அடிமைத்தனமாக ஆசிரியர்களை நடத்துவதா…?

அ.சங்கர்

பள்ளிக் கல்வி சந்திக்கும் சிக்கல்கள் தீர்வை நோக்கி -3

தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழகத்தில் உட்புகுத்தப்பட்டு விட்டது. அதன் அடிப்படையிலேயே அனைத்தும் நிகழ்கின்றன! கல்விக்கு இடையூறாக புதுப்புது திட்டங்கள்! சுதந்திரமற்ற நிலையில் ஆசிரியர்கள்! பாதுகாப்பற்ற நிலையில் பள்ளிகள்! அத்துமீறி அதிகாரம் செலுத்தும் அதிகாரிகள்..தீர்வு என்ன?

கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதாகக் கூறி, முறைசாரா கல்வித் திட்டங்கள் பலவற்றையும் செயல்படுத்தி வருகிறது இன்றைய தமிழக அரசு. அதன் ஒரு பகுதி தான் இல்லம் தேடிக் கல்வி. மற்றொரு பகுதி தான் எமிஸ்.

இந்நாட்களில் ஆசிரியர் பள்ளிக்குள் நுழையும் முன்பே தன்னுடைய அலைபேசியை ஆன் செய்து விட வேண்டும். அப்போது தான் அந்த எமிஸ் செயலியில் வருகைப் பதிவு உள்ளிட்ட அனைத்தையும் பதிவேற்றம் செய்ய இயலும்.  இதனால், ஏராளமான ஆசிரியர்கள்  மன உளைச்சலுடன் இன்று பணியாற்றி வருகின்றனர்.

ஏழை எளிய , பொருளாதாரத்தில் பின் தங்கிய,  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இறுதி நம்பிக்கை அரசுப் பள்ளிகளே. இந்தப் பள்ளிகளைக் காக்க வேண்டியதும், வலுப்படுத்துவதும் நமது தலையாய கடமை.

ஏறக்குறைய 15 ஆண்டுகாலம் முன்பு கல்வி முறை எவ்வாறு இருந்தது என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் மாணவர்கள் கற்கும் வகையிலே கல்விச் சூழல் அமைந்திருந்தது. மாணவர்களுக்கு புரியும் வகையில் ஆசிரியர்களது கற்பித்தல் இருந்தது.

நான் பணிபுரியும் பள்ளி மேல்நிலைப் பள்ளி, நான் சார்ந்துள்ள சங்கம் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் தான் உள்ளது. அங்குள்ள ஆசிரியர்கள் மட்டுமே  இணைந்திருக்கும் சங்கம். உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளைத் தடை செய்வதாக பல்வேறு பிரச்சனைகள் இடைநிலைக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இருப்பதை அறியலாம்.

ஆசிரியர்கள் மீது ஏற்றப்பட்டுள்ள கூடுதல் சுமைகள்;

சாரண சாரணியர் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், சாலைப் பாதுகாப்புத் திட்டம், ஆற்றல் மன்றம், என் எஸ் எஸ், என்சிசி என அத்தனைத் திட்டங்களும் இடைநிலை ஆசிரியர்கள் தான் பராமரிக்க வேண்டும். ‘எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்’ (Extra Curricular activities) என்பது கட்டாயம் தேவை தான். ஆனால், அதற்கு என்று தனி ஆசிரியர்கள் இருந்தால் நன்றாகப் பராமரிக்க முடியும். கற்பித்தல் பணிகளையும் செய்து கொண்டு, இந்த அத்தனைப் பணிகளையும் செய்வது கற்றல் கற்பித்தலில் இடையூறாக இருப்பதாக நான் கருதுகிறேன். மாணவர்களுக்கான நலத்திட்ட பணிகள் அத்தனையையும் ஆசிரியர்கள் தான் பார்க்கிறோம்.

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இரவுக் காவலர் கிடையாது. அலுவலக உதவியாளர் கிடையாது. புதிதாக எந்த நியமனமும் இல்லை. ஏற்கனவே இருந்த பணியாளர்கள் ஓய்வு பெற்று போகும்பொழுது, அது காலிப்பணியிடமாக மாறும் நிலையில் அதை நிரப்புவது கிடையாது. அந்தப் பணிகளை ஆசிரியர்களை வைத்து தான் செய்கிறார்கள். பணி நியமனம் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. அங்கு ஆசிரியர்தான் அலுவலகப் பணியாளர், எழுத்தர், காவலர் என‌ எல்லாமும். முழுமையான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியாத சூழல்.

ஆசிரியர்களுக்கு சுதந்திரம் இல்லை;

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது. எப்படி எனில், ஆசிரியர்கள் மாணவர்களைக் கண்டிக்க கூடாது. அவர்களைக் கடின வார்த்தையால் பேசக்கூடாது, படித்தீர்களா என்று கேட்கக் கூடாது.

மாணவர்களை மாண்புமிக்கவர்களாக உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை. ஒழுக்க நெறி தவறிய மாணவர்களை நல்வழிப்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்கள் கையில் வைத்திருக்கக் கூடிய குச்சி அவர்களை தண்டிப்பதற்கு அல்ல, அவர்களை வழிநடத்துவதற்கு என்பதனை அதிகாரிகளும் பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இக்காலச் சூழலில் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். ஒரு மாணவனை ஏன் தண்டிக்கிறோம் ? தண்டிப்பது இல்லை.. கண்டிப்பதற்காகவே நாம் பல வழிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. ஒரு ஆசிரியராக வருபவர் குழந்தைகள் உளவியல் பாடங்களையும் படித்து தான் பணிக்கு  வருகிறார்கள். தன்னிடம் உள்ள குழந்தையை எப்படி வழிக்கு கொண்டு வந்தால் படிப்பார்கள் என்று அந்த ஆசிரியர் மட்டுமே அறிவார். சுதந்திரமாக செயல்படாமல் அரசு நம் கையைக் கட்டிப் போட்டு உள்ளது .

மாணவர்களை சீர்படுத்தவே சின்னச் சின்ன தண்டணைகள்!

இது ஒரு புறம், மறுபுறம் பெற்றோர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் குறைவாக உள்ளது. பள்ளி வேளைகளில் ஆசிரியர்கள் நாள் முழுவதும் பாடம் நடத்துகிறார்கள்.  மாலை மாணவர் பள்ளிக்கு விட்டு வீட்டிற்குச் செல்லும் பொழுது அங்கு என்ன படிக்கிறார்கள் , படித்தீர்களா அல்லது வீட்டு வேலை   முதலிய பணிகள் ஏதாவது இருக்கிறதா என்று எதுவும் வீடுகளில் கவனிப்பது இல்லை. இதை ஒரு குற்றச்சாட்டாக நாம் சொல்லவில்லை. ஆனால் பெற்றோர்கள், ஆசிரியர்களை முழுமையாக நம்பி மாணவர்களை ஒப்படைக்க வேண்டும். ஆசிரியர்களை சுதந்திரமாக இயங்க அரசு அனுமதி வழங்க வேண்டும், ஆனால்,  நடைமுறையில் அதுவும்  இல்லை.

அதிகாரிகளின் அராஜகம்;

அடுத்ததாக டீம் விசிட்!  அதாவது, ஆணையர் தலைமையில் ஆறு முதல் ஏழு கல்வி அலுவலர்களை ஒன்றாக அனுப்பி வைத்து ஒரு பள்ளியை பார்வையிடச் செய்வது.

தோழர்களே, நாம் திருடர்கள் அல்ல! நாம் வழக்கமாக பாடம் நடத்துவதை, வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர் , முதன்மைக் கல்வி அலுவலர் என்று ஒவ்வொருவரும் வந்து பார்வையிட்டு தான் செல்கின்றனர். இப்படி ஒரு புறம் இருக்க, புதிதாகக் குழு அமைத்து டீம் விசிட் செய்து ஆசிரியர்களை வந்து சோதிக்கும் வேலையை  செய்கின்றனர். ஒரு நாள் முன்தினம் வரை எந்தப் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று தெரிவதில்லை! திடீரென வருகிறார்கள், வந்தவுடன் திடீரென ஒரு வகுப்பறைக்குள் வந்து ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவருடைய பாடத்தைக் கற்பிக்கச் சொல்கிறார்கள். இது அனைத்தும் எமிஸ் செயலி வழியாகவே வருகிறது. அந்த செய்தியில் எந்த ஆசிரியர் என்ன பாடம் எடுக்க வேண்டும் என்று அதிலேயே காட்டுகிறது. அதில் மாணவர் பெயரும்  வருகிறது , அந்த மாணவனது நோட்டை வாங்கிப் பார்த்து ஆசிரியர்கள் சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? எழுத வைத்திருக்கிறார்களா ? என்று பரிசோதனை செய்கின்றனர் . மேலும், அந்த மாணவர்களிடம் கேள்விகளையும் கேட்கின்றனர். அந்த எமிஸ் செயலியை நம்பும் அதிகாரிகள், ஆசிரியர்களை நம்புவதில்லை. ஒரு மாணவன் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவனாக இருக்கும் போது,அந்த மாணவரிடம் கேள்வியைக் கேட்பதும், அவர்கள் அதற்கு பதில் கூறுகிறார்களா என்று பார்த்து தீர்மானிப்பதும் எப்படிச் சரியாகும் ?

தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவர்களாக இருப்பார்கள். அவர்களின் பெயர் அந்த எமில் செயலியில் வரும். அவர்கள் பள்ளிக்கே வராமல் இருக்கும் பொழுது, அவர்களைத் தேடிப்பிடித்து வீடு தேடிச் சென்று, அழைத்து வந்து , பள்ளிக்குள் அமர வைப்பதே இங்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது . அந்த மாணவனின் பாட நோட்டுகளை வாங்கிப் பார்ப்பார்கள்.அந்த மாணவன் நிச்சயமாக எழுதியிருக்க மாட்டான். ஏனென்றால், அவனை பள்ளிக்குள் அழைத்து வருவதே நமக்குப் பெரும் போராட்டம் என்பது அதிகாரிகளுக்குத் தெரிவதில்லை.  இந்த மாணவன்  எழுதாததால் , இந்த செயலியை வைத்து கண்காணிக்கக் கூடிய இந்த டீம் விசிட் வரக்கூடியவர்கள்,  அந்த ஆசிரியர் சரியாகப் பாடம் நடத்தவில்லை என்று ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்துகின்றனர் .  அதை வைத்து  சிவப்பு வண்ணத்தில் , ஆசிரியர் சரியில்லை என்று அந்த செயலியில் குறிக்கின்றனர். இப்படி ஆசிரியர் மீது தொடர்ச்சியாகப்  புகார் சொல்லும் பொழுது  இவை அனைத்தும் ஆசிரியரின் மன உளைச்சலை  அதிகரிக்கிறது.

அதேபோல ஆசிரியர்கள் இருபதாண்டு காலம் பணி அனுபவம் மிக்கவர்கள்,   எந்த விதமான கற்றல் உபகரணங்களை எடுத்துச் சென்றால் அந்த மாணவர்களுக்குப் புரியும் என்பதை அவர்கள் அறிவார்கள். தேவையான இடத்தில் உபகரணங்களைப் பயன்படுத்துகின்றனர்.  அப்படி இல்லாத நிலையில் கரும்பலகையையே உபகரணமாகப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இப்பொழுது வரக்கூடிய அதிகாரிகள் கரும்பலகையை ஒரு கற்றல் உபகரணமாகவே பார்ப்பது கிடையாது. மேலும்  கரும்பலகைகள் வேண்டாம் அதற்கு பதில் நீங்கள் தொழில்நுட்ப வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகளைப் பயன்படுத்துங்கள். youtube-ஐ பயன்படுத்துங்கள் என்று ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் .

ஒரு ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போட்டால் அதைப் பார்த்து ஆசிரியருடைய எழுத்தின் தன்மை எழுத்து வடிவம் இவற்றிலிருந்து மாணவன்   கற்றுக் கொள்வான் . ஆனால், இப்பொழுது அதெல்லாம் எதுவுமே வேண்டாம் என்றால், ஒரு மாணவன் எதை எடுத்துக் கொள்வான்?

இல்லம் தேடிக் கல்வியா? இன்னலா?

அடுத்து இல்லம் தேடி கல்வி, அதை  200 கோடி ஒதுக்கி நடத்துகின்றனர். ஒரு காலத்தில் அறிவொளி இயக்கம் நடத்தினார்கள். அறிவொளி இயக்கம் என்பது கற்றறியாத முதியோர்களுக்கு அடிப்படைக் கல்வி அறிவை கொடுக்கக்கூடிய, எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு திட்டம்.   முதியோர்களுக்கானது. அது சரியே. ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தேவையற்ற திட்டம்.  இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர். தன்னார்வலர்களை கவனிக்க ஒரு ஆசிரியரை நியமிக்கின்றனர். அதற்குப் பிறகு இந்த ஆசிரியர்களை ஒருங்கிணைக்க , ஒருங்கிணைப்பாளராக ஒரு ஆசிரியரை நியமிக்கின்றனர் எனில், இரண்டு ஆசிரியர்களை அந்தப் பகுதிக்கு நியமித்து விட்டால் அவர்களுடைய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் என்னாவது?

மாணவர்கள் நம்மை நம்பி இருக்கின்றனர். அவர்களுக்கு யார் பாடம் நடத்துவது? திடீர் திடீரென்று அரசாங்கம் புதிய புதிய அறிவிப்புகளைக் கொடுக்கின்றது. நாள் ஒவ்வொன்றுக்கும் திடீர் திடீரென்று ஆணையரிடமிருந்து புதிய புதிய ஆணைகள் வருகின்றன. எந்தத் திட்டத்தையும் எப்படி நடத்தலாம் என்று யாரிடமும் கருத்துக் கேட்பு நடத்தப்படுவதே இல்லை. சங்கப் பிரதிநிதிகளிடமும் கேட்பது கிடையாது. கல்வியாளர்களிடமும்  கேட்பது கிடையாது.ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது அதன் நடைமுறைச் சிக்கல் என்ன என்பதை பகுத்தாய்வதில்லை.

உரிமைகளை வென்றெடுக்க, ஒன்றுபட்ட ஆசிரியர் போராட்டமே..!

மீறி நாம் ஒரு கருத்தைக் கொடுத்தால், சங்கப் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்பது போல், அழைத்து எழுதி வாங்கிக்கொண்டு, ஆனால் அதை செயல்படுத்தாமல் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதையே செயல்படுத்துகிறார்கள் எனில், இன்னும் அடிமைத்தனத்தில் தான் ஆசிரியர்களை வைத்துக் கொண்டுள்ளது. இந்த அரசாங்கம். கடந்த 10 ஆண்டுகளாக பள்ளியின் மீதும் ஆசிரியர்களின் மீதும் தாக்குதல்கள் அதிகமாக இருக்கின்றன . இங்கு செயல்படுத்தக்கூடிய அனைத்துமே தேசிய கல்வி கொள்கை 2020இல் இருப்பவையே . அரசு வெளிப்படையாக அதனை எதிர்ப்பது போல் எதிர்த்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளால் அதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறார்கள். என்றைக்கு இயக்குனர் பதவி போய் ஆணையர் பதவி வந்ததோ… அப்பொழுதே பள்ளிக்கல்வித்துறையில் கல்வித்தரம் குறைய ஆரம்பித்துவிட்டது.

மிரட்டப்படும் ஆசிரியர்கள்;

அடுத்ததாக, பள்ளி மேலாண்மை குழுக்கள் (SMC)  இவை என்னவோ ஆசிரியர்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். ஏனென்றால், மழைக்குக் கூட பள்ளிக்குள் ஒதுங்காத பெற்றோர்கள், ஆம் …அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை குழந்தைகளைப்  பள்ளியில் சேர்த்து விட வரும் பெற்றோர்  அந்த நாள் மட்டுமே பள்ளிக்கு வருவார்கள். அதற்குப் பிறகு மீண்டும்  மாணவர் பள்ளி இறுதி வகுப்பு முடிந்து மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு மட்டுமே பள்ளிக்கு வரக்கூடியவர்கள். அரசினுடைய , இந்தப் பள்ளி மேலாண்மை குழுவின் வழியாக பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர்களை கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். எனது மகன் வீட்டில் வந்து படிப்பதே இல்லை நீங்கள் எந்த வேலையும் கொடுப்பதில்லையா? பாடம் நடத்துவதில்லையா? என்கிறார்கள். ஆனால் மாணவனோ பள்ளிக்கு வந்து அங்கு கொடுக்கக்கூடிய பணிகளைச் செய்யாமல் வீட்டிற்கு எடுத்துச் செல்லாமல் அவன் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். அதனாலேயே வீட்டில் சென்று பாடம் நடத்தவில்லை என்று கூறுகிறான். அதேபோல (Home work) எந்தப் பணியும் கொடுக்கவில்லை   என்றும் கூறுகிறான். இது குறித்து பெற்றோர்கள் ஆசிரியரை நேரடியாகப் பள்ளிக்கு வந்து கேட்கலாம். ஆனால், அப்படிக் கேட்காமல் பள்ளி வேலாண்மைக் குழு கூட்டங்களில் பல பேர் மத்தியில் ஆசிரியர்கள் மீது புகார் சொல்கின்றனர்.இதனால்  பள்ளிக்கும், ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இடையே இடைவெளி உருவாகிறது.

இந்த பள்ளி மேலாண்மை குழு திட்டமானது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய திட்டமாக நான் கருதுகிறேன்.

ஏற்கனவே SSA திட்டத்திலிருந்த ஒரு கூறு தான் ABL சிஸ்டம்  (Card  System ) என்று சொல்வார்கள். அதன் மறு பெயர் தான் தற்போது வந்துள்ள எண்ணும் எழுத்தும் திட்டம். அப்பொழுது SSA வில் என்ன நிதி இருக்கிறதோ, அதை எப்படிச் செலவிடலாம் என்று யோசிப்பார்கள்.

பயனற்ற பயிற்சி திட்டங்கள்;

பாழடைந்த நிலையில் அரசு பள்ளிகள்!

அதேபோல தற்போது வழங்கக் கூடிய பயிற்சித் திட்டங்கள் CRC வழியாக BRT க்கள்  வழங்குவதில்  எந்தப் பிரயோஜனமும் இல்லை.  அவர்கள் குழந்தைகளுடன் இயங்குவதில்லை. ஆசிரியர்களாகிய நாம் பணி அனுபவம்  பெற்றிருப்பதுடன்,  எப்போதும் குழந்தைகளுடன் இயங்குகிறோம். ஆனால், அவர்கள் வெறும் நிர்வாகப் பணி செய்கின்றனர். அவர்களுக்கு நம்மால் சரியான முறையில் பயிற்சிகளை வழங்க இயலவில்லை என்பதே உண்மை. அவர்களுக்குத் தேவை அந்த பயிற்சியில் கொடுக்கக் கூடிய ஒரு நாள் கணக்கை முடிக்க வேண்டும் , அன்றைக்கான பணம் செலவிடப்பட வேண்டும் என்பது மட்டுமே. ஆனால், இந்தத் தொகையானது வீணாக செலவழிக்கப்படுகிறது. எத்தனையோ அரசுப் பள்ளிகளில் மாணவிகள் நிறைய பேர் பயில்கின்ற சூழல் இருக்கிறது. அங்கு அவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சுற்றுச்சுவர்  இல்லை,

கழிப்பிட வசதிகள் இல்லை இது போன்ற திட்டங்களுக்கு அதனைப் பயன்படுத்தலாம்.

அதே போல பள்ளிகளில் கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனமே இல்லை. ஆனால், ஆசிரியர் எவருமே இல்லாமல் புதியதாக  பணி நிரவல் (Surplus) என்ற ஒரு விஷயத்தைக் கொண்டு வருகிறார்கள்!  இருக்கக்கூடிய ஆசிரியர்களை அதிகம் என்று சொல்லி நீக்கும் பணியில் இருக்கிறார்கள். ஆனால், தற்போது கொரோனா காலத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்திருக்கின்றனர் என்பது தான் உண்மை.

நம்அருகில் உள்ள கேரளாவில் இரண்டு வேளை உணவைக் கொடுத்து வீட்டிற்கே சென்று போக்குவரத்து அமைத்துக் கொடுத்து  மாணவர்களைப்  பள்ளிக்கு அழைத்து வருகின்றனர். எனில், இங்கு அரசுப் பள்ளிகள் கட்டமைப்பில் சிறப்பாகவும், ஆசிரியர் நியமனம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும். நமது நோக்கமே அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும் என்பதே. இதற்காக களப் போராட்டத்திற்கும் நாம் தயாராக இருக்கிறோம்.

அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி நடத்திய கருத்தரங்கில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் .சங்கர் பேசியது.

தொகுத்து எழுதியவர்; உமா மகேஸ்வரி

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time