பதில் இல்லை என்பதால், பாய்ந்து குதறும் சீமான்!

-சாவித்திரி கண்ணன்

ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்! ஆனால், பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால் நிதானம் இழந்து கொந்தளிக்கிறார்!

”உனக்கு ஏதோ மன நோய் இருக்கிறது…’’

”டேய்.. பைத்தியக்காரன் மாதிரி கேள்வி கேட்காதே..”

”உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு அதான் இப்படி கேட்கிறே..!”

”யோவ் என்ன கேட்கிற நீ..!”

”ஏய்…., எந்தக் கேள்வியும் உனக்கு உருப்படியாக கேடகத் தெரியல!”

”உனக்கு எதுக்கு நான் பதில் சொல்லணும்

இனிமே நீ இங்க வராதே..”

இதெல்லாம் சீமான் பேசியவை!

பத்திரிக்கையாளர் கரிகாலன் கேட்ட கேள்விகளுக்கான சீமானின் எதிர்வினைகளே இவை!

# ” திருச்சி அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் போதைப் பொருட்கள் தயாரித்து இலங்கைக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கிறார்கள். இது தெரிந்தும் தமிழ் தேசியவாதிகள் வாய் மூடி மெளனித்து இருக்கிறார்கள்” என சவுக்கு சங்கர் ஒரு குற்றச்சாட்டு வைத்திருக்கிறாரே

# ”திமுகவின் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறீர்கள்! உங்கள் மைத்துனருக்கு சீட்டு கொடுத்துள்ளீர்களே…”

இந்த இரண்டு கேள்விகளுக்கு தான் இப்படி எதிர்வினை ஆற்றி உள்ளார் சீமான்!

சவுக்கு சங்கரின் குற்றச்சாட்டு, ‘அப்பட்டமான பொய்’ என்றால், அதை பொய் எனச் சொல்வதில் என்ன தயக்கம்? இல்லை என்றால், ‘இது குறித்து நான் விபரமாக தகவல் தெரிந்த பிறகு என கருத்தை உறுதிபடச் சொல்வேன்’ என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்!

உண்மையில் திருச்சி அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் உள்ளது போன்ற நிலையில் மிகுந்த நெருக்கடியில் அடிப்படை உரிமைகள் இன்றி வாழ்ந்து கொண்டுள்ளனர் பல்லாண்டுகளாக! அவர்கள் இதற்காக பல போராட்டங்களை நடத்தி உள்ளனர்.  அவர்கள் மனிதாபிமானமாக நடத்தப்பட வேண்டும் என்பதே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது தொடர்பான கட்டுரைகளும் அறத்தில் வெளியிட்டு உள்ளோம்.

இலங்கை தமிழர் அகதி முகாம்

அப்படி இருக்க, இப்படி ஒரு வலுவான குற்றச்சாட்டை சவுக்கு சங்கர் வைக்கும் போது, அந்த எளிய மனிதர்களுக்காக சீமான் பரிந்து பேசி உண்மையை ஆணித்தரமாக சொல்லி இருக்க வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு! அல்லது ஒரு சிலர் இவ்வாறு செய்திருக்கும் பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டதை நான் ஆட்சேபிக்க மாட்டேன். உண்மையில், அவர்களால் மற்ற அகதிகளுக்கு தான் மேன்மேலும் நெருக்கடி, துன்பம் ஏற்படும் என விளக்கி இருக்கலாம்!

”அது சவுக்கு சங்கரின் கருத்து” என்று ஒற்றை வார்த்தையில் எப்படி கடந்து போக முயன்றார் என்பது புரிபடவில்லை! அப்படியானால், இது நாள் வரை அவர் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தது எல்லாம் என்ன?

உண்மை எதுவோ அதற்கு உரக்க குரல் கொடுக்க வேண்டாமா..?

‘சவுக்கு சங்கர் எதைச் சொன்னாலும் அதற்கு மாற்று கருத்தை நான் சொல்ல மாட்டேன்’ என்பது தான் சீமானின் நிலைபாடா…?

சவுக்கு சங்கருக்காக சீமான் தன் கருத்தை வெளிப்படுத்தாமல் புதைத்துக் கொள்கிறாரா? அல்லது சவுக்கு சங்கர் கூறியதில் உண்மை உள்ளது என நம்புகிறாரா..?

இதற்கான விடை மிக முக்கியமானதாகும்!

அடுத்ததாக அவரது மைத்துனருக்கு அவரது கட்சியில் தரப்பட்ட முக்கியத்துவம் குறித்த கேள்வி!

அதற்கு சம்பந்தப்பட்டவருக்கான தகுதிகளையும், திறமைகளையும் சொல்லி’ அவர் கட்சிக்கு எந்த அளவுக்கு முக்கியமாகிறார் என்பதாக சீமான் சொல்லி இருந்தால்.., அது பொறுப்பான பதிலாக இருந்திருக்குமே..!

அதைவிடுத்து, படு கோபத்துடன் பேசுவதும்.. ”அவர் திமுகவில் இருந்தவர், அதிமுகவில் இருந்தவர்…” எனக் கூறி கோபப்படுகிறார்!

அப்படியானால், ‘ஒருவர் அதிமுக, திமுகவில் இருந்து நாம் தமிழர் கட்சிக்கு வந்தால், அதுவே அவருக்கு முக்கியத்துவம் தருவதற்கான தகுதியாகிவிடுமா..?’ என்ன சொல்ல வருகிறார் சீமான்?

சீமானின் இந்த நடவடிக்கைகளுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கடுமையான கண்டணம் தெரிவித்து உள்ளது.

அந்த கண்டனம் குறித்து கேட்கப்பட்டதற்கு ”கண்டணத்தை வரவேற்கிறேன்! ஆனால், சின்ன ஒளிபெருக்கி உன் கையில் இருந்தால் கேள்வி கேட்கும் தகுதி உனக்கு வந்துவிட்டதாக நீ கருதிக் கொள்வாயாக….” என மீண்டும் கோபம் கொப்புளிக்க பேசுகிறார்..!

கண்டணத்தை உண்மையிலேயே அவர் ஏற்பதாக இருந்தால் அவர் தன்னை திருத்திக் கொள்வது தானே முறையாகும். ‘நீங்க கண்டணம் தெரிவித்தாலும் நான் திருந்துவதாக இல்லை’ என்பதைத் தான் அவரது செயல்பாடுகள் உணர்த்துகின்றன!

இது போல பிரஸ்மீட்டில் துணிச்சலாக நிருபர்கள் கேள்வி கேட்பதே இன்று அரிதாகி வரும் நிலையில் கேட்கும் ஒரு சிலரையும் இப்படி மிரட்டி, அவமரியாதையுடன் பேசுவது சீமான் வலியுறுத்தி வரும் ஜனநாயகத்திற்கு அழகா..?

சவுக்கு சங்கரை அரவணைத்து, ”மாற்றுக் கருத்தைக் காப்பாற்றவும் உயிர் கொடுப்பேன்” என்றார் சீமான்! ஆனால், ‘தன்னை எதிர்கேள்வியே கேட்கக் கூடாது’ என்பதன் மூலம் அப்படி சொன்னதெல்லாம், ‘வெத்து பேச்சு’ என்றல்லவா ஆகிவிடுகிறது.

மற்றொரு முக்கியமான விஷயம், இப்படி துணிச்சலான பத்திரிகையாளர் மிரட்டப்படும் போது, அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்க வேண்டும். ” அந்த கேள்விக்கான சரியான பதில்களை தரலாமே” எனக் கூறி இருக்க வேண்டும்.

அரசியல் தலைவரான ஒருவர் கேட்கப்பட்ட கேள்விக்கு பொறுமையுடன் பதில் சொல்வதன் மூலம் தான் தன்னை மேன்மேலும் தன்னை நிருபிக்கவும், நிறுவவும் முடியும். இப்படி கோபப்படுவது, ‘அவரிடம் நியாயமான பதில் இல்லை’ என்பதைத் தான் உணர்த்துகிறது!

மகிழ்ச்சி! ஆனால், அவருடைய நிலைபாடு குறித்து கருத்து கேட்கும் பத்திரிகையாளர்களின் கேள்வியை எதிர்கொள்ளவே அஞ்சுவதும், ஆத்திரப்படுவதும் முறையாகுமா? சீமான் அவர்களே, யோசியுங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time