சித்தமருத்துவத்தில் தீர்க்கமுடியாத நோயே இல்லை! -மருத்துவர் வேலாயுதம்

    - மாயோன்‌.

சித்தர்களின் வழியே பெற்ற ஆழமான அறிவு! எதிலும் தெளிவான உறுதியான பார்வை, நடைமுறை சார்ந்த தீர்வு…ஆகிய சிறப்பம்சங்களை ஒருங்கே பெற்றவர் மருத்துவர் வேலாயுதம். கொரோனா  வைரஸை எதிர்த்து உலகமே போராடிக்கொண்டிருக்கும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 400 பேரை கொரோனவிலிருந்து குணப்படுத்தியுள்ளார். நோயாளிகளைக் காக்கும் களப்பணியில் தன் பங்கையும் தான் சார்ந்துள்ள சித்தமருத்துவத்தின் பங்களிப்பையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் .

“அறம்” இணையதள இதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் இருந்து…

கொரோனா வைரஸ் நோய்க்கும் உரிய மருந்து எது என  சித்தர்களின் பாடல்களை ஆராய்ந்தபோது யூகி முனிவரின் “யூகி வைத்திய சிந்தாமணி” நூலில்  இதற்கான விடை கிடைத்தது.

அவர் கூறிய கபம், மூச்சிரைப்பு உள்ளிட்ட அறிகுறிகள் கொரோனா வைரஸ்  ஏற்படுத்தும் அறிகுறிகளுடன் ஒத்துப் போனது .

நிலவேம்பு, ஆடாதொடா, கண்டங்கத்திரி ,சீந்தில் உள்ளிட்ட 15 மருந்துகள் கபசுர குடிநீரில்  உள்ளன .

நோய்த்தடுப்பு ,நோய் நீக்குதல் ,உடலை உறுதி செய்தல் என்ற சித்தமருத்துவ தத்துவத்தின் அடிப்படையில் இந்த அருமருந்து அபாரமாக  வேலை செய்கிறது வெகு சீக்கிரமே நாங்கள் உறுதிபடுத்திக் கொண்டோம்.

.சீனாவில் இருந்து எந்த நேரத்திலும் இந்த நோய் இங்கு வரலாம் என்ற நிலை இருந்தபோது, கடந்த ஜனவரி மாதமே கபசுர குடிநீரை பயன்படுத்துமாறு தமிழக அரசின் கவனத்திற்கு சித்த மருத்துவர்கள் கொண்டு வந்தோம்.

எங்களின் கோரிக்கையை ஏற்று கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் அரசு ஆணை கடந்த பிப்ரவரி மாதமே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஏப்ரல் மாதம்தான் அரசாணை வெளிவந்தது. சித்த மருத்துவம் இதன் பொருட்டு வழங்கிய கபசுரக் குடிநீரை இன்றைக்கு அனைத்து முறை  மருத்துவர்களும் முதல்நிலை மருந்துகளில்  ஒன்றாக பயன்படுத்துகின்றனர்

இதன் விளைவாக நோய்த்தடுப்பு என்ற நிலையை தாண்டி நோயை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வந்தது. எனவே, மருந்து கொடுப்பதிலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியது அவசியம் பற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம் .

தாளிசாதி சூரணம், மணப்பாகு, திப்பிலி ரசாயம் போன்ற மருந்துகளையும் சேர்த்து கொடுக்கும்படி வலியுறுத்தினோம்.

வாதம், பித்தம் ,கபம் ஆகிய மூன்றையும் சமநிலையில் பேணி  நுரையீரலைப் பாதுகாக்கும் ஒரு அற்புத மருந்து சிவனார் அமிர்தம் ஆகும். எங்கள் கோரிக்கை எடுபடவில்லை.

உலகை புரட்டிப் போட்டுள்ள  கொரோனா பெருந்தொற்றை எதிர் கொண்டு சித்த மருத்துவம் செலுத்திய பங்களிப்பால் இம்மருத்துவமுறையையும்   இது தோன்றிய தமிழ் மண்ணையும் இம்மண்ணின் அறிவார்ந்த ஆற்றலையும் நீண்ட நெடிய வரலாற்றையும் உலகம் உற்று நோக்கத் தொடங்கியுள்ளது.

நான் கடந்த மூன்று நான்கு மாதமாக தொடர்ந்து மருத்துவ பணியை மேற்கொண்டேன்‌ ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றினேன்.

கொரொனா  அறிகுறியுடன் என்னைத்தேடி வந்த சுமார் 400 பேரை குணப்படுத்தினேன். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகள் மற்றும் சிகிச்சை விவரத்தை பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

நான் ஒரு தனி  மனிதனாக செயல்பட்டே இவ்வளவு பேரை குணப்படுத்தி இருக்கிறேன் என்றால் என்னைப் போல தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5 ஆயிரம் சித்த மருத்துவர்களையும் ஒரு கட்டமைப்பில் இணைத்து அரசாங்கம் பயன்படுத்தியிருந்தால்  பல ஆயிரம் மக்களுக்கு பயன் கிடைத்திருக்கும்.

அனுபவமிக்க சித்த மருத்துவர்களை ஒருங்கிணைத்து பணியாற்றியிருந்தால்  நோயாளியின் அறிகுறிகளுக்கு ஏற்ப மிக நுட்பமாக மருந்துகளை கொடுத்திருக்க  முடியும்.

அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படும் மருந்துகள் நம்மிடம் உள்ளன.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இல்லை. சாலிகிராமத்தில் மருத்துவர் வீரபாபுவுக்கு  அமைத்துக் கொடுத்தது போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிகமாக சித்த மருத்துவ மையங்களை நிறுவிக்கொடுத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தது.

இந்த மையங்களில் கபசுரக் குடிநீர் ,மூலிகை சூப் ,இஞ்சி எலுமிச்சை பானம் ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டன. இதற்கே  சிறப்பான வரவேற்பு கிடைத்தது என்றால் சித்த மருத்துவத்தை முழுமையாக பயன்படுத்தியிருந்தால்  எவ்வளவு பயன்களை சமூகம் பெற்றிருக்கும்.

என்பார்வையில் ஒட்டுமொத்த சித்தமருத்துவ கட்டமைப்பில் சுமார் 10 சதவீதம்அளவுக்கே  பயன்படுத்தப்பட்டது என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

அலோபதி மருத்துவத்தின் பலமே ஆண்டிபயாட்டிக் எனப்படும்  நுண் கிருமியை அழிக்கும் முறையாகும். 2007 ஆம் ஆண்டு சிக்கன்குனியா என்ற வைரஸ் நோய் தாக்கியபோது இதை அழிக்க வல்ல  புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

சித்த மருத்துவம் நிலவேம்பு குடிநீர் என்ற அற்புதமான மருந்தை உடனே வழங்கியது. நோய் தாக்குதலில் இருந்து எண்ணற்ற மக்களை அம்மருந்து காப்பாற்றியது. அப்போதுதான் முதன்முறையாக இந்திய நாடே சித்த மருத்துவத்தை திரும்பிப் பார்த்தது. தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் ,டெங்கு போன்ற புது புது  நுண் கிருமிகளால் ஏற்பட்ட காய்ச்சலுக்கும்  சித்த மருத்துவத்தால் உடனடியாக மருந்துகள் கொடுக்க முடிந்தது.

சித்த மருத்துவத்தில் சூரணம், பற்பம், செந்தூரம், கஷாயம் உள்ளிட்ட 32 வகையான அக மருந்துகளும் பற்று போடுதல் ,ஆவி பிடித்தல் என்று 32 வகையான புற  மருந்துகளும் உள்ளன

மருந்துகளும் சிகிச்சையளிக்கும் வழிமுறைகளும் நிறைய உள்ளன .இவற்றை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து ஒருங்கிணைத்து பயன்படுத்தினால் கொரோனா தடுப்புப் பணியில் சிறப்பானதொரு பங்களிப்பை வெளிப்படுத்தி ஒரு முன்னுதாரணத்தை காட்டியிருக்க முடியும்.

சிக்கன்குனியா தொடங்கி தொற்று நோய்கள்  அடுத்தடுத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசாங்கம் இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்தால்  எதிர்காலத்தில் வரும் தொற்று நோய்களை மிக எளிதாக சமாளிக்க முடியும் .

” இந்தியாவில் இலக்கியங்களிலிருந்து முகிழ்த்த மருத்துவம் என்ற பெருஞ்சிறப்பு தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு மட்டுமே உண்டு .இந்த மருத்துவ முறைக்கு நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம், ஆயுள் வேதம், சிந்தாமணி மருத்துவம் என்று பல பெயர்கள் இருந்தாலும் சித்தர்கள் இதை முனைப்பாக்கி முன்னிலைப்படுத்தியதன் விளைவாக சித்த மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மருத்துவ முறை இயற்கையோடு இயல்பாக வளர்ந்த  தொன்மையான மருத்துவ முறையாகும். இந்த மண் சார்ந்த இங்கு உள்ள தட்ப-வெப்ப சூழல் சார்ந்தும் உலகியல் சார்ந்தும் உருவாக்கப்பட்ட ஒரு உன்னதமான மருத்துவமுறை இது.

நிலம், நீர் ,நெருப்பு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஒருங்கிணைப்புதான் பேரண்டம்‌ .அதன் சிறு வடிவமாகிய சிற்றண்டமே மனித உடல். இப்படியான ஆழ்ந்த பார்வையுடன்  நம் முன்னோர்கள் அணுகி  நுணுகி பதிவு செய்த ஆழமான அறிவார்ந்த தத்துவத்தின் அடிப்படையில் உருவானதே இம்மருத்துவ முறை.

பருவம் என்ற அருமையான வார்த்தையை உடல் மற்றும் உலகிற்கு  நம் முன்னோர்  பயன்படுத்தினர் .பருவ மாற்றங்கள் உலகில் தாக்கத்தை ஏற்படுத்துவது போல உடலிலும் மாற்றத்தினை ஏற்படுத்தி பல்வேறு விளைவுகளை உண்டாக்குகின்றன. வயது மாற்றமும் உடல் இயக்க, வளர்ச்சியில் முக்கிய அங்கம் வகிக்கிறது, இப்படிப்பட்ட புரிதல்களுடன் சித்தமருத்துவம் உருவாக்கம் பெற்றது.

இந்த உடல்  வாதம் என்கிற வளி (காற்று), பித்தம் என்கிற அழல், கபம் என்கிற ஐயம் ஆகிய மூன்றையும் உயிர் தாதுக்களாகக் கொண்டது .இந்த மூன்றும் தான் இருக்க வேண்டிய அளவில் இருந்து மாறுபடும் போது உடலில் நோய் ஏற்படுகிறது. இதையேதான் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் திருவள்ளுவர்

“மிகினும்  குறையினும் நோய்செய்யும்  நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று .(குறள்:941) என்கிறார்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் உயிர் தாதுக்களாகக் குறிப்பிடும் நம்முன்னோர் சாரம், செந்நீர் ,ஊண்,கொழுப்பு என்பு,மூளை ,சுக்கிலம் ஆகிய ஏழையும் உடல் தாதுக்களாகக் குறிப்பிடுகின்றனர்.

உயிர் மற்றும் உடல் தாதுக்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த உடலை உறுதியாக வைத்திருந்தாலே  நோய் அண்டாது .இந்த உறுதியை பேணுவதில்; இனிப்பு ,புளிப்பு, உப்பு, கைப்பு, கார்ப்பு ,துவர்ப்பு ஆகிய அறுசுவையுடன் கூடிய உணவு முக்கிய அங்கம் வகிக்கிறது.

எனவேதான் “உணவே மருந்து “என்ற மந்திர வார்த்தையை நம் முன்னோர் பயன்படுத்தினர்.

ஆதிகுடியினராகிய நாம் முதலில் வேட்டையாடும் சமூகமாக இருந்து படிப்படியாக ஐவகை நிலங்களில் வாழ்ந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தோம். இயற்கையோடு இயல்பாக இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு செடி, கொடி, மரம் உள்ளிட்ட தாவரங்களின் மூலிகைகள் ,காய், கனிகள்  உள்ளிட்ட தாவர  அங்கங்களின் மருத்துவ குணங்கள் அத்துபடியாக தெரிந்திருந்தன. இதேபோல தாதுக்கள், கனிமங்கள் என்று அனைத்திலும் உள்ள நன்மை ,தீமைகளை அறிந்து வைத்திருந்தனர்.

சங்க இலக்கியங்களில் தொடங்கி  வள்ளலார் பாடல்கள் வரை அவற்றில் அபரிமிதமாக பரவிக்கிடக்கும் மருத்துவ குறிப்புகளே இதற்கு சான்று.

கடுமையான நோய்களை குணப்படுத்தும் அருமையான மருந்து களைக்கண்டு பிடிப்பதில்  சித்தர்கள் எப்படிப்பட்ட ஞானம் கொண்டிருந்தனர் என்பதற்கு சிவனார் அமிர்தம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.பாதரசம் நீர்ம நிலையில் உள்ள ஒரு வேதியல் பொருள். இங்குமங்கும் ஓடக்கூடியது .ஆனால் இதனுடன் கந்தகம் சேரும்போது பொடியாகிவிடும் .இந்த பொடியிலுள்ள தீங்குகளை மிளகு மற்றும் மூலிகைகளைக் கொண்டு அகற்றினால் கிடைப்பதே சிவனார் அமிர்தம் சிவனார் அமிர்தம், காளமேக நாராயண செந்தூரம், பிரமானந்த பைரவம் போன்ற மருந்துகள் “நானோ தொழில்நுட்பம் “போல துல்லியமாக செயல்பட்டு நோய் அகற்றும் தன்மை கொண்டவை

சித்த மருந்துகள் செயல்படும் விதத்தை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. தாதுக்களையும் உலோகங்களையும் கொண்டு அரு மருந்துகள்   செய்யும் அரிய கலையை சித்தர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர். தங்களுடைய ஆய்வு  கூடங்களில்தான் இதை அவர்கள் உருவாக்கினர்.

இயற்கையோடு இயைந்து அறிவார்ந்த முறையில் இயல்பாக வளர்ந்தது சித்தமருத்துவம். அறிவுபூர்வமாக எழுப்பப்படும் எந்த வினாவுக்கும் விடை சொல்ல சித்த மருத்துவத்தால் முடியும். எனவே இதற்கு உகந்த ஆராய்ச்சி -கட்டமைப்பு வசதிகளை சித்த மருத்துவத்திற்கு அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்கள் நலனுக்காகத்தான்  எந்த ஒரு மருத்துவ முறையும் இருக்க வேண்டும். பொது மக்கள் நலம் என்ற மைய நோக்குடன் தொடங்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை படிப்படியாக அந்த  நோக்கத்தில் இருந்து விலகி தற்போது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் துறையாக மாறிவிட்டது.

நம் நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் கிடையாது .பெரும் எண்ணிக்கையில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஊடுகதிர் படத்தைப் பார்த்தே  பிரச்சினைகள் பலவற்றிற்கு சிகிச்சை அழித்துவிட முடியும். ஆயினும் சிடி ஸ்கேன் பரவலாக பரிந்துரைக்கப்பட்டு  சாமானிய மக்கள் அல்லல்  படுவதை பார்க்கிறோம் .சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு டயாலிஸிஸ் செய்து கொள்வோரின் எண்ணிக்கை மிகக்  குறைவாக இருந்தது. இப்போது சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்  போன்றவைகளுக்கு தொடர்ந்து எடுத்துக் கொள்ளப்படும் ரசாயன மருந்துகள் கிட்னியை பதம் பார்த்து விடுகின்றன. இதன் காரணமாக கிட்னி செயல்பாட்டை இழந்து டயாலிசிஸ் நிலைக்கு மக்கள் போய் அவதி படுகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சினைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தீர்வுகாண வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னது போல மருத்துவத்திற்காக மக்கள் அல்ல. மக்களுக்காகத்தான் மருத்துவம் .

இந்த அடிப்படையில், அனைத்து மருத்துவ முறைகளிலும் உள்ள சிறந்த கூறுகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில், ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் .இதற்கான நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் மத்திய, மாநில அரசுகள் தொடங்க வேண்டும்.

துறைகள் தோறும் அதில் ஞானம் கொண்டவர் இணைச் செயலராக இருக்க வேண்டும். அப்போதுதான் அத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கும் .துறை செயலராக இருக்கும் நிர்வாக அதிகாரியின் உத்தரவு அப்போதுதான் மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

கடந்த நான்கு மாதகாலத்தில் கொரோனா  வைரஸ் சமூகத்தில் ஏற்படுத்திய  பீதியை  நேரடியாக பார்த்தேன். படித்தவர்கள் , பல அனுபவங்களைப் பெற்ற அதிகாரிகள் பலரும் பெரும் அச்சத்துடன் இருந்தனர்.

எனக்கு நாளொன்றுக்கு சுமார் 200 தொலைபேசி அழைப்புகள் வந்தன. தனக்கு இருக்கும் ஒவ்வொரு அறிகுறியையும்  சொல்லி என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கேட்டனர்.

ஒரு சிலர் தொடர்ந்து என்னை அழைத்து தன் அச்ச உணர்வை வெளிப்படுத்தினர்.

அச்சம் தேவையற்றது ஆகும் .ஐந்தறிவுக்கும் கீழே உள்ள உயிரினங்களுக்கு மட்டுமே இருக்கும் குணம்தான் அச்சம் .

மனிதர்களாகிய நாம் அச்சத்தை நீக்கி எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டியவர்கள் ‌. அதுவே போதுமானது.

சித்த மருத்துவம் கொரானாவை வென்று காட்டிய மருத்துவம். மக்கள் நலனுக்காக உருவாக்கப் பட்ட இம்மருத்துவ முறை தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மருத்துவ பொக்கிஷம்.

இதன் முழுப்பலனும் மக்களைச் சென்றடையும் வகையில் , சித்த மருத்துவ கட்டமைப்பை வளர்க்கும் உரிய  நடவடிக்கைகளை    மேற்கொள்ள வேண்டியது

தமிழக அரசின் தார்மீக கடமை”  என்றார்.

மருத்துவர் தெ.வேலாயுதம்.

அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் இளநிலை  (பி .எஸ் .எம். எஸ் ) பட்டமும் முதுநிலை (எம்.டி.) பட்டமும்  முனைவர் பட்டமும் பெற்றவர் மருத்துவர் தெ. வேலாயுதம்.

சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை துணை கண்காணிப்பாளராகவும் இம்காப்ஸ்( சென்னை) நிறுவனத்தின் துணைத் தலைவராக 2012 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையும் இருந்தவர்.

அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற பல்வேறு கருத்தரங்களில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

தினமும் நோயாளிகளிகளை சந்தித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பவர்.கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்தமருத்துவ அரும் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர், மருத்துவர்  வேலாயுதம் . தொடர்புக்கு; 9444908979

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time