மெஸ்சியின் கனவு நிஜமானது! இந்தியாவிற்கு எப்போது?

-ம.வி.ராசதுரை

உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவின் மக்கள் தொகை 4.5 கோடி! இரண்டாவது இடமான பிரான்ஸின் மக்கள் தொகை 6.5 கோடி! 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவால், உலக கால்பந்து போட்டியின் தர வரிசையில் கூட முன்னுக்கு வரமுடியவில்லை! கால்பந்தாட்டத்தில் இந்தியா தடம் பதிக்காதற்கான காரணம் என்ன?

உலக கால்பந்து நாயகன் மெஸ்ஸியை இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். நம் நாட்டு ஊடகங்களும் ஒன்று விடாமல் மெஸ்சியின் சாதனைகளைச்  சொல்லி  அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றன. நம்முடைய “அறம் “இதழ் சார்பில் நாமும் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சொல்லும் அதே வேளையில் உலக கால்பந்து போட்டியில் நம்முடைய நாட்டு அணியும் பங்கேற்கும் காலம் விரைவில் வரவேண்டும் அதற்கான திட்டங்களை மத்திய ,மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்குப் பிறகு, உலக மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் நாயகனாக மெஸ்ஸி மாறியதற்கு காரணங்கள் உண்டு.

கடந்த டிசம்பர்18, 2022 அன்று கத்தார் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நேரடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல கோடி மக்கள் கண்டு களித்தனர். கால்பந்து விளையாட்டின் அரிச்சு வடியைக் கூட   அறியாதவர்கள் அன்றைக்கு தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்து, தங்கக் கோப்பையை முத்தமிட்டு அதை தூக்கிக் கொண்டு மெஸ்ஸி வலம் வந்ததை கண்டு களித்தனர்.

1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு உலக கால்பந்து கோப்பையை மரடோனா பெற்றுத் தந்த போது லயோனல் மெஸ்ஸி பிறக்கவில்லை. அதற்கு மறு ஆண்டுதான்  அவர் பிறந்தார்.

1986 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஜெர்மனியை அர்ஜென்டினா எதிர்கொண்டது. வெற்றி பெறப்போவது எந்த நாடு என்பது குறித்து விளையாட்டு வல்லுனர்கள் கருத்து தெரிவித்த போது, மரடோனா எந்த அணியில் இருக்கிறாரோ அந்த அணிதான் வெற்றி பெறும் என்ற கருத்தை பல வல்லுனர்கள் தெரிவித்தனர்.அதே போல மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.

நான்கே ஆண்டுகளில் களநிலவரம் வேறுவிதமாக இருந்தது. முன்பிருந்த வேகம் மரனோடாவிடம் குறைந்திருந்தது. மரடோனாவிடம் இருந்த ஊக்க மருந்து பயன்படுத்தும் பழக்கம் விளையாட்டு களத்தில் இருந்து அவரை விரைவில் வெளியேற்றியது.

167 சென்டிமீட்டர் மட்டுமே உயரமும், சற்றுப் பருத்த உடம்பும் கொண்டிருந்த மரடோனா , 1986 ல் விளையாடிய ஆட்டம் அவருக்கு உலக நாடுகளில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அவர் உருவம் பொறித்த பனியன்களை அணிந்து கொண்டு, பலநாட்டு இளம் வீரர்கள்  விளையாடி மகிழ்ந்தனர்.

அர்ஜென்டினா நாட்டு மக்களால் கால்பந்தாட்ட கடவுளாக பார்க்கப்பட்ட மரடோனாவை  அவர்களால் எளிதில் மறக்க முடியவில்லை. 2010 உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக அவர் களத்திற்கு வந்தபோது அந்நாட்டு மக்கள் துள்ளிக் குதித்தனர். அப்போது மெஸ்ஸிக்கு  23 வயது. உலகக் கோப்பை போட்டியில் 19 வயதிலேயே கால் பதித்து விட்ட அவர் இரண்டாவது முறையாக   அணியில் ஆடிக் கொண்டிருந்தார். பெரும் நட்சத்திரமாக உருவெடுத்து விட்டிருந்த மெஸ்ஸியை, மரடோனா பெரிதும் நம்பியிருந்தார். ஆனால் அந்த முறை கால் இறுதியிலேயே அர்ஜென்டினா தோற்று வெளியேறியது. பயிற்சியாளராக சோபிக்கத் தவறிய மரடோனா, அப்பதவியில் இருந்து விலகினார்.

மரடோனா, இளம் வீரர் மெஸ்சிக்கு பயிற்சி அளித்து வளர்த்தெடுத்தார்!

2014 ஆம் ஆண்டு தன்னுடைய 27 வது வயதில் அர்ஜென்டினா கேப்டனாக மீண்டும் உலகக் கோப்பையில் மெஸ்சி பங்கேற்ற போது, ரசிகர்கள் பட்டாளம் பல மடங்கு அதிகரித்து இருந்தது. அவர் விளையாடிய மைதானங்களில் “மெஸ்சி ” “மெஸ்ஸி” என்ற கோஷங்கள் விண்ணைத் தொட்டன.

அனைவரும் எதிர்பார்த்தது போல, இறுதிப் போட்டியில் தன்னுடைய அணியை அழைத்து வந்து விட்டிருந்தார். எதிரில் 1986 மற்றும் 90களில் விளையாடிய அதே ஜெர்மன் அணி. கால்பந்து மைதானத்தில் மாயாஜாலங்கள் நிகழ்த்தக்கூடிய மெஸ்ஸி எவ்வளவோ முயற்சித்தும் கோல் அடிக்க முடியவில்லை. மாறாக ஜெர்மனி அணி ஒரு கோல் போட்டு 1-0 என்ற அடிப்படையில்  கோப்பையை வென்றது.

தங்களுக்கு மற்றொரு மரடோனா கிடைத்துவிட்டார் கோப்பையுடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த அர்ஜென்டினா மக்கள் சோகத்தின் எல்லைக்கே சென்று விட்டனர்.

“மெஸ்ஸி, மரடோனாவுக்கு ஈடாக மாட்டார். ஒரு சிறந்த வீரர் தன் அணிக்கு வெற்றி வாகையை சூடிக் கொடுத்திருக்க வேண்டும். அது மெஸ்சியால் முடியவில்லை. 27 வயதான இப்போதே முடியவில்லை, இனி, அவரால் வருங்காலத்தில் முடியவே முடியாது. அவர் சகாப்தம் முடிந்த ஒன்று” என்ற பேச்சு உலக அரங்குகளில் எழுந்தது.

உலக அளவில் கால்பந்தாட்டத்தில் முன்னணியில் இருக்கும் வீரர்கள்!

தன்னுடைய 31 வது வயதில் நான்காவது முறையாக உலகப் போட்டியில்(2018) அவர் பங்கேற்றபோது,  முந்தைய ஆண்டை விட, அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு  சற்று குறைந்து இருந்தது. அதேபோல நாக்- ஆவுட் சுற்றில் பிரான்சிடம் தோற்று அர்ஜென்டினா வெளியேறியது. கடந்த முறை நடந்த அந்த போட்டியில் தான் 19 வயதே ஆன  பிரான்ஸ் நாட்டின் இளம் வீரர்  எம்பாப்பே  ஜொலித்தார். பல ஆட்டங்களில் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்து கோப்பையை வென்று தன் நாட்டிடம் கொடுத்தார்.

பிரான்ஸ் கால்பந்தாட்டக்காரர் எம்பாபே.

இந்தப் போட்டியில் ஐந்தாவது முறையாக பங்கேற்க  வந்தார் 35 வயது மெஸ்ஸி . முதல் போட்டியிலேயே சவுதி அரேபியாவிடம் தோற்று மண்ணைக் கவ்வியது அவர் தலைமையிலான அணி. நாக் அவுட் சுற்றுக்கே தகுதி பெறாது என்று பலரும் எண்ணினர். அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. பீனிக்ஸ் பறவை போல தன் அணியை மீண்டும் எழ வைத்தார் மெஸ்ஸி. மின்னல் வேக வீரர் என்று கருதப்பட்ட 23 வயதே நிரம்பிய எம்பாப்பே அடங்கிய பிரான்சை 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனையின் உச்சத்திற்கு சென்றார்.

ஐந்து முறை உலகக் கோப்பை விளையாட்டில் பங்கேற்று 26 ஆட்டங்களில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

உலகக்கோப்பை போட்டிகளில் அவர் அடித்த மொத்த கோல்கள் 13. இந்தப் போட்டியில் மட்டும் 7 கோல்கள் எடுத்து அசத்தினார். அதோடு பந்தை சரியாக கடத்திக் கொடுத்து மூன்று கோல்களை சக வீரர்கள் அடிக்கவும் உறுதுணையாக இருந்தார். இதன் காரணமாக இரண்டாவது முறையாக உலகின் தலைசிறந்த வீரருக்கு வழங்கும் தங்க கால் பந்து விருதையும் தட்டிச் சென்றார்.

மெஸ்ஸியின் வெற்றியை உலக நாடுகளே கொண்டாடி வரும் சூழலில் சொந்த நாட்டு மக்கள் எப்படி கொண்டாடி இருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையில்லை. கத்தாரில் இருந்து தங்கள் வீரர்கள் விமானத்தில் இருந்து வந்து இறங்கியதும், லட்சக்கணக்கான மக்கள் சாலைகளில் அணிதிரண்டு அவர்களை வரவேற்றனர். ஒரு வீடு பாக்கி இல்லாமல், அந்த நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து இந்த வெற்றியை கொண்டாடினர்.

ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரன் தன் உடல் நலத்தை தொடர்ந்து பேண வேண்டும், தன் வேகமான ஓட்டத்தையும், ஆட்டத் திறனையும், நுணுக்கங்களையும் தொய்வின்றி பார்த்துக் கொள்ள வேண்டும் .

17 வயதில் இருந்த அதே ஆட்டத்திறனை தன்னுடைய 35 வது வயதிலும் கொண்டிருந்தார் மெஸ்ஸி. சொல்லப் போனால் அவருடைய ஆட்டத்திறன் எல்லா வகையிலும் மேம்பட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஊக்கம், உணவு பழக்கம், உடற்பயிற்சியில் அவர் காட்டிய அக்கறையும் விடாமுயற்சியும் அவரை மகத்தான சாதனையாளராக மாற்றியுள்ளது. இதைத் தான் விளையாட்டு வல்லுநர்களும் வர்ணனையாளர்களும் தொடர்ந்து அவரைப் பற்றி கூறி வருகின்றனர். இந்த வகையில், எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு அவர் ஒரு ரோல் மாடலாகத் திகழ்கிறார்.

மெஸ்ஸியை கொண்டாடி வரும் அதே வேளையில் நம் நாட்டிலும் இதே போன்ற வீரர்கள் உருவாக வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் மேலோங்கி நிற்பதை பார்க்க முடிகிறது.

கோப்பையை வென்ற அர்ஜெண்டினாவின் மக்கள் தொகை 4.5 கோடி தான். இரண்டாவது இடத்திற்கு வந்த பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகை 6.5 கோடி. மூன்றாம் இடத்தை பெற்ற குரோஷியாவின் மக்கள் தொகை வெறும் 37 லட்சம் மட்டுமே. அதாவது, நம்முடைய சென்னை மாநகர மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி தான். நான்காம் இடத்திற்கு வந்த மொரக்கோ நாட்டின் மக்கள் தொகையும்  3.7 கோடி தான்.

140 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் உலகப் போட்டியில் விளையாடும் அளவிற்கு திறன் கொண்ட 11 வீரர்கள் கிடைக்க மாட்டார்களா? என்று நாம் நினைப்பது இயல்பே. அதே வேளையில் 32 நாடுகள்   பங்கேற்கும் இப்போட்டிப் பட்டியலில் இந்தியா இடம் பெறுவதே பெரும்பாடாக உள்ளது. அந்த அளவுக்கு நாம் கால்பந்து விளையாட்டில் பின் தங்கியுள்ளோம்.

கிரிக்கெட் மாயையில் கட்டுண்டு கிடக்கும் இந்திய மக்கள்!

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு கொடுக்கப்படும் பெரும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட கால்பந்து விளையாட்டிற்குத் தரப்படுவதில்லை. இந்த பாரபட்ச அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டும். அந்த கிரிக்கெட்டிலுமே கூட ஒரு குறிப்பிட்ட மேல்சாதியைச் சேர்ந்த வீரர்களே வெகுகாலம் கோலோச்சிய நிலைமையும் இருந்தது. கிரிக்கெட் வியாபாரபயபடுத்தப்பட்டதால் அதற்கு மென்மேலும் விளம்பரமும், ஆதரவும் பெருகி வழிகிறது!

இந்தியாவில் விளையாட்டையே இன்னும் நாம் முழுமையாக ஜனநாயகமயப்படுத்தாமல் உள்ளோம். கால்பந்து விளையாடுவதற்கான போதுமான மைதானங்களே இல்லாத நிலை உள்ளது. கால்பந்தாட்டத்தை ஊக்கப்படுத்த போதுமான நிதி ஒதுக்கபடுவதில்லை.

பிபா போன்ற உலக போட்டிகளில் இந்தியா மிகவும் பின் தங்கிய தர வரிசையில் இருப்பதற்கு முக்கிய காரணம், இங்கு கால்பந்தாட்டம் ஊக்கப்படுத்தப்படவில்லை. ஒரு காலத்தில் –  சுதந்திரத்திற்கு முன்பே – மகாராஷ்டிராவின் கோலாப்பூர் போன்ற இடங்களில் கால்பந்து மிகச் சிறப்பாக விளையாடப்பட்டு வந்தது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் இங்கு பிரபலபடுத்தப்பட்ட கிரிக்கெட் தான் இந்திய அரசின் பேராதரவு பெற்ற விளையாட்டானது. மேலும், இங்கு விளையாட்டில் அரசியல் மற்றும் ஆதிக்க சக்திகளின் தலையீடும் அதிகம். இவற்றை தவிர்த்தால் இங்கு கால்பந்தாட்டத்தில் நிறைய திறமையாளர்களை அடையாளம் காணலாம்.

பிரான்ஸ், இங்கிலாந்து முதலான ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் வெள்ளை இனத்தவர். ஆனால், அவர்களுடைய அணிகளில் தற்போது கணிசமான கருப்பின வீரர்களை பார்க்க முடியும். குறிப்பாக கடந்த முறை முதலிடத்தையும் இந்த முறை இரண்டாவது இடத்தையும் பிடித்த பிரான்ஸ் அணியில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் கருப்பின வீரர்களே.

ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட கருப்பினத்தவர்,  பிற இனத்தவரை காட்டிலும் குத்துச்சண்டை, கால்பந்து, ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டுகளில் அதிகம் ஜொலிப்பதை காணலாம்.

விளையாட்டு சாதி , மதம், இனத்துக்கு அப்பாற்பட்டது என்பதில்  மாற்றுக் கருத்து இல்லை. உலக அமைதி மற்றும் மனித குல ஒற்றுமைக்கு வழி வகுப்பதில் விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. அதே சமயம், விளையாட்டில் வெற்றி பெறத் தேவைப்படும் அனைத்து உத்திகளையும் மேலை நாடுகள் கையாளுகின்றன,

7,8 வயதிலேயே இளம்  விளையாட்டு வீரர்களை அடையாளங் கண்டு, பெற்றோர் ஒத்துழைப்புடன் அவர்களுக்கு உணவு, உபகரணங்கள் வழங்கி அறிவியல்  உத்திகளை கையாண்டு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.

அவ்வாறு செய்தால், உலக கால்பந்து அரங்குகளில் விளையாடக் கூடிய அளவுக்கு அணியை நம்மால் உருவாக்க முடியும். அந்த நாளை விரைவில் பார்க்கவும் செய்யலாம்.!

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

 மெய்வருத்தக் கூலி தரும்.” (குறள் 619)

பொருள்:

ஊழின் காரணமாக ஒரு செயல் எதிர்பார்த்த வினையை ஆற்றாவிட்டாலும்

அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி உரிய பலனை கொடுத்தே தீரும்.

கட்டுரையாளர்; ம.வி.ராசதுரை

மூத்த பத்திரிகையாளர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time