழக அரசு மட்டும் ஆங்கிலத்தில் வெளியிடுவதன் நோக்கம் என்ன ?

தமிழ் தழைத்தோங்கிய தஞ்சையும் தப்பவில்லை

அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்புக்கு நிதி இல்லாத போது ,லட்சக்கணக்கில் செலவழித்து ஆங்கில எழுத்துக்கள் மிளிரும் தற்சுட்டி மையங்கள் எதற்கு ? “நம்ம THANJAVUR” என்பது திமுக வின் சாதனை .அதிமுக ஆட்சியில்”நம்ம சென்னை” ஐ லவ் கோவை ,ஐ லவ் திருச்சி ,இ லவ் T V மலை… என அமைத்தார்கள் .ஒவ்வொன்றின் திட்ட மதிப்பீடு 25 லட்சம்.

தமிழகத்தின் தலைநகரில் மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு , இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் வழங்கப்படும். ஆட்சிகள் மாறினாலும் இவைகளில் மாற்றம் நடப்பதில்லை.

ஆவினுக்கும் ஆங்கில மோகம்!

தமிழக அரசின்  ஆவின் நிறுவனம் தான் தமிழ் அழிப்பில் முதலிடம் பிடிக்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பாலுக்குப் பெயர் ஆங்கிலத்தில் GREEN MAGIC .தமிழில் GREEN மேஜிக். கொழுப்பு சத்து நிறைந்த பாலுக்கு ஆங்கிலத்தில் PREMIUM ,தமிழில் ப்ரீமியம்.தூய பசும்பாலுக்கு ஆங்கிலத்தில் DELITE , தமிழில் டிலைட் .  இப்போது புதிதாக வந்துள்ள ஆவின் நிறுவனத்தின் அனைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் பெயர்களும் ஆங்கிலம் தான். பாலை விற்பவனும் தமிழன் , அதை காசு கொடுத்து வாங்கிக் குடிப்பவனும்  தமிழன்.

முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் மாநகராட்சிப் பள்ளியில் தொடக்கப்பள்ளி மாணவர் சேர்க்கையில், ‘தமிழ் வழி மாணவர் சேர்க்கையே கிடையாது’ என்று துரத்தியடிக்கிறார்கள்.

மொகலயர்கள், விஜய நகர பேரரசு என்னும் தெலுங்கு மன்னர்கள், மாராத்திய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சிகளிலெல்லாம் கூட அழிந்திடாமல் தாக்கு பிடித்து தழைத்தோங்கிய தமிழ் மொழி, 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திராவிட ஆட்சியாளர்களின் ஆங்கில மோகத்தால் படிப்படியாக காணாமலாக்கப்பட்டு வருகிறது.

இப்படி தமிழை கழுவிலேற்றும் திராவிட அடியார்களே …! சென்னையின் மொத்த மக்கள் தொகையில் பாதியளவே கொண்ட பின்லாந்து, நார்வே, ஸ்விடன் போன்ற நாடுகளில் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை தாய்மொழியிலேயே கற்பிக்கிறார்களாம். அந்த நாடுகளில் பலர் நோபல் போன்ற உயரிய பரிசுகளை பெறுகிறார்கள்! பல கண்டுபிடிப்புகளுக்கு காரணமாக இருக்கிறார்கள்.. என்பதை எல்லாம் உங்களுக்கு எப்படி புரியவைப்பது  ?

தமிழிலா? ஆங்கிலத்திலா ? தமிங்கிலத்திலா ?

கட்டுரையாளர்; முழுநிலவன் 

பொதுச் செயலாளர்

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time